பங்குத் தரகர் ஏன் அவசியம்?

பங்குச் சந்தையென்றாலே, பத்தடி தூரத்துக்கு பயந்தோடும் நிலையில் நம்மவர்கள் இருக்கிறார்கள் என்றால் மிகையில்லை. கடந்த சிலவருடங்களாகப் பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள தொய்வும், உறுதியில்லாத அரசியல் கொள்கையும் முதலீட்டாளர்களைக் குழப்பத்துக்கு உட்படுத்தி, தொடர்ச்சியாக முதலீடு செய்வதில் ஒரு பின்னடைவையே ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனாலும், பங்குச்சந்தையில் எல்லாப் பங்குகளுமே, நாம் நினைப்பதுபோல, குறைவான பெறுபேற்றை வெளிப்படுத்துவன அல்ல. சராசரியாகப்  பார்க்கும்போது, பங்குச்சந்தையில் பங்குகளின் பெறுபேறு எதிர்பார்க்கை, அளவுக்குக் குறைவாக இருந்தாலும், முதலீட்டுக்கு இலாபத்தைத் தரக்கூடிய பங்குகளும் அவைசார் பங்குச்சந்தைப் பரிமாற்றங்களும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.

பங்குச் சந்தையொன்றில் ஈடுபாட்டுடன் பங்குகொள்ள விரும்பும் பங்காளர்களுக்கு, எவ்வாறு இலாபம் உழைக்கும் நோக்கமும் ஊக்கமும் உள்ளதோ, அதுபோன்றே அபாயநேர்வுகளைச் சந்திக்கக்கூடிய மனத்திறனையும் கொண்டிருத்தல் அவசியமாகும். 

அபாயநேர்வுகள் காரணமாக நட்டத்தைச் சந்திக்கின்றபோது, விரக்தியடைந்து பங்குச்சந்தையை விட்டு வெளியேற எண்ணுவதைவிட, அத்தகைய நட்டங்களில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, எவ்வாறு பங்குச்சந்தையில் முன்னேறிச் செல்லவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். 

எந்தப் பங்குகளை வாங்குவது என்கிற தீர்மானமானது, உங்கள் ஒவ்வொருவரினதும் முதலீட்டுக் குறிக்கோளுக்கு அமைவாக மேற்கொள்ளப்படல் வேண்டும். அதுபோல, நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளுகின்ற பங்குகளும் குறுகிய மற்றும் நீண்டகால நலனைத் தருமா? என்பதைக் கவனித்தல் வேண்டும்.  

நீண்டகால முதலீட்டுத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு முதலீடுகளை மேற்கொள்ளும்போது, காலாகாலம் நீங்கள் முதலீடு செய்த, ஆரம்ப முதலை விரைவாக வளர்ச்சியடையச் செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கக்கூடிய பங்குவர்த்தகத்துக்கான வாய்ப்புகள் எழலாம். அதுபோல, குறுங்கால முதலீட்டுப் பங்குப் பரிவர்த்தனையின்போது, அதனுடன் இணைந்த நட்ட அச்சங்கள் தொடர்பிலும் அவதானமாக இருத்தல் வேண்டும். இதன்போது, நீங்கள் முதலீடு செய்யும் பங்கின் வகையானது பல்வகைக் காரணிகளின் அடிப்படையில் பின்வருமாறு வேறுபடும்.  

வருமானப் பங்குகள்

இவ்வகைப் பங்குகள், முதலீட்டாளர்க்கு ஒரு தொடர்ச்சியான வருமானப் பாய்ச்சலை வழங்கும் பங்குகளாகும். ஏனைய பங்குகளுடன் ஒப்பிடுகையில், இந்தப் பங்குகளைக் கொள்வனவு செய்யும்போது, பங்கிலாபத்தில் அறவிடப்படும் வரிகள் மற்றும் பங்குக்கான செலவு, அதன் தேறிய பங்கிலாபம் ஒப்பிடப்படுதல் கவனிக்கப்படவேண்டும்.   

பெறுமதிப் பங்குகள்

 பெறுமதிப் பங்குகள் பெரும்பாலும் குறைவான விலையையும் உயர்ந்த பங்கிலாப விளைவுகளையும் கொண்டிருக்கும். நீண்டகால முதலீட்டாளர்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இத்தகைய பங்குகளை அதன் மெய்யான பெறுமதி, பங்கிலாபங்கள், பங்குகளின் விலைகள் அதிகரிக்கும் வரை வைத்திருப்பார்கள்.  

வளர்ச்சிப் பங்குகள் 

 பங்குச்சந்தையில் திடமான வளர்ச்சிப் போக்கைக் கொண்டுள்ள நிறுவனங்களால் வழங்கப்படும் பங்குகளாகும். இத்தகையப் பங்குகள் குறைவான பங்கிலாபத்தைச் செலுத்தக்கூடும் அல்லது எவ்வித பங்கிலாபத்தையும் வழங்காமலும் போகலாம். பெரும்பாலும் வளர்ச்சிப் பங்குகளில் முதலீடு செய்பவர்கள், எதிர்கால இலாபத்துக்காக அல்லது பங்குகளின் விலைகள் அதிகரிப்பதன் மூலமாகப் பெறக்கூடிய நிகர பங்கிலாபத்தைப் பெறுவதற்காக வைத்திருப்பார்கள்.  

சுழற்சித் தன்மையுடைய பங்குகள்

 பெரும்பாலும் சந்தையின் போக்குக்கு நெருங்கிய தொடர்பைக் கொண்ட பங்குகளாக இது இருக்கும். எனவே, இவற்றின் சந்தைப் பெறுமதி, இலாபத்தன்மை என்பவை இதுதானா என நிச்சயமாகக் கூறமுடியாதவொன்றாக இருக்கும்.  

தற்காப்பான பங்குகள் 

 எவ்விதமான புறக்காரணிகள் அல்லது பொருளாதார மாற்றங்களும் பாதிக்காத பங்குகள் இவையாகும். இவ்வகைப் பங்குகள், எவ்வகை பொருளாதார இடர்நேர்வுகளின்போதும் திடமான தன்மையைக் கொண்ட நிறுவனங்களின் பங்குகளாக இருக்கும்.  

பங்குகளைத் தெரிவுசெய்யும் போதும், பங்குப் பரிவர்த்தனையில் ஈடுபடும்போதும் ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் இரண்டு வகையான தெரிவுகள் உள்ளன. ஒன்று பங்குத்தரகர்களின் வழிகாட்டலுடன் தமக்குத் தேவையான மேற்கூறிய பங்குகளை இனம்கண்டு, அவற்றில் முதலிடக்கூடியதாக இருக்கும். அடுத்தது, கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை இணையத்தளத்தில் உள்ள வழிகாட்டல்களுடன், தனக்குத் தேவையான பங்குகளை இனம்கண்டு, முதலீடு செய்யக் கூடியதாக இருக்கும்.  

கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை, பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், 20க்கும் மேற்பட்ட வெவ்வேறு துறைகளில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. பொருளாதார மற்றும் புறக்காரணிகளுக்கு அமைவாக எந்தத்துறையில் முதலீட்டைச் செய்யவேண்டும் என்பதனை அறிந்துகொண்டு, அந்தத் துறையில் உள்ள நிறுவனங்களை இனம்காண முடியும். அதேபோன்று, மேற்கூறிய காரணிகளைக் கொண்டு, நிறுவனப் பங்குகளை ஆய்வு செய்யும்போது, ஊகப்பண்புடைய பங்குகள் தொடர்பிலும் அவதானமாக இருக்கவேண்டியது அவசியமாகும்.  

ஊகப்பண்புடைய பங்குகள்

சந்தை ஆய்வின்போது, கவர்ச்சிகரமான தகவல்களையும் விரைவில் வளர்ச்சியையும் காட்டும் நிதி ஸ்திரத்தன்மையற்ற நிறுவனங்களின் பங்குகளே இவையாகும். இத்தகைய நிறுவனங்கள், தமது வளர்ச்சி தொடர்பில் விளம்பரப்படுத்தும்போது, அதற்கான அடிப்படை ஆதாரங்களை அளிக்காதுவிடின், அவை நட்ட அச்சத்தன்மை கொண்ட ஊகப்பண்புடைய பங்குகள் ஆகும். இவை தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டியது அவசியமாகும்.   

முதலீட்டு முறை 

சாதாரணமாகப் பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் எதை அடிப்படையாகக் கொண்டு பங்குகளில் முதலீடு செய்யவேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும்.

