‘அனல் மின்நிலையங்கள் வேண்டாம்’ சூழல்சார் அமைப்புகள் கோரிக்கை

நாட்டில் இரு புதிய அனல் மின்நிலையங்கைள அமைக்கும், அமைச்சரவைப் பிரேரணைக்கு இலங்கையில் காணப்படும் சூழல்சார் அமைப்புகள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளன.   

சம்பூர் மற்றும் நுரைச்சோலைப் பகுதிகளில் இவ்வாறான நிலையங்களை அமைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவற்றை இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்திருந்த நிலையில், இந்தப் பரிந்துரைப்பு வழங்கப்பட்டுள்ளது.  

அண்மையில் வெளியிடப்பட்டிருந்த இணை அமைச்சரவைப் பத்திரத்தில் (63/2017/PE) காணப்படும் முரணான விடயங்கள் தொடர்பில், தாம் கரிசனை கொண்டுள்ளதாகவும் இலங்கையின் நீண்ட கால மின்வலுப்பிறப்பாக்கல் திட்டத்தின் (LTGP) வலுக் கலவையை பன்முகப்படுத்துவது தொடர்பில் இந்த அமைச்சரவை பத்திரம் அமைந்துள்ளது.  

முதலில், அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம், ஏற்கெனவே அங்கிகரிக்கப்பட்ட 2017 - 2038 வரையான LTGP திட்டம் தற்போது அமுலிலுள்ளது. 2019ஆம் ஆண்டு வரை இதில் மாற்றத்தை கொண்டுவர முடியாது.   

அமைச்சால் இதில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமாயின், 2019ஆம் ஆண்டு வரை காத்திருந்து, அதன் பின்னர் மாற்றங்களை மேற்கொள்ளலாம். அனைத்துப் பிரேரணைகளுக்கும் பொது மக்களின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும்.   

வலு நுகர்வோர் எனும் வகையில், பொது மக்களுக்குத் தமது நுகர்வுக்காக விநியோகிக்கப்படுவது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதைப் பற்றிய, தமது கருத்துகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான உரிமை காணப்படுவதுடன், மாற்றங்களை அறிமுகம் செய்வதற்கு முன்னதாக, பொது மக்களின் கருத்துகளைக் கேட்டறிவது என்பது ஒருவித நுகர்வோர் உரிமை சார்ந்த விடயமாகவும் அமைந்துள்ளது.   

இலங்கையின் வலுக்கலவையில் மூலோபாய பன்முகப்படுத்தல்  

புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்தில், ‘பின்புலம்’ எனும் பிரிவின் 1.0 பிரிவில், வலுப் பிறப்பாக்கலின் போது, சூழல்ப் பாதிப்புகளைக் குறைப்பது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமைந்துள்ளதெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.   

சமூக அமைப்புகள் எனும் வகையில், 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாத காலநிலை மாற்றத்துக்கான பாரிஸ் உடன்படிக்கையில், சர்வதேச அங்கத்தவர் எனும் அடிப்படையில், இலங்கை வழங்கியிருந்த உறுதி மொழிக்கமைய இது அமைந்துள்ளது.   

 ‘இலங்கை தனது அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில், படிம எரிபொருளிலிருந்து விலக்குப்பெற்ற இலக்குகளைக் கொண்டிருக்கும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

ஆயினும், முன்னர் குறிப்பிட்ட விடயங்களை மீறும் வகையில், குறித்த அமைச்சரவைப் பத்திரத்தில்,  1,200 MW மின்பிறப்பாக்கலை மேற்கொள்வதற்கு, இரு புதிய அனல் மின்நிலையங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. வலுப் பாதுகாப்பை உறுதி செய்ய, வலுக் கலவையின் மூலோபாயப் பன்முகப்படுத்தல் என்பதற்கமைய இது அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கையில் அனல் மின் நிலையங்களை நிறுவுவதற்கு ‘மூலோபாய பன்முகப்படுத்தல்’ எனும் அரசாங்கத்தின் வாதம், உலகுக்கு இலங்கை வழங்கியுள்ள உறுதிமொழிகளைத் தகர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக, சூழல்சார் அமைப்புகள் கருதுவதுடன், எரிபொருளுக்கு அப்பால், இலங்கையை முன்னேற்றுவதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும் எனவும் கருதுகிறது.  

