மக்களை நெருக்கும் WHT வரியும் எரிபொருள் விலையுயர்வும்

இலங்கைப் பொருளாதாரம் ஓர் உறுதியற்ற பொருளாதாரக் கொள்கைகளின் வழியே தனது இலக்கை நோக்கித் தட்டுத்தடுமாறி நகர்ந்தவண்ணம் உள்ளது. இந்த நிலையற்ற பொருளாதாரக் கொள்கைகளின் வாயிலாக, அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ மக்கள்தான்.  

 நல்லாட்சி அரசாங்கத்தின் வாயிலாக, பொருளாதார ரீதியான முன்னேற்றமும் வாழ்க்கைத்தர உயர்வும் ஏற்படுமென எதிர்பார்த்த மக்கள் நிலை, தற்போது எதிர்பார்ப்புகளுக்கு மாறாகப் பின்னோக்கி நகர்ந்து கொண்டுள்ளது.

2018 தொடக்கம் 2020ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி, பொருளாதார ரீதியாக இலங்கைக்கு மிகமோசமான காலப்பகுதியாகும். இந்தக் காலப்பகுதியில் இலங்கை மீளச்செலுத்த வேண்டிய கடனின் அளவும் மிகப்பாரிய அளவாக இருக்கிறது.   

இந்தநிலையில், இந்தக் கடனை மீளச்செலுத்தும் திறனான கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய நல்லாட்சி அரசாங்கம், அதன் சுமையின் பெரும்பங்கை மக்கள்மீதே மறைமுகமாகச் சுமத்தியிருக்கிறது. இந்த மறைமுக சுமையின் ஒரு பகுதியாக WHT வரியுள்ளது.   

இந்தநிலையில், உலகச்சந்தையில் ஏற்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பும், இதுவரை காலமும் மக்களிடம் நற்பெயரைப் பெற்றுக்கொள்ள விலை அதிகரிப்பைச் செய்யாமையின் காரணமாக, ஏற்பட்ட கடன்சுமையும் எரிபொருள் விலையுயர்வாக மக்களைத் தற்போது மற்றுமொரு வடிவத்தில் நெருக்கத் தொடங்கியிருக்கிறது.  

 WHT வரி நடைமுறையானது ஆரம்பத்திலிருந்தே மக்களை மிகவும் குழப்பகரமான நிலைக்குள்ளேயே வைத்திருக்கிறது. குறிப்பாக இறைவரித் திணைக்களத்தால் இந்த வரிமுறை அறிமுகம் செய்யப்பட்ட முதலே, இந்த வரைமுறையில் நூறுக்கும் மேற்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.  

 இதன் விளைவாக, தற்போதைய நிலையில் WHT வரி தொடர்பில் எத்தகைய விதிமுறை நடைமுறையில் உள்ளதென்பதில்கூட குழப்பம் நிகழ்கிறது.                                                           

 வரி ஆலோசகர்கள் கூட, WHT வரி தொடர்பில் அதீத குழப்பங்களைக் கொண்டுள்ளதுடன், இறைவரித் திணைக்களம், தொடர்ச்சியாக மாற்றங்களை நிகழ்த்துவதன் மூலமாக, வரி செலுத்துவோர் மற்றும் வரியை அறவிடுவோர்களுக்கும் குழப்பமான நிலையை உருவாக்கியுள்ளதாகவும் இவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.  

 குறிப்பாக, இறைவரித் திணைக்களத்தின் பங்குனி 16ஆம் திகதி (SEC//20I8/01) சுற்றறிக்கையின் பிரகாரம், வணிக வங்கிகள் தவறாக வழிநடாத்தப்பட்டிருக்கின்றன. இந்தச் சுற்றரிக்கையில், WHT வரியானது வங்கிகளில் ரூபாய் அல்லது வேறு ஏதேனும் வெளிநாட்டு நாணயங்களை வைப்புச் செய்திருக்கும் எவரினதும் வைப்பு வட்டி வருமானத்தில் WHT வரியை அறவிட அனுமதியளித்து இருக்கிறது.   

மேலும், இச்சுற்றறிக்கையின் பிரகாரம், WHT வரியானது வட்டி, சலுகை, இலாபம் ஆகியவற்றின்போது அறவிடப்படும் எனவும், மீளச்செலுத்தல், மீளமுதலீடு செய்தல், மூலதனமாக்கலின் போது விலக்களிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.   

இதில் NRFC & RFC கணக்குகளுக்கு வரி அறவிடப்படவேண்டும் என்கிற கருத்தானது தவறானது. உண்மையில், அத்தகைய கணக்குகளுக்கு வரிவிலக்கு தொடர்ந்தும் அமுலில் உள்ளது. எனவே, இந்தப் புதிய சுற்றறிக்கை, அனைவரையும் புதிய குழப்பத்துக்குள் உள்ளாக்கியுள்ளது.  

 அத்துடன், பொதுமக்கள் பலருக்கும் WHT வரியானது எப்படி, எப்போதிலிருந்து அறவிடப்படுகிறது போன்ற விடயங்களில் இன்னமும் தெளிவற்றநிலை காணப்படுகிறது.  

 உதாரணமாக, வங்கியில் 2016 ஆடி மாதம் இரண்டு வருடத்துக்கான நிலையான வைப்பை வைப்பிலிட்டு, 2018 ஆடி மாதம் பெறுவதாக இருந்தால், WHT வரியானது சித்திரை 2018ஆம் ஆண்டிலிருந்து வெறும் நான்கு மாதங்களுக்கு மட்டுமே அறவிடப்படுவதாக நினைத்து கொண்டிருப்பார்கள். ஆனால், அது உண்மையில்லை. மாறாக, இரண்டு வருடங்களுக்கும் முழுமையாக இந்த WHT வரியானது அறவிடப்படுகிறது.   

 இது போன்ற குழப்பங்கள் தொடர்வதால், மக்களும் குறித்த வரிமுறை தொடர்பில் முழுமையாக அறிந்துகொள்ள முடியாதநிலை காணப்படுகிறது. 

உண்மையில், WHT வரியானது கடந்த 2017ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் நடைமுறைக்கு வரவிருந்தபோதிலும், உச்சநீதிமன்றத்தின் தடையைக் காரணமாகக்கொண்டு, நிதியமைச்சும் திறைசேரியும் தாமதப்படுத்தி இருந்தன. 

இதன் விளைவால், இரட்டை முறையான WHT வரியை நடைமுறைப்படுத்த வேண்டிய சூழ்நிலை சித்திரை முதலாம் திகதி முதல் ஏற்படவும் இருந்தது. பிற்பாடாக, இந்த நிலை தவிர்க்கப்பட்டு ஒருமனதாக WHT வரியானது அறிமுகம் செய்யப்பட்ட போதிலும் தற்போதுவரை குறித்த வரிமுறையிலுள்ள குழப்பங்கள் தீர்ந்ததாகவில்லை.  

 குறிப்பாக, WHT வரியானது அறிமுகம் செய்யப்பட்டபோது, இலங்கையின் மூத்த குடிமக்களுக்கான விசேட வட்டிவீதங்களிலும் இந்த WHT வரியானது மிகப்பாரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.   

பிற்பாடாக, நிதியமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக, மூத்த குடிமக்கள் அல்லது 60வயதும் அதற்கு மேற்பட்டவர்களின் நிலையான வங்கி வைப்புகளின் வருட வட்டி வருமானத்தில் 1.5 மில்லியனுக்கு மேற்பட்ட வட்டி வருமானத்துக்கு மாத்திரமே 5% WHT வரியானது செல்லுபடியாகும் என மாற்றியமைக்கப்பட்டது.                                                                                                                                                

 WHT வரி மூலமாக, இலங்கை அரசாங்கமானது 26 பில்லியன் ரூபாவை மேலதிக வருமானமாகப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறது. இதன்மூலமாக, இவ்வாண்டு மற்றும் எதிர்வரும் ஆண்டில் செலுத்தவேண்டிய கடன்சுமையை நிவர்த்தி செய்துகொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.  

 அத்துடன், WHT வரியானது நடுத்தர மற்றும் வருமானம் குறைந்தவர்களின் வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதன் விளைவாக, வருடாந்தம் 60,000 ரூபாய்க்குக் குறைவான வட்டிவீதத்தைக் கொண்டிருப்பவர்களுக்கு WHT வரிவிதிப்பிலிருந்து விலக்களிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சில சேவைகளின் மாதாந்த வருமானம் 50,000 ரூபாயை விட அதிகமாகவுள்ளபோது, அவற்றுக்கு WHT வரியானது அறவிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.  

