முதலீட்டு உத்தரவாதம் கொண்ட நம்பிக்கை பொறுப்பு அலகுகள் (Unit Trust)

இலங்கை போன்ற நாடுகளில், முதலீட்டுக்கான பல்வேறு வழிமுறைகளையும் அம்முதலீடுகள் மூலமாகக் கிடைக்கப்பெறும் வருமானத்துக்கான கவர்ச்சிகரமான விளம்பரங்களையும் ஒவ்வொரு நாளும் நமது செயல்பாடுகளின்போது, நாம் கடந்து சென்று கொண்டே இருக்கிறோம். உண்மையில், இவ்வாறு விளம்பரப்படுத்தப்படும் அனைத்து முதலீட்டு வழிமுறைகளும், முதலீட்டுப் பாதுகாப்பைக் கொண்டவையா? என்கிற கேள்வியை முன்வைத்தால், எவராலும் முதலீட்டுப் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய முடிவதில்லை.  

வங்கியின் சேமிப்பு வருமானத்துக்கு, மேலான வருமானத்தை இலங்கையில் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், உங்கள் சேமிப்பை அல்லது மேலதிக பணத்தை ஏதெனுமொன்றில் முதலீடு செய்தே ஆக வேண்டும். அப்படி, முதலீடு செய்கின்றபோது, அதற்கான இடர்நேர்வையும் (Risk) குறித்த முதலீடு செய்யும் நபர் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்க வேண்டும். அப்படியாயின், இடர்நேர்வை எதிர்கொள்ள விரும்பாத எவரும், முதலீடுகளைச் செய்யவோ? முதலீட்டு வருமானத்தைப் பெற்றுக்கொள்ளவோ முடியாதா? என்கிற கேள்வி எழுகின்றது அல்லவா?  

மேற்கூறிய இடர்நேர்வுகளைக் கொண்ட முதலீடுகளை, இளம் பருவத்தில் உள்ளவர்களும், நிலையான வருமானத்தைக் கொண்டவர்களும் மேற்கொள்ள முடியும். காரணம், அவர்களுக்கான காலமும், மீள முதலீட்டை உருவாக்கிக்கொள்ளக்கூடிய இயலுமைத் தன்மையும் அதிகமாக இருக்கிறது. ஆனால், வயோதிப நிலையில் உள்ளவர்கள் மற்றும் குறித்த ஒரு தொகையை மாத்திரம் கையிருப்பில் கொண்டுள்ளவர்கள், இத்தகைய இடர்நேர்வு கொண்ட முதலீடுகளை மேற்கொள்ள முடியாதல்லவா? அப்படியாயின், அவர்களுக்கு மேலதிக வருமானம் என்பதையோ அல்லது முதலீடு தொடர்பிலோ சிந்திக்க முடியாதா ?  

வங்கிச் சேமிப்புக்கு மேலான வருமானத்தை, மிகக்குறைந்த இடர்நேர்வுடன் நமக்கு தருகின்ற பாதுகாப்பான முதலீடுகளும் நம்மிடையே உள்ளன. ஆனால், அது தொடர்பில் போதுமான அறிவூட்டல்கள் இல்லாதிருக்கின்றன. அப்படியாயின், குறைவான இடர்நேர்வு அல்லது பூரணமாக இடர்நேர்வு விலக்கு அளிக்கப்பட்ட முதலீடு எது ?  

நம்பிக்கை பொறுப்பு அலகுகள் (Unit Trust)  

Unit Trust மிக எளிமையான முதலீட்டு வடிவமும், அனைவராலும் இலகுவாகப் புரிந்துகொள்ளக் கூடியதுமான ஒன்றாகும். உதாரணமாக, அசையாச் சொத்தொன்று உள்ளதென வைத்துக் கொள்ளுவோம். 

அதன் பெறுமதி, மிக அதிகமாக இருக்கின்றது. அதன்போது, உங்களால் அதைத் தனித்துக் கொள்வனவு செய்ய முடியாது. ஆனால், எதிர்காலத்தில் அந்தச் சொத்தின் பெறுமதி அதிகரிக்கும்போது, அதனால் பயன்பெற முடியுமென நம்புகிறீர்கள். அப்போது, உங்கள் நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ துணையாகக்கொண்டு, அந்தச் சொத்தை வாங்குகிறீர்கள்.  இப்போது, அந்தச் சொத்தின் பெறுமதி அதிகரிக்கும்போது, அதை விற்பனை செய்து, அதன் இலாபத்தை முதலீட்டுடன் சேர்த்து, அனைவரும் பங்கு போட்டுக்கொள்ள முடியும்.   

இதேபோன்ற செயன்முறைதான் Unit Trust அலகுகளும் கொண்டு இருக்கின்றது. இதில், நண்பர்கள், உறவினர்களுக்குப் பதிலாக, பல முதலீட்டாளர்களின் பங்களிப்பு இருக்கும். இதன்போது, உங்களது பணம், உங்களின் சார்பாகத் தனித்து ஒரு பங்கில் முதலிடப்படாமல், வெவ்வேறு நிறுவனத்தின் பங்குகளிலும், அரச பிணையங்களிலும், திறைசேரி முறி/உண்டியல்களிலும் முதலிடப்படும். இவற்றின் பங்கு அதிகரிக்கும்போது, அதன் பெறுமதி அதிகரிப்பதுடன், இலாப அளவும் அதிகரிக்கும்.  

பெரும்பாலான மக்களிடத்திலுள்ள மிகமுக்கியமான சந்தேங்களில் ஒன்று, Unit Trust அலகுகள் ஒருவகை சேமிப்பா? என்பதே ஆகும். Unit Trust ஒருவகையில் சேமிப்பாகத் தெரிந்தாலும், உண்மையில் அதுவொரு முதலீட்டு மூலமாகும். Unit Trust போன்ற முதலீடுகள், மிகநீண்டகால முதலீட்டு வருமானத்தைக் குறிக்கோளாகக்கொண்டு முதலிடப்படுகின்றன.  

நீண்டகாலத்தில், முதலீட்டுடன் இணைந்ததாக முதலீட்டு வருமானமும் கிடைக்கின்றபோது, இதுவொரு சேமிப்பு வடிவமாகத் தோன்றினாலும், உண்மையில் சேமிப்பை விடவும் அதிக வருமானத்தை Unit Trust வடிவங்கள் கொண்டுள்ளன. Unit Trust அலகுகளின் கடந்தகால வளர்ச்சியை எடுத்துப் பார்க்கின்றபோது, தொடர்ச்சியான வளர்ச்சியைக் கொண்டுள்ளன. அத்துடன், பணவீக்கத்தை விடவும் அதிக வருமானத்தைத் தருகின்றன. குறிப்பாக, இலங்கையின் பங்குச்சந்தை மிக மந்தமாக உள்ளநிலையிலும் அல்லது ஏற்றதாழ்வை மிக அதிகமாகக் கொண்டநிலையிலும், Unit Trust அலகுகளின் மூலமான வருமானத்தில் தொடர்ச்சியான, சீரான வளர்ச்சிநிலை காணப்படுகிறது.   

உண்மையில், Unit Trust நிறுவனங்கள் ஒரு முதலீட்டாளரின் இடர்நேர்வைக் குறைக்கும் வகையில், அவரது முதலீட்டைப் பல்வேறு மூலங்களில், முதலீட்டாளர் சார்பாக முதலீடு செய்கிறது. உதாரணத்துக்கு, 100/- பெறுமதியான Unit Trust அலகொன்றைக் கொள்வனவு செய்கின்றீர்கள் எனில், அதில் உங்கள் வருமானத்துக்குள்ள இடர்நேர்வை, சமப்படுத்தக் கூடியவகையில் உங்கள் சார்பாக, உங்கள் Unit Trust நிறுவனம் பங்குகள், அரச பிணையப் பத்திரங்கள், திறைசேரி பத்திரங்களில், அந்த 100/-வைப் பிரித்து, முதலீடு செய்திருக்கும். எனவே, அதற்கேற்ப உங்களது மூலதன இலாபமும் உங்களை வந்து சேருவதால், ஏனைய முதலீட்டு மூலங்களுடன் ஒப்பிடுமிடத்து, மிகசிறந்த வருமானத்தைக்  கொண்டதாகவும் பாதுகாப்பானதாகவும் Unit Trust அலகுகள் உள்ளது.  

Unit Trust அலகுகளின் நன்மைகள் என்ன?  

