இலங்கையின் அரையாண்டு நிதியாய்வு

2018ஆம் ஆண்டு, அரைப்பகுதியைக் கடந்துள்ள நிலையில், நம் நாட்டின் நிதிநிலைமையும் சர்வதேச ரீதியில் நமது நிலைமை எவ்வாறு அமைந்துள்ளது என அறிந்துகொள்ளுவது அவசியமாகிறது. 

அரையாண்டின் இறுதியில், பொருளாதார ரீதியாகப் பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்துள்ள நிலையில், வளர்ச்சியென்பது எதிர்பார்த்ததை விடவும் மிகக்குறைவாகவே அமைந்துள்ளது. அத்துடன், எதிர்வரும் அரையாண்டில், பொருளாதார ரீதியான வளர்ச்சி, சர்வதேச ரீதியிலும், உள்நாட்டு அரசியலிலும் இலங்கைக்கு மிகமுக்கியமாகவுள்ளது.  

இவ்வாண்டில் இலங்கை அரசாங்கம், 4.5% பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்ள எதிர்பார்த்துள்ளது. இதுவரை, வெளியான தகவல்களின்படி, முதற் காலாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, 3.2% மாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே, இன்னமும் ஆறு மாதங்கள் உள்ளநிலையில், 4.5% த்தை அடைந்து கொள்ளக் கூடியதாகவே இருக்குமென பொருளியலாளர்கள் கணிப்பிடுகிறார்கள்.  

காலாண்டு முடிவுகளின் பிரகாரம், ஏற்றுமதியானது 7.7%மாக அதிகரித்துள்ளதுடன், இதில் 10.2% அதிகரிப்பு உற்பத்திசார் பொருட்களின் அபிவிருத்தியால் ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு உற்பத்தி, விவசாயம், சேவைகள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தியும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இலக்கை அடைவதற்குக் காரணமாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.  

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இலக்கானது, ஐந்து சதவீதத்தை ஒரே வருடத்தில் தாண்டிச் செல்வதென்பது முடியாத இலக்கல்ல. ஆனால், தற்போதைய நிலையில் நிலவும் அரசியல் ரீதியான ஸ்திரமற்ற தன்மை, முதலீட்டாளர்களின் நம்பிக்கையின்மை போன்ற பல்வேறு காரணிகளால் இது அடையப்பட முடியாத இலக்காக மாறியுள்ளது என்பதே உண்மையாகும்.  

2017ஆம் ஆண்டில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது 3.1%மாக அமைந்திருந்தது. இந்த வருடம், கடந்த வருடத்துடன் ஒப்பிடுமிடத்து, பொருளாதார வளர்ச்சியில் இலங்கை தன்னை மீட்டெடுத்துக் கொள்ளும் வருடமாக, இந்த வருடம் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.   

அந்தவகையில், முதற் காலாண்டிலேயே கடந்த வருடத்தின் பொருளாதார வளர்ச்சியைத் தாண்டியுள்ள நிலையில், இனிவரும் அரையாண்டில் மிகப்பெரும் அரசியல் நெருக்கடியோ அல்லது பொருளாதாரச் சிக்கலோ ஏற்படாதபோது, குறைந்தது நான்கு சதவீத பொருளாதார வளர்ச்சியையாவது இலங்கையால் அடைய முடியுமென சர்வதேச நாணய நிதியம் அறிக்கையிட்டுள்ளது. 

இதற்குப் பிரதான காரணமாகச் சுட்டிக்காட்டப்படுவது, அடுத்துவரும் அரையாண்டில், விவசாய உற்பத்தி,  ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத்துறை மூலமாகப் பொருளாதார வளர்ச்சிக்கான பங்களிப்பு அதிகமாக இருக்கும் எனக் கணிப்பிடப்படுவதால் ஆகும்.  

2018ஆம் ஆண்டின் முதற் காலாண்டுப் பகுதி, கடந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சியை முதற் காலாண்டிலேயே தாண்டியுள்ளபோதும், நாம் எதிர்பார்த்த அல்லது திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சியை அடையவில்லை என்பதே உண்மை. 4.8% மாகவே இருக்கவேண்டிய பொருளாதார வளர்ச்சியானது, தற்போதுதான் 4%த்தை நோக்கி நகர்வதாக அமைந்திருக்கிறது. 

இதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக, கட்டுமானத் தொழிற்துறையில் ஏற்பட்ட மந்தநிலை அல்லது வீழ்ச்சி நிலை அமைந்துள்ளது.    

கட்டுமானத் தொழிற்துறையின் வளர்ச்சி, கடந்த வருடத்துடன் ஒப்பிடுமிடத்து 4.9% த்தால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், இந்த வீழ்ச்சியானது, அதுசார்ந்துள்ள தொழிற்துறைகளிலும் 1% வளர்ச்சி வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளது. அத்துடன், சேவைத்துறையானது 4.4%த்தால் வளர்ச்சியடைந்து, பொருளாதார ரீதியாக, முதலாம் காலாண்டில் எட்டப்பட்ட வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்களிப்பை வழங்கியிருக்கிறது.  

2018ஆம் ஆண்டில் கவனிக்கப்பட வேண்டியவை  

2018ஆம் ஆண்டில், இலங்கையின் முக்கிய ஐந்து துறைகளிலும் வளர்ச்சி எட்டப்படும் என்றே பொருளியல் வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள். குறிப்பாக, கடந்த வருடத்தில், மிக அதிகமாகப் பாதிக்கப்பட்ட விவசாயத் துறை, இவ்வருடத்தில் மீளப்புத்துயிர் பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.   

கடந்த வருடத்தில் ஏற்பட்ட வரட்சி,  வெள்ளப்பெருக்கு போன்ற  இலங்கையின் வெவ்வேறு பகுதிகளிலும் ஏற்பட்ட இயற்கை அழிவுகளால், மிக அதிகளவில் விவசாயத்துறை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், இவ்வருடம் மாற்றம் ஏற்படக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

பெரும்போக பயிர்செய்கையின் போது பெறப்பட்ட அபரிமிதமான விளைச்சல், சிறுபோக பயிர்செய்கையின்போதும் எட்டப்படுமாயின், இவ்வாண்டில் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சியானது சாத்தியமாகும்.   

அத்துடன், தேயிலை உற்பத்திக்கு சாதகமான காலநிலையும் இலங்கைத் தேயிலைக்கான சர்வதேச கேள்வியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பும் தேயிலை வருமானத்தின் ஊடாக, விவசாயத்துறையின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதாக இருக்கும். எவ்வாறுதான் விவசாயத்துறையில் அதிகரிப்பு ஏற்பட்டாலும், தற்போதைய நிலையில், மொத்த தேசிய உற்பத்தியில் விவசாயத்துறையானது 7% பங்களிப்பையே கொண்டுள்ளது. 

இதன்காரணமாக, விவசாயத்துறையில் ஏற்படும் அதிகரிப்பானது, மிகப்பாரிய அளவில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்காது என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.  

 ஆனாலும், உள்நாட்டு விவசாயத்துறையின் அதிகரிப்பானது, உணவுப்பொருட்கள் சார் இறக்குமதியைக் குறைக்க உதவுவதுடன், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கவும் உதவும். எனவே, விவசாயத்துறையின் வளர்ச்சி என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகும்.  

உற்பத்திசார் அபிவிருத்திகளும், ஏற்றுமதிகளும் இவ்வருடத்தில் பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கி எடுத்துசெல்லும் பலமான காரணியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 

குறிப்பாக, ஆடைக் கைத்தொழில் மற்றும் இறப்பர் உற்பத்தி ஆகியவற்றில் ஏற்படும் அதிகரிப்பும், ஏற்றுமதியும் இதற்குக் காரணமாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.  

சுற்றுலாத்துறையைப் பொறுத்தவரையில், கடந்த பலவருடங்களாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரும் பங்களிப்பை வழங்கி வரும் ஒரு துறையாகவுள்ளது. 

அதுபோல, இவ்வருடமும் சுற்றுலாத்துறையில் மேலதிகமாக ஏற்படும் 17%மான மதிப்பீட்டு அதிகரிப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் வலுவூட்டுவதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.  

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது, உள்நாட்டு் பொருளாதாரத் துறைகளின் வளர்ச்சியாலும், அவற்றில் ஏற்படும் மாற்றங்களால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதல்ல. 

மாறாக, சர்வதேச ரீதியில் ஏற்படும் மாற்றங்களும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிப்பதாக அமையும்.  

குறிப்பாக, அண்மைக்காலத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பானது, இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை மட்டுமல்லாது, அரசியல் ஸ்திரத்தன்மையையுமே தளம்பலுக்கு உள்ளாக்கியுள்ளமை இதற்கு ஓர் உதாரணமாகவுள்ளது.   

அதுமட்டுமல்லாது, டொலருக்கான இலங்கை நாணயப்பெறுமதியின் தேய்வும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாகவுள்ளது. தொடர்ச்சியாக, அமெரிக்க நாணயத்துக்கு எதிராக இலங்கை நாணயப் பெறுமதியானது குறைவடைந்து வருவதானது, வாழ்க்கைச் செலவை உயர்த்துவதுடன், பொருட்கள் மற்றும் சேவைகளின் செலவீனத்தையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அதிகரிப்பதாக அமைந்திருக்கிறது.   

இதன் விளைவாக, இலங்கை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்ள முடியாத தடங்கல் நிலையும் ஏற்பட்டுள்ளது.  

எனவே, கடந்துவந்த அரையாண்டில் இலங்கை அரசாங்கமானது கடந்த வருடத்தைப் பார்க்கிலும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை எட்டியிருந்தாலும், இவ்வாண்டின் மத்தியிலிருந்து ஏற்பட்டுள்ள அரசியல் மந்தநிலை, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையின் உயர்வு மற்றும் நாணயப்பெறுமதி இறக்கம் என்பன எதிர்வரும் அரையாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு சவாலான காரணிகளாகவே இருக்கும்.     


இலங்கையின் அரையாண்டு நிதியாய்வு

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.