‘தூய நிலக்கரி’ மூடநம்பிக்கை  

துரதிர்ஷ்டவசமாக, குறித்த அமைச்சரவை பத்திரத்தில் ‘தூய நிலக்கரி’ என குறிப்பிடப்பட்டுள்ளது, விஞ்ஞான ரீதியில் எவ்வித விளக்கங்களுமின்றி இந்தப் பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘தூய நிலக்கரி’ எனும் சொற்பதத்தில், நிலக்கரி பதப்படுத்தலில் காபன் வெளியீட்டை அகற்றுவதற்கான உயர் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றமையை இது குறிக்கிறது.    ஆனாலும், நிலக்கரி தவிர்ப்பு அறிவித்தலுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்தப் பதம் நிலக்கரித் துறையால் பயன்படுத்தப்பட்டு, பிரபல்யப்படுத்தப்பட்டுள்ளது. விஞ்ஞான ஆய்வு அறிக்கைகளின் பிரகாரம், குறித்த ‘தூய நிலக்கரி’ தயார்ப்படுத்தும் தொழில்நுட்பங்கள் இதுவரையில் வடிவமைக்கப்படவில்லை. இதன் காரணமாக, இலங்கையில் நிறுவப்படவுள்ள அனல் மின்நிலையங்கள், தூயவையாகக் காணப்படுவதற்குரிய வாய்ப்புகளை இல்லாமல் செய்துள்ளன.   

நிலக்கரி வலுவின் போது, காபன்சாராத மாசுக்களாக SO2, NO, ஈயம், பாதரசம் மற்றும் கட்மியம் போன்றன அடங்கியுள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் ஆரம்ப நிலையில் காணப்படுகிறது.   

மேலும், வலுக்கலவையைக் கவனத்தில் கொண்டால், அதில் காணப்படக்கூடிய சூழலுக்கு நட்பான வலுப்பிறப்பாக்கல் முறைகளை விட, உயர் வினைத்திறன் வாய்ந்த நிலக்கரி ஆலைகள் அதிகளவு காபன் வெளியீட்டை கொண்டிருக்கும்.  

 இதில் எமது எதிர்காலத்தில், பன்முகப்படுத்தல் என்பதற்காக பிரேரிக்கப்பட்டுள்ள நிலக்கரி மின்பிறப்பாக்கல் முறை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இது, இலங்கையின் காலநிலை மாற்ற இடரை அதிகரிக்கும் என்பதுடன், எமது இயற்கை காலநிலை  சுழற்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.  

மேலும், குறித்த அமைச்சரவைப் பத்திரத்தில், இறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள அம்சமான, காபன் அழிக்கும் வனாந்தரங்களை அமைத்தல் எனும் அறிக்கை, அதிகளவு கேள்விகளைத் தோற்றுவித்துள்ளது.   

குறிப்பாக, தற்போதைய சூழலில், நாட்டில் வனாந்தர அழிப்பு செயற்பாடுகள் அதிகளவு மேற்கொள்ளப்படுகின்றன. இதைத் தவிர்ப்பதற்குப் போதியளவு சூழல்சார் சட்டங்கள் செயலில் இல்லை என்பதும் கவலைக்குரியதாகும்.  

இந்தப் பிரேரிக்கப்பட்ட அனல் மின் நிலையங்கள் இரண்டால் வெளியிடப்படும் காபனை அழிப்பதற்குச் சுமார் 36,000 ஹெக்டெயர் பகுதியில் வனாந்தர செய்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இது குறித்து, குறித்த பத்திரத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.  

 இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுப்பது தொடர்பில், குறித்த பத்திரத்தில் விடயங்கள் குறிப்பிடப்படாமையானது, அனல் மின் நிலையங்களைத் தூய்மையானவையாகப் பொதுமக்கள் மத்தியில் சித்தரிப்பதற்காக உள்ளடக்கப்பட்ட சில கருத்துகளாகவும், நடைமுறைச்சாத்தியமற்ற காபன் வெளியீட்டு குறைப்புகளை உள்ளடக்கியுள்ளதாகவும் சூழல்சார் செயற்பாட்டாளர்கள் கருதுகின்றனர்.   

