2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தொலைத்தொடர்பாடல் சேவைகள் நாளாந்தம் அபிவிருத்தியடைகின்றன: சஹாரின் ஹமீன்

A.P.Mathan   / 2013 ஜூலை 02 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்
 
இலங்கையின் தொலைத்தொடர்பாடல் சேவைகளை பொறுத்தமட்டில் நாளாந்தம் அபிவிருத்தியடைந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய விடயம் இந்த துறையின் மூலம் இலங்கையர்களுக்கு கிடைத்த வண்ணமுள்ளது. ஆயினும் இந்த புதிய அறிமுகங்களுக்காக தம்மை பழக்கப்படுத்திக் கொள்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு சற்று காலம் தேவைப்படுகிறது. இலங்கையின் தொலைத்தொடர்பாடல் துறையின் வளர்ச்சி மற்றும் இந்த வளர்ச்சியில் ஹட்ச் நிறுவனம் ஆற்றி வரும் பங்களிப்பு குறித்து நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் தொடர்பாடல் முகாமையாளர் சஹாரின் ஹமீன் - தமிழ்மிரரின் “உழைப்பாளிகள்” பிரிவுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் முழு விபரம் வருமாறு.
 
ஹட்சிசன் டெலிகொமியுனிகேஷன்ஸ் லங்கா பிரைவேற் லிமிடெட் நிறுவனம் இலங்கையில் முதன் முறையாக தனது வர்த்தக நடவடிக்கைகளை 2004ஆம் ஆண்டு ஜிஎஸ்எம் வலையமைப்பின் அறிமுகத்துடன் ஆரம்பித்திருந்தது. ஆரம்பத்திலிருந்து சுமார் 7 ஆண்டுகள் வரை முற்கொடுப்பனவு இணைப்புகளை வழங்குவதில் மட்டும் தனது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. பின்னர் படிப்படியாக சந்தை நிலைகளை ஆராய்ந்து அதற்கேற்ற வகையில் பிற்கொடுப்பனவு மற்றும் 3ஜி வலையமைப்பு போன்றவற்றையும் இலங்கையில் அறிமுகம் செய்திருந்தது.
 
இலங்கையை பொறுத்தமட்டில் ஸ்மார்ட்போன்களின் பாவனை அதிகரித்த வண்ணமுள்ளது. பாரம்பரிய தொலைபேசி முறையிலிருந்து மாற்றம் பெற்று, புதிய சர்வாம்ச தொடர்பாடல் சாதனமாக ஸ்மார்ட்போன்கள் வேகமாக மக்கள் மத்தியில் ஊடுருவி வருகின்றன. சகாய விலையில் ஸ்மார்ட்போன்கள் இலங்கையில் கிடைப்பதால் மக்கள் அதிகளவு இந்த வகையான போன்களுக்கு மாறி வருகின்றனர். தம்மையும் பழக்கப்படுத்தி வருகின்றனர். ஆயினும் பாரம்பரிய கையடக்க தொலைபேசி பாவனையாளர்களும் முற்றுமுழுதாக இல்லாமல் போகவில்லை. இந்தவகை கையடக்க தொலைபேசிகளை பாவிக்கும் வாடிக்கையாளர்களும் இலங்கையில் இன்னமும் உள்ளனர். 
 
இவ்வாறு இந்த புதிய ஸ்மார்ட்போன் மற்றும் பழமையான 2ஜி வலையமைப்புக்குரிய தொலைபேசிகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பொருந்தக்கூடிய வகையில் நாம் புதிய ஒரு முற்றிலும் இலவசமான சேவையை அறிமுகம் செய்ய தீர்மானித்தோம். இதற்காக Nimbuzz எனும் ஆப்ளிகேஷன் வடிவமைப்பு நிறுவனத்துடன் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளோம். இந்த உடன்படிக்கைக்கு அமைய, ஹட்ச் வாடிக்கையாளர்கள் 6 மாத காலப்பகுதிக்கு தமது ஹட்ச் இணைப்பை கொண்ட கையடக்க தொலைபேசியின் மூலம் இலவசமாக Nimbuzz ஆப்ளிகேஷன் சேவைகளை அனுபவிக்க முடியும். இந்த ஆப்ளிகேஷன் பாவனையின்போது எழுத்துரு மூலம் மேற்கொள்ளப்படும் தொடர்பாடல்கள் எதற்குமான டேடா கட்டணம் அறவிடப்படமாட்டாது. இது முற்றிலும் இலவசமாகும் என்றார். 

 
Nimbuzz ஆப்ளிகேஷனின் செயற்பாடுகள் குறித்து ஹட்ச் நிறுவனத்தின் டேடா சேவைகள் பிரிவின் உதவி முகாமையாளர் ஜிஹான் மன்னன் விபரிக்கையில்...
 
ஆப்ளிகேஷன் சந்தையில் சமூக வலையமைப்பு இணையப்பக்கங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் சங்கமிக்கச்செய்யும் வகையில் அமைந்த ஓர் ஆப்ளிகேஷனாக இந்த Nimbuzz ஆப்ளிகேஷன் அமைந்துள்ளது. 
 
இதன் மூலம் 3ஜி வலையமைப்பின் வாடிக்கையாளர்கள் தமது தொடர்பாடல்களை மேற்கொள்ள முடிவதுடன், 2ஜி வலையமைப்பை சேர்ந்த வாடிக்கையாளர்களும் இந்த ஆப்ளிகேஷனின் சேவையை அனுபவிக்கக் கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். 
 
உதாரணமாக, ஒரு குடும்பத்தை எடுத்துக் கொண்டால் சுமார் 60 வயது நிரம்பிய தகப்பனார் ஒருவர் தனது மகள் அல்லது மகனுடன் எஸ்எம்எஸ் மூலம் நாளாந்தம் தொடர்பாடல்களை மேற்கொள்ள பழக்கப்பட்டிருக்கிறார் எனக் கொள்வோம். இதற்காக இவர் இந்த குறுந்தகவல்களுக்காக நாளாந்தம் 10ரூபா எனும் தொகை செலவிடுகிறார் எனில், இந்த Nimbuzz ஆப்ளிகேஷன் மூலம் இதே தொடர்பாடல்களை இலவசமாக மேற்கொள்ள முடியும். 
 
பாவனையாளர்களுக்கு மிகவும் இலகுவான முறையில் பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த Nimbuzz ஆப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
 
ஆசிய பிராந்திய நாடுகளில் இந்த Nimbuzz ஆப்ளிகேஷன் பாவனை அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. ஆப்ளிகேஷன் சந்தையில் காணப்படும் இது போன்ற ஏனைய ஆப்ளிகேஷன்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள முடிகின்ற போதிலும், அவற்றை உபயோகிக்கும் போது ஏற்படும் டேடா பாவனைக்கான கட்டணம் வாடிக்கையாளர்களிடமிருந்து அறவிடப்படுகிறது. பலர் இது குறித்து அறிந்திருப்பதில்லை. ஆயினும் ஹட்ச் வலையமைப்பினூடாக இந்த Nimbuzz ஆப்ளிகேஷன் ஊடான எழுத்துரு மூலமாக தொடர்பாடல்கள் எதற்கும் டேடா பாவனைக்கான கட்டணம் 2013 ஜூன் மாதம் 17ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 17ஆம் திகதி எனும் 6 மாத காலப்பகுதிக்கு முற்றிலும் இலவசமானதாகவே அமைந்திருக்கும்.
 
இலங்கையை பொறுத்தமட்டில் நாளாந்தம் 45,000 வாடிக்கையாளர்கள் இந்த ஆப்ளிகேஷனை பயன்படுத்தி வருகின்றனர். இதில் சுமார் 3000 வாடிக்கையாளர்கள் ஹட்ச் வலையமைப்பை சேர்ந்தவர்கள். நாளாந்தம் சுமார் 150 புதிய வாடிக்கையாளர்கள் எமது வலையமைப்பினூடாக இந்த ஆப்ளிகேஷனுக்கு தம்மை பதிவு செய்கின்றனர் என்றார். 

 
ஹட்ச் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் தொடர்பாடல் முகாமையாளர் சஹாரின் ஹமீன் தொடர்ந்து குறிப்பிடுகையில், எமது வலையமைப்பை சேர்ந்த 2ஜி வாடிக்கையாளர்களையும், 3ஜி வாடிக்கையாளர்களையும் இணைத்து எம்மால் வழங்கக்கூடிய ஒரு சேவை குறித்து நாம் ஆய்வுகளை மேற்கொண்ட போது, இந்த Nimbuzz ஆப்ளிகேஷன் குறித்த யோசனை எமக்கு தோன்றியது. இலங்கை சந்தையில் Nimbuzz ஆப்ளிகேஷன் நிறுவனம் தமது விஸ்தரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆர்வமாகவுள்ளது.
 
எமது தாய் நிறுவனமான ஹட்சிசன் வொம்பா நிறுவனம், நியுயோர்க் மற்றும் ஹொங்கொங் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட ஃபோர்ச்சூன் 500 நிறுவனமாகும். இதன் காரணமாக எமது நிறுவனமும் ஃபோர்ச்சூன் 500 கம்பனி எனும் பெருமையை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு எமது தாய் கம்பனியிலிருந்து எமக்கு கிடைத்த பெருமளவான முதலீட்டின் மூலம் இலங்கையில் 3ஜி வலையமைப்பை எம்மால் வெற்றிகரமாக அறிமுகம் செய்ய முடிந்தது. இலங்கையில் இந்த வலையமைப்பை நாமே இறுதியாக அறிமுகம் செய்திருந்தோம். இதன் காரணமாக எமக்கு சந்தையில் ஏனைய வலையமைப்பை சேர்ந்த வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு அறிந்து கொள்ள முடிந்தது. 
 
இதனை தொடர்ந்தே எமது 3ஜி புரோட்பாண்ட் இணைப்புகளுக்கான நாமத்தை நாம் உங்கள் இணைய இணைப்பு தங்குதடையை எதிர்நோக்குகிறதா? (Are you stuck with Internet?) எனும் தொனிப்பொருளில் நிலையான தங்கு தடையின்றிய இணைய சேவைகளை வழங்கும் வகையில் எமது புரோட்பாண்ட் சேவைகளை அனைத்து மாவட்டங்களையும் வலையமைப்பில் உள்ளடக்கும் வகையில் நாம் தற்போது விஸ்தரித்துள்ளோம். இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய 3ஜி வலையமைப்பை நாம் கொண்டுள்ளோம். சுமார் 1000 3ஜி வலையமைப்பு பகுதிகளை நாம் நிறுவியுள்ளோம். 
 
அனைத்து வலையமைப்பு சேவைகளையும் நாம் அறிமுகம் செய்தமையை தொடர்ந்து, தற்போது நாம் பரிபூரண தொலைத்தொடர்பாடல் சேவைகளை வழங்கும் நிறுவனமாக இலங்கையில் திகழ்கிறோம். 
 
இலங்கை வாடிக்கையாளர்களை பொறுத்தமட்டில் ஒவ்வொரு ரூபா குறித்தும் அவர்கள் அதிகளவு அக்கறை கொண்டவர்களாக திகழ்கின்றனர். தாம் செலுத்தும் பணத்துக்கு உயர்ந்த சேவைகளை தங்கு தடையின்றி அனுபவிக்க எதிர்பார்த்தவர்களாக உள்ளனர். இளைஞர்கள் மத்தியில் புதிய தொழில்நுட்பம் மற்றும் ஒவ்வொரு வலையமைப்பின் மூலமும் அறிமுகம் செய்யப்படும் புதிய விடயங்கள் போன்றன பெருமளவு வரவேற்பை பெறுகின்றன. ஆயினும் வயது முதிர்ந்தவர்கள் மத்தியில் இந்த புதிய அம்சங்கள் சற்று மெதுவாகவே வரவேற்பை பெறுகின்றன. ஏனெனில் அவர்கள் குறித்த ஒரு முறைக்கு பழக்கப்பட்டவர்களாக அமைந்துள்ளனர். தம்மை புதிய பழக்கத்துக்கு மாற்றிக்கொள்ள அதிகளவு ஆர்வம் செலுத்துவதில்லை. அத்துடன் அவர்களுக்கு அதற்கான நேரமும் போதியளவு இருப்பதில்லை.
 
இலங்கையின் தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மத்தியஸ்தமாக தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறது. தொலைத்தொடர்பாடல் சேவைகளை வழங்கும் நிறுவனம் எனும் வகையில் நாம் தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து திருப்தியாக உள்ளோம். அவர்கள் ஒரு சேவை வழங்குநருக்கு சாதகமான முடிவுகளை மேற்கொள்ளும்போது, அதற்கு எதிராக எமது மாற்றுக் கருத்துக்களை தெரிவிப்பதற்கான வாய்ப்பு எமக்கு வழங்கப்படுகிறது. 
 
எமது வாடிக்கையாளர்களின் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் தொடர்ந்தும் நிவர்த்தி செய்வதற்காக Nimbuzz ஆப்ளிகேஷன் உடனான உடன்படிக்கை போன்ற பல புதிய உடன்படிக்கைகளை மேற்கொள்ள ஆர்வமாக உள்ளதுடன், இலங்கையின் தொலைத்தொடர்பாடல் துறையின் வளர்ச்சிக்கு எம்மாலான பங்களிப்பை வழங்க நாம் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறோம் எனவும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .