முயற்சியாளர்களுக்கு அவசியமான 5 திறன்கள்

இலங்கையில், இன்றைய நிலையில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்களிலொன்று, முயற்சியாண்மை வளர்ச்சியும் வெற்றிகரமான முயற்சியாண்மை வணிகமுமாகும்.  

இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளைப் பொறுத்தவரையில், முயற்சியாளர்களின் வளர்ச்சியென்பது, மிக மிக அவசியமானதாக உள்ளது. காரணம், பல்தேசிய நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களால் உருவாக்கமுடியாத புதிய தொழிற்றுறை வணிகத்தையும் வேலைவாய்ப்பையும், தொடக்கநிலை வணிக முயற்சியாளர்களால் உருவாக்கமுடியும் என்பதே! 

அவ்வாறு உருவாகும் அல்லது உருவாக்கப்படும் முயற்சியாளர்கள், சந்தை போட்டியில் தோல்வியடையாத வகையில், தமது திறன்களை வளர்த்துக்கொள்ளுவது அவசியமாகிறது. அவ்வாறான திறன்கள், பலவாக உள்ளபோதும், கீழ்வரும் 5 திறன்களும், ஒரு முயற்சியாளர், தன்னை போட்டிமிகுந்த உலகத்தில், வெற்றியாளராக நிலைநிறுத்திக் கொள்ளுவதில், முக்கிய இடத்தினை வகிக்கின்றன. 

அபாயநேர்வைக் கணக்கிட்டுச்செயற்படல் (Takes calculated risks) 

ஒரு முயற்சியாளருக்கு இருக்கவேண்டிய மிக அடிப்படையான தகுதியும் ஏனையவர்களுக்குமிடையிலான வேறுபாடே, துணிந்து அபாயநேர்வை எதிர்கொள்ளுதலாகும். சந்தையில் இல்லாத, சந்தைக்குத் தேவையான புதிய முயற்சிகளைத் துணிந்தே செயற்படுத்தக் கூடிய தீர்மானங்கள்தான், என்றுமே முயற்சியாளர்களை வெற்றியாளர்களாக மாற்றியமைக்கும். 

உதாரணமாக, 2011ஆம் ஆண்டுவரை, இலங்கையின் மிகப்பெரும் வர்த்தகத்துறையானது, இணையப் பின்னணியை, பெரிதும் கொண்டிருக்கவில்லை. பெரும்பாலும், சர்வதேச வலைப்பின்னலான, E-Bay போன்ற தளங்களும் இதர சில உள்நாட்டு தளங்களுமே, ஒட்டுமொத்த வர்த்தகச் சந்தையின் சிறுபகுதியை, இணையம் மூலமாக ஆக்கிரமித்திருந்தன. குறித்த சமயத்தில், முயற்சியாளர் ஒருவரினால், Anything.lk  (தற்போதுWOW.lk) இணையதளமானது, தனிநபர் ஒருவர், சந்தை பெறுதியிலும் பார்க்கக் குறைவான விலையில், பொருட்களை வீட்டிலிருந்தே கொள்வனவு செய்யக்கூடிய புதிய முறையினை அறிமுகப்படுத்தியிருந்தது. இது, துணிகரமாக, மக்களைக் குறித்த இணைய கொள்வனவு முறைக்கு பழக்கப்படுத்துகின்ற ஒரு அபாயநேர்வு முயற்சியாகும். ஆனால், அதனை நிகழ்த்திக் காட்ட முடியும் என்பதனை, ஏனைய போட்டியாளர்களிருந்து வேறுபடுத்திக் காட்டியதன் மூலமே, குறித்த வணிகம் வெற்றிகரமாக, இன்றும் இயங்கிக் கொண்டுள்ளது.  

இது, ஒரு முயற்சியாளர், சந்தையில் தனது அபாய நேர்வுகளைப் பொருத்தமான வகையில் கணக்கிட்டு, அதற்கேற்ப, தனது முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதன் மூலமாக, சந்தையில் வெற்றியாளராகச் செயல்பட முடியும் என்பதற்கான சிறந்த எடுத்து காட்டாக உள்ளது. 

தோல்விகளிலிருந்து கற்றுகொள்ளுதல் (Learns from failure) 

போட்டிமிகுந்த வர்த்தக உலகில் எவரும், எதனையுமே 100% சரியாக செய்வதில்லை. இது, யாருக்கு சரியாகப் பொருந்துகிறதோ இல்லையோ, வணிக உலகில் உள்ளவர்களுக்கும் முயற்சியாளர்களுக்கும், சரியாகப் பொருந்தும். 

முயற்சிகள் எடுக்கின்ற அனைத்து சந்தர்ப்பங்களுமே, தோல்வியில் முடியக்கூடும். ஆனால், அதனைத் தோல்விகளாக மட்டுமே பார்க்காமல், அதிலிருந்து எதனைக் கற்றுக்கொள்ள முடியும் என்று பார்க்கின்ற மனப்பான்மையை, வளர்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யும்போது, புதியபாதையில் வெற்றியை நோக்கிச் செல்வது கடினமானதாக மாறிவிடும். வணிகங்கள் எப்போதுமே, ஒரு சதுரங்க விளையாட்டுக்கு ஒப்பானதாகவே அமைந்திருக்கும். தவறுகளிலிருந்து மிகவிரைவாக கற்றுக்கொண்டு, மீளவும் ஆரம்பிக்காவிட்டால், சதுரங்கத்தில் எப்படி தோற்றுபோவோமோ, அதுபோலத்தான் வணிக முயற்சிகளும் அமைந்திருக்கும். எனவே தோல்வியை, வெறும் தோல்வியாக மட்டுமே பார்க்காமல், அதிலிருந்து வெற்றிக்கு எது தேவையானது என்பதனை எடுத்துக்கொள்ளுவது அவசியமாகிறது. 

கனவுகளைப் பெரிதாகக் காணுதல் (Sees the bigger picture) 

ஒரு முயற்சியாளரின் எண்ணங்களும் இலக்குகளும் நடைமுறைக்கு சாத்தியமானதாகவே இருக்கவேண்டும். ஆனால், அதனுடைய அர்த்தம் தனது இயலுமைக்குள் மாத்திரம் முயற்சியாளர்கள் தங்களை மட்டுபடுத்திக்கொண்டு வணிகக் கனவை அல்லது இலட்சியத்தை கொண்டிருக்கவேண்டும் என்பதல்ல. மாறாக, வணிக வெற்றியும் அவ்வெற்றிகள் தூரநோக்கில் எவ்வாறான பலாபலனை ஏற்படுத்தித் தரபோகின்றது என்பதனையும் கொண்டதாக இருக்கவேண்டும். 

இன்றைய நிலையில், இலங்கையில் மிகப்பெரும் வெற்றிகரமான வணிகங்களாக உருவெடுத்து நிற்கும் எந்தவொரு வணிகத்தினதும் ஆரம்ப நாட்களை எண்ணிப்பாருங்கள். அவை, ஆரம்பித்த புள்ளிக்கும், தற்போதைய நிலைக்குமிடையில் இமாலய இடைவெளி இருக்கும். இது எப்படி சாத்தியமானது என சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? இந்த வணிகத்தின் வெற்றிச் செயன்முறை எவ்வாறு இடம்பெற்றது என ஆராய்ந்து இருக்கிறீர்களா ?  

ஒவ்வொரு வணிகத்தின் பின்னாலும் அதன் ஒவ்வொரு வெற்றிக்கு பின்னரும், அடுத்த இலக்கை நோக்கி நம்மால் பயணிக்க முடியும் என்று நம்பிக்கையூட்டும் முயற்சியாளர்களாலேயே இது சாத்தியமாகியிருக்கும். 

அதுபோலதான், தற்போது ஒரு புள்ளியில் ஆரம்பிக்கும் முயற்சியாளர்களும், அவர்களது வணிகங்களும் விருட்சமாக வளர்ந்து நிற்க, அவர்களது கனவுகளுக்கும் இலக்குகளுக்கும் முட்டுகட்டை போடக்கூடாது. 

புத்தி சாதுர்யமாக பொறுப்பினைப் பகிர்தல் (Delegates wisely) 

முயற்சியாளர்களின் மிகப்பெரிய பலவீனமே, அவர்களது கனவுக்கு, அவர்களே சகலவகையிலும் நிஜ உலகில் உருக்கொடுக்க வேண்டும் என நினைப்பதாகும். இது, ஒவ்வொரு முயற்சியாளர்களுக்கும் பணிச்சுமையை அதிகரிப்பதுடன், ஒரு எல்லைக்கு அப்பால் தமது கனவுகளை புதுப்பித்துக்கொள்ள முடியாது போகவும் செய்கிறது. இது, சந்தைப் போட்டிக்கு அமைவாக, முயற்சியாளர் தன்னை புதுப்பித்துக்கொள்ள முடியாமல், சந்தையை விட்டு ஒரங்கட்டப்பட வேண்டிய நிலையை ஏற்படுத்தி விடுகிறது.  

எனவேதான், முயற்சியாளர்கள் தனது இலக்கினை அடைந்து கொள்ளக்கூடிய வகையில், அனைத்து செயல்பாடுகளையும், பொருத்தமான திறமையாளர்களை இனங்கண்டு புத்திசாதுர்யமாக பகிர்ந்து அளிக்கவேண்டியது அவசியமாகிறது. இதன் மூலம், முயற்சியாளர் ஒருவருக்கு வணிகத்தினை நிர்வகிக்க, மேலதிக நேரம் கிடைப்பதுடன், குறித்த வணிகத்தை மேலும் அழுத்தமற்ற வகையில் விருத்தியடைய வைக்கவும் உதவுகிறது. 

இதன் காரணமாகத்தான் பெரும்பாலான வணிகங்களில், முயற்சியாளர்கள் அல்லது உரிமையாளர்கள் மூலோபாய முடிவுகளை எடுப்பவர்களாக இருக்க, நாளாந்த தீர்மானங்களை எடுப்பதற்கு பொருத்தமான திறனாளர்களை வைத்திருப்பார்கள். இது அவர்களது பணிச்சுமையை பெரிதுமே குறைக்க உதவுகிறது. 

வினைத்திறன்வாய்ந்த தொடர்பாடல் (Communicates effectively) 

முயற்சியாளர்களுக்கு இருக்கவேண்டிய மற்றுமொரு பிரதான தகுதிகளில் ஒன்று தொடர்பாடல் ஆகும். எவருடனும், இலகுவாக தொடர்பாடலை ஏற்படுத்திகொள்ளக் கூடிய, திறன் வாய்த்திருத்தல் இதன் அனுகூலமாகும். 

தனியே, தனது எண்ணங்கள் சிந்தனைகளை மாத்திரம் ஏனையவர்கள் மீது திணிக்கின்ற ஒருவழி தொடர்பாடலாக இல்லாமல், ஏனையவர்களின் அறிவுரைகளையும் ஏற்றுக்கொண்டு, கலந்துரையாடல்கள் மூலம் தம்மை வளர்த்துக்கொள்ளக் கூடியவினைத்திறன் வாய்ந்த இருவழி தொடர்பாடலாக அமைவதே சாலசிறந்தது ஆகும். 

ஒரு முயற்சியாளர், தன்னை ஒரு முயற்சியாளராக வெளியுலகுக்கு காட்டிக்கொள்ள, வெறுமனே தனது திறமைகளை மட்டும் வெளிப்படுத்தினால் போதுமானதாக இருக்காது. அத்துடன், அவர் சிறந்த தொடர்பாடல்வாதியாகவும் இருக்கவேண்டும். இல்லையெனில், எத்தகைய திறனுக்கும் சிறந்த அங்கிகாரம் கிடைக்கப்பெறாத நிலை ஏற்படும். 

உதாரணமாக, போட்டிகள் நிறைந்த சந்தையில் மிகச்சிறந்த தொடர்பாடலை மேற்கொள்ளாத போது, உண்மையான திறமையாளரைவிட, போட்டியாளர்களே வெளியுலகுக்கு அடையாளமாகத் தெரிவார்கள். இதற்கு மிக முக்கிய காரணமே, தொடர்பாடல் முறைமையை வினைத்திறன் வாய்ந்த முறையில் பயன்படுத்தாமைதான் ஆகும். அதிலும், இன்றைய காலக் கட்டத்தில் எந்தவொரு வணிகமும் தனக்குரிய விளம்பர தொடர்பாடலைக் கொண்டு வாடிக்கையாளரைக் கவரக்கூடியவகையில் வழங்காதபோதே தோற்றுபோகத் தொடங்கிவிடுகின்றன. எனவேதான், ஒட்டுமொத்த முயற்சியாளர்களின் எண்ணங்களுக்கும் இறுதி பெறுபேற்றைப் பெற்றுதருவதாக, இந்தத் தொடர்பாடல் முறைமை உள்ளது. 

மேற்கூறிய அனைத்து திறன்கள் மாத்திரமே, ஒரு முயற்சியாளரை வெற்றியாளர்களாக அடையாளப்படுத்துவதில்லை. மாறாக, இவை அனைத்துமே ஒவ்வொரு முயற்சியாளரும் வெற்றிக்கான பாதையில் பயணிக்கும்போது, தன்னகத்தே வளர்த்துகொள்ளவேண்டிய அல்லது கொண்டிருக்கவேண்டிய திறன்கள் ஆகும். நிஜ உலகில் ஒருவரைப்போல இன்னுமொருவர் இருப்பதில்லை. ஒவ்வொருவருக்குமே, வெவ்வேறான திறமைகளும், திறனும் காணப்படும். ஆனால், வெற்றிபெற்ற எல்லா முயற்சியாளர்களையும் ஏறெடுத்துபார்க்கின், அனைவருக்கும் பொதுவான, அனைவர் இடத்திலுமே உள்ள திறன்களாக மேற்கூறியவை அமைந்திருக்கும் என்பதில் ஜயமில்லை.


முயற்சியாளர்களுக்கு அவசியமான 5 திறன்கள்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.