தொகுதிக்கடன் அறிமுகம்

முதலீட்டாளருக்கு, ஏதாவது காலத்துக்கொருமுறை வட்டியைச் செலுத்துவதற்கு அல்லது முதிர்வுகாலத்தின் முடிவில் வேறு குறிப்பிட்ட காலத்தில் முகப்பெறுமதியை செலுத்துவதற்கான உத்தரவாதத்துடன் கம்பனியொன்றால் வழங்கப்படும் நீண்டகாலக் கடன்பத்திரம் கம்பனித்துறைத் தொகுதிக்கடன் எனக் கருதப்படும்.  

இதற்கமைய கம்பனித்துறைத் தொகுதிக்கடன் தொடர்பான மூன்று பிரதான பண்புகள் கீழே தரப்பட்டுள்ளன.  

முகப்பெறுமதி (Face Value)  

முகப்பெறுமதி எனப்படும் பெயரளவுப் பெறுமதியானது (Nominal value) தொகுதிக்கடன் ஒன்றுக்காகக் கம்பனியால் முதிர்வுக் காலத்தின் இறுதியில் செலுத்துவதற்காக உத்தரவாதமளிக்கப்பட்ட நிதியாகும். முகப்பெறுமதியின் அளவானது தொகுதிக்கடன் வழங்கப்படும் கம்பனியால் தொகுதிக்கடன் வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் நிச்சயிக்கப்படுகின்றது. இதுவரைக்கும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட தொகுதிக்கடன்கள் ரூ. 100 அல்லது ரூ. 1,000 பெயரளவுப் பெறுமதியுடன் வழங்கப்பட்டுள்ளது.

வட்டி வீதம் 

தொகுதிக்கடன் ஒன்றின் வட்டி தொடர்பாக உள்ள நிபந்தனைகளுக்கு ஏற்ப தொகுதிக்கடன் வகைகள் நான்காக வகுக்கப்பட்டுள்ளன. முதலாவதாக, தொகுதிக் கடன்களுக்கு வட்டி செலுத்தப்படுமா? இல்லையா? என்பதற்கமைய வட்டியுடனான தொகுதிக்கடன் மற்றும் வட்டியற்ற தொகுதிக்கடன் என இருவகைத் தொகுதிக்கடன்களை அறிந்து கொள்வோம்.

 வட்டியுடனான தொகுதிக்கடன்கள்

 வட்டியுடனான தொகுதிக்கடன் என்பது நிச்சயிக்கப்பட்ட காலத்துக்கொருமுறை வட்டிப்பணத்தை செலுத்தும் தொகுதிக்கடனாகும். தற்போது வழங்கப்படும் தொகுதிக் கடன்களில் மிகவும் பிரபல்யமான தொகுதிக்கடன் வகை இதுவாகும்.  

உதாரணமாக பெயரளவுப் பெறுமதி ரூ. 1,000 ஆகவும் வருடாந்த வட்டி வீதம் 18 சதவீதமாகும். இத்தொகுதிக்கடனானது மூன்று வருடத்தில் முதிர்வடையும். தொகுதிக்கடனுக்கு வட்டியானது பெயரளவுப் பெறுமதிக்கு கணக்கிடப்படுகின்றது.இதன்படி, ஒரு தொகுதிக்கடனுக்கான வருடாந்த வட்டித் தொகையானது ரூ. 180 ஆகும். (ரூ. 1,000x18%) தொகுதிக்கடனுக்கு வட்டியானது மாதாந்தம், காலாண்டு, அரையாண்டு அல்லது வருடத்தி‌ற்கொருமுறை செலுத்தப்படலாம். இந்த அனைத்துக் கால மட்டத்தையும் கொண்ட தொகுதிக்கடன்கள் தற்போது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலே குறிப்பிட்ட உதாரணத்தில், வட்டியானது வருடத்திற் கொரு முறையாயின் முதலீட்டாளருக்கு வருடத்துக்கு ரூ. 180 வீதம், மூன்று வருடத்துக்கு வட்டிப்பணம் வழங்கப்படும்.வட்டியானது அரை வருடத்துக்கொரு முறையாயின் ஒவ்வோர் ஆறு மாதத்துக்கொரு முறை ரூ. 90 (ரூ. 180/2) வீதம் ஆறு முறை வட்டிப்பணம் வழங்கப்படும். வட்டி செலுத்தப்படும் காலமானது காலாண்டுக்கொரு முறையாயின் ஒவ்வொரு மூன்று மாதத்துக்கொரு முறையும் ரூ. 45 (ரூ. 180/4) வீதமும் வட்டியானது மாதத்துக்கொருமுறை செலுத்தப்படுமாயின் மாதத்துக்கு ரூ. 15 வீதம் (ரூ. 180/12) வட்டியானது 36 முறை வழங்குவதற்கு கம்பனியானது பொறுப்பாயுள்ளது. வட்டியற்ற தொகுதிக்கடன்கள்

 தொகுதிக்கடன் ஒன்றுக்கு காலத்துக்கொரு முறை வட்டிப்பணம் செலுத்தப்படாத தொகுதிக்கடன், வட்டியற்ற தொகுதிக்கடன் எனப்படும். இவ்வாறு வட்டி செலுத்தப்படாத காரணத்தால் இத்தகைய தொகுதிக்கடனானது கம்பனியால் முகப்பெறுமதியிலும் பார்க்கக் குறைவான விலைக்கே வழங்கப்படுகின்றது. வட்டியுடனான தொகுதிக்கடனைப் போன்று வட்டியற்ற தொகுதிக்கடனுக்கும் முகப்பெறுமதியானது முதிர்வுக் காலத்தின் இறுதியில் செலுத்துவதற்கு கம்பனி கடமைப்பட்டுள்ளது. 

வட்டியற்ற தொகுதிக்கடன் ஒன்றைக் கொள்வனவு செய்யும் நபரொருவரின் இலாபமானது முதிர்வுக் காலத்தின் இறுதியில் கிடைக்கும் பெயரளவுப் பெறுமதிக்கும் அவரது கொள்விலைக்கும் இடையில் காணப்படும் வித்தியாசமாகும்.உதாரணமாக ரூ. 1,000 மூன்று வருடங்கள், வட்டியற்ற தொகுதிக்கடன் ஒன்றைப் பார்ப்போம். கம்பனியால் பொதுமக்களுக்கு தொகுதிக்கடன் ஒன்று ரூ. 609 வீதம் விற்பனை செய்யப்படுகின்றது என எண்ணிக்கொள்வோம். எனவே இத்தொகுதிக் கடனைக் கொள்வனவு செய்யும் நபர் ரூ. 609 ஐ செலுத்தி மூன்று வருடங்களின் பின்னர் அவருக்கு கம்பனியால் ரூ. 1,000 வழங்கப்படும்.

பெயரளவுப் பெறுமதிக்கும் கொள்விலைக்குமிடையே வித்தியாசமான ரூ. 391 அவரது வருமானமாகும். அதை வருடாந்த வருமானச் சதவீதமாகக் கணிப்பிடும்போது 18% ஆகக் காணப்படுகின்றது. வட்டியற்ற தொகுதிக்கடன்களுக்கு காலத்துக்கொருமுறை வட்டி செலுத்தப்படாமல் பெயரளவுப் பெறுமதிக்கும் கொள்விலைக்கும் இடையேயான வித்தியாசம் ஒரே முறையில் வருமானமாகக் கிடைக்கின்றது.

இத்தகைய தொகுதிக்கடன்களுக்கு வட்டியைக் குறிப்பிடும்போது வட்டியானது முதிர்வுக்காலத்தின் இறுதியில் செலுத்தப்படுவதாக இதை வழங்கும் கம்பனியால் அறிவிக்கப்படும். பெயரளவுப் பெறுமதிக்கும் கொள்விலைக்கும் இடையேயான வித்தியாசமானது கொடுபட வேண்டிய வட்டியாகக் (Accrued Interest) கருதப்படும். இத்தொகுதிக் கடன்களின் முகப்பெறுமதி ரூ. 100 ஆகும். இதற்கமைய முதலீட்டாளர் ஒருவரால் 18 வருடத் தொகுதிக்கடன் ஒன்றுக்கு ரூ. 14.68 சதமும் 15 வருட தொகுதிக்கடன் ஒன்றுக்கு ரூ. 20.90 சதமும் ஆரம்பத்தில் வழங்கப்படும் போது செலுத்தப்பட்டுள்ளது.

பெயரளவுப் பெறுமதி, இந்தக் கொள்விலைக்கும் இடையேயுள்ள வித்தியாசமானது வருடாந்த  சதவீதமாகக் கணக்கிடும்போது, 18 வருடத் தொகுதிக்கடனுக்கு வருமானம் 11.25% ஆகவும் 15 வருடத் தொகுதிக்கடனுக்கு வருமானம் 11% ஆகவும் காணப்படுகின்றது. இதைத்தவிர கம்பனியால் காலத்துக்கொருமுறை வட்டி செலுத்தப்படமாட்டாது.

(மிகுதி அடுத்த வாரம்)  

(இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு)  

 


தொகுதிக்கடன் அறிமுகம்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.