Unit Trust அலகுகள் ஒப்பீட்டளவில் வங்கி வட்டிவீதங்களை விடவும் அதிக வருமானத்தைத் தருவதுடன், பங்குச்சந்தை உட்பட ஏனைய இடர்நேர்வு அதிகமான முதலீடுகளுடன் ஒப்பிடுமிடத்து, குறைவான, பூச்சிய இடர்நேர்வைக் கொண்டதாகவே இருக்கிறது.  

Unit Trust அலகுகள் குறைந்தது 100/- அல்லது 1,000/- ரூபாயுடன் ஆரம்பிக்கப்படக் கூடியது. ஏனைய முதலீட்டு வருமானங்களுக்கு சில பல ஆயிரங்களோ, இலட்சங்களோ தேவையான நிலையில் முதலீடு செய்து பரீட்சித்து பார்க்கவும் Unit Trust அலகுகள் இலகுவானவை.  

Unit Trust அலகுகளின் மிகப் பிரதான நன்மையே, உங்களிடம் பணம் உள்ளபோது, முதலீடு செய்ய முடிவது போல, விரும்பிய சமயத்தில் எதற்காகவும் காத்திருக்காமல் பணத்தை மீளப் பெறவும் முடியும். இதுவே, ஏனைய பங்குகள், அசையாத சொத்துகளுடன் ஒப்பிடுமிடத்து, இது மிக அதிகமான திரவத்தன்மையைக் கொண்டதாக உள்ளது.  

Unit Trust ஏனைய முதலீடுகளுடன் ஒப்பிடுமிடத்து, வரிவிதிப்பில் சலுகைகளைக் கொண்டுள்ளது.  தற்போதைய நிலையில், வட்டிவீதங்களுக்கும் வரி விதிப்புகள் உள்ளநிலையில், குறித்த அளவுவரை Unit Trust அலகுகளின் வருமானத்துக்கு வரிச்சலுகை உண்டு.  

Unit Trust அலகுகள் ஒவ்வொரு முதலீட்டாளர்களின் விருப்பத்தெரிவுகளுக்கு அமையவும் வெவ்வேறு வகைபடுத்தல்களாக உள்ளன. பெரும்பாலும், Unit Trust அலகுகள் அவற்றின் வருமானம் மற்றும் இடர்நேர்வு ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு வகைப்படுத்தப்படுகிறது.  

உதாரணத்துக்கு, முதலீட்டுப் பாதுகாப்பு வருமானத்தில் முக்கியமான விடயமாக ஒரு முதலீட்டாளருக்கு உள்ளபோது, அவர் திறைசேரி மற்றும் இடர்நேர்வற்ற அரச பிணையப் பத்திரங்களை உள்ளடக்கிய Unit Trust அலகுகளைத் தனது முதலீட்டுக்கு தெரிவு செய்ய முடியும்.  

அதுபோல, குறைவான இடர்நேர்வுடன் அதீத வருமானத்தை எதிர்பார்க்கும் ஒருவராக இருப்பின், அவர் சரிசமமாக இடர்நேர்வு கூடிய மற்றும் குறைந்த பங்குகள் அல்லது அரச பிணையப் பத்திரங்களை உள்ளடக்கிய Unit Trust அலகுகளைத் தெரிவு செய்ய முடியும். பெரும்பாலும், இவ்வகையான Unit Trust அலகுகள் 60% அதீத வருமானத்தைத் தரும் முதலீடுகளையும் 40% பூச்சிய இடர்நேர்வுகளைக் கொண்ட முதலீடுகளையும் உள்ளடக்கிய Unit Trust அலகுகளாக இருக்கும்.  

எனவே, ஒரு முதலீட்டாளர் தனது நிலையையும் தனது முதலீட்டையும் அடிப்படையாகக்கொண்டு, தனக்குப் பொருத்தமான Unit Trust அலகுகளை நாடு பூராகவும் உள்ள மத்திய வங்கி, அரச Unit Trust குழுமம், கொழும்பு பங்குப்பரிவர்த்தனை ஆகியவற்றால் அங்கிகாரம் அளிக்கப்பட்ட தரகர்கள் ஊடாக கொள்வனவு செய்துகொள்ள முடியும்.  


முதலீட்டு உத்தரவாதம் கொண்ட நம்பிக்கை பொறுப்பு அலகுகள் (Unit Trust)

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.