2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கான்ஸ் விருதுகள் வழங்கலில் தங்கம் வென்ற இலங்கையர்கள்

A.P.Mathan   / 2013 ஜூலை 20 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்

எந்தவொரு வியாபாரத்தை எடுத்துக் கொண்டாலும், விளம்பரம் மற்றும் பிரசார நடவடிக்கைகள் என்பன முறையாக திட்டமிடப்பட்டு மக்களை சென்றடையும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இதன்போது விளம்பர திட்டங்கள் குறித்த நிறுவனங்களின் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்பட்டதாக அமைந்திருக்க வேண்டியதுடன், சிறந்த தொடர்பாடல் தொனிப்பொருளிலும், சிறந்த சிந்தனையின் வெளிப்பாடாகவும் அமைந்திருக்க வேண்டும். 
 
இந்த விளம்பரங்களை திட்டமிடவென ஒவ்வொரு நிறுவனங்களிலும் வெவ்வேறு பிரிவுகள் காணப்படுகின்றன. அவற்றில் நாளாந்தம் பலர் தமது சிந்தனைகளை வெளிப்படுத்தி புதிய விளம்பர உத்திகளை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் சேர்த்து வருகின்றனர். இவ்வாறு தயாரிக்கப்படும் சிறந்த விளம்பரங்களுக்கு சர்வதேச ரீதியில் விருதுகள் வழங்குவதற்கென பல விருது வழங்கும் நிகழ்வுகள் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
 
இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வுகளில் ஒன்றாக கான்ஸ் (Cannes) விருதுகள் வழங்கும் நிகழ்வு அமைந்துள்ளது. 2013ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் வைபவம் ஜூன் மாதம் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை பிரான்ஸ் நாட்டின் கான்ஸ் நகரில் இடம்பெற்றிருந்தது.
 
இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வின் நோக்கம், சிறந்த தொடர்பாடலில் சிறந்த சிந்தனைத்திறனை பயன்படுத்தியிருப்பதை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த விருதுகளை கான்ஸ் லயன்ஸ் விருதுகள் என்றும் அழைப்பர். 1954ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு, இம்முறை தொடர்ச்சியான 60ஆவது ஆண்டாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச ரீதியில் விளம்பரத்துறையை சேர்ந்தவர்கள் மத்தியில் இந்த விருது தொடர்பாடல் துறையில் பிரயோகிக்கப்படும் சிந்தனைத்திறனுக்கான கொண்டாட்ட நிகழ்வாக அமைந்துள்ளது. 
 
இந்த ஆண்டு இடம்பெற்ற நிகழ்வின் போது இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி எடிசலாட் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவில் பணியாற்றிவரும் இரு இளம் புத்தாக்க சிந்தனையாளர்களுக்கு தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும். 
 
ஹிருணி சர்மிளா மென்டிஸ் மற்றும் லக்சித வயன் விஜேசிங்க ஆகியோரின் சிந்தனைதிறன் வெளிப்பாட்டுக்குரிய கௌரவிப்பாக இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.
 
இம்முறை விருதுகள் வழங்கும் நிகழ்வில் 23 நாடுகள் விருதுகளுக்காக விண்ணப்பித்திருந்தன. அவையாவன ஆர்ஜன்டீனா, அவுஸ்திரேலியா, ஒஸ்திரியா, பெலாரஸ், பிரேசில், கனடா, சீனா, கொஸ்டா ரிகா, டென்மார்க், டொமினிகன் குடியரசு, பின்லாந்து, கௌதமாலா, ஜப்பான், நோர்வே, பிலிப்பைன்ஸ், போலாந்து, போர்த்துக்கல், ருமேனியா, ரஷ்யா, ஸ்பெயின், இலங்கை, துருக்கி மற்றும் வியட்நாம் போன்றவாகும். 
 
இவர்கள் எவ்வாறு இந்த விருதுகளுக்கு தெரிவாகினர், மற்றும் இந்த விருதுகளின் மூலம் இவர்களுக்கு கிடைத்த அனுபவம் குறித்து தமிழ்மிரரின் வணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் பகுதியின் மூலம் மேற்கொண்டிருந்த நேர்காணலின் விபரம் வருமாறு...
 
ஹிருணி சர்மிளா மென்டிஸ் - ஊடக மற்றும் விளம்பர பிரிவின் உதவி முகாமையாளர், எடிசலாட்
நான் 2007ஆம் ஆண்டு எடிசலாட் நிறுவனத்துடன் இணைந்து கொண்டேன். அப்போது டீகோ எனும் வர்த்தக நாமத்தில் இந்நிறுவனம் இயங்கியது. நிறுவனத்துடன் இணைந்து கொண்டது முதல் எனக்கு சந்தைப்படுத்தல் ஆய்வுகள், ஊடகங்களுக்கான விளம்பரங்கள் நிர்ணயித்தல் போன்ற விடயங்களில் அதிகளவு ஈடுபட்டிருந்தேன். இந்த துறையில் எனக்கு சுமார் 7 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் உள்ளது.
 
கான்ஸ் இளம் சந்தைப்படுத்தல் நிபுணர்களுக்கான தங்க விருதுக்கு நாம் தெரிவாகியுள்ளோம் என்பது குறித்து நான் முதன் முதலில் கேள்விப்பட்ட போது மிகவும் மகிழச்சியடைந்தேன். நாம் தங்க விருதை வெற்றி கொள்வோம் என்பதை எதிர்பார்க்கவில்லை. நாம் இருவரும் இந்த போட்டி மிகவும் கடினமானதாக அமைந்திருக்கும் என்பதை நன்கு அறிந்திருந்தோம். அத்துடன் இதுவரையில் இலங்கைக்கு தங்க விருதொன்று கிடைத்ததில்லை. எனவே நாம் இந்த தங்க விருதை வென்றமையையிட்டு பெருமையடைகிறோம். நாம் இருவரும் வேறு வேறுதுறைகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக திகழ்கிறோம். இதன் காரணமாக எமக்கு இந்த விருதை வெற்றி கொள்ள முடிந்தது.
 
இந்த திட்டத்தை ஆரம்பிக்கும் முன்னர் எமக்கு இந்த விருது கிடைக்கும் என்று நான் எண்ணியிருக்கவேயில்லை. இத்துடன் எமது முயற்சியை நாம் நிறுத்தப்போவதில்லை. எம் போன்ற இளம் சந்தைப்படுத்தல் நிபுணர்களை இது போன்ற விருதுகள் வழங்கும் நிகழ்வுகளில் பங்குபற்றும் வகையில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம். நாம் ஏற்கனவே இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகத்துடன் இந்த விருதுகள் குறித்து பிரபல்யப்படுத்தும் நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். 
 
சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது அவற்றை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலமாகவே உயர்ந்த நிலையை சென்றடைய முடியும். அச்சப்படத் தேவையில்லை. தற்போது இலங்கைக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. எனவே இலங்கையர்களால் இன்னும் தங்கங்களை வெல்ல முடியும். 
 
எமது இந்த முயற்சிக்கு இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகத்தின் ஊக்கம் பெருமளவு பக்கபலமாக அமைந்திருந்தது. எமது பயணச்செலவில் அரைப்பங்கை கல்வியகமே பொறுப்பேற்றிருந்தது.
 
இலங்கையை பொறுத்தமட்டில் தற்போது காணப்படும் விளம்பர பிரசார நடவடிக்கைகள் ஓரளவு சிறப்பானதாக அமைந்துள்ளது. எமது நாடு ஒரு சிறிய நாடு. எனவே எமது நாட்டவரின் ரசனைக்கேற்ப எமது விளம்பரங்கள் அமைந்துள்ளன. அத்துடன், பாரியளவு நிதி முதலீட்டில் பிரமாண்டமான விளம்பர பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய வாய்ப்பு எமக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
 
இதுவரையில் நான் எய்திய மிகச்சிறந்த நிலையாக இந்த விருதுக்கு உரிமையாளராக அமைந்திருப்பது காணப்படுகிறது. இலங்கையை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லும் பாக்கியம் எனக்கு கிடைத்தமையையிட்டு ஓர் இலங்கையர் எனும் வகையில் மிகவும் பெருமையடைகிறேன் என்று கூறியிருந்தார்.
 
லக்சித வயன் விஜேசிங்க - ஊடக மற்றும் விளம்பர பிரிவின் உதவி முகாமையாளர், எடிசலாட்
எடிசலாட் நிறுவனத்துடன் நான் ஒரு பொறியியலாளராக இணைந்து கொண்டேன். சுமார் இரண்டு ஆண்டுகள் இந்த துறையில் பணியாற்றிய பின்னர் விற்பனை பிரிவில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது. அதன் பின்னர் சந்தைப்படுத்தல் பிரிவில் பிரவேசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மொத்தமாக இந்த துறையில் எனக்கு ஐந்து ஆண்டுகள் முன்அனுபவம் காணப்படுகிறது. 
 
இந்த விருதுக்கு நாம் தெரிவாகியுள்ளோம் என்பது குறித்து முதன் முறையாக கேள்விப்பட்ட போது, 'நாம் சாதித்துவிட்டோம்' என்ற உணர்வு எனக்குள் காணப்பட்டது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த விருதை வெல்ல முடிந்தமை மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் விடயமாக அமைந்துள்ளது. 
 
இந்த திட்டத்தை ஆரம்பிக்கும் முன்னர் எமக்கு விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எனக்குள் இருந்தது. ஆயினும் தங்க விருது கிடைக்கும் என நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. 
 
இந்த வருடம் நாம் விருதை வென்றுள்ளோம். அடுத்த ஆண்டு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த விருதுகளுக்கு செல்லும் அணியினருக்கு எம்மாலான சகல உதவிகளையும் வழங்க நாம் தயாராக இருக்கிறோம். இந்த விருதுகளுக்கு எம்மை தயார்ப்படுத்தியிருந்ததன் மூலம் எம்மால் பல விடயங்களை அறிந்துகொள்ள முடிந்தது. 
 
பெரிதாய் கனவு காணுங்கள், கிடைக்கும் சந்தர்ப்பங்களை நழுவ விடாதீர்கள், வாழ்க்கையில் எந்தவொரு விடயத்தை அடைய வேண்டுமானாலும் ஒரே நோக்கத்துடனான செயற்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
 
இது எமக்கு மட்டும் கிடைத்த விருது அல்ல. முழு நாட்டுக்குமே கிடைத்த விருது. எனவே இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த விருதை வெற்றி கொண்டமையானது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
 
இந்த ஆண்டுக்கான கான்ஸ் விருதுகள் வழங்கும் நிகழ்வில் இலங்கையை தொடர்ந்து டொமினிகன் குடியரசு மற்றும் கனடா ஆகிய நாடுகள் உயரிய விருதை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .