பாதீடு - 2019: ஒரு பார்வை

2019ஆம் ஆண்டுக்கான பாதீடு, பல்வேறு தடைகளைத் தாண்டி, கடந்த வாரம், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

பாதீடானது, நவம்பர் மாதத்தில் சமர்ப்பிக்கப்படும் வழமையைக் கொண்டிருந்த போதிலும், கடந்த வருடத்தில் இடம்பெற்ற அரசியல் குழப்பநிலைமைகள் இதற்கு முட்டுக்கட்டையாக அமைந்திருந்தன. இதன் காரணமாக, மிகக்குறுகிய காலத்துக்கான இவ்வருடத்தின் பாதீட்டை நிதி அமைச்சர் சமர்பித்திருந்தார்.   

பாதீட்டின் நுணுக்கங்களை, முழுமையாக ஆராய்வதற்கு முன்பாக, இந்தப் பாதீட்டின் பொதுவான விடயங்கள் தொடர்பில் நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். தேர்தல் அண்மிக்கும் காலத்தில் நடைமுறைக்கு வரும் இந்தப் பாதீடானது, அதீத சலுகைகளையும் மக்களுக்கான இலவசங்களூடாக அரசாங்கத்துக்கு, மேலதிகச் செலவுகளையும் உள்ளடக்கியதாக அமையுமென எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த எதிர்பார்ப்புக்கள் அனைத்தையுமே பொய்யாக்கும் விதத்தில், இந்தப் பாதீடு, நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, கடந்த வருடத்தின் தொடர்ச்சியாக, நாடாளுமன்றத்தில் இந்தப் பாதீடு சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை வரவேற்கப்பட  வேண்டியவொன்றாகும். இதுவரை காலமும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வந்த பாதீடுகளானது, ஒன்றுக்கொன்று முரணாகவும் குறித்த காலத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் நலன்களைக் கவனத்தில் கொண்டதாகவும் தயாரிக்கப்பட்டு, சமர்ப்பிக்கப்பட்டு வந்தது.

ஆனால், இம்முறை கடந்த வருடத்தின் அபிவிருத்தித் திட்டங்களை கவனத்தில் கொள்வதுடன், அவற்றிலுள்ளக் குறைபாடுகளை நீக்கி, அவற்றுடன் சேர்ந்ததான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதாக அமைந்துள்ளமை நல்ல விடயமே.

அதுமட்டுமல்லாது, இந்தப் பாதீடானது, மக்களுக்கு நேரடிச் சலுகைகள் வழங்குவதிலும் பார்க்க, மக்களுக்கு தேவையான நிவாரணங்களை நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கி, அதன் பெறுபேறுகளை, நாட்டின் அபிவிருத்திக்குப் பயன்படுத்திக்கொள்வதாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாது, நாட்டின் அந்நியச் செலவாணி தொடர்பில் இறுக்கமான நடைமுறைகளைக் கொண்டுள்ளதுடன், ஏற்றுமதிக்கு மிகச்சாதகமாகவும் இறக்குமதிக்கு மிகப் பாதகமாகவும் அமையக்கூடியத் திட்டங்களை கொண்டிருக்கிறது.

இவற்றுக்கு மேலாக, வங்கிசார் துறைகளைப் பலிக்கடாவாக்காமல், குறித்தத் துறையைக் கட்டுக்குள் இயங்க வழிவகை செய்வதாக அமைந்திருக்கிறது.   

மேற்கூறிய அனைத்து நற்திட்டங்களையும் இம்முறைக் கொண்டுவரப்பட்டுள்ள பாதீடு கொண்டுள்ள போதிலும், அவை அனைத்துமே நடைமுறைக்குக் கொண்டுவருவதில்தான், இந்த அரசாங்கத்தின் வெற்றி தங்கியுள்ளது.

குறிப்பாக, 2018ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களுமே, மந்த கதியில் நகர்ந்துகொண்டிருக்க, அதன் தொடர்ச்சியாக அமைந்துள்ள இந்தத் திட்டங்கள் எவ்வகையாக முன்னெடுக்கப்படும் எனும் கேள்வியே மேலோங்கியுள்ளது.   

“மக்களை வலுவூட்டலும், வறியோரை பராமரித்தலும்” எனும் தலைப்புக்கமைய,  இம்முறை வெளியிடப்பட்டுள்ள பாதீட்டு அறிக்கையானது, தன்னகத்தே கொண்டுள்ள நலத்திட்டங்கள், வரிகளிலான மாற்றங்களை பார்க்கலாம்.  

வருமான வரி   

தனிநபர், நிறுவனங்களின் வருமான வரியில் நேரடியான மாற்றங்களைக் கொண்டிருக்காவிட்டாலும் கூட, தாக்கத்தைச் செலுத்தக்கூடிய மாற்றங்களை, இந்தப் பாதீடு கொண்டுள்ளது. 

அதன்பிரகாரம், இலங்கை அபிவிருத்தி முறிகளில் இலங்கை நாணயத்தின் வழியாக அல்லது வெளிநாட்டு நாணயத்தின் வழியாக, முதலீடு செய்ய முன்வரும் வெளிநாட்டவர்களின் வருமானத்துக்கு வரி விலக்களிக்கப்படுகின்றது. இது, நாட்டுக்குள் வரும் அந்நியச் செலவாணியை பெருக்கிக்கொள்ள ஊக்குவிப்பதாக அமைந்திருக்கும்.

அது மட்டுமல்லாது, அரச அபிவிருத்தி முறிகளில், உள்நாட்டவர்களின் முதலீட்டை அதிகப்படுத்தும் நோக்கில், குறித்த முதலீடுகளைச் செய்ய முன்வரும் உள்நாட்டவரின் வருமானத்துக்கும் வரி விலக்களிக்கப்படுகிறது.   

மேலும், இலங்கைக்கு வெளியே அந்நிய நாணயத்தில் கடனைப் பெற்றுள்ளபோது, அதை மீளச்செலுத்தும் வட்டிக்கு அறவிடப்படும் பிடித்து வைத்தல் வரியிலும் (with holding tax) விலக்களிக்கப்படுகிறது. ஆனால், குறித்த வருமான விலக்கானது, இலங்கையில் குழும நிறுவனத்தையோ அல்லது துணை நிறுவனத்தையோ வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு பொருத்தமற்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இந்தத் திட்டத்தின் மூலமாக, இலங்கைக்கு வெளியே கடன்பெறும் எவராலும் அந்நியச் செலவாணி நாட்டுக்குள் வருவதுடன், அதை மீளச்செலுத்தும் போதுள்ள வரிச்சுமையிலிருந்தும் விலக்களிக்கப்படும்.   

இலங்கையின் வங்கிகளில், NRFC, RFC கணக்குகளை வைத்திருக்கும் இலங்கை பிரஜாவுரிமையைக் கொண்டவரின் NRFC, RFC கணக்கினூடாக வரும் வருமானத்துக்கு (பிடித்து வைத்தல் வரி உள்ளடங்கலாக) எதிர்வரும் 5 வருடங்களுக்கு, வருமான வரி விலக்களிக்கப்படுகிறது. இதன் மூலமாக, வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்களின் அந்நியச் செலவாணியை முழுமையாக நாட்டுக்குள் கொண்டுவர, இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.   

இவற்றுக்கு மேலதிகமாக, 18 வயதுக்கு குறைந்தவர்கள் வங்கியில் கணக்கை வைத்திருக்கின்றபோது, அதிலுள்ள வட்டி வருமானத்துக்கு வரி விதிக்கப்பட்டு வருகிறது. எனவே, நிதி நிறுவனங்களில் வைப்பைப் பேணுகின்ற 18 வயதுக்கு குறைந்தவர்கள் வைப்பு வருமானத்தில் உயர்ந்த எல்லையாக, மாதாந்தம் 5,000 ரூபாய் வரையிலான வருமானத்துக்கு வரி விலக்களிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.   

நிறுவனங்களின் வருமான வரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள மிக முக்கியமான மாற்றமாக, மொத்த வருமானப் பதத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றமுள்ளது. இதன் பிரகாரம், நிறுவனத்தின் வழமையான வருமானத்துக்கு 14 சதவீத வருமான வரியும் முதலீட்டு வருமானத்துக்கு 28 சதவீத வருமான வரியும் விதிக்கப்படவுள்ளது. இலங்கை, முதலீடுகளை பெரிதும் எதிர்பார்த்துள்ள நிலையில், நிறுவனங்களின் முதலீட்டு வருமானத்துக்கான வரியை அதிகப்படுத்தியுள்ளமையானது, முன்னுக்கு பின்னான முரணாகவே பார்க்கப்படுகிறது.   

அதுமட்டுமல்லாது, பிடித்துவைத்தல் வரி அறிமுகம் செய்யப்பட்டபோது, குறித்த வரியை அறவிடுவதற்கான எவ்விதமான எல்லையும், கடந்த பாதீட்டில் நிர்ணயிக்கப்படவில்லை. இதற்கு, இம்முறை பாதீட்டின் மூலமாகத் தீர்வு காணப்பட்டுள்ளது. இதன்பிரகாரம், வாடகை,  Royalty வருமானத்தில் மாதாந்தம் 50,000க்கு வரி விலக்களிக்கப்படுள்ளது.   

பொருளாதார சேவைக் கட்டணம் (Economic Service Charge)   

நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கிலும் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டும், இறக்குமதியில் கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் வகையிலும், அரசாங்கத்தால் அறவிடப்படும் பொருளாதார சேவைக் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  

ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள், சேவைகள் அனைத்துக்குமே, இதுவரை விதிக்கப்பட்டு வந்த பொருளாதாரச் சேவைக் கட்டணமானது, 0.5 சதவீதத்திலிருந்து 0.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, ஏற்றுமதி வருமானத்தை, மேலதிகமாவே ஏற்றுமதியாளர்கள் அனுபவித்துக்கொள்ளக் கூடியதாக அமையும்.   

அத்துடன், இறக்குமதி பொருட்களின் CIF பெறுமதியில், பொருளாதாரச் சேவைக் கட்டணம்  அறவிடும் வகையில், இம்முறை பாதீட்டில் முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்காரணமாக, இறக்குமதி பொருட்களின் விலையானது, மென்மேலும் உயர்வடைவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவுள்ளன.   
இவற்றுக்கு மேலாக, பின்வரும் வரி சலுகைகளும் இம்முறை பாதீட்டில் வழங்கப்பட்டு இருக்கின்றது. அவை:   
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், குறைந்தது 50 ஊழியர்களை தங்கள் நிறுவனத்தில் கொண்டிருக்கின்றபோது, அவர்களின் ஊதியத்தின் 35 சதவீதத்தை, தமது வருமான வரி செலுத்துகையில் பயன்படுத்தி, வரிவிலக்கைப் பெறக்கூடிய வசதியை இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாதீடு வழங்கியுள்ளது.   

மேலும், பெண் ஊழியர்களின் பிரசவகாலத்துக்கு, நிறுவனங்கள் மூன்று மாதகால விடுப்பை வழங்குகின்றபோது, அவர்களின் ஊதியத்தின் 50 சதவீதத்தின் தமது வருமான வரியில் வரிவிலக்குக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் மாதாந்த உயரிய எல்லையாக, இதற்கு 20,000 ரூபாய்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த விடப்பை, நான்கு மாதங்களுக்கு நீடிக்கின்றபோது, 100 சதவீத ஊதியத்தொகையையும் தமது வருமானவரி விடுப்புக்குப் பயன்டுத்த, அரசாங்கம் அனுமதி தந்துள்ளது. இதன்மூலமாக, பெண்களின் பங்குபற்றுதலை, அரசாங்கம் அதிகரிக்க ஊக்குவிப்பதுடன், நிறுவனங்களும் தமது வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள வழிவகை செய்யப்படுகிறது.   

  பெறுமதி சேர் வரி (Value Added Tax )   

பெறுமதி சேர் வரியில், மக்களுக்கு பெரிதும் தாக்கத்தைத் தருவதாக அடுக்குமாடிக் குடியிருப்புக்களின் கொள்வனவில், எதிர்வரும் ஏப்ரல் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் 15 சதவீத பெறுமதி சேர் வரியுள்ளது.  

அடுக்குமாடிக் குடியிருப்புகளை, இந்த திகதிக்குப் பின்னர் கொள்வனவு செய்ய முயற்சிக்கும் அல்லது உரித்துரிமையை மாற்ற முயற்சிக்கும் அனைவரது கொள்வனவு பெறுமதியிலும், இந்த 15 சதவீத மேலதிக செலவீனம் உள்ளடக்கப்படும். கட்டுமானத்துறையில் பல்வேறு நிறுவனங்களும் தமது அடுக்குமாடிக் குடியிருப்புக்களை விற்பனை செய்வதில் மிகப்பெரும் சிக்கலை எதிர்கொண்டுவரும் நிலையில், இந்த வரிவிதிப்பானது, இந்த நிலையை மென்மேலும் மோசமடையச் செய்யக்கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தேச அபிவிருத்தி வரி (Nation Building Tax)   