வனாந்தரச் செய்கை என்பது முறையாக முதிர்வு நிலையை எய்துவதற்கு சில தசாப்தங்கள் வரை செல்லும். குறிப்பாக, காபன் வெளியீட்டைத் தணிக்கக்கூடிய நிலையை எய்தும் போது, உலகளாவிய ரீதியில் படிம எரிபொருள் பாவனை பெருமளவில் குறைக்கப்பட்டிருக்கும்.  

இந்த வனாந்தரங்கள் தயாராவதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில், குறித்த இரு மின்பிறப்பாக்கல் நிலையங்களாலும் வெளியிடப்படும் காபன், காலநிலை மாற்றத்திலும் சூழல் பாதிப்பிலும் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருக்கும்.    

சூழல்சார் தாக்கம்  

அனல் மின்நிலையங்களால் சூழலுக்குப் பெருமளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. 
குறிப்பாக, நுரைச்சோலை மின்பிறப்பாக்கல் நிலையத்தை அண்மித்து வாழும் மக்களால் பெருமளவு மனுக்கள் இந்நிலையத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதன் ஊடாக, இதை உறுதி செய்யலாம். 

மேலும், நுரைச்சோலை மின்உற்பத்தி நிலையத்துக்கு எதிராகத் தற்போது நீதிமன்றத்தில் வழக்கொன்றும் முன்னெடுக்கப்படுகிறது. மிக முக்கியமாக, மத்திய சூழல் அதிகார சபை, தனது சூழல்சார் அனுமதியை இந்நிலையத்துக்கு வழங்குவதைத் தாமதித்துள்ளது. 

மேலும், 2016ஆம் ஆண்டில் சம்பூர் அனல் மின் நிலையத்துக்கு எதிராக, வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட சூழல் மற்றும் செயன்முறைசார்ந்த சிக்கல்களை கவனத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தைக் கைவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது.  

உயர் அலகுச் செலவீனம்   

அனல் மின்நிலையங்கள் எதிர்காலத்தில் நிறுவப்படக்கூடாது என்பதில் முக்கிய காரணியாக அமைவது, அலகொன்றைப் பிறப்பிப்பதற்காக ஏற்படும் செலவீனம், குறித்த நியமத்தை விட உயர்வானதாக அமைந்துள்ளமையாகும்.  

 இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகியவற்றின் தரவுகளின் பிரகாரம், நுரைச்சோலை நிலக்கரி மின்உற்பத்தி நிலையத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சார அலகொன்றின் செலவீனம் 19 ரூபாயாகும்.   

சூழல்சார் செலவுகளையும் கவனத்தில் கொள்ளும் போது, இந்தப் பெறுமதி 20 ரூபாயை விட அதிகமானதாக அமைந்திருக்கும். 

அண்மையில் கிடைத்திருந்த விலைமனுக்கோரல்களின் அடிப்படையில், இயற்கை எரிவாயு மின்உற்பத்தி நிலையமொன்றால் உற்பத்தி செய்யப்படும் மின் அலகின் செலவீனம் அலகொன்றுக்கு 15 ரூபாயாக அமைந்திருக்கும். எனவே, இதனூடாக படிம அனல் மின்நிலையங்களில் செலவீன அனுகூலம் காணப்படாமை இதனூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சூரிய மின் வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலு  

ஜனாதிபதியால் அண்மையில் பரிந்துரைக்கப்பட்டிருந்த ‘சூரிய மின்வலுத் திட்டம்’ கொள்கையை சீர்குலைக்கும் வகையில் இந்த அமைச்சரவை பத்திரம் அமைந்துள்ளது. ஜனாதிபதியின் சூரிய மின்வலுத் திட்டமானது, பாரம்பரிய வலுப் பிறப்பாக்கல் முறைகளுக்கு மாறாக, எமது சூழலுக்கும், உணர்திறன் வாய்ந்த சூழல் கட்டமைப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத புதுப்பிக்கத்தக்க வலுப் பிறப்பாக்கல் முறையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.  

 இலங்கையின் விவசாயம் மற்றும் சுற்றுலா அடிப்படையிலான பொருளாதாரத்தை கட்டிக்காத்து மேம்படுத்துவதற்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. ஏற்கெனவே அங்கிகரிக்கப்பட்டு, நடைமுறையிலுள்ள தூய வலு தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையை சீர்குலைக்கும் வகையில் இந்தப் புதிய அனல் மின் நிலையத்திட்டம் அமைந்துள்ளது. 

தேசியக் கொள்கையின் அடிப்படையில், 2030 ஆம் ஆண்டளவில், இலங்கைக்கு அவசியமான சகல மின்வலுவையும் புதுப்பிக்கத்தக்க மூலங்கள் மற்றும் உள்நாட்டு மூலங்களிலிருந்து உற்பத்தி செய்வதை, இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது.   

 2015இல், முழு வலுத் தேவையின் 50சதவீதம் இவ்வாறான புதுப்பிக்கத்தக்க மற்றும் உள்நாட்டு மூலங்களிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. 2020இல் இந்தப் பெறுமதி 60 சதவீதத்தை கடக்கும் வகையில் அமைந்துள்ளது.   

இவ்வாறான சந்தர்ப்பத்தில், குறித்த அமைச்சரவைப் பத்திரம் இந்த இலக்குகளைப் பின்னால் தள்ளும் வகையில் அமைந்துள்ளது. மேலும், 2020ஆம் ஆண்டளவில், தனது சுய இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்யும் திட்டத்தைக் கொண்டுள்ளது. இதனூடாக, மின்பிறப்பாக்கலுக்காக இறக்குமதி செய்யப்படும் படிம நிலக்கரித் தேவையை தவிர்த்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.   

2030ஆம் ஆண்டளவில், இலங்கையின் சகல மின்வலுத்தேவையையும் நிவர்த்தி செய்யக்கூடிய மின்வலுப்பிறப்பாக்கலை, புதுப்பிக்கத்தக்க மற்றும் உள்நாட்டு மூலங்களிலிருந்து மேற்கொள்வது எனும் செயற்திட்டம் தற்போது நடைமுறையிலுள்ளது.   

இது எய்தக்கூடிய இலக்காகும். எனவே, இந்த இலக்கை, மேலும் 20 வருடங்கள் பின்னால் தள்ளி, 2050 ஆம் ஆண்டாக நிர்ணயிப்பது என்பது, நாட்டையும் பொருளாதாரத்தையும் பின்னால் தள்ளும் நடவடிக்கையாக அமையும்.   

காற்று, ‘டென்ரோ’ வலு மற்றும் வரையறைகளற்ற சூரிய வலு ஆகிய புதுப்பிக்கத்தக்க வலு மூலங்களினூடாக 2,000 MW மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆற்றலை இலங்கை கொண்டுள்ளது.   

ஆயினும், கடந்த 18 மாதங்களில் சிறிய மின்னுற்பத்தி நிலையங்களிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்யும் திட்டத்தை, இலங்கை மின்சார சபை தடுத்துள்ளது. இந்தத் தடை காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில், நிலைபேறான வலு அதிகார அமைப்பால் சுமார் 1,200MW மின்சாரத்தைச் சூரிய வலு பிறப்பிப்பாளர்களிடமிருந்து பெற்றுக் கொடுக்க முடியாத நிலை காணப்படுகிறது.   

காபன் பாதீடு மதிப்பீட்டின் பிரகாரம், அபிவிருத்தியடைந்த நாடுகள் அனைத்தும் தமது மின்வலுப்பிறப்பாக்கல் தேவையை நிவர்த்தி செய்வதற்கு, படிம எரிபொருளைப் பயன்படுத்துவதை 2030 ஆம் ஆண்டளவில் நிறுத்த வேண்டும்.   

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள், இந்நடவடிக்கையை 2050 ஆம் ஆண்டளவில் நிறுத்த வேண்டும். எனவே இந்த முதலீடு, காலநிலைக்குப் பாதகமாக அமைந்துள்ளதுடன், UNFCCC க்குச் சமர்ப்பித்துள்ள தேசிய உறுதியான பங்களிப்பு (NDC) என்பதற்கு எதிரானதாகவும் அமைந்துள்ளது.   

 இந்த அறிக்கையின் பிரகாரம், வலுத்துறைசார் வெளிப்படுத்தல் 4% (9,173Gg நிபந்தனையற்ற குறைப்பு) மற்றும் 16% (30,210Gg நிபந்தனையுடனான குறைப்பு) மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த அமைச்சரவைப் பத்திரம், இந்த உறுதிமொழியை மீறும் வகையில் அமைந்துள்ளது.   

2030ஆம் ஆண்டளவில் மின்வலுத்தேவையில் தன்னிறைவடைவது என்பது அரசாங்கத்தின் இலக்கு. சுமார் 30% வரை, படிம எரிபொருள் மின்பிறப்பாக்கலில் தங்கியிருப்பது என்பது இந்த இலக்கை எய்துவதில் பாதிப்பையும் ஏற்படுத்தும்.   

 அத்துடன், அதிகார அமைப்புகளின் வலுக் கொள்கைகளுக்கு எதிரான வகையிலும் இது அமைந்திருக்கும். இயற்கை எரிவாயு மின்பிறப்பாக்கல் நிலையங்களுக்கு மாறாக, செலவீனம் நிறைந்த 1,200 MW படிம எரிபொருள் மின்பிறப்பாக்கல் நிலையங்களை அமைப்பதனூடாக நாட்டின் பொருளாதாரத்துக்கு வருடாந்தம் 30.3 பில்லியன் ரூபாய் செலவீனம் ஏற்படும்.   

 மேலும், நீண்ட கால அடிப்படையில், படிம எரிபொருள் இறக்குமதியில் தங்கியிருக்க வேண்டிய தேவை ஏற்படும் என்பதுடன், நாட்டுக்கும் பில்லியன் கணக்கில் செலவீனம் தொடர்ச்சியாக ஏற்படும்.   

மாற்று வழிமுறைகள் காணப்படும் நிலையில் (உதாரணம்: சூரிய வலு மின்பிறப்பாக்கல்) இவ்வாறான ஒரு பிரேரணை மற்றும் நடவடிக்கை புத்திசாலித்தனமானதாக அமைந்திராது.   

அனல் மின்நிலையங்கள் மற்றும் காபன் வரி தொடர்பில் அரசின் பாசாங்கு நிலை   

அண்மையில் முன்வைக்கப்பட்ட பாதீடு அறிக்கையில், மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் பஸ்கள் போன்றவற்றுக்கு, காபன் வெளியீட்டு வரியை இலங்கை அரசாங்கம் அறிமுகம் செய்திருந்தது.   

இதன் நோக்கம், பொது மக்களின் பயன்பாட்டின் மூலம் வெளிப்படுத்தப்படும் காபனின் அளவைக் கட்டுப்படுத்திக் கொள்வதாகும். இந்நிலையில், அரசாங்கத்தால் படிம எரிபொருளைக் கொண்டு இயங்கும் இரு புதிய மின்பிறப்பாக்கல் நிலையங்களை நிறுவுவதற்கான பிரேரணையை முன்வைப்பது, பலத்த கண்டனத்துக்கு முகங்கொடுக்கக்கூடிய விடயமாகும்.   

 இவ்வாறான பிரேரணைகள் நாட்டின் காபன் வெளிப்படுத்துகை தொடர்பான உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை சீரழிக்கும் வகையில் அமைந்திருக்கும். மேலும், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பில், அரசின் பங்களிப்பையும் உள்நாட்டு மக்கள், சர்வதேச நாடுகள் மத்தியில் கேள்விக்குள்ளாக்கும் வகையில் அமையும்.   

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை நோக்கி இலங்கை பயணிக்கும் நிலையில், தனது அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் படிம எரிபொருளிலிருந்து விடுபட்ட பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதாக உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியுள்ளார். இந்த நிலையில், மக்கள் அந்த எதிர்பார்ப்புடன் காணப்படும் நிலையில், இலங்கையைச் சேர்ந்த சூழல்சார் அமைப்புகள், இரு நிலக்கரியில் இயங்கும் மின்வலுப் பிறப்பாக்கல் நிலையங்கைள நிறுவுவதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதை எண்ணி வியப்படைந்துள்ளன. இவற்றின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படக்கூடாது என்பதிலும் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளன.   

(இந்தக் கட்டுரைக்கான தகவல்கள் அடங்கிய அறிக்கையை, இலங்கையின் மழைக்காடுகள் பாதுகாவலர் அமைப்பு, சூழல்சார் நீதிக்கான நிலையம், வனஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம், FEO ஸ்ரீ லங்கா ஆகிய அமைப்புகள் வெளியிட்டிருந்தன)     

 


‘அனல் மின்நிலையங்கள் வேண்டாம்’ சூழல்சார் அமைப்புகள் கோரிக்கை

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.