 இதன் மூலமாக, நடுத்தர மற்றும் வருமானம் குறைந்த மக்களிடமிருந்து பெறப்படும் WHT வரியை ஈடுசெய்துகொள்ள அரசாங்கம் எதிர்பார்க்கிறது. 

ஆனால், இன்னமும் WHT வரியானது எந்தந்த சேவைகளுக்கு அறவிடப்படுகிறது? எவ்வாறு அறவிடப்படுகிறது? எவற்றுக்கெல்லாம் விலக்களிக்கப்படுகிறது? என்பது தொடர்பில் தெளிவற்ற தன்மை நிலவுவதால் மக்களிடையே குழப்பகரமானநிலை உருவாகியுள்ளது.   

சர்வதேச நாணய நிதியத்தின் வற்புறுத்தலின் பெயரில் இந்த வரியானது அமுலுக்கு வந்திருந்தாலும், இந்த வரி தொடர்பிலான பூரண விளக்கத்தைப் பொதுமக்களுக்கு கொண்டுசெல்வதில் இறைவரித் திணைக்களமும் நிதி அமைச்சும் தவறிழைத்து இருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.   

 எரிபொருள் விலைப் பொறிமுறையும் நெருக்கடிகளும்   

 நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்றபொழுது, உலகசந்தையில் எரிபொருளின் விலையானது மிகக்குறைவாக இருந்தது. இதன்காரணமாக, மிகக் குறைந்த எரிபொருள் விலையையே அரசும் மக்களுக்கு நிர்ணயித்திருந்தது.   

ஆனால், உலகசந்தையில் விலையானது இதேபோன்று குறைவாக, அரசாங்கத்துக்குச் சாதகமாகம் இல்லாமல் உயர்ந்து கொண்டேயிருக்கிறது. ஆனாலும், அரசாங்கம் மக்களின் நற்பெயரைப் பெறும் நோக்கில், விலையைச் சிலகாலம் அதிகரிக்காதிருந்தது.   

ஆனாலும், தொடர்ச்சியாக, இந்தக் கடன்சுமையை, அரசாங்கத்தால் பொறுப்பேற்க இயலாதநிலை வரவே, இதுவரை காலமும் ஏற்ற கடன்சுமையையும் மக்களிடமே எரிபொருள் விலையேற்றம் என்கிற பெயரில் சுமத்தியிருக்கிறது இந்த நல்லாட்சி அரசாங்கம்.  

 தற்போதைய நிலையில், மிகக்குறைந்த காலத்துக்குக்கூட எரிபொருள் விலையை நிரந்தரமாகப் பேணமுடியாத அழுத்தத்தில் இலங்கை அரசாங்கம் இருக்கிறது. எனவே, புதிய விலைப் பொறிமுறை என்கிற ஆயுதத்துடன் எரிபொருள் விலையை அடிக்கடி உலகசந்தையுடன் ஒப்பிட்டுச் சீர்செய்யும் முறையை நடைமுறைப்படுத்தி இருக்கிறது.  

 புதிய விலைப்பொறி முறையில், எரிபொருள் விலையானது சிங்கப்பூர் விலையை அடிப்படையாகக்கொண்டு சராசரிச் செலவு முறைமை அடிப்படையில் கணிக்கப்படுகிறது. இலங்கைக்கான எரிபொருளானது சிங்கப்பூர் வழியாக இலங்கைக்கு வருவதால் இந்த அளவுகோல் பயன்படுத்தப்படுகிறது.     

 புதிய விலைப் பொறிமுறையானது, சிங்கப்பூர் துறைமுகத்துக்கு எரிபொருள் கொண்டுவர ஆகின்ற செலவு (Singapore FOB price (US$/bbl)) + சரக்குக் கட்டணம்/இழப்புக் கட்டணம்/காப்புறுதி கட்டணம் (Freight/loss/insurance (US$/bbl) Which is the CIF price ($/bbl)) ஆகியவற்றை உள்ளடக்கி, CIF விலையாகக் கணிக்கப்பட்டு, அதனுடன் நாணயமாற்றுப் பெறுமதியிலான இலாபம் மற்றும் நட்டம் (currency exchange rate (Rs/ $)/litres per bbl) சீர்செய்யப்பட்டு விலையானது தீர்மானிக்கப்படுகிறது.   

 ஒரு பீப்பாய் சுமார் 160 கச்சா எண்ணெய் லீட்டர்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. எனவே, ஒரு லீற்றருக்கான விலை, அமெரிக்க டொலரிலிருந்து இலங்கை நாணயப் பெறுமதிக்கு மாற்றியதன் பின்னதாக, 160இனால் பிரித்துக் கணிக்கப்படுகிறது.  இத்தோடு எரிபொருளின் விலைக்கணிப்பிடல் முடிந்துவிடுவதில்லை. மாறாக, இதற்குப் பின்பாகவே உள்ளூர் வரி உட்பட இதர செலவீனங்கள் எரிபொருள் விலையுடன் இணைக்கப்படுகின்றன.  

 இதனடிப்படையில், தரையிறக்கல் எரிபொருள் விலையுடன் பின்வரும் செலவீனங்களான துறைமுகக் குழாய் கட்டணம், துறைமுக அபிவிருத்திக் கட்டணம், கடன் கடிதச் செலவு, அனைத்து அரச வரிகள், நிதியியல்க் கட்டணச் செலவுகள், பெற்றோலியக் கூட்டுத்தாபன மொத்த விநியோக, சந்தைப்படுத்தல் செலவுகள் மற்றும் இலாப வீதங்கள் ஆகியன உள்ளடக்கப்பட்டே விலையானது தீர்மானிக்கப்படுகிறது.   

 உதாரணத்துக்கு, இலங்கையில் ஒரு லீற்றர் பெற்றோலானது துறைமுகத்தில் தரையிறக்கப்படும் வேளையில் 78.43 ரூபாயாக விலையிடப்படுகிறது. அதனுடன், அரசாங்க வரிகள், கட்டணங்களாக  சுமார் 60.63 ரூபாய் சேர்க்கப்பட்டு லீற்றர் ஒன்றின் விலையானது 139.06 ரூபாயாக மாற்றமடைகின்றது. இதனையே அரசாங்கம் நிர்ணய விலையாக 145ரூபாவுக்கு நமக்கு வழங்குகிறது. இதனடிப்படையில் லீற்றர் ஒன்றுக்கு அரசாங்கம் மேலதிகமாக 5.94 ரூபாயைப்  பெற்றுக்கொள்ளுவது சுட்டிக்காட்டப்படுகின்றது.  

 அதுபோலவே,இலங்கையில் ஒரு லீற்றர் டீசலானது துறைமுகத்தில் தரையிறக்கப்படும் வேளையில் 83.70 ரூபாயாக விலையிடப்படுகிறது. அதனுடன், அரசாங்க வரிகள் மற்றும் கட்டணமாகச் சுமார் 32.14 ரூபாய் சேர்க்கப்பட்டு, லீற்றர் ஒன்றின் விலையானது 115.84 ரூபாயாக மாற்றமடைகின்றது.   இதையே அரசாங்கம் நிர்ணய விலையாக 118 ரூபாய்க்கு நமக்கு வழங்குகிறது. இதனடிப்படையில் லீற்றர் ஒன்றுக்கு அரசு மேலதிகமாக 16 ரூபாயைப் பெற்றுக்கொள்ளுவது சுட்டிக்காட்டப்படுகின்றது.  

 இந்த மேலதிக இலாபம் மக்களுக்கு மேலதிக சுமையாக இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டாலும், இந்த இலாபத்தை அரசாங்கம் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நட்டத்தை ஈடுசெய்யப் பயன்படுத்துவதாகச் சொல்லப்படுகின்றது.    

பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது 2017ஆம் ஆண்டின் இறுதிவரை 217 பில்லியன் இழப்பையும் 2018ஆம் ஆண்டுவரை மேலதிகமாக 18 பில்லியன் இழப்பையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இதனால், இந்த இழப்பை ஈடுசெய்யவேண்டிய சூழ்நிலையில் கடந்தகால மக்களின் அனுபவிப்பையும் தற்போது விலை அதிகரிப்பு என்கிற பெயரில் மக்களிடத்திலேயே அரசு அறவிடத் தொடங்கியிருக்கிறது.    


மக்களை நெருக்கும் WHT வரியும் எரிபொருள் விலையுயர்வும்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.