2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பாதுகாப்பான முதலீட்டு விழிப்புணர்வு வட பகுதி மக்களிடம் அதிகம்: திலீபன்

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 03 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


- யாழ். பங்கு பரிவர்த்தனை நிலைய பொறுப்பதிகாரி மு.திலீபன்


மக்களின் முதலீட்டு தெரிவில் முதன்மையாக திகழ்தல் என்பதை நீண்ட கால நோக்கமாகவும், பங்குகள் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களை சட்ட ரீதியாக உறுதிப்படுத்தும் அமைப்பாக, 1985ஆம் ஆண்டு இலங்கை கம்பனிகள் சட்டத்துக்கு அமைய தாபிக்கப்பட்ட கொழும்பு பங்குபரிவர்த்தனை நிலையத்தின் யாழ்ப்பாணக் கிளை 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்த கிளையின் பொறுப்பதிகாரியாக செயலாற்றி வரும் மு.திலீபன் - பங்குப்பரிவர்த்தனையின் யாழ்ப்பாணக் கிளையின் செயற்பாடுகள் மற்றும் வடக்கு, கிழக்கு பிராந்தியத்தை சேர்ந்த மக்கள், பங்கு கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் செலுத்தும் ஆர்வம் மற்றும் அது தொடர்பில் அவர்கள் மத்தியில் காணப்படும் விழிப்புணர்வு குறித்து தமிழ்மிரர் வணிக பகுதிக்கு வழங்கிய நேர்காணலில்,
 
சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் உத்தியோகபூர்வமாக தமது வர்த்தக செயற்பாடுகளை ஆரம்பித்த கொழும்பு பங்குபரிவர்த்தனையின் யாழ்ப்பாணக் கிளையில், ஆரம்பத்தில் 2 பங்குத்தரகர்கள் இணைந்திருந்தனர். 2010ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மேலும் 4 பங்குத்தரகர்கள் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர். தற்போது பங்குப்பரிவர்த்தனை நிலையத்தின் யாழ். கிளையில் 4 முகவர்களும், வெளிவாரியாக 4 முகவர்களும் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆரம்ப காலத்தில் தமிழ் மொழி மூலம் பங்கு கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான ஆலோசனைகளை முதலீட்டாளர்களுக்கு தமிழ் மொழி மூலம் வழங்கும் ஆலோசகர்கள் மிகவும் குறைவாகவே காணப்பட்டனர். இது மிகவும் சவாலான நிலையாக அமைந்திருந்தது. ஆயினும் தற்போது இந்த நிலை மாறி R.I.A தகுதி பெற்ற அல்லது தற்கால சான்றிதழ் கொண்ட ஆலோசகர்கள் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எமது கிளைக்காரியாலயம் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் 5ஆவது கிளையாக அமைந்துள்ளது. எமது செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலப்பகுதியினுள் சுமார் 3000 மத்திய வைப்புத்திட்ட கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பங்குபரிவர்த்தனை நிலையம் ஆரம்பிக்கப்பட்ட காலத்துக்கும், தற்போதைய நிலைக்கும் இடையில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் காணப்படுகிறது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் மக்களுக்கு விழிப்புணர்வை பெற்றுக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் மிகவும் அரிதாக காணப்பட்டன. அத்துடன், பங்குப்பரிவர்த்தனை நிலையம் எமக்கு உகந்த பகுதி அல்ல எனும் தவறான அபிப்பிராயமும் காணப்பட்டது. ஆயினும், தினசரி ஊடகங்களின் மூலம் அவர்கள் பெற்றுக் கொண்ட விபரங்களின் மூலமாக தெளிவை பெற்றுள்ளனர். உதாரணமாக, ஒவ்வொரு தடவையும் புதிய பொது பங்கு வழங்கல் ஒன்று குறித்த அறிவித்தல் வரும் பொழுதும் பெருமளவானோர் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

மேலும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பிராந்திய ரீதியில், நகர மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றமை, மக்களுக்கு பரீட்சியமான நிறுவனங்களின் பங்குகள் பட்டியல்படுத்தப்பட்டதும் அவர்களின் ஆர்வம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் பங்குப்பரிவர்த்தனை நிலையத்தின் வெளியீடுகளான இணையத்தளம், பிரசுரங்கள் போன்றன மூன்று மொழிகளிலும் அமைந்துள்ளமையானது பொது மக்களுக்கு இலகுவான விதத்தில் விபரங்களை பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளமை மற்றும் பொது இடங்களில் இலவசமாக எமது வெளியீடுகளை கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றன மக்கள் மத்தியில் பங்குப்பரிவர்த்தனை செயற்பாடுகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க ஏதுவான காரணிகளாக அமைந்துள்ளன.

2012ஆம் ஆண்டில் கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நிலையத்தின் யாழ்ப்பாணக் கிளையின் மூலம் பல்வேறு விதமாக விழிப்புணர்வு திட்டங்கள் வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. வருடாந்தம் மொத்தமாக 45 நிகழ்ச்சி திட்டங்கள் பங்குப்பரிவர்த்தனை மற்றும் பிணைகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் மூலம் இணைந்து முன்னெடுக்கப்படுகின்றன.

இதில் விசேடமாக 4 பகுதி செயலமர்வுகள் நிகழ்கால முதலீட்டாளர்களுக்கும், எதிர்காலத்தில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வமாக உள்ளவர்களுக்கும் பெரிதும் பயனளிப்பதாக அமைந்துள்ளன. இந்த செயலமர்வுகளில் ஆகக்குறைந்தது 35 பேர் வரை பங்குபற்றுவர். இவர்களுக்கு முறையான செயன்முறை விளக்கங்கள் வழங்கப்படுவதுடன், அவர்களால் தாங்கிக் கொள்ளக்கூடிய ஆகக்குறைந்த தொகையை முதலீடு செய்து, அதன் மூலம் செயன்முறை அனுபவத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய வசதியையும் நாம் ஏற்படுத்திக் கொடுக்கிறோம்.

இதன் மூலம், இவர்கள் தாம் சுயமாக செயற்பட்டு, பங்குப்பரிவர்த்தனை தொடர்பான அறிவை பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது.

அத்துடன், இந்த 4 பகுதி செயலமர்வுகளில் யாழ்ப்பாணத்திலிருந்து பங்கேற்றும் 90 வீதமானோரும் வவுனியாவிலிருந்து பங்கேற்றும் 80 வீதமானோரும் மத்திய வைப்புத்திட்டத்தில் கணக்கொன்றை ஆரம்பிப்பதன் மூலம் பங்கு கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது.

2013ஆம் ஆண்டை பொறுத்தமட்டில் எமது கிளையை மேலும் வசதிகள் படைத்த புதிய இடத்துக்கு இடம்மாற்றுவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்ட வண்ணமுள்ளோம். பெருமளவில் எதிர்வரும் பெப்ரவரி அல்லது மார்ச் மாதமளவில் புதிய இடத்துக்கு இடம்மாறுவதற்கான சூழ்நிலை காணப்படுகிறது. இந்த புதிய காரியாலயத்தில் 11 முகவர்கள் மற்றும் பார்வையாளர்கள் கூடம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கு பிராந்தியங்களை சேர்ந்த பொதுமக்களை பொறுத்தமட்டில் பாரம்பரிய பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் அதிகளவு ஈடுபாடு காணப்படுகிறது. நவீன நிதி திட்டங்களில் அவர்களின் ஈடுபாடு குறைவானதாகவே அமைந்துள்ளது. இவர்கள் பெரும்பாலும் நிலையான வைப்புக் கணக்குகளில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். பின்னர் தங்கத்தில் முதலிடுகின்றனர். பின்னர் மூன்றாம் அல்லது நான்காம் நிலையில் தான் பங்குப்பரிவர்த்தனையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றனர்.

இவர்கள் மத்தியில் பங்கு பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக தெளிவுபடுத்தல்களை வழங்கும் வகையில் ஊடகங்களின் செயற்பாடுகள் மிகவும் அர்ப்பணிப்பாக காணப்படுகிறது. ஆயினும், சில சந்தர்ப்பங்களில் நேரடியாக மொழிபெயர்ப்புகளை மேற்கொண்டு மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தாமல், சந்தை நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட நபரொருவருடன் தொடர்பை ஏற்படுத்தி தெளிவுபடுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிடுவது சிறந்ததாக அமைந்திருக்கும். மேலும், தொடர்ச்சியாக மக்களை அறிவுறுத்தும் வகையில் அறிக்கைகளை ஊடகங்கள் வெளியிட முன்வர வேண்டும்.

2013ஆம் ஆண்டில் பொது மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு செயற்திட்டங்களை முன்னெடுக்க நாம் திட்டமிட்டுள்ளோம். இதில், க.பொ.த உயர்தரம் பயிலும் மாணவர்களுக்கென விசேடமாக அமைந்த செயலமர்வுகள் ஜனவரி மாதம் முதல் பாடசாலை மட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளன.

2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கம்பனிகளுக்குரிய அனுகூலங்கள் குறித்த விபரங்களுக்கு ஏற்ற விதத்தில் எமது செயலமர்வு திட்டங்கள் அமையவுள்ளன. அத்துடன் முதலீட்டாளர் தின நிகழ்வுகள் 2013ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் யாழ்ப்பாணத்திலும், இரண்டாம் காலாண்டில் வவுனியாவிலும், மூன்றாம் காலாண்டில் கிளிநொச்சியிலும், நான்காம் காலாண்டில் நெல்லியடியிலும் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் கடந்த ஆண்டு செயலமர்வுகளில் பங்குபற்றியவர்களுக்கென இரண்டாம் கட்ட செயலமர்வுகளையும் தொடர்ச்சி நடவடிக்கையாக 2013இல் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் பொதுமக்களுக்கு 4 பகுதி செயலமர்வுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்கவுள்ளோம்.

அத்துடன் நிலையான வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய கடன் பத்திரங்கள் வழங்கல்கள் குறித்த அறிவையும் வழங்க நாம் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

கொழும்பு பங்குச்சந்தையின் கிளைகள் யாழ்ப்பாணக் கிளைக்கு மேலதிகமாக கண்டி, நீர்கொழும்பு, மாத்தறை மற்றும் குருநாகலை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X