வணிகத்தில் அக்கறையுடைய தரப்பினர் யார் ?

ஒவ்வொரு வணிகமும் தனது உரிமையாளர்களான பங்குதாரர்களின் இலாபத்தை உச்சப்படுத்துவதை முதன்மை நோக்காகக் கொண்டே செயல்படுகிறது. இதன்போது, வணிகங்கள் நெறிமுறை சார்ந்ததாகவோ, நெறிமுறை சாராதவகையிலோ தனது செயல்பாடுகளை முன்னெடுக்கின்றது. இதன் விளைவால், வணிகத்தில் அக்கறையுடைய தரப்பினர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கப்படுகிறார்கள்.  

வணிகத்தில் அக்கறையுடைய தரப்பினர் எனும் வட்டத்துக்குள் யார் எல்லாம் உள்ளடக்கப்படுகிறார்கள் என்பதை நாம் முதலில் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஒரு வணிகமானது தனது நிச்சயிக்கப்பட்ட இலக்கை அடைந்துகொள்ளுவதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்கும்போது, அதனால் தனிநபரோ அல்லது குழுவினரோ பாதிக்கப்படுவார்களாயின் (சாதகமாகவோ, பாதகமாகவோ) அவர்கள் வணிகத்தில் அக்கறையுடைய தரப்பினர் என குறிப்பிடப்படுவார்கள். இவ்வாறு அடையாளம் காணப்படும் வணிகத்தில் அக்கறையுடைய தரப்பினர் பல்வேறு வகைகளில் வகைப்படுத்தப்படுகிறார்கள். 

இவற்றில் பெரும்பாலான வணிகவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வகைப்படுத்தலின் பிரகாரம், வணிகத்தில் அக்கறையுடைய தரப்பினர் இருவகைப்படுத்தப்படுகிறார்கள்.  

முதன்மை தரப்பினர்: வணிக உரிமையாளர், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், வழங்குநர்கள் & etc.  
இரண்டாம் தரப்பினர்:  அரசாங்கம், ஊடகம், அக்கறையுடைய கட்சியினர் & etc.  
ஒவ்வொரு வணிகமும் தன்னுடைய வணிகச் செயல்பாடுகளை முன்னெடுக்கும்போது, தன்னைச் சார்ந்துள்ள அனைத்து வணிகத்தின் அக்கறையுடைய தரப்பினருக்கும் பெறுமதிசேர்க்கக் கூடியவகையில் தனது செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

பெரும்பாலும் இலாபநோக்கமற்ற நிறுவனங்கள் தமது வணிகத்தின் அக்கறையுடைய அனைத்துத் தரப்பினரையும் கவனத்தில்கொண்டு, செயல்படுகின்றபோதிலும், இலாபநோக்கத்தை முன்னிலைப்படுத்தும் நிறுவனங்கள் பங்குதாரர்களின் நலனையே முன்னிறுத்திச் செயல்படுகின்றன. இதன்காரணமாக, வணிகத்துடன் தொடர்புடைய அல்லது அக்கறையுடைய தரப்பினரின் நலன்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.  


உதாரணத்துக்கு, இரண்டு வகையான நிறுவனங்களை எடுத்துக்கொள்ளுவோம். முதலாவது நிறுவனம் வணிகத்தில் அக்கறையுடைய தரப்பினரை கருத்தில்கொண்டு செயல்பட்டு வருகிறது. இரண்டாவது நிறுவனம், வணிகத்தின் பங்குதாரரான பங்காளர்களுக்கு முக்கியத்துவம் தரும்வகையில் செயல்பட்டு வருகிறது என வைத்துக்கொள்ளுவோம்.

முதலாவது நிறுவனம், சந்தையில் தனது உற்பத்திப் பொருட்களுக்கு விலை அதிகரிக்கும்போது, தனது வழங்குநர்களை (Suppliers) கருத்திற்கொண்டு செயல்படுபவர்களாக இருப்பார்கள். இவர்கள், தமது முடிவுப்பொருளின் தரத்தை வெறுமனே குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவோ அல்லது இலாப அளவில் சமரசம் செய்துகொள்ளாது, மேலும் இலாபம் உழைப்பதற்காக வழங்குநர்களை அழுத்தத்துக்கு உள்ளாக்குபவர்களாகவோ இருக்கமாட்டார்கள். மாறாக, வழங்குநர்களின் நிலையைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப திட்டங்களை வகுப்பார்கள். 

ஆனால், இரண்டாவது வகை நிறுவனம் எந்தச் சந்தர்ப்பத்திலும் தமது பங்குதாரர்களின் இலாபத்தில் சமரசம் செய்துகொள்ள விரும்பாதவர்கள். இவர்கள் வழங்குநர்களின் உற்பத்திப்பொருட்களில் விலை அதிகரிப்பு ஏற்பட்டால், குறைந்த விலையில் பொருட்களைத் தரும் வழங்குநர்களைத் தேடவோ அல்லது இலாபத்துக்காக உற்பத்தித்தரம் குறைவான உள்ளீடுகளைக் கொள்வனவு செய்யவோ தயங்காதவர்கள். இவர்களில் யார் உங்கள் தெரிவாக இருக்கும்?  

வாடிக்கையாளராக நமது தெரிவு முதலாவது நிறுவனமாகவும், இலாபநோக்கம் கொண்ட பங்காளராகத் நமது தெரிவு இரண்டாவது நிறுவனமாகவும் இருக்கக் கூடும். இதற்கு, மிகப்பிரதான காரணம் வாடிக்கையாளராகவும் பங்குதாரராகவும் நமது நோக்கங்கள் வேறுபடுவதே ஆகும். 

இதனால், நம்மைச் சார்ந்துள்ள அக்கறையுடைய தரப்பினரே பாதிக்கப்படுகிறார்கள். எனவே, நமது நோக்கங்கள் வேறுபட்டதாயினும், நமது செயல்பாடுகள் எப்போதுமே வணிக செயல்பாடுகளில் ஒரே மாதிரியாக இருக்கவேண்டிய அவசியத்தை ‘வணிகத்தில் அக்கறையுடைய தரப்பினர்’ என்கிற எண்ணக்கரு உணர்த்துகிறது.  

வணிகத்தில் அக்கறையுடைய தரப்பினர் தொடர்புடைய எண்ணக்கரு  
ஒவ்வொரு வணிகமும் இன்றைய நிலையில், தனது பங்குதாரர்களுக்கு வழங்கும் முக்கியத்துவத்துக்கு சமனாகத் தன்னைச் சார்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

போட்டித்தன்மைமிக்க, வணிகச்சூழலில் வணிகங்கள் இலாபத்தை உழைத்துக்கொள்ள வேண்டுமாயின், தனித்து, தனது வாடிக்கையாளர் மட்டுமல்லாது, சார்ந்தோர் அனைவரையும் உட்சபட்சமாகத் திருப்திபடுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.வணிகத்தில் அக்கறையுடைய தரப்பினர் தொடர்பில் வணிகங்கள் எவ்வாறு செயல்படவேண்டும் அல்லது எவ்வாறு தமது மூலோபாயங்களை வகுத்துக்கொள்ள வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

முதலில், ஒவ்வொரு வணிகமும் பங்குதாரர் உட்பட வணிகத்தில் தாக்கத்தைச் செலுத்தும் ஒவ்வொரு தரப்பினரையும் தமது முன்னுரிமை அடிப்படையில் வகைப்படுத்த வேண்டியது அவசியமாகும். அவ்வாறு வகைப்படுத்தும்போது, அவர்கள் வணிகத்தில் கொண்டுள்ள ஆர்வம் மற்றும் திறன்/தாக்கத்தை அடிப்படையாகக்கொண்டு வகைப்படுத்திக் கொள்ளலாம்.  

உதாரணமாக, வணிகத்தின் பங்குதாரர்  கூட வணிகத்தில் அக்கறை கொண்ட தரப்பினராக வகைப்படுத்தப்படுவார். பங்குதாரரை வகைப்படுத்தும்போது பங்குதாரர் வணிகத்தில் அதீத ஆர்வம் உடையவராகவிருப்பத்துடன், நிறுவனத்தின் செயல்பாடுகளில் அதீத திறன் அல்லது தாக்கத்தை செலுத்துபவராகவும் இருப்பார். 

எனவே, இவருக்கான முன்னுரிமை அதிகமாகும். இதன்போது, குறித்த வணிகத்தின் அக்கறையுடைய தரப்பினரை நிறுவனத்தில் பேணிப் பாதுகாத்துக்கொள்ளத் தொடர்ந்து திருப்திபடுத்தும் வகையில் செயல்படுவது அவசியமாகிறது. அப்படியாயின் அவர்களின் இலாபநோக்கத்தை திருப்திபடுத்தக்கூடிய வகையிலும், ஏனைய அக்கறையுடைய தரப்பினர் பாதிப்படையாத வகையிலும் செயல்படுவது அவசியமாகிறது. 

நிறுவன செயல்திறன் குறிகாட்டிகளை (KPI) ஆய்வு செய்தல், நிறுவன இலக்குகளை மாற்றியமைத்தல் மற்றும் பங்குதாரர் தேவைகளைக் கண்டறிந்து பூர்த்தி செய்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகள் ஊடாக அவர்களைத் தொடர்ச்சியாகத் திருப்திப்படுத்தல் அவசியமாகிறது. இல்லாதுவிடின், பங்குதார்களின் நம்பிக்கையையும் முதலீட்டையும் இழக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.  

அடுத்து, பங்குதாரருக்கு நேர்எதிர்மாறான ஒரு தரப்பினரை எடுத்துக்கொள்ளுவோம் (உ+ம்: அரசாங்கம்). இவர்கள் நேரடியாக வணிகத்தின் செயல்பாடுகளில் தாக்கத்தை செலுத்துபவர்களாக இருக்கமாட்டார்கள். அதுபோல, வணிகத்தின் மீதும் குறிப்பிடத்தக்க ஆர்வத்தை கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், ஏதோவொரு வகையில் வணிகத்தின் செயல்பாடுகளை கவனித்துக்கொண்டு இருப்பவர்களாக இருப்பார்கள். 

இத்தகைய கட்சியினரை திருப்திபடுத்த வேண்டுமாயின், அவர்களுக்குத் தொடர்ச்சியாக வணிகம் தொடர்பிலும், வணிகத்தின் செயல்பாடுகள் தொடர்பிலும் சரியான தகவல்களை வழங்கிக்கொண்டிருந்தால் போதுமானதாகும். அவ்வாறு வழங்காத பட்சத்தில், இவர்களது தாக்கம் வணிகத்தின் மீது மெல்லமெல்ல அதிகரிக்கக்கூடும்.  

மேற்கூறியதைப்போலவே, வணிகத்தின் மீது அதீத ஆர்வம் கொண்டவர்களும், வணிகத்தின் செயல்பாடுகளின் மீது மிகக் குறைந்த அளவில் தாக்கத்தை செலுத்தக்கூடியதுமான தரப்பினரைத் தொடர்ச்சியாகத் திருப்திப்படுத்திக்கொள்ள அவர்களைக் கண்காணித்து, ஊக்குவிப்பது அவசியமாகிறது. 

இதை, வணிகம் செய்யத் தவறுகின்றபோது, வணிகத்தின் மீது இத்தகைய தரப்பினரினால் வழங்கப்படும் அழுத்தம் அல்லது தாக்கம் அதிகரிக்கும். இது வணிகத்தின் முதன்மை நோக்கத்தை நோக்கி நகர்வதற்கு இடையூறாக அமையும்.  

அவ்வாறே, வணிகத்தில் குறைவான ஆர்வமும், அதீத தாக்கத்தையும் செலுத்தும் தரப்பினர் தொடர்பிலும் வணிகம் அதீத சிரத்தையுடன் இருக்கவேண்டும். இவர்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதுடன், தேவைகளை கண்டறிந்து பூர்த்தி செய்யவேண்டியதும் அவசியமாகிறது. இல்லையேனில், இத்தகைய தரப்பினரின் வணிகத்தின் மீது அதீத ஆர்வத்தை செலுத்த தொடங்குவார்கள். பின்பு, வணிகத்தின் பங்குதாரர்களுக்கு சமமாக முன்னுரிமை வழங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.  

ஒரு வணிகத்தைப் பொறுத்தவரை, வணிகத்தில் அக்கறையுடைய ஒவ்வொரு தரப்பினருமே அந்த வணிகத்தினால் வகைப்படுத்தப்பட்ட முன்னுரிமை பிரகாரமே இருக்க வேண்டும். இதற்கு, வணிகம் குறித்த தரப்பினரைத் திருப்திப்படுத்தக்கூடிய வகையில், தனது வணிகச் செயல்பாடுகளை மிக நேர்மையாகவும், முறையாகவும் கொண்டு செல்லவேண்டியது அவசியமாகும்.

அவ்வாறு, இல்லாத பட்சத்தில் வணிகத்தில் அக்கறையுடைய தரப்பினர் பாதிக்கப்படுவதுடன், எதிர்வினையாற்றவும் தொடங்குவார்கள். இது வணிகத்தின் செயல்பாடுகளைப் பாதிக்கச் செய்வதுடன், வணிகத்தின் நீண்டகால நிலைத்திருத்தல் தன்மையை கேள்விக்குள்ளாக்கும்.  


வணிகத்தில் அக்கறையுடைய தரப்பினர் யார் ?

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.