‘வென்னமி’ இறால் பற்றிய விளக்கம்

‘வென்னமி’ இறால் உற்பத்தியையும் இந்த இறால் வளர்ப்புப் பண்ணைகளையும் பற்றிய பல்வேறு விமர்சனங்கள் அண்மையில் வெளியாகியிருந்த நிலையில், இது பற்றித் தெளிவூட்டும் நோக்கில் TAPROBANE SEAFOOD GROUP மன்னாரில் ஒரு விழிப்புணர்வு ஊடகவியலாளர் சந்திப்பை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிறுவனம், இலங்கையில் அமைந்துள்ள மிகப்பெரிய கடலுணவு உற்பத்தி நிறுவனமாகும். தன்னகத்தே, 1,200 ஊழியர்களையும் எட்டுப் பதப்படுத்தும் வசதிகளையும் கொண்ட தொழிலகங்களையும் கொண்டுள்ளது. 

அதுமட்டுமன்றி, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில், இந்தப் பதப்படுத்தும் நிலையங்கள் பரந்து விரிந்து காணப்படுகின்றன. மேலும், இந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, இந்த இறால் (வென்னமி இனம்) உற்பத்தி பற்றி முழுவிவரங்கள், சமூக மற்றும் பொருளாதார மட்டத்தில் இவை பற்றிய கருத்துகளும் சர்ச்சைகள் பற்றியும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.  

இந்தச் சந்திப்பின்போது, கலந்துகொண்டவர்களில், பிரதேச செயலாளர், கிளிநொச்சி - மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதானிகள், தேசிய நீர்வாழ் உயிரின மேம்பாட்டு அதிகாரசபையைச் NAQDA NATIONL AQUACULTURE DEVELOPMENT AUTHORITY) சேர்ந்த பிரதிநிதிகள், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, மீனவர் கூட்டுறவுச் சம்மேளனம் - கிளிநொச்சி மாவட்டம், மற்றும் கடற்றொழில் திணைக்களம், கடலோரப் பாதுகாப்பு திணைக்களம், வனவிலங்கு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் போன்றவர்களின் வருகை, இங்கே குறிப்பிடத்தக்க அம்சமாக அமைந்திருந்தது.

அண்மையில் வெளியாகியிருந்த விமர்சனங்கள் பற்றி TAPROBANE SEAFOOD GROUP ஐச் சேர்ந்த அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த அறிக்கைகளால் தவறான நோக்கத்துடன் பரப்பப்பட்ட வதந்திகள் மீனவச் சமூகங்களை மட்டுமன்றி, சாதாரண மக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன. 

“அது மட்டுமன்றி, இதுபற்றிப் பரப்பப்பட்ட தவறான செய்திகளால், மக்கள் இந்த ‘வென்னமி இறால்’ வகை நோய்களை ஏற்படுத்தும் காரணிகளை உள்ளடக்கியது என்ற தவறான கருத்தில் மூழ்கியிருந்தனர். இது, மிகவும் தவறான கருத்தாகும்.  இந்த இறால் இனம், எவ்வித உடல் நலச்சீர்கேடுகளையும் ஏற்படுத்தாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  

“வென்னமி இறால் பண்ணைகள் பற்றிய சர்ச்சைகளுக்கு முழுக்காரணியாகக் காணப்படுவது, அது பற்றிய நன்மை பயக்கும் தெளிவூட்டல் மக்களைச் சென்றடையாமையே என்பது, எமது வலிமையான கருத்தாகும். 
“நாம், வென்னமி இறால் இனத்தின் பாதுகாப்புக் குறித்து மிகவும் கூர்ந்து கவனம் செலுத்துகின்றோம். இதற்குக் காரணம், நாம், இந்தச் சமூதாயம் மீது கொண்டுள்ள ஈடுபாடும் அக்கறையும் ஆகும். 

எமது நிலங்களும் நிலத்தடி நீர்வளமும் உவர்ப்புத் தன்மை கொண்டதாக அமைந்தபோதிலும் ஒவ்வோர் இறால் வளர்ப்புப் பண்ணையும் உயர் அடர்த்தியுடன் கூடிய (HIGH DENSITY POLYETHYLENE) HDPE எனப்படும் பொலித்தீன்களால் நன்கு பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றது.

“நாங்கள் PROBIOTIC எனப்படும் சமிபாட்டை இலகுசெய்யும் நுண்ணுயிர் மூலக்கூறுகளை (BACTERIA) இறால் வளர்ப்புக் குட்டைகளில் பயன்படுத்துகின்றோம். இந்நுண்ணுயிர் மூலக்கூறுகள் (பக்டீரியாக்கள்) நன்மை பயக்கக் கூடியன என்பதுடன், இவற்றின் சராசரி ஆயுட்காலம் 5-7 நாட்கள் மட்டுமே. 

“இந்நுண்ணுயிர், மூலக்கூறுகள் இறால்களின் சமிபாட்டு எச்சங்கள் மற்றும் சமிபாடடையா உணவுகள் (எஞ்சியிருப்பின்) மற்றும் இறால்களின் உடற்கூறுகள் (ஓடு) போன்றவற்றையும் உணவாகக் கொள்கின்றன. 

“அரசாங்க மற்றும் இதர அதிகார சபைகளின் அனுசரணை போன்றவற்றினூடாக, இந்த இறால் வளர்ப்புத்துறை அதிகூடுதலான ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ளவையாக, 2020ஆம் வருடத்தில் அதன் இலக்கை எய்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துறை வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் ஆயிரக்கணக்கான தொழில்வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என்றும் நம்பப்படுகின்றது. அதுமட்டுமன்றி, சுற்றுப்புறச் சமூகங்களின் நலன்கருதி, செறிவான உற்பத்தி முறைமைகளையும் தொடங்க எதிர்பார்த்துள்ளோம்” என, TAPROBANE SEAFOOD COMPANY இன் சார்பில் அதன் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும், சர்வதேச நாடுகளைச் சேர்ந்த ஆலோசகர்கள், வென்னமி இறால் உற்பத்தி பற்றிய தவறான கண்ணோட்டத்தை நிராகரித்துள்ளனர். இத்திட்டத்துக்கெதிராகப் போர்க்கொடி தூக்கியவர்கள் இதுபற்றிய அலட்சியப் போக்குடையவர்களாகவே காணப்படுகின்றனர். இதன்மூலம், அறியக்கூடியது என்னவெனில், இவர்களின் மனதில் இன்னமும் இந்த இறால் வளர்ப்புத் திட்டத்தைப் பற்றிய காலாவதியான சிந்தனைகளே குடிகொண்டுள்ளன என்பதாகும்.  

ஊடக சந்திப்பின் போது, கூடியிருந்தோர் மத்தியில் உரையாற்றிய, நீர்வள உயிரியற்றுறை நிபுணர் செந்தில்குமார், வென்னமி இறால் பண்ணைத் திட்டத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் பற்றி விளக்கியிருந்தார். அத்துடன், சமூக பொருளாதார வளர்ச்சியில், இத்திட்டம் வகிக்கக்கூடிய முக்கிய பங்கைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

“இலங்கை வென்னமி இறால் வளர்ப்புத் திட்டத்தைப் பற்றி, மறைந்திருக்கும் நன்மைகளையும் உண்மைகளையும் அதன் நீண்ட தூர அனுகூலங்களையும் இன்றைவரை அடையாளம் கண்டுகொள்ளாதது மிகவும் வருந்தத்தக்கது. 

“மக்கள் இந்த வென்னமி இறால் பண்ணைத் திட்டத்துக்கு எதிராகத் தங்கள் பரந்தளவிலான எதிர்ப்பைக் காட்டுவதற்கு, இதன் பராமரிப்புச் செயற்பாடுகளைப் பற்றி அவர்கள் கொண்டுள்ள அறியாமை மற்றும் இத்திட்டத்தில் அமைந்துள்ள புலப்படும் மற்றும் மறைந்திருக்கும் நன்மைகள் பற்றிய தெளிவின்மை போன்றன ஏதுவாக அமைந்துள்ளன. 

“வென்னமி இறால் இனம் மிகவும் கடினமான, சர்வ உத்திகளையும் கையாண்டு, துறைசார் பங்குதாரர் மற்றும் அறிவியல் சமூகத்தினருடன் நடத்தப்பட்ட கலந்தாலோசனைகளின் பின்னர், 2014ஆம் ஆண்டு இலங்கையில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.  

தற்சமயம் 1,700 கிலோமீற்றர் விஸ்தீரணம் கொண்ட கடற்கரையை அண்டிய பிரதேசங்களில், இறால் பண்ணைத் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. 

“நீர்வாழ் உயிரியல் மேம்பாட்டு அதிகாரசபை (NAQDA) இன் கூற்றின்படி, 1999இல் இலங்கையின் இறால் உற்பத்தி 3,820 தொன்களாக இருந்தபோதிலும், அது 2005ஆம் ஆண்டளவில் 1,570 தொன்களாக வீழ்ச்சியடைந்தது. எவ்வாறெனினும், அரசாங்கத்தால் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம்  திகதி வெளியிடப்பட்ட தனித்துவமான வர்த்தமானி அறிக்கையின் பிரகாரம், மீன்பிடி மற்றும் நீர்வளத்துறை மேம்பாட்டு அமைச்சால் 9,055.8 ஹெக்டயர் (22,639.5 ஏக்கர்) நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்திக்காக அடையாளம் காட்டப்பட்டுள்ளது. அயன வலையத்தில் அமைந்துள்ள கிழக்கு பசுபிக் சமுத்திரத்தை உறைவிடமாகக் கொண்ட வென்னமி இறால் இனங்கள், உள்நாட்டு பொருளாதாரத்தில் மிக அபரிதமான செல்வாக்கைச் செலுத்தக்கூடியன. 

“நமது நாடு ஏற்றுமதித் தரம் வாய்ந்த இறால் உற்பத்தியில், வருடாந்த ரீதியில் பின்னடைவை நோக்கிச் செல்லும் காலகட்டத்தில், வென்னமி இன இறால் உற்பத்தி, இப் பின்னடைவைச் சரிசெய்யக்கூடிய நிலைமையை ஏற்படுத்தவல்லது. 

“தற்போது, இலங்கை BLACK TIGER எனப்படும் இறால் வர்க்கத்தையே, வியாபார நோக்கத்துக்காக அடையாளப்படுத்தியுள்ளது. ஆனால், வென்னமி இறால் இனமே, கடலுணவு உற்பத்தி ஏற்றுமதியின் பிரதானியாக விளங்குகின்றது. 

“இதேவேளை, வென்னமி இறால் இனம், இந்தியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் மலேசியா போன்ற நாடுகளின் ஏற்றுமதி வருவாயில் 2 முதல் 3 மடங்கு மேலதிகமான அதிகரிப்பைத் தந்துள்ளது. இந்தத் தரவுகள், மேற்குறிப்பிட்ட நாடுகள் வென்னமி இறால் ஏற்றுமதியில் ஈடுபட முன்னிருந்ததைவிடவும், 2-3 மடங்கு அதிகரிப்பைக் காட்டியிருந்தன.

“அதேநேரம், இந்த நாடுகள், தங்களது கடலுணவு ஏற்றுமதிக்காக வென்னமி இறால்களை அறிமுகம் செய்தவுடன், BLACK TIGER வகை இறால்களின் உற்பத்தியைக் கிரமமாக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளன. இவற்றை முடிவுக்குக் கொண்டுவந்த பிரதான காரணம், இவை உடல்நலச் சீர்கேடுகளை உண்டாக்கியமையாகும். 

“2014ஆம் ஆண்டு, இந்த இறால் வகை சவூதி அரேபியாவில் அறிமுகம் செய்யப்பட்டு, 2016ஆம் ஆண்டு 23,000 தொன் உற்பத்தியைக் கண்டது. சவூதி அரேபியா 2018 ஆண்டு நிறைவில் 50,000 தொன் இறால் உற்பத்தியை நோக்கிய தன் வெற்றிப் பயணத்தை மேற்கொண்டுள்ளது. 

“இந்த வென்னமி இறால் உற்பத்தி, அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கான ஏற்றுமதிச் சந்தையில் கூடுதலான வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் இதன் தேவைகள் மிகவும் அதிகரித்தும் காணப்படுகின்றன” என்றும் செந்தில்குமார் கூறினார்.  

செந்தில்குமார் மேலும் ஒரு வித்தியாசமான, அதேவேளை ஒரு முக்கிய அம்சம் பற்றியும் கூறுகையில், “ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான ஹவாய் மாநில பல்கலைக்கழகம் ஒன்றால், வருடக்கணக்காக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் பலனாக, 1990இல், நோய்க் காரணிகளை தன்னகத்தே கொண்டிராத (PATHOGEN-FREE) வென்னமி இறால் இனம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

“இந்த இறால் இனமானது, BLACK TIGER என்ற இறால் வகையை விட மிகவும் மேலானதாகக் கருதப்பட்டது. இதற்குக் காரணம் BLACK TIGER இறால் வகைகள் பல்வேறு வகையான நோய்க் காரணிகளை அவையாவன, சுகாதார சீர்கேடுகளை உண்டுபண்ணும் நுண்ணுயிர்களை (MICROORGANISMS), வைரஸ்கள், பூஞ்சணங்கள் (FUNGI) மற்றும் பக்டீரியாக்களை தன்னகத்தே கொண்டிருந்த காரணத்தால் ஆகும்.

“மேலும், வென்னமி இறால் இனத்தைப் பற்றி வடமேல் மாகாண (WAYAMBA) பல்கலைக்கழகத்தின் கால்நடை, மீன்பிடி மற்றும் ஊட்டச்சத்துப் பிரிவில் பணியாற்றும் போராசிரியர் J.M.P.K. ஜயசிங்கவால் தொகுக்கப்பட்ட சுற்றாடல் தாக்கம் சம்பந்தமான ஒரு மதிப்பீட்டு அறிக்கையில் (ENVIRONMENTAL IMPACT ASSESMENT - EIA) வென்னமி இறால் பண்ணைத் திட்டம் சாத்தியப்படக்கூடியது மட்டுமன்றி, இத்திட்டம் சுற்றாடலுக்கோ, உணவுப் பாதுகாப்பு மற்றும் சமூக - விலங்கியல் நல்லுறவுக்கோ எவ்வித பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தாது என்று குறிப்பிட்டுள்ளார். 

“இவரின் கூற்றுக்குக் காரணம், இந்த வென்னமி இறால் வளர்ப்புப் பண்ணைகள் சர்வதேச தரக்கட்டுப்பாட்டுக்கமையவே அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், சிறந்த நீரியல் வள முறைமை (BEST AQUACULTURE) ஆன BAPஇன் தர நிர்ணயங்களுக்கும் தணிக்கைகளுக்கும் அமையவே இந்த வென்னமி இறால் பண்ணைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன” என்றார்.  

ஊடகச் சந்திப்பின் இறுதியில், மீன்பிடியாளர்கள், கூட்டுறவுச் சம்மேளனத்தின் அங்கத்தவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் விடுத்துள்ள எழுத்து மூல கோரிக்கைகளில், வட மாகாணத்தில் வென்னமி இறால் பண்ணைத் திட்டத்தை அபிவிருத்தி செய்ய உதவுமாறு வேண்டியுள்ளனர்.

அரசாங்கத்தையும் தனியார் துறையையும், மீனவ சமூகத்தையும் உள்ளடக்கிய முத்தரப்பு நடவடிக்கைகள் மூலம், நீண்டகால மற்றும் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய நாட்டின் நீரியல் வளத்துறையைக் கட்டியெழுப்பும் பயணம் என்ற அடிப்படைத் தொனிபொருளுடன், நின்றுவிடாது, எதிர்வரும் மூன்று வருட காலத்தில், ஆயிரக்கணக்கான தொழில்வாய்ப்புகளை வழங்கக் கூடிய வெற்றிகரமான இறால் வளர்ப்புப் பண்ணை அபிவிருத்தித் திட்டமாக இத்திட்டம் மாறும் என்பதில், சந்தேகமில்லை என்ற தொனிபொருளோடு, மன்னாரில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு நிறைவடைந்தது.    


‘வென்னமி’ இறால் பற்றிய விளக்கம்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.