தேச அபிவிருத்தி வரியானது, வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் வரவட்டை, கடன்னட்டையில் அறவிடப்படும், 2.5 சதவீத முத்திரை வரிக்கு மாற்றீடாக, 3.5 சதவீத வரியாக எதிர்வரும் காலத்தில் அறவிடப்படவுள்ளது. இதன் மூலமாக, வரியானது, 1சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அட்டை பயன்பாட்டின் வாயிலாக, அதிகரித்துச்செல்லும் அந்நியச் செலவாணி வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் செயற்பாடாகவும் இது பார்க்கப்படுகிறது. ஆனால், வெளிநாட்டுச் சேவைகளைப் பெரிதும் பெற்றுக்கொள்ளும் தனிநபர், நிறுவனங்களின் செலவீனமானது, இதன் விளைவாக மிகப்பெருமளவில் அதிகரிக்கும் வாய்ப்பு எழுந்துள்ளது.   

இதற்கு மேலாக, கட்டுமானத்துறைச் சார்ந்தோருக்கு தேச அபிவிருத்தி வரியில் விலக்களிக்கப்படுவதுடன், சிகரெட், மதுபான உற்பத்தியாளர்களுக்கு, தேச அபிவிருத்தி வரி மூலமாக அறவீடுகள் மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.   

தீர்வை வரி (Excise Duty)   

குடிபான வகைகளில் உள்ளடங்கியுள்ள சீனியின் அளவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விதிக்கப்பட்ட தீர்வை வரியானது, இம்முறை பாதீட்டில் சற்றே திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இதுவரை, குடிபானத்தில் அடங்கியுள்ள ஒரு கிராம் சீனியின் அளவுக்கு, 50 சதம் அறவிடப்பட்ட வாரியானது, தற்போது 40 சதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.   

அத்துடன், குளிர்ச்சாதனப் பெட்டிகளுக்கு அறவிடப்பட்டு வந்த 17 சதவீதத் தீர்வை வரி, இனிமேல் 25 சதவீதமாக அறவிடப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இது குளிர்ச்சாதனப் பெட்டிகளின் விலையை மேலும் அதிகரிப்பதாக அமைந்திருக்கும்.   

அதுபோல, சிகரெட்களுக்கானத் தீர்வை வரி 12 சதவீதத்தாலும் மதுபான வகைகளுக்கான தீர்வை வரி 600 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, சிகரெட் ஒன்றின் விலை, அண்ணளவாக 5 ரூபாயால் அதிகரிப்பதுடன், மதுபானங்கள் அதன் கொள்ளளவுக்கு அமைவாக விலை அதிகரிப்பை எதிர்கொள்ளும்.   

இவற்றுக்கு மேலாக, அரச வரி வருமானத்தை, சுமார் 48 பில்லியனாக அதிகரிப்பதை நோக்காகக்கொண்டு, இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்களுக்கும் தீர்வை வரியானது, பின்வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.   

இந்தப் பாதீடு, மோட்டார் வாகனங்களுக்கு தீர்வை வரிக்கு மேலதிகமாக ஒரு தடவை செலுத்த வேண்டிய ஆடம்பர வரி (அனைத்து வாகனங்களுக்குமில்லை), கார்பன்வரி (அனைத்து வாகனங்களுக்குமானது) ஆகியவற்றிலும் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. 

இம்முறை பாதீட்டில், வரிவிதிப்பானது பெரும்பாலும் ஆடம்பர பொருட்களைச் சார்ந்ததாகவும் இறக்குமதி கட்டுப்படுத்தலை நோக்காகவும் கொண்டே அமுலுக்கு வந்திருக்கிறது.

இவற்றுக்கு மேலதிகமாக, பாதீட்டின் மற்றுமொரு திட்டமான வறியவரைப் பராமரித்தல் எனும்  எண்ணக்கருவுக்கு அமைவாக, பாதீட்டில் அமுலாக்கப்படும் திட்டங்களையும் அதன் நலன்களை, எந்தவகையில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும்  முயற்சியாண்மையாளர்கள், கல்வியாளர்கள் சார் நலன் திட்டங்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் எந்தவகையில் பொருளாதார அபிவிருத்திக்கு உதவுகின்றது என்பதனையும் எதிர்வரும் வாரங்களில் பார்க்கலாம். 


பாதீடு - 2019: ஒரு பார்வை

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.