பங்கு மதிப்பிடலும் தெரிவு செய்தலும்

(கடந்த வாரத் தொடர்ச்சி)

விலை உழைப்பு விகிதத்தைத் தீர்மானிப்பதற்கு ஏதுவான காரணிகள்  

பொருளாதாரக் காரணிகள் (Economic Factors)  

மொத்தப் பொருளாதாரத்துக்கான பொதுவான காரணிகளின் மாற்றமானது வியாபாரத்துறை, கம்பனிகளின் செயற்பாட்டில் செல்வாக்கைச் செலுத்தும். இத்தகைய காரணிகளுள் கீழே கொடுக்கப்பட்டுள்ளவை முக்கிய இடத்தை வகிக்கின்றன.  

வட்டி வீதம் (Interest Rates)  

பணவீக்கம் (Inflation)  

நாணய மாற்று விகிதங்கள் (Exchange Rates)  

அரசின் வரிக்கொள்கை (Taxation Policy)  

அரசின் நாணயக் கொள்கை (Monitory Policy)  

அரசியல் காரணிகள் (Political Factors)  

அரசாங்கத்திடமுள்ள பலமும், யுத்தச்சூழல் காரணமாக எழும் செல்வாக்குகளும் பங்குச் சந்தையின் மொத்த விலை மட்டங்களிலும் சில துறைகளின் செயற்பாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். 

விசேடமாக இலங்கையின் பங்குச்சந்தை நடவடிக்கையில் செல்வாக்கை ஏற்படுத்தும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கொள்வனவு, விற்பனைக்கு இக்காரணிகள் தாக்கத்தை உண்டுபண்ணலாம். யுத்தத்தின் காரணமாக பொருளாதாரமும் சில துறைகளும் பலவீனமடையும் சந்தர்ப்பங்களும் ஏற்படலாம்.  

வியாபாரத் துறையிலுள்ள கவர்ச்சி (Attractiveness of the Industry)  

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள கம்பனிகளானது 20 துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதலிடுவதற்காகப் பங்குகளைத் தெரிவு செய்யும்போது, ஏதாவது கம்பனியொன்றுக்குரிய துறையின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். ஏதாவது துறையின் செயற்பாட்டில் நிலைத்துள்ள காரணிகள் சில கீழே தரப்பட்டுள்ளன.  

 பொருள்கள், சேவைக்கான சந்தைக்கேள்வி  

 கேள்வியின் எதிர்கால வளர்ச்சி  

 சந்தையின் போட்டித்தன்மை  

 துறை சம்பந்தமான அரசின் கொள்கை மற்றும் நிபந்தனைகள்  

 துறையின் எதிர்கால உழைப்பின் வளர்ச்சி  

வியாபாரத் துறையில் கம்பனியின் நிலை  (Company’s Position in the industry)  

பொருளாதாரம், அரசியல்,  வியாபாரத்துறையின் கவர்ச்சி ஆகிய காரணிகளை ஆராய்ந்த பின்னர் முதலீட்டாளர்கள் தாம் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டிய துறையை இனங்கண்டு கொள்ளல் மிகவும் பொருத்தமானதாகும். ஏதாவதொரு துறைக்குள் அநேகமான கம்பனிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. உதாரணமாக வங்கி, நிதி, காப்புறுதித் துறைக்குள் பல கம்பனிகளது பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. 

இத்துறைக்குள் முதலீட்டாளர் வங்கித்துறையை மாத்திரம் கவனித்தால் பின்வரும் வர்த்தக வங்கிகள் உள்ளன. அவையாவன: கொமர்ஷல் வங்கி, ஹட்டன் நஷனல் வங்கி,சம்பத் வங்கி, செலான் வங்கி, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி,பேன் ஏசியா வங்கி, டி.எவ்.சி.சி.வங்கி, சனச வங்கி, NDB மற்றும் NTB என்பனவாகும். 

இந்த வங்கிகளுள் எந்த வங்கியின் பங்குகளை வாங்குவது என்று தீர்மானிப்பதற்கு ஒவ்வொரு வங்கியும் வர்த்தக வங்கித்துறையில் வகிக்கும் ஸ்தானங்கள், இதன்படி ஒவ்வொரு வங்கியினதும் எதிர்கால உழைப்பின் வளர்ச்சி போன்ற காரணிகளை கவனித்தல் வேண்டும்.  

துறைக்குள் கம்பனி வகிக்கும் ஸ்தானத்தை அறிந்து கொள்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள காரணிகள் தொடர்பாக ஆய்வியல் ஒன்றை செய்யலாம்.  