ஒட்டுமொத்த முதலீட்டு நிதியில் 60% பங்குகளிலும் 30%த்தை முறிகளிலும் 10%த்தைப் பணமாகவும் கொண்டிருத்தல் பரிந்துரைக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் 80% பங்குகளைக் கொண்டிருப்பின், அது முதலீட்டின் உயர்நிலையாகக் கொள்ளப்படும். இந்த நிலையில், முதலீட்டாளர் இலாபத்தையோ அல்லது நட்டத்தையோ அடையக்கூடிய உயர்நிலையைக் கொண்டிருப்பதாக இருக்கும்.

மீள் முதலீட்டுச் சந்தர்ப்பங்கள்

பங்குச்சந்தையில் முதலீடு செய்தபின்பு, வேறொரு நிறுவனத்தின் பங்குகள் வாய்ப்பானதாக அல்லது முதலீட்டுக்கு ஏற்புடையதாக் கண்டிருக்கக்கூடும். இதன்போது, தன்னிச்சையாக உள்ள பங்குகளை விற்பனைசெய்து, அதைப் புதிய பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன்னதாக, எதிர்கால முதலீட்டு உபாயங்களுக்கும், தற்போது செய்துள்ள எஞ்சிய முதலீடுகளுக்கும் நன்மை பயப்பதாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்தே முதலீட்டை மேற்கொள்ள வேண்டும்.

பங்குத்தரகர் அவசியமா?

கொழும்புப் பங்குச் சந்தையில்,ஒரு பாதுகாப்பான மற்றும் முறையான பங்குப் பரிவர்த்தனையைச் செய்வதற்கும், முதலீட்டளர்களை நேரடியாகவன்றி தரகர்கள் ஊடாகப் பங்குப் பரிவர்த்தனைக் கண்காணிப்பகங்கள் முறைமைபடுத்துவதாலும், ஒவ்வொரு முதலீட்டாளர்களுக்கும் பங்குத்தரகர்கள் தேவைப்படுகிறார்கள். இதன்போது, பங்குத்தரகர்கள் ஆலோசனைகளை வழங்குவதுடன், பங்குப் பரிவர்த்தனையில் சேவைக்கட்டணத்தை அடிப்படையாகக்கொண்டு, கொள்வனவு மற்றும் விற்பனை கொடுக்கல் வாங்கல்களை முதலீட்டாளர்களுக்கு நிறைவேற்றிக் கொடுக்கிறார்கள்.

நடைமுறையில், கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையானது சுமார் 31 உரித்துவமளிக்கப்பட்ட பங்குதாரர்களைத் தன்னகத்தே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவர்களில் ஒருவரை உங்கள் முகவராக அல்லது ஆலோசகராகக் கொண்டு பங்குச்சந்தையில் முதலீட்டாளராக உள்நுழைய முடியும்.
பங்குகளை எப்போதெல்லாம் கொள்வனவு செய்ய முடியும்?

சாதாரணமாக முதலீட்டாளர்கள் பங்குகளை, முதலாந்தரச் சந்தையில் அல்லது இரண்டாம்தரச் சந்தையில் பெற்றுக்கொள்ள முடியும். முதலாம் தரச் சந்தை என்பது, புதிய பங்கு வழங்கலின் ஊடாக, மூலதனத்தைத் திரட்டிக்கொள்ள உரித்துடமை கொண்ட நிறுவனங்களால் முதன்முறையாகப் பொது மக்களுக்குப் பொது வழங்கலைச் செய்யும் சந்தையாகும்.

அதுபோல, இரண்டாம் தரப் பங்குச் சந்தை எனப்படுவது, ஏற்கெனவே முதலாம்தரச் சந்தையின் ஊடாகப் பங்குதாரர்களுக்கும், பொதுமக்களுக்கும் விநியோகிக்கப்பட்ட பங்குகள் மீளவும் மூலதன ஆதாயங்களுக்காகவும், ஏனைய நலன்களுக்காவும் பரிவர்த்தனை செய்யப்படுகின்ற சந்தை இதுவாகும்.

மேற்கூறிய அனைத்துமே, பங்குச்சந்தையொன்றில் புதிதாக பங்குகொள்ள விரும்புகின்ற எந்தவொரு முதலீட்டாளருமே அறிந்திருக்கவேண்டிய அடிப்படையான விடயதானங்கள் ஆகும்.


பங்குத் தரகர் ஏன் அவசியம்?

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.