2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கையின் தகவல் தொழில்நுட்பத்துறை தெற்காசியாவில் சிறப்பாகவுள்ளது: ஜயப்பிரகாஷ்

A.P.Mathan   / 2013 ஜனவரி 31 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


- NPHASIS டெக்னொலஜி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பணிப்பாளருமான நா.ஜயப்பிரகாஷ்


தகவல் தொழில்நுட்பம் என்பது இன்றைய காலகட்டத்தில் விவசாயத்துறை, மீன்பிடித்துறை போன்ற பாரம்பரியத்துறைகள் பெரும்பாலானவற்றில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. ஒவ்வொரு துறைகளிலும் இந்த தகவல் தொழில்நுட்பத்தின் தேவை இன்றியமையாததாகிவிட்டது. இந்த துறையில் பல பிரிவுகள் காணப்படுகின்றன.

இந்த ஒவ்வொரு பிரிவுகளையும் சேர்ந்த சேவைகளை மக்களுக்கு சென்றடையச் செய்வதற்கு பல நிறுவனங்களும் அமைப்புகளும் நம் மத்தியில் செயற்பட்ட வண்ணமுள்ளன.

அந்த வகையில், சமீபத்தில் தனது வர்த்தக செயற்பாடுகளை ஆரம்பித்து வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் NPHASIS டெக்னொலஜி பிரைவேற் நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும் இலங்கையில் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த நிலைமை குறித்து அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பணிப்பாளருமான நா.ஜயப்பிரகாஷ் - தமிழ்மிரரின் உழைப்பாளிகள் பகுதிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் தெரிவித்த கருத்தின் தொகுப்பு இதோ...

இலங்கையை பொறுத்தமட்டில் தகவல் தொழில்நுட்பத்துறை முன்னேற்றம் கண்டிருந்த போதிலும், இந்த துறையில் போதியளவு வேலை வாய்ப்புகள் இன்மை மற்றும் அனுபவத்திற்கேற்ற சம்பளம் வழங்கப்படாமை போன்றன பெரும் குறைபாடுகளாக திகழ்கின்றன. இதன் காரணமாக இலங்கையில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கற்கைகளை பயில்வோர் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அத்துடன் வெளிநாடுகளில் தமது உயர்கல்வியை இந்த துறையில் பூர்த்தி செய்துவிட்டு நாடு திரும்புவோருக்கு இந்த துறையில் வேலைவாய்ப்பு கிட்டாமை பெரும் குறையாக காணப்படுகிறது.

ஆசிய பிராந்திய நாடுகளில் மேலைத்தேய நாடுகளின் வேலைத்திட்டங்கள் அதிகளவு கிடைப்பதற்கு பிரதான காரணம், அந்நாடுகளில் குறைந்த வருமானத்தில் உயர் தரமான சேவையை பெற்றுக்கொள்ள முடிகின்றமை மற்றும் உயர் தொழில்நுட்ப வசதிகள் காணப்படுகின்றமை போன்றன காரணங்களாக அமைந்துள்ளன. இலங்கையிலும் இவ்வாறான நிலை ஏற்படுமாயின் மேலைத்தேய நாடுகளின் முதலீடுகள் தொழில்நுட்பத்துறையில் இலங்கையில் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.

ஆனாலும் தற்போது இலங்கையில் பாரிய தகவல் தொழில்நுட்ப கம்பனிகளின் செயற்பாடுகள் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றது என்பதற்கு மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் செயற்பாடுகளை குறிப்பிடமுடியும்.

எமது வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் துறையானது, சவால்கள் நிறைந்ததாகும். இன்றைய காலகட்டத்தில் போட்டிகரமான சந்தை சூழ்நிலையில், திறமையானவர்கள் மட்டுமே நிலைத்திருக்கும் நிலை நிலவுகிறது. இந்தநிலையில், இந்த துறையில் இயங்கும் இதர நிறுவனங்களுடன் போட்டிகரமாக வெற்றியுடன் எமது நிறுவனத்தை முன்னெடுத்து செல்வது என்பது உண்மையில் சவால் மிக்க விடயமாக அமைந்துள்ளது.

குறிப்பாக, ஆரம்ப காலங்களில் இணையத்தளம், இணையம் குறித்த போதிய அறிவு குறைவாகவும், அது சார்ந்த தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடையாமலும் இருந்த போதும், அத்துறையை தெரிவு செய்து, இணைந்த போட்டிகரமான சூழலில் சாதித்த பல நிறுவனங்களும் ஏராளமாக காணப்படுகின்றன. இன்று அவ்வாறான பெரிய நிறுவனங்களுடனும் சக நிறுவனங்களுடனும் சேர்ந்து இந்த இணையத்தள வடிவமைப்பு, வெப் ஆப்ளிகேஷன் வடிவமைப்பு, மென்பொருள் வடிவமைப்பு போன்ற தீர்வுகளை வழங்க எமது வல வழிகளை கையாண்டு வருகிறது. இதில், திறமையான ஆளணித்துவம், அமைவிடம், தொடர்பாடல் மற்றும் சந்தைப்படுத்தல் போன்றன மிகவும் அவசியமாகின்றது.

அதற்கேற்றாற்போல், எமது நிறுவனத்தில் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவர்களின் வேலைத்திறனை அதிகரிக்கும் வகையில் ஊக்குவிக்கப்படுகின்றது.

இதுமட்டுமில்லாமல் எமது நிறுவனம் கொழும்பு நகர்பகுதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ளதால் இலகுவாக தொடர்பாடல்களை பேணக்கூடியதாக உள்ளது.

எமது நிறுவனத்தை பொறுத்தமட்டில், நாம் வாடிக்கையாளர்களுக்கு இணையத்தள வடிவமைப்பு மற்றும் ஆப்ளிகேஷன் சேவைகள், மென்பொருள் வடிவமைப்பு, வன்பொருள் பராமரிப்பு, நெட்வேர்க் நிறுவல், கிராஃபிக் டிசைனிங் போன்ற சேவைகள் வழங்குகிறோம். எமது சிறப்பம்சம் யாதெனில், வாடிக்கையாளர்களின் தேவையை முழுமையாக அறிந்து கொண்டு, பின்னர் அதற்கேற்ற தீர்வினை நாம் பரிந்துரை செய்வதுடன், கட்டணங்களையும் மதிப்பிடுகிறோம். அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு பகுதிவாரியாக கட்டணங்களை செலுத்தக்கூடிய சந்தர்ப்பத்தையும் நாம் வழங்குகிறோம். அத்துடன் எமது சேவைகளை நாம் வாடிக்கையாளர்களுக்கு பூரணமாக வழங்கிய பின்னர், பராமரிப்பு மேற்பார்வை சேவைகளை துல்லியமாக வழங்கி வருகிறோம். அத்துடன் இலவசமாக வெப் சேர்வர் இடவசதிகளையும் நாம் வழங்குகிறோம்.

மேலைத்தேய நாடுகளில் இன்றைய காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை பெருமளவு அபிவிருத்தியடைந்துள்ளது. இதனால் அந்நாடுகளில் மென்பொருள் வடிவமைப்பு, வெப் ஆப்ளிகேஷன் மற்றும் இணையப்பக்க வடிவமைப்பு போன்றவற்றுக்கான தேவைகளும் அதிகரித்து காணப்படுகின்றன. ஆயினும் அங்கு இந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்கான செலவீனம் அதிகம் என்பதால், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளை சேர்ந்த நிறுவனங்களை நாடுகின்றனர்.

இதற்கமைய, பிரித்தானியா, கனடா, அமெரிக்கா மற்றும் பல நாடுகளிலிருந்து எமக்கு மென்பொருள், இணையப்பக்க வடிவமைப்பு சேவைகளுக்கான கேள்விகள் கிடைத்துள்ளன. பல திட்டங்களை நாம் வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளோம். எமது வாடிக்கையாளர்கள் எமது சேவைகளுக்கு வழங்கும் பாராட்டுகள் எமது சேவைகளை மேலும் மெருகேற்றி விஸ்தரிப்பான முறையில் வழங்க எம்மை ஊக்குவிக்கின்றது.

இலங்கையிலுள்ள உயர்கல்வி முறையானது தற்போது முறுசீரமைக்கப்பட்டு வருகிறது. பல்கலைக்கழக மாணவர்களின் திறனை வளர்த்துக்கொள்ளும் பொருட்டு அவர்களுக்கு வழங்கப்படும் தொழில்வாய்ப்பில் அவர்கள் தொழில்நுட்பம் குறித்து முன்னறிவை பெற்றுக்கொள்ள முடிகின்றது. இதைவிட, பல தனியார் கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கு மிகவும் உகந்த முறையில் தொழிற்கல்வியை வழங்கி வருகின்றன. இதன் காரணமாக, இலங்கையிலுள்ள மாணவர்களின் தகுதி உயர்வான நிலையில் காணப்படுகிறது. எனினும் மாணவர்கள் தங்களுடைய உயர்கல்வியை பெற்றுக்கொள்ளும்போது அத்துறை சார்ந்த தொழில்கல்வியை பெறவேண்டிய கட்டாயத் தேவை இருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் மாணவர்கள் தொழிற்கல்வியை குறுகிய கால பாடநெறிகளை வழங்கும் சிறந்த கல்வி நிறுவனங்களில் பயில்வது அவர்களுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்ள பெரிதும் உதவியாக அமையும்.

எமது சேவைகள் வழங்கும் துறைகளில் முகாமைத்துவம், கணக்கியல், சந்தைப்படுத்தல், ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் உல்லாசத்துறை, ஹோட்டல் போன்றன உள்ளடங்குகின்றன.

பல மாவட்டங்களில் கிளைகளை கொண்டியங்கும் கணினி உதிரிப்பாக விற்பனை நிறுவனத்துக்கு ஒருங்கிணைக்கப்பட்ட பட்டியல் திட்ட மென்பொருளை நாம் வெற்றிகரமாக வடிவமைத்து வழங்கியிருக்கிறோம்;. அதுபோன்று, தலை நகரின் பிரபல ரெஸ்டோரன்ட் ஒன்றுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்லைன் பட்டியலிடல் சேவைகளை வழங்கியிருக்கிறோம்.

இலங்கையை பொறுத்தமட்டில் கணினி மென்பொருள் திருட்டு என்பது பரவலாக இடம்பெறுகிறது. இதற்கு பிரதான காரணி என நான் கருதுவது, வின்டோஸ் ஆப்ளிகேஷன்கள் இலகுவாக திருடப்படக்கூடியன. இவற்றை பென் டிரைவ்கள் அல்லது சிடிக்களில் சேகரித்து பிரிதொரு கணினியில் நிறுவிக்கொள்வது சுலபம். பலராலும் இலகுவாக மேற்கொள்ள முடியும். ஆயினும் இதற்கு மாறாக ஒன்லைன் சேர்வர் ஆப்ளிகேஷனன்கள் இலகுவில் திருடப்பட முடியாதவை. இவற்றை தரவிறக்கம் செய்வது கடினமான செயற்பாடாகும். அத்துடன், இவற்றை கணினியில் நிறுவும் செயற்பாடும் கடினமானதாக அமைந்துள்ளது. இதனையே நாம் எமது வாடிக்கையாளர்களுக்கும் பரிந்துரை செய்கிறோம். எமது தீர்வுகளும் இந்த பிளாட்ஃபோர்மிலேயே அமைந்துள்ளன.

வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுவாக கணினிகளை உபயோகிப்போர் தமக்கு வரும் மின்னஞ்சல்கள், தமது கடன்அட்டை பாவனை, ஒன்லைன் கொடுக்கல் வாங்கல்கள் குறித்து கவனமாக செயற்படுவது சிறந்தது. இதன் மூலம் அநாவசிய இழப்புகளை தவிர்த்துக்கொள்ள முடியும். இலங்கையில் தற்போது சைபர் கிரைம்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமுள்ளது.

எமது நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டமாக, பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் சமூக பொது அமைப்புகளுக்கு இலவசமாக இணையப்பக்கங்களை வடிவமைத்து வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

-    சந்திப்பு: ச.சேகர்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .