2019 ஒக்டோபர் 16, புதன்கிழமை

தனிநபர் கடன்தரப்படுத்தலின் விளைவுகள்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2019 ஜூலை 01 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையரான நாம், கடன்தரப்படுத்தல் தொடர்பில் பெரிதும் அக்கறை செலுத்துவதில்லை. இதன் காரணமாக, எமக்கு ஏற்படுகின்ற நிதியிழப்புக்கள், சலுகையிழப்புக்கள் என்பவை தொடர்பில் நாம் அறிந்திராமலிருப்பதே இதற்கான முக்கியக் காரணமாகும்.

தனிநபர் கடன்தரப்படுத்தலானது, CRIB Report எனப்படும் கடன்தரப்படுத்தல் அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு நிதிநிறுவனங்கள், வங்கிகள், இதர பல நிறுவனங்களால் தனிநபருக்கு வழங்கப்படும் நிதியுட்பட பல்வேறு சலுகைகளைத் தீர்மானிப்பதாக அமையும்.  

கடந்த கால ஆக்கங்களில், கடன்தரப்படுத்தல் அறிக்கை என்பது என்ன, அதை எவ்வாறு பெற்றுக்கொள்ளுவது, எவ்வாறு அதைப் பயன்படுத்திக்கொள்ளுவது போன்ற விடயங்களைப் பார்த்தோம்.

உண்மையில், இத்தகைய கடன்தரப்படுத்தல் அறிக்கையில், குறித்த தனிநபரொருவர் மோசமான நிலையில் தரப்படுத்தப்பட்டிருப்பின், அது, அவர்களை எவ்வாறு பாதிப்படையச் செய்யும் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. அப்போதுதான், நாம் நமது கடன் மீள்செலுத்துகை, கடனட்டை மீள்செலுத்துதல் போன்றவற்றில் அதீத கவனத்துடன் செயற்பட முடிவதுடன், நிதியியல் ரீதியான சலுகைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.  

தற்காலத்தில் நீங்கள் எந்தவொரு நிதிநிறுவனத்தை நாடினாலும் உங்களுக்கான நிதித்தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்பு, அனைத்து நிதிநிறுவனங்களுமே பெற்றுக்கொள்ளும் முக்கிய அறிக்கையாக, இந்தக் கடன்தரப்படுத்தல் அறிக்கை உள்ளது.

குறிப்பாக, கடந்த காலத்தில் நீங்கள் பெற்றுக்கொண்ட கடனை, உரியநேரத்துக்குச் செலுத்தத் தவறியவராகவிருப்பின், கடனட்டை கடனைக் காவிச்செல்லுபவராக நீங்கள் இருப்பின், உங்களுக்கு நிதிநிறுவனங்கள் தாம் வழங்கும் சேவைகள், சலுகைகளில் இறுக்கமானக் கட்டுப்பாட்டு நடைமுறையையே பெரும்பாலும் கையாளும்.  

புதிய கடன்களுக்கு வட்டிவீதங்கள் அதிகமாகவிருக்கும்  வங்கியில் சிறந்த கடன்தரப்படுத்தல் அறிக்கையைக் கொண்டிருக்குமொருவரும், மோசமான கடன்தரப்படுத்தல் அறிக்கையைக் கொண்டிருக்கும் ஒருவரும், புதிய கடனொன்றைப் பெற்றுக்கொள்ளச் செல்லும்போது, இருவருக்குமே வங்கி வழங்கும் கடனுக்கான வட்டிவீதத்தில் நிச்சயமாக வேறுபாடு இருக்கும்.

குறிப்பாக, சிறந்த கடன்தரப்படுத்தலைக் கொண்டிருப்பவருக்கு, குறைவான வட்டிவீதத்​ைதயும் மோசமானக் கடன்தரப்படுத்தலைக் கொண்டிருப்பவருக்கு அதிக வட்டிவீதத்தையும் வங்கி நிர்ணயம் செய்யும்.  

இதற்கு பிரதான காரணம், மோசமான கடன்தரப்படுத்தலைக் கொண்டிருப்பவர்கள், வங்கிக்கடனை மீள்செலுத்தாமல் போவதற்கானச் சாத்தியக்கூறுகள், கடந்தகால செயற்பாடுகளின் பிரகாரமிருப்பதனால், அந்த இடநேர்வை (Risk) வங்கிகள் வாடிக்கையாளர் மீது சுமத்துவதுடன், அந்த இடநேர்வை ஏற்கும் வங்கிகள், அதற்கு மேலதிகமான வட்டிவீதத்தையும் அறவிட முடிவு செய்கின்றன. இதனால், வங்கிகள் கடனுக்கான வட்டிவீதங்களை, சந்தையில் குறைக்கின்றபோதும், பலரால் அந்த வட்டிவீதங்களில் கடனைப் பெற்றுக்கொள்ளமுடியாத சூழ்நிலை காணப்படுகிறது.   

உத்தரவாதத்தைக் கோருகின்ற நிலை 

மோசமான கடன்தரப்படுத்தலைக் கொண்டிருக்கும் நபர்களுக்குரிய வட்டிவீதத்தை விதிப்பது மட்டுமின்றி, கடனை மீளசேகரித்துக் கொள்வதற்கான மேலதிக வழிமுறைகளையும் வங்கி, நிதிநிறுவனங்கள் கையாளத் தவறுவதில்லை.

குறிப்பாக, மோசமான கடன்தரப்படுத்தலைக் கொண்டிருக்கக் கூடியவரால், வங்கியில் பெற்றுக்கொள்ளும் கடனை மீளச்செலுத்துவதில் நெருக்கடிநிலை காணப்படும். இந்த நிலையில், அவரால் கடனை மீளச்செலுத்த முடியாத சூழ்நிலை உருவாகின்றபோது, எவ்வாறு நிதிநிறுவனங்கள், தனது கடன் தொகையை மீளப் பெற்றுக்கொள்வது என்றே சிந்திக்கும்.

இதற்காக, பெரும்பாலும் கடன்பெறுமதிக்கு ஏற்றவகையில், அசையும், அசையா சொத்துக்களை உத்தரவாதமாகப் பெற்றுக்கொள்ளும் நிலை காணப்படுகிறது.  

ஆனால், மிகச்சிறப்பானக் கடன்தரப்படுத்தலைக் கொண்டிருக்கும் ஒருவருக்கு, எவ்விதமான அசையும் அல்லது அசையா சொத்துக்களை உத்தரவாதமாக பெற்றுக்கொள்ளாமலே நிதிநிறுவனங்கள் மிக இலகுவாக, கடனை வழங்கும் நிலை காணப்படும். இதற்கு, மிக முக்கியக் காரணம், குறித்த நபர்கள் கடந்த காலத்தில் தமது கடன்தரப்படுத்தலை மிகச்சிறப்பாக கையாண்டமையே ஆகும்.  

மூன்றாம் தரப்பின் உத்தரவாதம் 

மோசமான கடன்தரப்படுத்தலைக் கொண்டிருக்குமொருவர் புதிய கடனுக்காக விண்ணப்பிக்கும்போது, குறித்தக் கடனைப் பெற்றுக்கொள்வதற்குப் பொருத்தமான அசையும், அசையா சொத்துக்களை உத்தரவாதமாக வழங்க முடியாதவிடத்து அல்லது வழங்குகின்ற அசையும், அசையா சொத்துக்கள் உத்தரவாதப் பெறுதிக்கு போதுமானதாக இல்லாதபோது, நிதி நிறுவனங்கள், குறித்த கடனை குறித்த நபர் செலுத்த முடியாதவிடத்து, அதைப் பொறுப்பேற்க மூன்றாம் தரப்பினரால் குறைந்தது இருவரை உத்தரவாதிகளாகக் கோரும். இதற்கு பிரதான காரணம், கடனை கோருகின்ற நபரின் கடன் தரப்படுத்தல், கடன் மீள்செலுத்தும் இயலுமை ஆகியவை போதுமானதாக இல்லாமையே ஆகும்.  

எல்லைகள் குறைக்கப்படுதல் 

காரணமேயின்றி, நீங்கள் கடனுக்கு அல்லது கடனட்டைக்கு விண்ணப்பத்தில் கோருகின்ற நிதி அளவிலும் பார்க்க மிகக் குறைவான நிதி அளவை நிதி நிறுவனங்கள் நிர்ணயம் செய்யுமாயின், உங்களால் குறித்த கடனை மீளச்செலுத்தும் இயலுமை போதியதாக இல்லாமையும், உங்கள் கடன்தரப்படுத்தல் மோசமாக அமைந்திருக்கின்றமையும் காரணமாக அமையும்.   

அதுபோல, வங்கி மேலதிகப்பற்று (OD Facility) வசதியினை பயன்படுத்தும் நீங்கள் அதனை தொடர்ச்சியாக பொருத்தமான சமயத்தில் மீளச்செலுத்தாது தொடர்ந்திருப்பீர்களாயினும், வங்கிகள் எதிர்காலத்தில் உங்களுக்கு வழங்கும் இத்தகைய வசதிகளில் மிக இறுக்கமான நடைமுறைகளை பின்பற்றும்.  

கடன் மற்றும் கடனட்டை வசதிகள் முற்றாக நிராகரிக்கப்படுத்தல்   

உங்கள் கடந்தகால நிதியியல் செயல்பாடுகள் மிகமோசமாகவுள்ள நிலையில், நீங்கள் போதிய அசையும்,  அசையா சொத்துக்களை அல்லது உத்திரவாதியை வழங்க முன்வருகின்ற சந்தர்ப்பத்திலும் நிதி நிறுவனங்கள் உங்களுக்கு வழங்கும் நிதியியல் சேவையான கடன், கடனட்டை போன்ற சலுகைகளை நிராகரிக்க அதிக வாய்ப்புக்கள் உள்ளது.

இதற்கு பிரதான காரணம், உங்களால் பெறுகின்ற கடனை போதிய முறையில் மீளச்செலுத்தும் உத்திரவாதமின்மையும், உங்களுக்காக வங்கி செலவிடும் செலவுகள், நேரம் ஆகியவை அவர்களுக்கான சந்தர்ப்பச் செலவாக உள்ளமையுமே ஆகும். 

புதிய வேலைவாய்ப்புகளை இழத்தல் 

சாதாரண வேலைகளில் இணைந்துகொள்ளுபவர்களுக்கு இதுவொரு பிரச்சினையாக அமையாதபோதிலும், நிதிநிறுவனங்கள் உட்பட நிதியியல் செயல்பாடுகளில் முற்று முழுதாக செயல்படும் நிறுவனங்களில் வேலைக்கு சேர்கின்ற சமயங்களில் இதுவொரு பிரச்சினையாக அமையும்.

குறிப்பாக, நிதியியல் ஒழுக்கத்​ைதத் தனது தனிவாழ்வில் பேணாதவொருவரை இத்தகைய நிறுவனங்கள் தமது ஊழியர்களாக வேலைக்கமர்த்தவோ அல்லது தமது நிறுவனத்தின் உதாரணமாகவோ கொண்டிருக்க விரும்பாது. எனவே, இந்த மோசமான கடன்தரப்படுத்தல் உங்களை அறியாமலே உங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்தினை பாதிப்பதாக அமையும்.  

உங்கள் துணை மற்றும் உத்திரவாதிகளை உளரீதியாகவும், நிதியியல் ரீதியாகவும் பாதிக்கக்கூடும்.  
உங்களது மோசமான கடன்தரப்படுத்தல் உங்களை மாத்திரம் பாதிப்பதுடன் நின்றுவிடாது, சிறந்த கடன்தரப்படுத்தலை கொண்டிருக்கக்கூடிய உங்களது துணையின் நிதியியல் செயற்பாடுகளையும் பாதிக்கக்கூடும்.

குறிப்பாக, நீங்கள் நிதி நிறுவனங்களுக்கு வழங்கும் “வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளும் விண்ணப்படிவம் (Know Your Customer - KYC Form) மூலமாக, உங்களது துணையின் தகவல்களும், உங்களது தகவல்களும் இணைக்கப்பட்டு மத்திய வங்கியின் ஒன்றிணைந்த தகவல் மையத்தில் தொடர்புபடுத்தி சேமிக்கப்பட்டிருக்கும்.

எனவே, உங்களது துணை கடனை பெற்றுக்கொள்ள நிதிநிறுவனமொன்றினை நாடுகின்றபோது, உங்களது தகவல்களுடன் அவர் தொடர்புபட்டிருப்பின், உங்களது மோசமான கடன்தரப்படுத்தல் செயல்பாடுகளின் விளைவாக, அவரது நிதியியல் தேவைகளும் பாதிக்கப்படும்.  

அதுபோல, உங்களுக்கு உத்திரவாதம் வழங்குகின்ற தரப்பினரும், நீங்கள் பொருத்தமான வகையில் உங்கள் கடனையோ அல்லது நிதியியல் பொறுப்புக்களையோ பொருத்தமான முறையில் நிறைவேற்றாதவிடத்து, அந்த சுமையும் உங்களுக்கு உத்திரவாதம் வழங்கியவர்களை பாதிப்பதுடன், அவர்களுடனான உங்கள் உறவிலும் விரிசல்கள் ஏற்பட காரணமாக அமைந்துவிடும்.

எனவே, நீங்கள் உங்களை அறியாமல் செய்கின்ற நிதியியல் தவறுகளானவை உங்களையும், உங்களுடைய எதிர்காலத்தையும் மற்றும் உங்களை சார்ந்துள்ளவர்களின் எதிர்காலத்தினையும் நிச்சயமாக பாதிக்கச் செய்வதாக அமையும்.

எனவே, உங்கள் நிதியியல் ரீதியான செயல்பாடுகளுக்கு முக்கியத்துவத்தினை வழங்குவதுடன், அதன்மூலமாக உங்களது எதிர்காலத்தை பாதுகாத்துக்கொள்வதனையும், உங்களை சார்ந்தோர் பாதிப்படையாதவண்ணமிருப்பதையும் உறுதிசெய்து கொள்ளுங்கள்.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .