இலங்கைப் பங்கு வர்த்தகத்தைப் பாதிக்கும் காரணிகள்

பங்குச்சந்தை என்பது முதலீட்டாளர்களுக்கு ஒரு களம். இங்கு வெற்றி மற்றும் தோல்வி என்பது சாதரணமாகும். எனினும் வெற்றி என்பது பெரிதாகவும் தோல்வி கௌரவமானதாகவும் இருக்க வேண்டும். அதேபோன்று சந்தையில் உள்ள முதலீட்டாளர்களுக்கும் நட்டம் என்பது மிகக் குறைவாகவும் இலாபம் அதிகமாகவும் கிடைக்கவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.  

ஒரு முதலீட்டாளர், எப்போது, எவ்வளவு தொகையை எந்தெந்தப் பங்குகள் மீது முதலீடு செய்ய வேண்டும் என்பது, அவர்களது தனிப்பட்ட தீர்மானமாகும். 

எனினும் அந்த முதலீடு, எப்பொழுதும் அவருடைய பொருளாதார இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு இயங்க வேண்டும். இது மிகவும் அவசியமான ஒன்றாகும். 

ஒரு பொருளாதார முதலீட்டாளரின் இலக்கு, எப்பொழுதும் இலாபம் அல்லது பணத்தை நோக்கியதாகவே இருக்கும். பங்குச் சந்தையில் இலாபம் உழைக்க, பங்குச்சந்தையைப்பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.   

பங்குச் சந்தை என்பது, பல்வேறு நடவடிக்கைகள் நடைபெறும் ஒரு இடம். இங்கு பங்குகளின் விலையில் ஏற்படும் அதிகரிப்பு அல்லது குறைவு பங்குச் சந்தையின் வளர்ச்சி, வீழ்ச்சியைத் தீர்மானிக்கின்றன. 

பொருளாதார வல்லுநர்களால் அதற்குப் பல்வேறு காரணங்கள் கற்பிக்கப்படுகின்றன. எனவே, அந்தக் காரணங்களை அறிந்திருப்பது ஒரு முதலீட்டாளருக்கு இன்றியமையாததாகும். 

அவ்வாறே, பங்கு விலைகளை நகர்த்தும் பொதுவான காரணிகளை அறிந்திருப்பது, பங்குவர்த்தகத்தில் பெரும் உதவியாக இருக்கும். இதன்மூலம் பங்குகளின் விலை நகர்வை, மிக எளிதாகக் கணிக்க இயலும்.  

பங்குச்சந்தையைப் பல்வேறு காரணிகள் பாதித்தாலும் சில காரணிகள் மிகவும் குறிப்பிடத்தக்கன. இங்கே சில பொதுவான காரணிகள், பட்டியலிடப்பட்டுள்ளன. அவை, பங்கு வர்த்தகத்துக்கு உதவியாக இருக்கும்.  

சர்வதேச பங்குச்சந்தை  

நேர வித்தியாசம் காரணமாக, இலங்கைப் பங்குச்சந்தை திறப்பதற்கு முன், சில சர்வதேசப் பங்குச் சந்தைகள் திறக்கப்பட்டு விடும். அதேபோல், அமெரிக்கப் பங்குச் சந்தைகள், இலங்கைப் பங்குச் சந்தை மூடிய பின்னரும், ஐரோப்பியச் சந்தைகள், இலங்கைச் சந்தை திறந்து சில மணி நேரங்களுக்குப் பின்னரும்  திறக்கப்படும்.  

உலகில் உள்ள சில துறைகள் மற்றும் நிறுவனங்கள் இலங்கையிலும் உள்ளன. உலகப்பங்குச் சந்தையில் அத்தகைய துறைகள் மற்றும் நிறுவனங்களில் ஏற்படும் தாக்கம், நிச்சயமாக இலங்கைப் பங்குச் சந்தையிலும் தாக்கத்தைச் செலுத்தும். ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் பங்குகள், உலகளவில் பல சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படுவதால், ஒரு பங்குசந்தையில் ஏற்படும் தாக்கம், கண்டிப்பாக மற்றுமொரு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.  

வர்த்தகக் கொள்கைகளில் ஏற்படும் மாற்றங்கள்   

வர்த்தகக் கொள்கை மாற்றம் பற்றிய புதிய அறிவிப்புகள், வழக்கமாகப் பங்குச் சந்தைகளைப் பாதிக்கின்றன. இந்த நியதி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் பொருந்தும். வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குப் பாதகமாக, ஏதேனும் புதிய வரி அல்லது கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டால், அது அவர்களுக்குக் கண்டிப்பாக இழப்புகளைக் கொண்டு வரும். அவ்வாறு ஏற்படக்கூடிய இழப்புகளைத் தவிர்ப்பதற்காக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இலங்கைச் சந்தைகளில் உள்ள தங்களுடைய முதலீடுகளை விலக்கிக் கொண்டு, பிறநாட்டு பங்குச் சந்தையை நோக்கி நகர்வார்கள். இது கண்டிப்பாக இலங்கைச் சந்தையைப் பாதிக்கும்.  

இதைப் போன்றே, வட்டி விகித மாற்றம், நாணய மதிப்பீடு அளவில் ஏற்படும் மாற்றம் போன்ற சில மிக முக்கிய காரணிகளும் இலங்கைச் சந்தையைப் பாதிக்கின்றன. எனவே, முதலீட்டாளர்கள் உலகெங்கிலும் உள்ள பொருளாதாரச் செய்திகளை, அறிந்து கொள்ள வேண்டும்.  

மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு கொள்கை அல்லது செய்தி வெளியிடப்பட இருந்தால், அந்த நிகழ்வுக்காகக் கண்டிப்பாகக் காத்திருங்கள். ஏனெனில், இத்தகைய நிகழ்வுகள் கண்டிப்பாகச் சந்தையைப் பாதிக்கும். 

பங்குச்சந்தையின் முதல் சில மணித்தியாலங்கள்  

சந்தை தொடங்கிய முதல் சில மணித்தியாலங்களில் பங்குகளை வாங்கவும் விற்கவும் பொருளாதார நிபுணர்கள் விரும்புவார்கள். இதை ஒரு வழக்கமான நடைமுறையாக அவர்கள் பின்பற்றுகின்றனர். பொதுவாகக் காலை நேர வர்த்தகம் என்பது மிகவும் பரபரப்பானது. அத்துடன், இந்த நேரங்களில் வர்த்தகம் அதிகமாக இருக்கும். சந்தையும் இந்த நேரத்தில் அதிகமான ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும்.  

சந்தை முதல் நாள் மூடிய பிறகும் மறுநாள் சந்தை திறக்கும் பொழுதும் உள்ள இடைவெளியில் ஏராளமான செய்திகள் வெளிவந்திருக்கும். அத்தகைய செய்திகள், பங்குச்சந்தை தொடங்கிய பின்னர், தாக்கத்தை உருவாக்கும். இத்தகைய நிகழ்வுகள் மிகப் பெரியதாகவும் இருக்கலாம்.

பொருளாதார வல்லுநர்களின் கருத்துகள்  

சந்தையில் பல்வேறு வகையான ஆய்வாளர்கள் மற்றும் நிபுணர்கள் உள்ளனர். உதாரணமாக, பரஸ்பர நிதி மேலாண்மை போன்ற ஒரு குறிப்பிட்ட முதலீட்டு நிறுவனத்துக்காக  வேலை செய்யும் ஆய்வாளர்கள் சந்தையில் உள்ளனர். இவர்கள் முதலீட்டாளர்களின் கவனத்தைக் கவர்ந்த பங்குகளைப் பற்றிய ஆய்வில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள்.  

ஒரு சில வல்லுநர்கள், முதலீட்டாளர்கள் ஏற்கெனவே வாங்கிய முதலீடுகளை விற்கத் தகுந்த நேரத்தை ஆய்வு செய்து கருத்துகளை வழங்கத் தயாராக உள்ளனர். அவர்களின் கருத்துகள் பொதுவாக நடுநிலையானவை.  

நன்கு அறியப்பட்ட பகுப்பாய்வாளரின் கருத்துகள், சந்தையில் பங்குகளின் விற்பனை / கொள்முதல் போக்குகளைப் பாதிக்கலாம். உங்களுடைய முதலீடுகள், எவ்வாறு பாதிக்கப்படலாம் என்பதைப் புரிந்து கொள்வதற்கு, தொலைக்காட்சி மற்றும் நிதி வலைத்தளங்களில் வழங்கப்படும் நடப்பு வணிக அறிக்கைகளைக் கவனித்து, உங்களை நீங்களே புதுப்பித்துக் கொள்வது மிகவும் நல்லது.  

வணிக நேரங்களில், நன்கு அறியப்பட்ட ஓர் ஆய்வாளர், ஒரு நிறுவனத்தின் பங்குகள் மீதான நேர்மறையான அல்லது எதிர்மறையான கருத்தை வெளிப்படுத்தினால், அது அந்த நிறுவனத்தின் பங்குகளை மட்டுமல்ல, அதேபோன்ற துறைகளில் உள்ள, பிற நிறுவனப் பங்குகளின் போக்கையும் பாதிக்கக்கூடும். 

உதாரணமாக, தொலைத்தொடர்பு நிறுவனங்களின் எதிர்காலத்தைப் பற்றி, நன்கு தெரிந்த ஓர் ஆய்வாளர் எதிர்மறையான கருத்துகளை வெளியிட்டால், அந்த நிறுவனத்தின் பங்குகள் அடி வாங்குவதுடன், அந்தத் துறையில் உள்ள சகல நிறுவனங்களையும் பாதிக்கும்.

இணையத்தளக் கட்டுரைகள்  

மக்கள் செய்திகளைப் பெறும் வழியை, இணையம் மாற்றி அமைத்துள்ளது. காட்டுத் தீயை விட, செய்தியொன்று மிகவும் வேகமாக இணையம் வழியே பரவுகின்றது. இன்றைய நவீன யுகத்தில், திறன்பேசிகளைப் பயன்படுத்தி, உடனடியாக ஒரு செய்தியை இணையத்தில் வெளியிடலாம்.  

ஒரு நிதி நிறுவன அறிக்கை, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்கு அல்லது ஒரு குறிப்பிட்ட துறையின் மீது வலுவான கருத்து ஒன்றைத் தெரிவித்திருந்தால், அது எந்தச் சந்தர்ப்பத்திலும் சந்தையைப் பாதிக்கும்.    


இலங்கைப் பங்கு வர்த்தகத்தைப் பாதிக்கும் காரணிகள்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.