நெருக்கடி நிலைமையிலிருந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல்

எந்தவொன்றையும் அழிப்பது மிக எளிதானது. ஆனால், எதனையுமே உருவாக்குவதென்பது மிக மிகக் கடினமான ஒன்றாகும். தற்போது, இலங்கையின் பொருளாதார நிலைமையும், அத்தகையதொரு நிலையில்தான் உள்ளது எனலாம். நல்லாட்சி அரசாங்கத்தால், மிகச்சிறப்பாக இல்லாவிட்டாலும் கூட, சிறுகச் சிறுக அபிவிருத்தியை நோக்கிக் கட்டியமைக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரமானது, ஒரு சிலரின் அரசியல் சுய இலாபங்களுக்காக, அரசியல் சூழ்நிலைகளைக் காரணம் காட்டி அழிக்கப்பட்டு, மீளவும் அதே அரசாங்கத்திடம் ஆரம்பத்திலிருந்து கட்டியெழுப்பக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதே வேடிக்கையான ஒன்றாகவுள்ளது.  

தற்போது, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஐக்கிய அரசாங்கத்தின் மிகப்பெரும் பணியாகவிருக்கப்போவது, அரசியல் நெருக்கடியின் விளைவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதாகும். இந்த பொருளாதாரச் சீரமைப்பை, மிகச்சிறந்த முறையில் முன்னெடுக்க, சர்வதேசத்தின் நம்பிக்கையை மீளவும் கட்டியெழுப்புதல், சென்மதி சமநிலையைப் பேணுதல் மற்றும் பொருத்தமான, தெளிவான பேரினப் பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தல் என, மேற்கூறிய முக்கிய மூன்று விடயங்களையும் பொருத்தமான முறையில் நடைமுறைப்படுத்தல் அவசியமாகிறது.  

சர்வதேசச் சமூகத்தின் மத்தியில், தற்போது இழக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையை மீளவும் கட்டியெழுப்புவதென்பது, மிக இலகுவான காரியமன்று. இந்த நம்பிக்கையை, மீளப்பெறும் செயற்பாடும் இதன் முக்கியத்துவமும், இலங்கை 2019ஆம் ஆண்டில் மீளச்செலுத்தவுள்ள கடன்களுக்கும், நாட்டின் நாணயப் பெறுமதியின் உறுதிப்பாட்டுக்கும் மிக அவசியமாகும். அத்துடன், மீளவும் சர்வதேச தொடர்புகளையும் நம்பிக்கைகளையும் உறுதிப்படுத்துவதன் மூலமாக, சர்வதேச வாணிபம், வெளிநாட்டு நேரடி முதலீடுகள் ஆகியவற்றைப் படிப்படியாகப் பெற்றுக்கொள்ள முடிவதுடன், தற்போது வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையை மீளமைத்து, நமது அந்நிய வருமானத்தை அதிகரித்துக்கொள்ளவும், இது மிகப்பெரும் வகிபாகத்தைக் கொண்டிருக்கும்.

 அதுமட்டுமல்லாது, நாட்டின் அரசியல் குழப்பநிலைகள் ஏற்படுவதற்கு முன்பாக, இலங்கைக்கு வழங்குவதென்று உறுதி வழங்கப்பட்டு, அரசியல் குழப்பநிலைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க, ஜப்பான் நாடுகளின் நிதிகளை மீளவும் பெற்றுகொள்ள உதவுவதுடன், நாட்டில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகளைத் தங்குதடையின்றி மேற்கொள்ளவும் உதவும்.  

சர்வதேசச் சமூகத்தின் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதன் மூலமாக, நாட்டின் கடன் தரப்படுத்தல் நிலைமையில் ஏற்பட்டுள்ள தரவீழ்ச்சியை, மீளவும் முன்னேற்றகரமான பாதைக்கு நகர்த்த முடிவதுடன், அதை அடிப்படையாகக்கொண்டு, எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு, நமக்குத் தேவையான மிகப்பெருமளவிலான வெளிநாட்டு நேரடி முதலீடுகளையும், சாதகமான முதலீட்டு நிலைமைகளின் மூலமாகப் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவிருக்கும்.  

நாட்டின் பேரினப்பொருளியல் கொள்கைகளை, சரிவர நடைமுறைப்படுத்துவதிலும் நாட்டின் நாணயப் பெறுமதியை திடமாகப் பேணுவத்திலும், சர்வதேச நாணய நிதியம் வழங்கவேண்டிய மிகுதிக்கடனுக்கும் மிகப்பெரும் பங்கிருக்கிறது என்றால் அது மிகையல்ல. தற்போதைய அரசியலின் சாதகமான சூழ்நிலைகளைப் பயன்படுத்தி, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து வரவேண்டிய மிகுதி சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை, நாட்டுக்குள் மிகவிரைவாகக் கொண்டுவருவதன் மூலமாக, மிகவேகமாக வீழ்ச்சியடைந்துக் கொண்டிருக்கும் நாட்டின் நாணயப்பெறுமதியை, ஸ்திரநிலைமைக்கும் மீளவும் கொண்டுவர முடியும். 

ஆனால் இதை, எவ்வளவு விரைவாக தற்போது பதவியேற்றுள்ள புதிய அரசினால் செய்ய முடியுமென்பதே அவர்கள் முன்னாலுள்ள மிகப்பெரும் சவாலாகும்.  

தற்போது, அரசியல் நெருக்கடிகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், நாட்டில் மிகவும் குழப்பகரமான நிலையிலுள்ள பொருளாதாரக் கொள்கைகளை, மீளவும் மிகச்சரியாகவும் பயன்தரக்கூடிய வகையிலுமாக நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. அத்துடன், நாட்டின் பொருளாதாரச் செயற்பாடுகளுக்கு, தற்போதைய நிலையில் நாட்டுக்கு நன்மை விளைவிக்கக்கூடிய மிகக்குறுகிய பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகவுள்ளதுடன், அதனைச் சார்ந்ததாக, 2020ஆம் ஆண்டை நோக்கியதாக, நாட்டின் பொருளாதார பேண்தகுநிலையைப் பேணக்கூடிய தூரநோக்குக் கொள்கைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்.  

மேற்கூறியவாறு செயற்படுவதற்கும் நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பதுபோலாகச் செயற்படுவதற்கும் உகந்த பாதீட்டை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். நாட்டைக் கொண்டு நடத்துவதற்கு, எதிர்வரும் 4 மாதங்களுக்கான பாதீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மிக விரைவாக, நாட்டை இந்தப் பொருளாதாரச் சிக்கல் நிலைமைகளுக்கிலிருந்து விடுவிக்கக்கூடிய 2019ஆம் ஆண்டுக்கான பாதீட்டை, பொருத்தமான திருத்தங்களுடன் நடைமுறைக்கு கொண்டுவருவது அவசியமாகிறது.

இந்தக் குறுகிய பாதீட்டின் மூலமாக, 2020ஆம் ஆண்டில் நாம் அடைய எதிர்ப்பார்க்கும் பொருளாதாரப் பேண்தகுநிலையை, நாம் முழுமையாக அடைந்துவிட முடியாததாகவிருந்தாலும் கூட, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நெருங்கக் கூடியளவுக்கு, நாட்டை முன்னெடுத்துச் செல்லக் கூடியதாகவிருக்கும். அத்துடன், நாட்டின் வர்த்தகக் கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவருவது அவசியமாகிறது.

தற்போதைய நிலையில், இலங்கையின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிச் செயற்பாடுகள் மற்றும் ஏனைய நாடுகளுடனான வர்த்தகக் கொள்கையில் காணப்படும் முரண்பாடுகள் தீர்க்கப்படவேண்டியது அவசியமாகிறது. இதன்மூலமாக, வெவ்வேறு நாடுகளினது முதலீட்டாளர்களின் முதலீடுகள் நாட்டுக்குள் வருவதுடன், சீனா போன்ற நாடுகளை மாத்திரம் சார்ந்திருக்கும் இலங்கையின் எதிர்காலத்துக்குத் தீர்வு கிடைக்கும்.

இதன்காரணமாக, எதிர்வரும் காலத்தில் ஏதேனும் அரசியல் நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டாலும் கூட, நாட்டின் பொருளாதாரச் சூழலானது, பல்வகைமைப்படுத்தப்பட்டு தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் மோசமான நிலைமைகள் போன்றவற்றுக்குச் சமமான விளைவுகளை கொண்டிருக்காத நிலையைக் கொண்டிருக்கும்.  

2015ஆம் ஆண்டில், இலங்கையும் நல்லாட்சிக்கு வந்த அரசாங்கமும், தற்போதைய அரசாங்கம் எதிர்கொள்ளும் நிலையையே எதிர்கொண்டிருந்தது. ஆனால், 2015ஆம் ஆண்டில், நல்லாட்சி எனும் பெயரால் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே, தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார குழப்பநிலைமைகளுக்குக் காரணமாகவிருப்பதுதான், ஒரேயொரு வித்தியாசமாகவுள்ளது. 

எனவே, தற்போது ஆட்சிக்கு வந்துள்ள ஐக்கிய அரசாங்கமானது, மீளவும் பூச்சிய நிலையிலிருந்து அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளை மறுசீரமைக்க வேண்டியிருப்பதுடன், அரசாங்கத்துக்கு தொடர்ந்துமே அச்சுறுத்தலாகவுள்ள மற்றும் தடையாகவிருக்கப்போகும், மைத்திரி-மஹிந்த கூட்டணியைச் சமாளித்துச் செயற்படுவதும், எதிர்வரும் நாள்களில் மிகப்பெரும் சவாலாக இருக்கப்போகிறது.  


நெருக்கடி நிலைமையிலிருந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.