நம் எதிர்காலம் மின்வணிகமா ?

வணிகங்களை நோக்கி, மக்கள் செல்லும்நிலை மாறி, வணிகங்கள், மக்களின் வீடுகளுக்கு வந்துசேரும் நிலை உருவாகியிருக்கிறது. இணையமும் வளர்ந்துவரும் தொழில்நுட்பமும் இதைச் சாத்தியப்படுத்தி இருக்கிறது. 

இதன் விளைவாக, இருந்த இடத்திலிருந்து கொண்டே, தேவையான பொருட்கள், சேவைகளைப் பெறுவது சாத்தியமாகி இருக்கிறது. ஆடம்பரப் பொருட்களிலிருந்து அத்தியாவசிய பொருட்கள் வரை, அனைத்துமே மின்வணிகத்தில் கிடைக்கக் கூடியதாகி விட்டது.   

வாடிக்கையாளர்களின் நேரமின்மை என்கிற ஒரு கருவை, மூலதனமாகக் கொண்டு இயங்கும் இவ்வகை வணிகங்கள், தனித்து மனிதர்களின் தேவைகளுக்கான பொருட்களை மாத்திரம் வழங்குவதில்லை. அவர்களது தேவைகளையும் விருப்பங்களையும் உருவாக்கக்கூடிய பொருட்கள்,சேவைகளையும் வழங்குவதிலும் மின் வணிகம் வெற்றி காண்கிறது.   

இன்றைய நிலையில், இலத்திரனியல் வணிகச் சந்தையானது, தன்னகத்தே எவ்விதமான தடைகளையும் கொண்டிராத, முற்றிலும் திறந்த சந்தையாகவே (Open Market) இருக்கிறது. இந்தச் சந்தையில், வாடிக்கையாளர்களைத் தம்வசபடுத்திக்கொள்ளும் சந்தைப்படுத்தல் திறன் கொண்ட எவருமே, இங்கு ராஜாதான். 

இவ்வாறு தொழிற்படும் மின் வணிகத்தில், ஒரு தனிநபராக அல்லது நிறுவனமாக வெற்றிக்கொள்ள, அடிப்படையாக உள்ள விதிகள் தொடர்பிலும் அறிந்திருக்க வேண்டியது அவசியமல்லவா.  
சந்தையை உருவாக்குபவர்கள் யார்?  

மின் வணிகத்தைப் பொறுத்தவரையில், கொள்வனவாளர்கள் சந்தையை உருவாக்கவேண்டிய அவசியமில்லை. சந்தை வாய்ப்பைக் கொண்டிராத பொருட்களை அல்லது சந்தை வாய்ப்பைக் கொண்ட பொருட்களைக் கூட, எளிமையாகக் கொள்வனவாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையையே, மின் வணிகச் சந்தை செய்கிறது.  

பாரம்பரிய வணிக முறையில் கொள்வனவாளர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது விநியோக சங்கிலியாகும் (Supply Chain). அதாவது, உற்பத்தியாளரிடமிருந்து பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்க்கும் வரையில், உற்பத்திப் பொருட்கள் மீது சேர்க்கப்படும் மேலதிக செலவுகள், உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை அதிகபடுத்துவதே ஆகும். 

ஆனால், இணையச் சந்தையில் உற்பத்தியாளர் கூட, விற்பனையாளராக இருக்கலாம். அல்லது வாடிக்கையாளரை நேரடியாகச் சந்தித்துக்கொள்ளக்கூடிய மின் சந்தையில், உற்பத்தியாளரே விற்பனையாளராக இருக்கலாம். இதன் விளைவாக, செலவீனங்கள் குறைக்கப்பட்டு, சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. இதுவே, கொள்வனவாளர்களையும் உருவாக்கும். 

எனவே, மின் வணிகத்தில் தனியே கொள்வனவாளர்கள் மாத்திரமே சந்தையை உருவாக்குபவர்களாக இருப்பதில்லை. மாறாக, முதலீட்டுக்கு வருமான மதிப்பீட்டை கொண்ட எந்தவொரு பொருட்கள், சேவைகளும் கூட வணிக வாய்ப்பை உருவாக்குவதாக அமையும்.  

மின்வணிகத்தில் எது முக்கியமானது?

 மின் வணிகம் என்பது, உங்களது இணையத்தளத்துக்கான பார்வையாளர்களை அதிகபடுத்துவதோ அல்லது அது சார்ந்த விளம்பரங்கள் மூலம் இணையத்தின் பார்வையிடலை (Website Traffic) அதிகப்படுத்தி அதன் நிலையை உயர்த்துவதோ அல்ல; 

மாறாக, உங்கள் இணையத்தளத்தில் பார்வையாளர்கள் அல்லது வாடிக்கையாளர்கள் செலவிடும் நேரத்துக்கேற்ப, அவர்களை வர்த்தகப் பரிமாற்றத்தில் ஈடுபட வைப்பதும், அதன் தொடர்ச்சியாக, அவர்களை மீளவும் இணையத்தளத்துக்கு வருகைதர வைத்தல் அல்லது அவர்களைத் தக்கவைத்துக்கொள்ளுவதுமே ஆகும்.  

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பாரம்பரிய வணிகமுறையிலும் பார்க்க, இணைய வர்த்தகத்தில் உள்ள நன்மையே,நீங்கள் விளம்பரம் என்கிற பெயரில் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்குமான பெறுபேற்றை அறிந்துக்கொள்ள முடிவதாகும்.

எனவே, மின் வணிகத்தில் பார்வையாளர் அதிகரிப்புக்கு நீங்கள் செலவு செய்வதை பார்க்கிலும், வாடிக்கையாளர்களை எப்படி உருவாக்கிகொள்ள முடியும் அல்லது வாடிக்கையாளர்களை எப்படி தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதன் அடிப்படையில் செயல்படுவது அவசியமாகும்.

 இதுவே, கட்டற்ற திறந்த சந்தையில் இலாபகரமான ஒருவராக உங்களை நிலைநிறுத்திக்கொள்ள உதவும்.  

எந்தச் சந்தையிலும் வாடிக்கையாளர்களே அரசர்கள்  

எத்தகைய வணிகமுறையாக இருந்தாலும் சரி, வாடிக்கையாளர்களுடன் மிகச்சிறந்த உறவைப் பராமரித்தல் என்பது முக்கியமானது. ஆனால், மின் வணிகத்தில் இது மேலும் ஒருபடி முக்கியமானதாக இருக்கிறது. குறிப்பாக, மின் வணிகத்தில் பெரும்பாலும் விற்பனையாளர்களும், கொள்வனவாளர்களும் சந்தித்துக்கொள்ளுவதே இல்லை. 

எனவே, ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளாமலே இடம்பெறும் வர்த்தகத்தில் ஒருவரின் உணர்வுகளையும் கருத்துகளையும் புரிந்துகொண்டு, வர்த்தக உறவைப் பலப்படுத்துவது என்பது சாதாரண காரியமல்ல.   

பெரும்பாலான மின் வணிகங்கள், அடிவாங்கும் இடமாகவும் இதுதான் இருக்கிறது. காரணம், சேவைக்கு முந்திய மற்றும் சேவைக்கு பிந்திய வாடிக்கையாளர் உறவைப் பலப்படுத்தத் தவறுவதன் விளைவாகவே, பெரும்பாலான மின் வணிகங்கள் போட்டித்தன்மைமிக்க சந்தையிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. 

சந்தையில் எவ்வளவு பெரிய நிறுவனமாக வளர்ந்தாலும், வாடிக்கையாளர் உறவு என்பதை மிக உயர்ந்தளவில் கொண்டிருக்கவேண்டியது அவசியமாகிறது. இல்லையெனில், அதுவே உங்களது வணிகத்தை முடிவுக்கு கொண்டுவரும் காரணியாக மாறிவிடும். 

வெளிநாடுகளில் இணைய வர்த்தகம் தவிர்க்க முடியாததாக மாறியுள்ள நிலையில், வாடிக்கையாளர் உறவைத் திறமையாகக் கையாள மட்டும் ஆண்டொன்றுக்கு 36 பில்லியன் அமெரிக்க டொலர்களை இணைய நிறுவனங்கள் செலவு செய்வதாக Forbes இணையத்தளம் குறிப்பிடுகிறது. 

இது ஒன்றே, வாடிக்கையாளர் உறவு இந்நவீனமயப்படுத்தப்பட்ட வணிகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதற்கு உதாரணமாக உள்ளது.  

இணைய இடைத்தரகர்கள் (Cybermediary) எனும் குழப்பக்காரர்கள்  

இணையப்பரப்பில் வர்த்தகத்தின் வெற்றியே, இடைத்தரகர்கள் அல்லது விநியோக சங்கிலியின் பயன்பாடு குறைவாக இருப்பதே ஆகும். எனவே, வணிகச் செயற்பாடுகளை இலகுவாக்கிறோம் என்பதன் பெயரில், மீண்டும் பாரம்பரிய வணிகம்போல, இடைத்தரகர்களை அதிகப்படுத்திக் கொள்ளக்கூடாது. 

மின்வணிகத்தில் இடைத்தரகர்களின் செயல்பாடுகளும் பொறிமுறைகளும் சற்றே வித்தியாசமானதாக இருக்கும்.   

உதாரணமாக, இணையத்தில் கொள்வனவாளரும், விற்பனையாளரும் வர்த்தகத்தைத் தனித்து முடித்துக்கொள்ள முடியாது. 

வாடிக்கையாளர், குறித்த விற்பனையாளரிடம் பொருளை வாங்க விரும்பின், அதற்கான பணத்தைச் செலுத்த வேண்டும். அதை நேரடியாகப் பணமாகச் செலுத்த முடியாது. எனவே, அதற்காக இணையப் பணத்தை (அட்டைகள் அல்லது பணவைப்புக் கணக்குகள்) பயன்படுத்த முடியும். 

இதன்போது, தவிர்க்க முடியாத வகையில், இணையப் பணம் என்கிற போர்வையில், இடைத்தரகர்கள் உருவாகுகிறார்கள். அதுபோல, வாடிக்கையாளர்கள் பணத்தை எடுத்த எடுப்பில் செலுத்துவதில்லை. அதைச் செலுத்துவதற்கு, விற்பனையாளர்கள் பாதுகாப்பான கொடுப்பனவு முறையைக் கொண்டிருக்கவேண்டும்.

இதையும் வேறு தரப்பினரிடமிருந்து பெற்று வழங்குவார்களாயின், அவ்வாறும் இடைத் தரகர்கள் உருவாகுவார்கள்.   

இவ்வாறாக, பாரம்பரிய வணிகத்திலிருந்து வேறுபட்ட முறையில், இடைத்தரகர்கள் மின் வணிகத்தை ஆக்கிரமித்து இருக்கிறார்கள். இவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும். 

இவர்களால் மோசடிகள் இடம்பெறக்கூடும் என்பது மட்டுமல்லாது, இவர்களுக்குச் செலுத்தும் அனைத்துக் கட்டணங்களுமே பொருட்கள், சேவைகளின் பெறுதியுடன் சேர்க்கப்பட்டு, இறுதியில் வாடிக்கையாளர்களையே வந்தடையும்.  

மேலே கூறிய அனைத்துமே, மின் வணிகத்தில் இன்றிமையாத வகையில் கவனிக்க வேண்டிய அல்லது கவனிக்கப்பட வேண்டிய விதிகளாகும். 

கால மாற்றத்துக்கு ஏற்ப, வணிகத்தில் ஏற்படும் மாற்றங்களைத் தவிர்க்க முடியாமல் ஏற்றுக்கொள்ளவேண்டிய சூழலில், அத்தகைய மாற்றங்களில் நம்மை தொலைத்துக்கொள்ளாமல் எப்படி நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதனை அறிந்திருப்பதும், நடைமுறைப்படுத்துவதும் அவசியமாகிறது.    


நம் எதிர்காலம் மின்வணிகமா ?

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.