2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் பெருந்தோட்டத்துறை

A.P.Mathan   / 2013 ஜூலை 02 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சேகர்
 
இலங்கையின் பொருளாதாரத்தில் காலாகாலமாக முக்கிய பங்காற்றி வரும் பெருந்தோட்டத்துறையின் தொடர்ச்சியான நிலையான செயற்பாட்டுக்கு அவசியமான பங்களிப்பை இந்த துறையுடன் சார்ந்த அனைத்து தரப்பினரும் வழங்க வேண்டியது அவசியமான தேவையாக அமைந்துள்ளது.
 
பெருந்தோட்ட ஊழியர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் அமுலுக்கு வரும் வகையில் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் கொழும்பில் ஒன்று, ஹட்டனில் ஒன்றென இரண்டு ஊடகவியலாளர் செயலமர்வுகளை நடத்தி, இவற்றில் சம்பள அதிகரிப்பை தொடர்ந்து ஏற்பட்டுள்ள உற்பத்தி செலவு அதிகரிப்பு தொடர்பாகவும், இதனை தொடர்ச்சியாக கட்டுப்படுத்தி பேண தாம் அனைத்து தரப்பினரிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன போன்ற விடயங்களை தெளிவுபடுத்தியிருந்தது.
 
இதற்கமைவாக சர்வதேச சந்தையில் இலங்கை தேயிலையின் விலை குறைவடைந்து செல்வதை அண்மையில் அவதானிக்க முடிந்தது. இலங்கைக்கு போட்டிகரமாக திகழும் நாடுகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் தேயிலைக்கான உற்பத்தி இலங்கையின் தேயிலை உற்பத்தி செலவை விட மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. அண்மையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கியிருந்த சம்பள அதிகரிப்பின் காரணமாக, ஒரு கிலோ தேயிலை உற்பத்திக்கான செலவு 40 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது. சம்பள அதிகரிப்புக்கு முன்னர் ஒரு கிலோ தேயிலையின் உற்பத்தி செலவு 390 – 400 ரூபாவாக அமைந்திருந்தது. ஆயினும் தற்போது இது 430 – 440 ரூபா வரை அதிகரித்துள்ளது. இது பெருந்தோட்ட கம்பனிகளுக்கு மிகவும் சவாலை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

 
இந்த தொழிற்துறையை தொடர்ந்தும் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் கொண்டு நடத்துவதற்கு, தொழிற்சங்கங்களிடமிருந்தும், தொழிலாளர்களிடமிருந்தும் தாம் பூரண ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்த பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம், நாளொன்றுக்கு தொழிலாளி ஒருவர் பறிக்கும் கொழுந்தின் அளவை சுமார் 2 முதல் 3 கிலோவினால் அதிகரிப்பாராயின், அதன் மூலம் உற்பத்தித் திறன் அதிகரிக்கும். இதன் காரணமாக உற்பத்தி செலவு ஓரளவு குறைவடையும் எனவும், தாம் இதை தான் தொழிலாளர்களிடமிருந்து பெருமளவில் எதிர்பார்ப்பதாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்திருந்தது.
 
தேயிலை ஏல விற்பனையை பொறுத்தமட்டில் தற்போது ஒரு கிலோ உயர்நில தேயிலையின் விலை 400 ரூபாவாக அமைந்துள்ளது. எனவே பெருமளவு பெருந்தோட்ட கம்பனிகள் மாற்று பயிர்ச்செய்கைகளின் மூலமே தேயிலைத்துறையையும் பராமரித்து வருகின்றன. தேயிலை உற்பத்திக்கு மேலதிகமாக பெருந்தோட்டத்துறையில் தொழிலாளர்களின் குடும்பத்துக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் கம்பனிகள் தமது பங்களிப்பை வழங்கி வருகின்றன. இந்த துறையின் தொடர்ச்சியான செயற்பாட்டுக்கு ஒவ்வொரு தொழிலாளியும் அர்ப்பணிப்புடன் செயற்பட முன்வர வேண்டும் என பெருந்தோட்டக் கம்பனிகள் எதிர்பார்க்கின்றன.
 
பெருந்தோட்டங்களில் கம்பனிகள் வணிக நோக்கத்திற்காக பயிரிடும் மரங்களை தறிப்பதற்கு தற்போது சட்ட விதிமுறைகள் இறுக்கமாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, கம்பனிகள் எரிபொருள் தேவைக்காக செலவிடும் தொகை அதிகரித்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி, குறித்த மரங்களை தறிப்பதற்கான விதிமுறைகளை இலகுவாக்க வேண்டும். அத்துடன், இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையை சந்தைப்படுத்த முறையான நடவடிக்கையை முன்னெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும். மரபு ரீதியான நாடுகளை தேயிலை ஏற்றுமதிக்காக தங்கியிராமல், புதிய நாடுகளை அணுகி, அவற்றில் காணப்படும் சந்தை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் தேயிலை உற்பத்தி துறையில் காணப்படும் பெருமளவு சுமையை குறைக்க முடியும். 

 
பெருந்தோட்டங்களில் தற்போது காணப்படும் பெருமளவான தேயிலைச்செடிகள் சுமார் 60 ஆண்டுகள் பழமையானவை. கம்பனிகள் 1992ஆம் ஆண்டு தேயிலைப் பெருந்தோட்டங்களை பொறுப்பேற்றது முதல் இதுவரையில் சுமார் 1/3 தேயிலைச்செடிகளை மாற்றீடு செய்துள்ளன. ஆயினும் இந்த துறையில் தேயிலைமரங்கள் மீள்செய்கை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது என்பதை கம்பனிகள் நன்கு அறிந்து வைத்துள்ளன. எனினும் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு பெருமளவு ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். அத்துடன், பெருமளவு நிதித் தொகையும் தேவைப்படுகின்றது. இது ஒரு சவால் நிறைந்த சூழ்நிலையாகும். அரசின் மூலம் சகாய அடிப்படையில் கடன் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படுமாயின் தேயிலை மரங்களின் மீள் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள இலகுவாக அமையும் என்பது பெருந்தோட்டக் கம்பனிகளின் கருத்தாக அமைந்துள்ளது.
 
கடந்த சில மாதங்களில் பெருந்தோட்டத்துறையை பொறுத்தமட்டில் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக பல பயிர்ச் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ள அனர்த்தங்களின் காரணமாக தேயிலை தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல தேயிலை மரங்களும் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்றுள்ளன. மேலும், தொழிலாளர்களும் தேயிலை கொழுந்து பறிப்பதில் பெருமளவு சிரமங்களை எதிர்நோக்கி வருவதை அவதானிக்க முடிந்தது. 
 
கொழுந்து இல்லாத காலப்பகுதியில் தேயிலை கொழுந்து மேலதிகமாக பறிக்கச் சொல்வது என்பது முறையற்ற விடயமாகும். பெருந்தோட்ட கம்பனிகள் இவ்வாறு இரண்டு அல்லது மூன்று கிலோ தேயிலை கொழுந்தை நாளொன்றுக்கு அதிகமாக பறிக்கச் சொல்வது தேயிலை கொழுந்து பரந்தளவில் காணப்படும் நாட்களிலாகும். இவ்வாறு அதிகளவு கொழுந்து அதிகளவு காணப்படும் நாட்களில் தொழிலாளர்களுக்கும் மேலதிக வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பாக இது அமைந்துள்ளது.

 
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தேயிலை உற்பத்தி செலவு அதிகளவில் காணப்படுகிறது. தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தின் அளவும் பெருமளவில் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக இந்தியாவின் அசாம் மாநிலத்தில் தேயிலை உற்பத்திக்காக செலவிடப்படும் தொழிலாளர் சம்பளம் 1.76 அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளது. இது இலங்கையில் 4.90 அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளது. இது சுமார் 3 மடங்கு அதிகரிப்பாகும். கென்யா மற்றும் தென்னிந்தியாவுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகரிப்பாக அமைந்துள்ளது. 
 
பாரம்பரிய முறைக்கமைய தொழிலாளர்களுக்கான சம்பள கொடுப்பனவு தொடர்பாக கூட்டுபேரம் பேசல் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய நவீன கால கட்டத்தில் இது போன்றதொரு திட்டம் எவ்வளவு பொருத்தமானதாக அமைந்துள்ளது என்பது கேள்விக்குறிய விடயமாக அமைந்துள்ளது. ஏனெனில் எந்தவொரு வர்த்தக நடவடிக்கையை எடுத்துக் கொண்டாலும், ஊழியர் ஒருவர் தாம் செய்யும் வேலையின் அளவு, விடுமுறை மேலதிக கொடுப்பனவு போன்ற சகல விடயங்களையும் உள்ளடங்கிய உடன்படிக்கையில் தாமே குறித்த நிறுவனத்துடன் கைச்சாத்திட்டு, பெரும்பாலும் அதற்கேற்ற வகையில் பணியாற்றுவதுடன், சில சந்தர்ப்பங்களில் குறித்து உடன்படிக்கையை மீறும் வகையில் வேலைகள் வழங்கப்படும் சந்தர்ப்பங்களில் வேறு வழியின்றி அவற்றை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும், சந்தர்ப்பம் உள்ளவர்கள் வேறு வேலையை தேடி மாறிச் செல்வார்கள்.

 
ஆயினும் இந்த பெருந்தோட்டத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மட்டும் தமது வேலை குறித்த உடன்படிக்கைகளை தொழிற்சங்கங்களின் ஊடாக மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்த நிலை அனைத்து பெருந்தோட்ட ஊழியர்களுக்கும் பெருமளவில் பொதுவானதாகவே அமைந்துள்ளது. இவ்வாறு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சார்பாக கைச்சாத்திடப்படும் கூட்டுடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து எத்தனை தொழிலாளர்கள் முழுமையாக அறிந்திருப்பார்கள் என்பது கேள்விக்குறியே.  
 
எனவே இந்த பாரம்பரிய முறைக்கு மாறாக புதிய சம்பள கொடுப்பனவு, தொழில் நிபந்தனைகள் மற்றும் ஊழியர்கள் சேமலாப விடயங்கள் குறித்த விபரங்கள் உள்ளடங்கிய பாரம்பரிய கூட்டுடன்படிக்கை முறையில் நவீன காலத்துக்கேற்ப மாற்றம் கொண்டு வரப்படவேண்டியதன் அவசியம் நிலவுகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .