இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கான தேவைப்பாடு

2019ஆம் ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கான தேவையும் அதிகரித்துக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது. 

எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில், இலங்கையின் கடன் செலுத்துகை நிலையானது, மிக அதிகமாகவுள்ளது. எனவே, இந்தத் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள, மக்கள் மீது வரிச்சுமையை வழங்காமல், பணத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறையாக, வெளிநாட்டு நேரடி முதலீடுகள் உள்ளன.   

வெளிநாட்டு நேரடி முதலீடுகள் என்றால் என்ன?   

வெளிநாட்டு அரசாங்கமொன்றால், நிறுவனத்தால், தனிநபரால் இலங்கைக்குள் மேற்கொள்ளப்படும் அனைத்துவகை முதலீடுகளும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. 

இத்தகைய முதலீடுகள், இலங்கையின் உட்கட்டுமான வசதிகளை விரிவுபடுத்த உதவுவதுடன், குறித்த முதலீடுகள் வாயிலாகக் கிடைக்கப்பெறும் இலாபங்கள், மீளவும் இலங்கையிலேயே குறித்த காலப்பகுதிவரை மீள்முதலீடு செய்யப் பயன்படுகின்றது.   

இத்தகைய வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் மூலமாக, தொழில்வாய்ப்புகள் முதற்கொண்டு, தொழில்நுட்பப் பல்வகைமை உட்பட, பல்வேறு நலன்களைப் நாம் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது.   

இவ்வாறு, பல்வேறு நலன்களையும் நமது கடனின் மிகப்பெரும் சுமையையும் குறைத்துக் கொள்ளக்கூடிய வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் மூலமான, நேரடியானதும் மறைமுகமானதுமான மேலதிக நலன்களை அறிந்துகொள்ளுவது அவசியமாகிறது.   

வெளிநாட்டு நேரடி முதலீடுகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், ஒரு தூணாக இருக்கின்றன. நாட்டின் வருடாந்த மொத்தத் தேசிய உற்பத்தியானது, கடந்த மூன்று தசாப்தங்களாகச் சராசியாக நான்கு சதவீதமாகவே உள்ளது. இந்தச் சராசரியை ஆறு சதவீதமாக மாற்றிக்கொள்ளவும் நடுத்தர, வறிய மக்களின் வருமான சராசரியை உயர்த்திக்கொள்ளவும் இந்த வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் உள்வருகை, இலங்கைக்கு மிக அத்தியாவசியமானதாக இருக்கிறது.   

பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதிலும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் பங்களிப்பு இன்றியமையாததாகும். தற்போதைய நிலையில், இலங்கை அரசாங்கத்தின் முதலீடுகளில், பெரும்பகுதியை அரசபொது நிறுவனங்களே பயன்படுத்தப்படுகின்றன. இதன்விளைவாக, நாட்டின் அபிவிருத்திக்கும், தனியாரின் முதலீட்டுச் செயல்பாடுகளுக்கும் கிடைக்கவேண்டிய முதலீடுகள், பெரிதும் கிடைக்காமல் போக, நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளும், வேலைவாய்ப்புத் தொடர்பான அபிவிருத்திகளைத் தேக்கம் அடையச் செய்கின்றன. எனவே, தனியாரினதும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளினதும் உள்வருகை, இலங்கைக்கு இன்றியமையாததாக உள்ளது. 

ஏனைய அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் உள்வருகையும் பயன்பாடும் மிகக் குறைந்த மட்டத்திலேயே உள்ளது. எனவே, நாட்டின் அபிவிருத்தியை முன்கொண்டு செல்லவும், கடன்சுமையைக் குறைக்கவும் அரசாங்கத்தின் முதலீடுகள், வருமானத்தில் மாத்திரம் நமது நாடு தங்கியிராமல், வெளிநாட்டினதும், தனியாரினதும் நேரடி முதலீடுகளை அதிகரிப்பது, இன்றியமையாததாக உள்ளது.   

வெளிநாட்டு நேரடி முதலீடுகள் பணமாக மட்டுமில்லாது, தொழில்நுட்பங்களாகவும், புத்தாக்க வடிவிலும் நாட்டின் அபிவிருத்திக்கு வலுசேர்க்கின்றன. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருகை அதிகரிக்கும்போது, அவர்களின் முதலீட்டுப் பணத்துடன் இணைந்ததாக அவர்களின் தொழில்நுட்பங்களும் நாட்டுக்குள் வருவதுடன், உள்நாட்டுத் தொழிலாளர்களின் திறன்விருத்திக்கும், வினைதிறனை அதிகரிப்பதிலும் அவை பெரிதும் பங்காற்றுகின்றன.   

இவற்றுக்கு மேலதிகமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்ததாக மேற்கொள்ளப்படும் வணிகமுயற்சிகளின் விளைவாகவும், அவர்களின் பங்குடமையுடன் இணைந்ததாக உருவாக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் விளைவாகவும், மென்மேலும் திறன்களும், புத்தாக்க நுட்பங்களும் அவர்களிடமிருந்து, இலவசமாகவே எம்மை வந்தடைகின்றன.    

வெளிநாட்டு நேரடி முதலீடுகள், நாட்டின் ஏற்றுமதிப் பல்வகைமையையும் வருமானத்தையும் அதிகரிக்கவல்லது. இலங்கையின் ஏற்றுமதிகளும் அதுசார் வருமானங்களும் நாட்டின் பாரம்பரிய துறைகளைச் சார்ந்ததாகவே உள்ளது. இந்தநிலையில் மாற்றத்தையும் விருத்தியையும் கொண்டுவர வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அவசியமாகிறன. 

இவற்றின் மூலமாக, நமது பாரம்பரியத் துறைகளில், புதிய நுட்பங்களை உட்புகுத்த முடிவதுடன், அவற்றின் மூலமாக, நமது பெறுபேறுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், நமது ஏற்றுமதிப் பொருட்களைத் தரமானதாகவும் மிக அதிகமாகவும் உற்பத்தி செய்து, வருமானத்தை மேன்மேலும் பெருக்கிக்கொள்ள முடியும்.   

வெளிநாட்டு நேரடி முதலீடுகள், நாட்டின் கடன்சுமையைக் குறைப்பதுடன், கடன்வாங்கும் நிலையைத் தவிர்க்கவும் உதவுகின்றது. இலங்கைக்கான வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அதிகரிக்கும்போது, நாம் நமது கடனை மீளச்செலுத்துவதன் மூலம், மீளவும் கடன்பெறுகின்ற நிலையில் மாற்றம் ஏற்படும். இதன்விளைவாக, நமது தற்போதைய கடனை மீளச்செலுத்த முடிவதுடன், புதிய கடன்சுமைக்குள் சிக்கிக்கொள்ளாமல் அபிவிருத்தியை நோக்கி நகரக் கூடியதாக இருக்கும்.   

இவ்வாறாக, நாட்டின் பல்வேறு அபிவிருத்திக்குத் துணைபுரிகின்ற வெளிநாட்டு நேரடி முதலீடுகளை, நாட்டுக்குள் கொண்டுவருவது அவசியமாகவுள்ள நிலையில், அதைக் கொண்டுவரக்கூடிய வழிமுறைகளையும் அதற்குத் தடையாகவுள்ள விடயங்களையும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.   

நாட்டின் வர்த்தகக் கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவருவது அவசியமாகிறது. தற்போதைய நிலையில், இலங்கையின் ஏற்றுமதி, இறக்குமதிச் செயற்பாடுகள்,  ஏனைய நாடுகளுடனான வர்த்தகக் கொள்கையில் காணப்படும் முரண்பாடுகள் தீர்க்கப்படவேண்டியது அவசியமாகிறது. 

இதன்மூலமாக, வெவ்வேறு நாடுகளின் முதலீட்டாளர்களின் முதலீடுகள், நாட்டுக்குள் வருவதுடன், சீனா போன்ற நாடுகளை மாத்திரம் சார்ந்திருக்கும் இலங்கையின் எதிர்காலத்துக்குத் தீர்வு கிடைக்கும்.   

வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கவரக்கூடியதான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கல். வெளிநாட்டு நேரடி முதலீடுகள் நாட்டுக்குள் வருவதன்மூலமாக, நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் விருத்திக்கு உதவிபுரிவதாக இருக்கும். 

ஆனால், இத்தகைய வெளிநாட்டு நேரடி முதலீடுகளை, நாட்டுக்குள் கொண்டுவருவதற்கான அடிப்படையான, அவர்களைக் கவரக்கூடிய வகையிலான உட்கட்டமைப்பு வசதிகளையாவது நாம் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக, நாட்டின் அனைத்து அபிவிருத்திகளும் கொழும்பை மய்யப்படுத்தியதாகவே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அதற்கு, மிக முக்கிய காரணம், நாட்டின் ஏனைய பகுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் போதுமான வகையில் அமைந்திருக்காமை ஆகும். 

நாட்டின் அரசியல் சூழ்நிலையில் சமநிலைத் தன்மையை உருவாக்குவதுடன், முதலீடுகளைக் கவரக்கூடிய திட்டங்களை முன்னெடுத்தல் வேண்டும். தற்போதைய அரசியல் அசாதாரண நிலையானது, நாட்டின் வெளிநாட்டு முதலீடுகளை கவர்வதில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. 

எனவே, இந்தநிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது மிகமுக்கியமானதாக அமைந்துள்ளது. மிகப்பெரும் முதலீடுகளை, நாட்டுக்குள்  கொண்டுவரத் துணிகின்ற எந்தவொரு முதலீட்டாளரும் தனது முதலீட்டுக்கான பாதுகாப்புக்கும்  அதன் வருமானத்துக்குமே முன்னுரிமை வழங்குபவராக இருப்பார். 

எனவே, நாட்டின் அரசியல் நிலைமையில், உறுதியற்றதொரு நிலை காணப்படுகின்றபோது, அவர்கள், தங்கள் முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டுவருவதில் முன்னெடுப்புகளை மேற்கொள்ள மாட்டார்கள். அத்துடன், அரசியல் நிலைமை சீரடையும்வரை, பெரிய முதலீட்டாளர் முதலீட்டுடன் காத்திருப்பதுமில்லை. எனவே, நமக்கான சந்தர்ப்பச் செலவும் மிக அதிகமாகும். எனவே, சரியான முதலீடுகளை, சரியான தருணத்தில் பயன்படுத்தக்கூடியதாக, நமது அரசியல் சூழ்நிலைகளும், அரசியல்வாதிகளும் நாட்டுக்கு முன்னுரிமை அளிப்பது அவசியமாகிறது.   

நாட்டின் ஊழியர் படை சார்ந்த அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை கொடுத்தல் என்பது, இலங்கை போன்ற நாட்டில், முதலீடுகளை மேற்கொள்ள வருகின்ற வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து செயற்படக் கூடியதாக, நாட்டின் ஊழியர்படை தயார்படுத்தலுடன் அமைந்திருப்பது அவசியமாகிறது. 

அப்போதுதான், முதலீட்டாளர்களின் சிந்தனைகளை முழுமையாக நாட்டில் நடைமுறைப்படுத்த முடிவதுடன், குறித்த திட்டங்களின் பயனையும் நாடு முழுமையாக அனுபவிக்க முடியும். இதற்கான, பயிற்சிகள், செயலமர்வுகளை நாடுதழுவிய ரீதியில் அமுல்படுத்துவதுடன், நாட்டின் ஊழியர் படையை, அதை நோக்கித் தயார்படுத்துவதும் மிகப்பெரிய பொறுப்பாகும்.  

இத்தகைய வழிமுறைகளின் வாயிலாக, நாட்டின் அபிவிருத்தியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடிவதுடன், நாட்டின் கடன்படு சுமையைக் குறைப்பதற்கான முயற்சிகளில் வெற்றியும் காணமுடியும்.   


இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கான தேவைப்பாடு

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.