கம்பனிக்குரித்தான சந்தைப் பங்களிப்பு  

கம்பனியின் ஒப்பீட்டளவு பலம் மற்றும் பலவீனம்   

பொருள்கள், சேவைகளின் விலைத்தகைமை  

உற்பத்தித் தொழில்நுட்பம், செலவு மற்றும் ஆற்றல்  

முதலீட்டுச் சந்தர்ப்பம், திட்டம்  

மூலப்பொருள்களைப் பெற்றுக்கொள்ளும் தன்மை, செலவு  

நிதியைப் பெற்றுக்கொள்ளும் தன்மை, செலவீனம்  

விற்பனை மற்றும் விநியோகம் ஆகியவற்றின் முறை  

சேவையினது நுகர்வின் ஆழம்  

தொழில் கொள்வோர் மற்றும் தொழிலாளர் தொடர்பு  

முகாமைத்துவத்தகுதி, புகழ், அனுபவம்  

அரச மற்றும் அரச நிறுவனங்களுடனான தொடர்பு  

பங்குதாரர், தொகுதிக்கடன் உரிமையாளர், வங்கி மற்றும் சம்பந்தப்பட்டவர்கள்  

பணிப்பாளர் சபையின் பலம்  

கம்பனியின் நிதித் தகவல்கள் (Financial Information)  

கம்பனியின் நிதித்தகவல்கள் எனக்குறிப்பிடுவது முக்கியமாக நிதிச்செயற்பாடு (Financial Performance) மற்றும் நிதி நிலைமை எனப்படும் இரண்டு பிரிவுகளாகும். கம்பனியின் ஆண்டறிக்கையினூடாக இந்த நிதித்தகவல்கள் வெளியிடப்படும். நிதித் தரவுகளை ஆய்வு செய்வதற்கான முக்கிய வழியானது நிதி விகிதங்களை கணக்கிடுவதாகும்.  

நிதி விகிதங்களை கடந்த சில ஆண்டுகளுக்கு கணக்கிட்டு வருடங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள வளர்ச்சியை இனங்காணவும், அதேபோன்று ஏதாவது ஒரு கம்பனியின் விகிதங்களை அதனோடு ஒத்த கம்பனிகளது விகிதங்களுடன் ஒப்பிட்டு கம்பனியின் நிதிச் செயற்பாடுகள் மற்றும் நிதி நிலைமைகள் ஏனைய கம்பனிகளிலும் பார்க்க திறனாக உள்ளதா அல்லது திறன் குன்றிக் காணப்படுகின்றதா என்று தீர்மானிக்க வேண்டும். 

முதலீட்டாளருக்கு இந்த நிதிப் பகுப்பாய்வு மேற்கொள்வதற்கான அறிவு, காலம் அற்றுக் காணப்படலாம். தரகு நிறுவனங்களால் பிரசுரிக்கப்படும் ஆய்வு அறிக்கைகளில் இந்த விகிதங்கள் கணக்கிடுவது பற்றியும் சில சமயங்களில் அதற்கான விளக்கங்களும் கொடுக்கப்படும். இதன் காரணமாக சிறந்த ஆய்வறிக்கையை வழங்கும் தரகுக் கம்பனியொன்றை தெரிவு செய்தல் மிகவும் முக்கியமானதாகும்.  

பங்குகளின் அண்மைய விலை செயற்றிறன்கள் (Recent Price Performance of Shares)  

இதுவரை பார்த்த அனைத்து காரணிகளுக்கும் மேலாக கம்பனிகளின் பங்கு விலைகளில் அண்மைக்காலப் போக்கை பரிசீலிக்க வேண்டும். இதில் கவனஞ் செலுத்தப்படவேண்டிய பிரதான காரணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.  

பங்குகளின் விலை அதிகமாக ஏற்றதாழ்வு அடைந்தள்ளதா, இல்லாவிடின் ஸ்திரமான நிலையில் உள்ளதா, இல்லாவிடின் உயர்வடையும் அல்லது வீழ்ச்சியடையும் போக்கைக் காண்பிக்கின்றதா என்பதாகும்.  

சமீபத்தைய பங்கு விலையானது அப்பங்குகளின் வரலாற்று ரீதியான உயர்ந்த விலை, குறைந்த விலைகளுடன் எவ்வாறு வேறுபடுகின்றது என்பதாகும்.  

பங்குகளின் விலைகள் அதிகமாக ஏற்றத்தாழ்வடைதல் அல்லது ஏதாவது போக்கொன்றை காட்டுமாயின் அல்லது விலை தொடர்பாக ஏதாவது அசாதாரணமான நிலைமை தொடர்பான காரணிகள் இருப்பின் அவற்றுக்கான காரணங்களை இனங்கண்டு அறிந்துகொள்ளல் முக்கியமாகும். பங்குகளின் விலைகள் தற்காலிகமாக உயர்வடையும் சந்தரப்பங்களில் கொள்வனவு செய்வதும் விலையானது தற்காலிகமாக வீழ்ச்சியடையும் சந்தர்ப்பங்களில் விற்பனை செய்வதும் முதலீட்டாளர்கள் செய்யத்தகாத இரண்டு பிரதான தவறுகளாகும்.  

-இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு  


பங்கு மதிப்பிடலும் தெரிவு செய்தலும்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.