இலங்கை சுற்றுலாத்துறை ஊக்குவிப்பில் காணப்படும் தடைகள்

அங்கிகாரம் பெற்ற வர்த்தக ரீதியற்ற அரசசார்பு அமைப்பான ஆசிய ஜேர்மன் விளையாட்டு பரிமாற்றுத்திட்டம் (AGSEP) அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையில், சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பது மற்றும் முதலீடு செய்வதில் காணப்படும் தடைகள் பற்றிய உள்ளார்ந்த விடயங்கள் வெளிகொணரப்பட்டுள்ளன.  

நாட்டின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்கிவரும் AGSEPஇன் இந்த அறிக்கையானது, சுற்றுலா தொழிற்றுறையில், குறிப்பாக, அதன் வளர்ச்சி மற்றும் பொருளாதார நன்மைகளில் காணப்படும் இடையூறுகள் உள்ளிட்ட முக்கிய விடயங்களைப் பகிரங்கப்படுத்தியுள்ளது.  

ஆசியாவில் பிரபல்யம் மிக்க ஏனைய சுற்றுலாத் தளங்களுடன் ஒப்பிடுகையில், இலங்கையானது இன்னமும் செயற்றிறன் குறைந்த இலக்காக உள்ளது என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஆசிய நாடுகளுக்கு வருடாந்தம் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் முறையே 35 மில்லியன் மற்றும் 26 மில்லியனைப் பதிவுசெய்துள்ளன.

வியட்நாமில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 மில்லியனாகவும், பிலிப்பைன்ஸில் 5 மில்லியன்களாகவும், லாவோஸில் 3 மில்லியன்களாகவும் காணப்படுகின்றன. ஒப்பீட்டளவில் இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஏறத்தாள 2 மில்லியன்களாக மாத்திரமே காணப்படுகின்றமை, இந்த ஆய்வின் புள்ளிவிவரங்கள் ஊடாகப் புலனாகிறது.   

இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள உதாரணத்துக்கு அமைய, 2007ஆம் ஆண்டு தாய்லாந்தின் பட்டாயா நகரில், 6.2 மில்லியன்களாகக் காணப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை, விளையாட்டுக்கள் மற்றும் நிகழ்வுகளை அதிகரித்ததன் மூலம் 2015ஆம் ஆண்டு 9.2 மில்லியன்களாக அதிகரித்துள்ளது.

இதுபோன்று மலேசியாவின் லங்காவி உள்ள 10 அதிகாரிகளுடன் பரஸ்பர விளையாட்டு பரிமாற்றுத் திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் விகிதாசாரத்தையும் அதிகரிக்க முடியும்.   

இதற்கு மேலதிகமாக, ஊக்குவிப்புப் பிரசாரங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் வருடாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை போன்றவற்றக்கு இடையில் காணப்படும் தொடர்புகளையும் இந்த அறிக்கை கோடிட்டுக் காட்டியுள்ளது.

வியட்நாம் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் சுற்றுலாத்துறை ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு கவர்ச்சியான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுகின்றபோதும், இலங்கையில் மிகவும் மோசமான ஒதுக்கீடே மேற்கொள்ளப்படுகிறது.   

மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பங்களிப்புச் செலுத்துவதில் நாட்டின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றுக்கிடையில் காணப்படும் முக்கியமான தொடர்புகளும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

2014ஆம் ஆண்டு உலக போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை கவுன்சில் அறிக்கையின் படி, இலங்கை வருத்தமளிக்கும் விதமாக 73ஆவது இடத்தையே பிடித்திருப்பதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத்துறையின் பங்கு 11.1 சதவீதமாகவே காணப்பட்டது என, AGSEP மேலும் குறிப்பிட்டுள்ளது.   

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத்துறையின் பங்களிப்பை நேரடியாகவும், சாதகமான முறையிலும் அதிகரிக்கும் என்பது AGSEPஇன் நிலைப்பாடாகும்.   

இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் சுற்றுலா மையங்களை ஒப்பிடுகையில், இரு நாடுகளும் சுற்றுலா ஸ்தலங்கள் பற்றிய பிரசாரங்களை முன்னெடுக்கின்றபோதும் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கவலையளிக்கும் விதமாகவே இருப்பதாக, AGSEP சுட்டிக்காட்டியுள்ளது.  


இலங்கை சுற்றுலாத்துறை ஊக்குவிப்பில் காணப்படும் தடைகள்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.