உலகை ஆட்டிப் படைக்கும் மெய்நிகர் நாணயங்கள்

 

மெய்நிகர் நாணயங்கள் (Crypto Currencies) இன்றைய நிலையில் பங்குசந்தைக்கு போட்டியாக, மக்களால் நாள்தோறும் கவனிக்கப்படும் விடயமாக மாறியிருக்கிறது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் முதலீட்டு பங்களிப்பின் ஒட்டுமொத்த உருவமாகவும், இந்த மெய்நிகர் நாணயங்கள் வளர்ந்து நிற்கின்றன. உண்மையில், இன்றுமே பலர் மெய்நிகர் நாணயம் என்றால், அது Bitcoin. Bitcoin என்றால், அதுதான் மெய்நிகர் நாணய உலகம் (Crypto Cureency World) என்றே புரிந்து ​ைவத்துள்ளனர். ஆனால், உண்மையில், இன்றைய உலகில் ஒவ்வொரு நாளும், ஏதோவொரு வகையில் மெய்நிகர் நாணயங்கள் உருவாக்கப்பட்டு கொண்டு இருக்கின்றது. ஆனால், மெய்நிகர் நாணய உலகில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட நாணயமே Bitcoin. எனவேதான் மெய்நிகர் நாணயம் என்றதும் எல்லோர் மனதிலும் Bitcoin பரவலாக அறியப்படும் நாணயமாக இருக்கிறது. 

2009ஆம் ஆண்டில்தான், முதல் மெய்நிகர் நாணயமான Biitcoin அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது,இதனை வணிக நிறுவனங்கள் அங்கிகரிக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துவிட்டது என்றே சொல்லவேண்டும். BitCoin எனப்படும் மெய்நிகர் நாணயமானது, தன்னை வெளியுலகுக்கு அறிமுகபடுத்திக்கொள்ளாத Satoshi Nakamoto என்கிற புனைபெயரைத் தாங்கிய ஒருவரினாலேயே அல்லது குறித்த பெயரைத் தாங்கியுள்ள ஒரு குழுவாலோதான் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. இன்றைய நிலையில், சுமார் 16 பில்லியன் Bitcoinகள் புழக்கத்தில் இருக்கின்றன.இவற்றின் தற்போதைய சந்தைப் பெறுதியானது, சுமார் 262 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். ஆனால், இந்த Bitcoinகள் நாம் பயன்படுத்தும் பணத்தைப் போல அச்சிடப்பட்டு பயன்படுத்தப்படக்கூடியனவல்ல. மாறாக, அவற்றின் ஒட்டுமொத்த சந்தையானது, வரையறுக்கப்பட்டது. அந்தவகையில், Bitcoinகளுக்கான சந்தையானது, 21 மில்லியன்களுக்கு மட்டுபடுத்தப்பட்டதாகவே இருக்கிறது. இந்த எண்ணிக்கையானது, சுமார் 2041ஆம் ஆண்டில் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பின், புதிதாக Bitcoinகள் சந்தைக்குள் வராது. அவை, கொடுக்கல்-வாங்கல்கள் மூலமாக மட்டுமே பரிமாற்றப்படும். Bitcoinகளின் அறிமுகத்துக்கு பின்னர், மெய்நிகர் நாணயச் சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட நாணயங்கள் அறிமுகம் செய்யப்பட்டு விட்டன. ஆனால், அவற்றில் Bitcoin போல வெற்றி பெற்றவை ஒரு நாணயங்கள் (Litecoin, Ripple and Ethereum) மாத்திரமே ஆகும். 

அவ்வகையில், இன்றைய நிலையில் மெய்நிகர் நாணயச் சந்தையில் மிகப்பிரபலமாகவுள்ள Bitcoin உட்பட ஏனைய நாணயங்கள் தொடர்பில் பார்ப்போம். இதன்போது, கடந்த ஆண்டு ஆரம்பிக்கும்போது, அவற்றின் பெறுமதியும் கடந்த ஆண்டின் முடிவில் அவற்றின் பெறுமதி எப்படியானதும் என நீங்கள் அறியும்போது, குறித்த மெய்நிகர் நாணயசந்தையின் வீச்சையும் வலிமையையும் உணர்ந்துகொள்ளுவீர்கள். 

01. Bitcoin 

மெய்நிகர் நாணயச் சந்தையின் முதல் குழந்தையே Bitcoinதான். 2009ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மெய்நிகர் நாணயமாக இதுவுள்ளபோதிலும், 2017ஆம் ஆண்டுவரை மிகப் பிரபலமான மெய்நிகர் நாணயமாக, சந்தையில் முன்னணியில் உள்ளது என்றே சொல்லவேண்டும். 2017ஆம் ஆண்டின் ஆரம்ப நாளில், ஒரு Bitcoinஇன் பெறுமதியானது, $922.68உடன் ஆரம்பித்திருந்தது. இது 2017ஆம் ஆண்டின் இறுதியில், $ 13,491.40 எனும் இமாலய வளர்ச்சியைக்கண்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பானது, சுமார் 1,363% விலை அதிகரிப்பாகும். கடந்த ஆண்டின் குறித்த ஒரு காலப்பகுதியில், இதன் விலையானது, சுமார் 20,000 அமெரிக்க டொலர்களைக் கூட தொட்டிருந்தது. இது, மக்களிடம், Bitcoin தொடர்பிலான ஆர்வத்தையும் பயன்படுத்தலையும் அதிகரித்திருக்கின்றது என்றே சொல்ல வேண்டும். 

Bitcoin சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதன் மிகப்பிரதான நோக்கமே, பணக் கொடுக்கல் வாங்கலிலுள்ள நேரவிரயத்தையும் இடைத்தரகர்தன்மையும் நீக்குவதே ஆகும். குறித்த பணத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் எனும் முழு அதிகாரமும் குறித்த பணத்தை உடமையாகக் கொண்டுள்ள ஒவ்வொரு தனிநபரிடமுமே இருக்கும். இதற்கென, அரசாங்கத்தின் அல்லது மத்திய வங்கியின் சட்டதிட்டங்கள் எதுவும் இருக்காது. சந்தையிலுள்ள ஒவ்வொரு தனிநபரின் கேள்வியும் நிரம்பலுமே Bitcoin நாணயத்தின் பெறுமதியைத் தீர்மானிக்கும் என்பதுடன், கொடுக்கல் வாங்கல் இடம்பெறும்போது, Bitcoin பேரேட்டை (Ledger) கொண்டுள்ளவர்களில் அது தானாகவே மேம்படுத்தப்படும் (Updation). 

தற்போதைய நிலையில், மெய்நிகர் சந்தையில் Bitcoin நாணயத்தின் செயல்பாடுகள் மற்றும் கொள்கை திறனில் மாற்றங்கள் செய்யப்பட்ட Bitcoin Cash, Bitcoin Gold, Bitcoin Diamond, Bitcoin Futures என பல்வேறுவகையான மெய்நிகர் நாணயங்களும் சந்தையில் உள்ளன. 

02. Ethereum 

கீரைக் கடைக்கும் எதிர்க்கடை இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக சந்தையில் உருவாக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட மெய்நிகர் நாணயமே Ethereum ஆகும். Bitcoin ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, சுமார் 06 ஆண்டுகள் கழித்து சந்தைக்கு அறிமுகமான இரண்டாவது குழந்தையாக இதனைக் கூறமுடியும். Ethereum சந்தையின் அளவானது மட்டுபடுத்தப்பட்டது அல்ல. கணினி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, குறித்த மெய்நிகர் நாணயத்தை கணினி தொழில்நுட்ப உலகில் அகழ்ந்தெடுக்க (Mining) முடியும். அத்துடன், Ethereum மெய்நிகர்நாணயமும் Bitcoin போலகொடுக்கல் வாங்கல்களை பரவலாக்கவே (Decentealized) உருவாக்கப்பட்டபோதிலும் இது குறித்த நபர்களுக்குகிடையில் இடம்பெறும் கொடுக்கல்,வாங்கல்களுக்கு நவீன ஒப்பந்தங்களை (Smar Contracts) அடிப்படையாகப் பயன்படுத்துகிறது என்பதனால், இது Bitcoinயிலிருந்து வேறுபடுகிறது. 

2017ஆம் ஆண்டை ஆரம்பிக்கும்போது,  ஒரு Ethereumத்தின் விலையானது, $8.24 ஆகும். ஆனால், 2017ஆம் ஆண்டு முடிவில் இதன் விலையானது, $ 721.17ஆக அதிகரித்திருந்தது. இது சுமார் 8,658சதவீத வீதமான விலை அதிகரிப்பாகும். இதுவே, Ethereumஇன் சந்தை வெற்றிக்கு மிகச்சிறந்த உதாரணமாகும். 

03. Ripple 

மெய்நிகர் நாணயச்சந்தையில் Bitcoin, Ethereum ஆகிய நாணயங்களை தவிர்த்து, ஏனைய அனைத்து நாணயங்களுமே ALT COIN (ஏனைய நாணயங்கள்) என்கிற வகைக்குள் கொண்டு வரப்படுகிறது. அந்த வகைக்குள் கடந்த ஆண்டில் வளர்ச்சி கண்ட மிகச்சிறந்த நாணயங்களில் ஒன்றாக Ripple மெய்நிகர் நாணயத்தை சொல்லலாம். 

Ripple என்கிற தொழில்நுட்பத்தை உலகில் நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான மூலதனத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில்தான் Ripple நாணயம் வெளியிடப்பட்டது.குறித்தத் தொழில்நுட்பம் பிரபலமடையத் தொடங்க, குறித்த நாணயத்தின் பெறுமதியும் சந்தையில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இது, சந்தையில் பங்குகளை வழங்கி மூலதனத்தைத் திரட்டிக்கொள்ளும் நிறுவனம் மிகச்சிறப்பாகச் செயல்படத் தொடங்கும்போது, அதன் பங்கின் பெறுமதி அதிகரிக்கும் நிலைக்கு இது ஒப்பானது. தற்போதைய நிலையில், இந்தத் தொழில்நுட்பத்தை, பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதால்,  இதன் பெறுமதியும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

Rippleஐப் பொறுத்த வரையில், அதன் 2017ஆம் ஆண்டிலான ஆரம்ப பெறுமதி $0.006506 டொலர்கள் மட்டுமே. ஆனால், 2017ஆம் ஆண்டின் இறுதியில் இதன் பெறுமதி 2.47 டொலராக உயர்வடைந்துள்ளது. இது சுமார் 37,864% வளர்ச்சியாகும். 

04. Bitcoin Cash 

மெய்நிகர் நாணயச்சந்தையில் Bitcoin குடும்பத்தின் இரண்டாவது புதியவரவாக இதனை சொல்லலாம். Bitcoin தொடர்பிலான கொள்கைகள் மற்றும் செயற்பாடுகளில் இன்னமும் மேம்படுத்தப்பட்டதாக, Bitcoin Cash சந்தையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், இதன் பெறுமதி, $555.89 ஆகும். ஆனால், 2017ஆம் ஆண்டு முடிவில், இதன் பெறுமதியானது, $ 2,585.28 டொலராக உயர்வடைந்திருந்தது. இது சுமார், 465% விலை அதிகரிப்பாகும். 

05. Cardano 

மெய்நிகர் நாணயச்சந்தையில் மேம்படுத்தப்பட்ட புதிய செயல்வடிவத்துடன் நிறைய நாணயங்கள் அறிமுகமாகத் தொடங்கியுள்ளன. அவற்றில், சிறந்த வளர்ச்சியையும் பிரகாசமான எதிர்காலத்தையும் கொண்டுள்ள ஒருசில மெய்நிகர்நாணயங்களில், Cardanoவுக்கும் இடம்முள்ளதான பொருளியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். சந்தையில் உள்நுழைந்த குறிப்பிட்ட சில காலத்த்திலேயே முன்னணியிலிருந்த பல்வேறு மெய்நிகர் நாணயங்களை பின்தள்ளி முன்னணிக்கு வந்துள்ளது. Cardano மெய்நிகர் நாணயச்சந்தையில் கடந்த ஒக்டோபர் மாதமே கால்பதித்திருந்தாலும், மிகக்குறுகிய காலத்தில் அதன் வளர்ச்சியானது, மிகப்பாரியதாக உள்ளது. கடந்த ஒக்டோபரில் அறிமுகமானபோது, இதன் அறிமுக விலை வெறும் $0.021678 ஆகும். ஆனால், தற்போது இதன் பெறுமதியானது, $0.65 ஆக அதிகரித்துள்ளது. இது 3,022% விலை அதிகரிப்பாகும். 

இவைதான், கடந்த ஆண்டின் இறுதியில் முட்டிமோதி மெய்நிகர் நாணயச்சந்தையில் முன்னணி நிலையைக் கொண்டுள்ள சில மெய்நிகர் நாணயங்கள் ஆகும். இவற்றை தவிர்த்து, TRON, NEM, Litecoin, Stellar , IOTA போன்ற மெய்நிகர் நாணயங்களும் அடுத்தடுத்த இடத்துக்கான போட்டியில் உள்ள மெய்நிகர் நாணயங்களாகும். மெய்நிகர் நாணயச் சந்தையை பொறுத்தவரையில் பங்குச்சந்தை போலல்லாது 24 மணிநேரமும் இயங்கும் சந்தையாகவுள்ள காரணத்தினால், அதுதொடர்பில் முதலீடு செய்வதும், அதனை பராமரிப்பதும் ஏனைய முதலீடுகளை பார்க்க சிரமமானது. எனவே, குறித்த மெய்நிகர் நாணயங்கள் தொடர்பில் மேலும் மேலும் அறிந்துகொண்டு அதற்குள் உங்களை உள்நுழைத்து கொள்ளுவதேபொருத்தமாகும்.

  • கணபதிராமன் Thursday, 01 February 2018 12:22 PM

    ோகாயின் பற்றிய உங்கள் கருத்துளை பதிவு செய்யுளேன் ?

    Reply : 0       0


உலகை ஆட்டிப் படைக்கும் மெய்நிகர் நாணயங்கள்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.