நீங்களொரு மிகச்சிறந்த முதலீட்டாளரா?

இலங்கையிலுள்ள முதலீட்டாளர்கள், பல்வேறு முதலீட்டு வழிமுறைகளை நோக்கி ஈர்க்கப்படுவதுடன், தமது முதலீடுகளையும் மேற்கொள்ளுகிறார்கள். அவற்றில் முதன்மையான முதலீட்டு முறையாகப் பங்குசந்தையைக் குறிப்பிட முடியும். உண்மையில், பங்குசந்தையின்பால் ஈர்க்கப்படும் முதலீட்டாளர்கள், தமது முதலீடுகளுக்கான வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டாலும், முதலீட்டுக்குத் தீங்கு ஏற்படாத வண்ணம் செயல்படும் மிகச்சிறந்த முதலீட்டாளராகச் செயல்படுவதில்லை என்கிற குற்றசாட்டு இருக்கின்றது.  

அப்படியாயின், உண்மையில் மிகச்சிறந்த முதலீட்டாளர் என்பவர் யார்? பங்குச்சந்தையில் பணம் சம்பாதிப்பதை நோக்காகக் கொண்டிருந்தாலும், முதலீடுகளைச் சட்டவிதி முறைகளுக்கு உட்பட்டதாக மேற்கொண்டு, பொறுமையுடனும் ஒழுக்கவிதிகளுக்குட்பட்டும் சந்தை பற்றிய பூரண புரிதலுடன் முதலீட்டுச் செயல்பாடுகளை மேற்கொள்ளுபவர்களே மிகச்சிறந்த முதலீட்டாளர்களாக அங்கிகரிக்கப்படுகிறார்கள்.  

உண்மையில், பங்குச்சந்தையில் வெற்றிகரமான முதலீடுகளை செய்வதற்கென, எந்தவகையான சூத்திரங்களும் வரையறுக்கப்பட்டிராத நிலையில், முறையான ஒழுக்க விதிகளைப் பின்பற்றி, முதலீடு செய்வதன்மூலம், முதலீட்டு இடநேர்வைக் (Investment Risk) குறைத்து, வருமானத்தை அதிகப்படுத்திக்கொள்ள முடியும். இவ்வாறாகப் பின்பற்ற வேண்டிய மற்றும் கவனத்தில் கொள்ளவேண்டியவற்றை அறிந்துகொள்ளுவது அவசியமாகிறது.  

தெளிவான மற்றும் தெரிந்த முடிவுகளையே எடுத்தல்  

நீங்கள் கார் ஒன்றில் முதலீடு செய்யப்போகின்றீர்கள் எனின், எழுந்தமானமாக உங்களுக்குப் பிடித்த காரைக் கொள்வனவு செய்யப்போவதில்லை. மாறாக, அது தொடர்பாகப் பலருடன் கலந்தாலோசித்து, மிகசிறந்த பயன்பாடு, மீள்விற்பனை எனப் பல்வேறு காரணிகளைக் கவனத்தில்கொண்டே கொள்வனவை முன்னெடுப்பீர்கள். அப்படித்தான், பங்குசந்தையிலும் மிக அவதானமாகச் செயல்படவேண்டும்.  

பங்குசந்தையில் எப்படி ஒரு நிறுவனத்தின் பங்குகள் கொள்வனவுக்கு தயார்நிலையில் உள்ளதோ, அதற்குச் சமமான அளவில் அந்தந்த நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்கள்,  தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவை, குறித்த நிறுவனத்தின் கடந்தகால செயல்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள், சந்தைச் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வாளர்களின் கருத்துகளைக் கொண்டே இருக்கின்றன. எனவே, இவற்றைப் பூரணமாக ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம், சரியான பங்கையும் அதன் சரியான கொள்முதல் பெறுமதியையும் அறிந்துகொள்ள முடியும். அப்போதுதான், பங்குகளை மிகை பெறுமதிக்குக் கொள்வனவு செய்வதன் மூலமாக ஏற்படும் நட்டநிலைமை தவிர்க்கப்படும்.  

அறிந்ததில் முதலீடு செய்வதுடன் ஆட்டத்தை ஆரம்பியுங்கள்  

மிகசிறந்த முதலீட்டாளருக்கு துணிகர முடிவுகளை எடுக்கின்ற தன்மை மிக அவசியமானது. உண்மையில், முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்ள ஆரம்பிக்கும்போது, தனக்கு மிகத் தெளிவான, புரிதலையுடைய வணிகங்கள் மீது முதலீடுகளைச் செய்ய வேண்டும். குறிப்பாக, இத்தகைய வணிகங்களின் ஆரம்ப பொது வழங்கல் (Initial Public Offering) தொடக்கம், கிடைக்கின்ற அனைத்து ஆவணங்களையும் அடிப்படையாகக்கொண்டு, உங்களது புரிதலையும் வைத்துக்கொண்டு, முடிவுகளை எடுக்க வேண்டும். இது நிச்சயமாக, உங்கள் முதலீட்டுகளுக்கான வருமானத்தைப் பெற்றுத்தருவதாகவே இருக்கும். இதன்போதும், நீங்கள் முழுமையாகத் திருப்திப்படாதவிடத்து, அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்ட பங்குத்தரகர்கள் மற்றும் ஆலோசகர்களிடம் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள முடியும்.  

சந்தையின் தன்மையோடு விளையாடாதீர்கள்  

பங்குசந்தையில் முதலீடு செய்வதற்கான நல்லநேரம், முதலீட்டைத் தவிர்ப்பதற்கான கெட்ட நேரமென எதுவுமே இல்லை. சந்தையின் தன்மை பல்வேறு காரணிகளின் விளைவாக மாற்றமடைந்துகொண்டே இருக்கும். எனவே, அவற்றை முழுமையாக எதிர்வுகூறுவது என்பது கடினமானது. எனவே, இந்தநிலையைத் தவிர்ப்பதற்கு நீண்டகால முதலீட்டு உத்திகளைப் பயன்படுத்துவது உசிதமானது. காரணம், குறுங்காலத்தில் அதீத மாற்றங்கள் ஏற்பட்டாலும், நீண்டகாலத்தில் நாம் எதிர்பார்க்கும் பெறுபேறுகளைப் பெறமுடியும் என்பதாலேயாகும்.  

முதலீட்டு ஒழுங்குமுறைகளை பின்பற்றல்  

ஒரு சிறந்த முதலீடானது உண்மையில் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளுவதுடன், அதன்மூலமான பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளப் பொறுமையுடன் அணுகவேண்டியது அவசியமாகிறது. எவ்வளவுதான் சிறந்தவொரு முதலீட்டாளராக இருந்தாலும், அவரால் முதலீடுகளின் செயல்பாடுகளுக்கு அமையவே வருமானத்தை உழைக்க முடியுமே தவிர, அவரால் பங்கு கொடுக்கல்வாங்கல்களில் தொடர்ச்சியான மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் வருமானங்களை உழைக்க முடியாது. அது, முதலீட்டு சட்டவிதிகளுக்கு புறம்பானதும் ஆகும்.  

முதலீட்டுத் தீர்மானங்களில் உணர்ச்சிகளுக்கு இடமில்லை  

முதலீட்டு சந்தையானது முதலீட்டாளர்களின் இரண்டு விதமான உணர்ச்சிகளையே மையப்படுத்தி செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. ஒன்று பயம்; மற்றையது பேராசை. முதலீட்டுக்கு அதிக வருவாய் வருகின்றது என்கிற நிலையில் அல்லது அதிக வருமானத்தை எப்படியாவது சம்பாதித்துக்கொள்ள வேண்டும் என்கிற நிலையில், மேற்கூறிய இரண்டு உணர்ச்சிகளுமே ஒரு முதலீட்டாளரை முழுமையாக ஆட்கொண்டு, தவறான முடிவுகளுக்கு அழைத்துச் செல்லுகின்றது.   

எனவேதான், வணிகத்தில்கூட முதன்மைக் கோட்பாடு ஒன்று உள்ளது. அது, வணிகம் வேறு; உரிமையாளர் வேறு என்கிற அடிப்படையைச் சொல்லுகிறது. அதுபோலதான், முதலீட்டுத் தீர்மானங்களின்போதும் உங்களது உணர்வுகளுக்கு இடம்கொடுக்காமல் முதலீட்டு முடிவுகளை எடுக்கவேண்டியது அவசியமாகிறது.  

முதலீட்டு பரவலாக்கலை கட்டயாமாக்கல்  

முதலீட்டு உணர்ச்சிகளின் விளைவாக, முதலீட்டாளர்கள் செய்கின்ற மிகமுக்கியமான தவறுகளிலொன்று முதலீட்டுக்கென வைத்திருக்கும் அனைத்து பணத்தையும் ஒரே பங்கில் அல்லது முதலீட்டில் மொத்தமாக முதலீடு செய்வதாகும். இது தற்கொலைக்கு ஒப்பான செயலாகும். 

முதலீட்டு பரவலாக்கல் மூலமாகவே உங்கள் முதலீட்டுக்கு உள்ள இடநேர்வைக் குறைத்துக்கொள்ள முடியும். இதற்கு மிகச்சிறந்த உதாரணம், நம்பிக்கை பொறுப்பு அலகுகள் ஆகும்.   

பங்குச்சந்தை சூதாட்ட களமல்ல  

ஒரு முதலீட்டாளராகப் பங்குச்சந்தை பற்றிய புரிதல் அவசியமாகும். முதலில், பங்குச்சந்தை ஒரு சூதாட்டக் களமில்லை என்பதனைப் புரிந்துகொள்ள வேண்டும். விட்ட பணத்தை மீளவும் பிடித்துகொள்ளலாம் என்கிற ரீதியில், இங்கே சூதாட முடியாது. பங்குச்சந்தை தொடர்பில் பொருத்தமான அறிவும், பங்குகள் தொடர்பில் பூரணமான அறிவும் உள்ளபட்சத்திலேயே பங்குசந்தையில் நிலைத்து நிற்கவும் வருமானத்தைப் பெற்றுக்கொள்ளவும் முடியும். அதுபோல, பங்குச்சந்தையில் முதலீடு செய்யும்போது, நீங்கள் எதிர்பார்க்கும் வருமானம் நிஜத்தை பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும். 

முதலீட்டு ஆர்வம் வருகின்றபோதும், முதலீடு செய்கின்றபோதும் இருக்கின்ற ஆர்வம், முதலீடுகளைத் தொடர்ச்சியாகப் பராமரிக்கும்போது, பல முதலீட்டாளர்களுக்கு இருப்பதில்லை. முதலீடு செய்கின்ற பங்குகள் தொடர்ச்சியாக வளர்ச்சியடையாதபோது, முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடு தொடர்பிலான கண்காணிப்பைக் கைவிட்டு விடுவார்கள்.

ஒருவர் தொடர்ச்சியாகத் தனது முதலீடுகள் தொடர்பிலும், தான் முதலீடு செய்த நிறுவனம் தொடர்பிலும் கண்காணித்து கொண்டிருப்பது அவசியமாகும். அப்போதுதான், முதலீடுகள் தொடர்பில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்க முடியும். உங்கள் முதலீடு தொடர்பில் உங்களைத் தவிர வேறு எவருமே அக்கறை கொள்ளமாட்டார்கள்.

எனவே, ஒவ்வொரு நாளும் உங்கள் முதலீடுகள் தொடர்பில் கண்காணிக்க முடியாதுவிட்டாலும், குறைந்தது வாரத்திற்கு ஒருதடவையோ அல்லது மாதத்திற்கு ஒரு தடவையோ உங்கள் முதலீடுகள் தொடர்பிலும், புதிய முதலீடுகள் தொடர்பிலும் கவனத்தை செலுத்துங்கள்.  அதுபோல, மிகச்சிறந்த முதலீட்டாளர்களாக நீங்கள் வரவேண்டுமென்றால், ஆட்டு மந்தை கூட்டத்துடன் சேர்ந்து ஓடுகின்ற மனநிலையில் நிச்சயமான மாற்றம் வரவேண்டும். 

நண்பரோ அல்லது உறவுக்காரரோ குறித்த பங்கை வாங்கிவிட்டார் என்பதற்காகவோ அல்லது முதலீட்டுச் சந்தையில் ஒரு பங்கைப் பற்றியே எல்லோரும் சிலாகித்துக் கொண்டு இருக்கிறார்களோ என்பதற்காக மட்டும், உங்கள் முதலீடுகளைச் செய்யாதீர்கள். உங்களுக்குத் திருப்தி ஏற்படும்வரை, அவற்றின் உண்மைத்தன்மையையும் அவற்றின் எதிர்கால இடநேர்வு தொடர்பிலும் ஆய்வுசெய்து, அதன்பின் முதலீட்டுக்குத் தயாராகுங்கள். 

இதன்போது, சில வாய்ப்புகளை நீங்கள் தவறவிடக்கூடிய நிலை உருவாகலாம். ஆனால், இந்தப் பழக்கத்தின் மூலமாக, நீங்கள் சிறந்த முதலீட்டாளராக மாற்றமடைவதுடன், உங்கள் நட்டநிலையைக் குறைவடையவும் செய்யலாம். 


நீங்களொரு மிகச்சிறந்த முதலீட்டாளரா?

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.