2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பால் விவகாரம்: பொதுமக்களை தவறான வழியில் வழிநடத்தும் பிரசாரங்கள்

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 21 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்
 
இலங்கையில் பால் மா பிரச்சினை தொடர்பான விவாதம் ஆரம்பமாவதற்கு முக்கிய பின்னணி காரணிகளாக உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மாக்களில் தங்கியிருப்பதை குறைத்துக் கொள்ளும் வகையில் அமைந்திருந்தது.
 
கடந்த ஆண்டிலிருந்தே இலங்கையின் நிதி அமைச்சு, பால் தயாரிப்புகளை இறக்குமதி செய்வதை குறைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் அந்நியச் செலாவணியை குறைத்துக் கொள்ள முடிவதுடன் உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்கும் வகையில் ஊக்குவிப்புகளையும் வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தது. இலங்கை மத்திய வங்கியின் தரவுகளுக்கு அமைவாக, கடந்த ஆண்டில் இலங்கை 79.4 மில்லியன் கிலோகிராம் பால் மாவை இறக்குமதி செய்வதற்காக 307 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டிருந்தது. இது 2011ஆம் ஆண்டில் 84 மில்லியன் கிலோ கிராம்களாக பதிவாகியிருந்ததுடன், இதற்காக 345 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டிருந்தது.
 
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், வெளிநாட்டு இறக்குமதியை குறைத்துக் கொள்வது தொடர்பான விவாதம் பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், அண்மைக் காலங்களில் வெளியாகியிருந்த பால் மா வகைகளில் நச்சுப்பதார்த்தங்கள் கலந்திருக்கும் விவகாரம் மிகவும் கவலையளிக்கும் விடயமாக அமைந்திருந்தது.

 
நியுசிலாந்தின் பொன்டெரா பால் மா தொகுதி வகைகளில் டிசிடி எனும் நச்சுப்பதார்த்தம் அடங்கியிருப்பது குறித்த அறிக்கைகள் வெளியானதை தொடர்ந்து இலங்கையர்களின் உள்ளெடுக்கும் பாலின் தூய்மை குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் முன்வர தொடங்கின.
 
இந்த விடயம் தற்போது முற்றிலும் முரணான, மாறுபட்ட ஒருவிதத்தில் சித்தரிக்கப்பட்டு, மக்களுக்கு பால் தமது அன்றாட உணவு வேளையில் முக்கியமற்ற ஓர் ஆகாரம் எனும் அளவுக்கு பேசப்படுகிறது. மக்கள் பாலில் உள்ள சத்துக்களை வேறு உணவுகளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். எனவே பால் மக்களின் உணவு வேளையில் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல எனும் அளவுக்கு அறிவுறுத்தல்கள் கடந்த வாரங்களில் வழங்கப்பட்டிருந்தன.
 
இந்த அறிவுறுத்தல்களை வழங்கிய குழுவினரில் முன்னணி அரச வைத்தியர்கள் உள்ளடங்கியிருந்தனர். கடந்த வாரம் புதன் கிழமை (14) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இவர்கள் இந்த கருத்தை முன்வைத்திருந்தனர். 
 
சுமார் அரை நூற்றாண்டு காலப்பகுதிக்கு மேலாக இலங்கையின் ஒவ்வொரு குடும்பத்திலும் பால் என்பது மிகவும் முக்கியமான உள்ளடக்கமாக அடங்கியுள்ளது. அது நகரமானாலும் சரி, கிராமப்புறம் ஆனாலும் சரி, பள்ளி செல்லும் மாணவர்கள் மத்தியில் கூட போசாக்கான பால் குவளை ஒன்று நாளாந்தம் அருந்துவது உடல் நலத்துக்கு சிறந்தது எனும் வகையிலேயே கல்வித் திட்டமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
 
இலங்கையர்கள் அனைவருக்குமான பால் விநியோகம் உள்நாட்டு தோட்டங்களில் வளர்க்கப்படும் பசுக்களில் இருந்தே பெறப்பட்டிருந்தன. இந்த முறைமை பல்தேசிய நிறுவனங்கள் இலங்கையில் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் வகையில் பின்தொடரப்பட்டிருந்தது.

 
1960களில் மற்றும் 1970ஆம் ஆண்டுகளில் இலங்கை தேசிய பால் சபை (மில்கோ) மூலம் விநியோகப்பட்ட திரவப் பால், நகரங்களில் மிகவும் பிரபல்யம் வாய்ந்ததாக திகழ்ந்தது (போத்தலில் அடைக்கப்பட்டு 3 தினங்கள் வரை பேணக்கூடியது). இவற்றை விற்பனை செய்ய பால் பார்கள் காணப்பட்டதுடன், வீடுகளுக்கு விநியோகிக்கும் முறைகளும் காணப்பட்டன. பள்ளி செல்லும் மாணவர்கள் மத்தியில் சொக்லேட் மற்றும் வெனிலா சுவையூட்டப்பட்ட பால் பிரபல்யம் பெற்றதாக திகழ்ந்தது. ஆனாலும் 1977ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட திறந்த பொருளாதார கொள்கை மூலமாக பல்தேசிய நிறுவனங்களின் மூலமாக இறக்குமதி செய்யப்படும் பால் மா வகைகள் மக்கள் மத்தியில் பிரபல்யம் செய்யப்பட்டது. தமது தோட்டத்திலிருக்கும் பசுக்களில் இருந்து பெறப்படும் பாலில் தங்கியிருந்த மக்களும் இந்த பால் மா கலாசாரத்துக்கு மாற்றப்பட்டனர். இதுவரை காணப்பட்ட பல் பார் வகைகள் தமது பிரபல்யத்தை இழக்கத் தொடங்கியதுடன், பல மூடுவிழாவையும் எதிர்நோக்கியிருந்தன.
 
இந்த காலத்திலிருந்து இலங்கை அரசாங்கமும், சத்துணவு வைத்திய ஆலோசகர்களும் பால் தயாரிப்புகளை போசாக்கான இன்றியமையாத ஆகார வேளையாக பிரபல்யப்படுத்தியிருந்தனர். பால் மாவாக இருக்கட்டும், திரவப் பாலாக இருக்கட்டும் இலங்கையர்கள் பாலில் அடங்கியுள்ள சத்துக்கள் குறித்து அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
 
மறுபுறம் இலங்கை குழந்தை நல மருத்துவர்களும், யுனிசெஃவ் சர்வதேச அமைப்பின் அதிகாரிகளும் குழந்தைகளுக்கு ஐந்து வயது வரை அல்லாவிடினும், இரண்டு வயது நிரம்பும் வரையிலேனும் தாய்ப்பால் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். அதே போல, ஒஸ்திரியோபொரோசிஸ் எனும் எலும்பு தேய்வடையும் நோய் நிலையை நிவர்த்தி செய்ய விசேடமான பால் வகையை பருகுவதன் மூலம் அந்த நிலையை தவிர்த்துக் கொள்ள முடியும் எனும் கருத்தை மருத்துவ நிபுணர்கள் மறுத்துள்ளனர். 
 
எவ்வாறெனினும், அண்மைக்காலமாக வெடித்துள்ள பால் விவகாரம், பல ஆண்டுகளாக பால் கட்டாயம் உணவு வேளையொன்றில் உள்ளடக்கப்பட வேண்டிய ஆகாரம் என வலியுறுத்தி வந்த தொழில் நிபுணத்துவம் வாய்ந்த சமுதாயம், திடீரென ”உங்கள் உணவு வேளையில் பால் அத்தியாவசியமற்றது” எனும் கருத்தை முன்வைத்திருப்பது மக்களை குழப்பும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு முன்னதாக, கடந்த திங்கட்கிழமை (12) இலங்கையில் உள்நாட்டு தொழில்முயற்சியாளர்கள் மூவர் இணைந்து சுதந்திர சதுக்கத்தில் திடீர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இறக்குமதி செய்யப்படும் பால் மா பாவனையை குறைத்து உள்நாட்டு தயாரிப்புகளை உள்ளெடுப்பதன் முக்கியத்துவம் குறித்து தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர். இந்த மூன்று தொழில்முயற்சியாளர்களும், இது வரையில் பால் தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த அனைத்து தரப்பினரிடமும் கேட்கப்படவேண்டிய ஒரு முக்கியமான கேள்வி, நீங்கள் உங்களின் நாளாந்த உணவு வேளையில் பால் (இறக்குமதி செய்யப்பட்டதாக இருக்கட்டும், அல்லது உள்நாட்டு உற்பத்தியாக இருக்கட்டும்) உணவை உள்ளெடுப்பதில்லையா? உங்கள் குழந்தைகளுக்கும், பிள்ளைகளுக்கும் பால் சேர்க்காமல் வெறுந்தேநீர் மற்றும் வெறும் கோப்பியை மட்டுமா கொடுத்து வளர்த்தீர்கள்? என்பதாகும். 
 
பொன்டெரா பிரச்சினையை ஒதுக்கி, பாலில் டிசிடி கலந்திருக்கும் பிரச்சினையை ஒதுக்கி, இந்த இறக்குமதி செய்யப்படும் பால் மா வகை தொடர்பான பிரச்சினையை ஒதுக்கி, சற்றே, இந்த வைத்திய நிபுணர்கள் எமது நாளாந்த உணவு வேளையில் பால் உள்ளெடுப்பது அவசியமற்றது எனும் கருத்தை முன்வைப்பது ஏன் என்பதை ஆராயும் போது, அதன் பின்னணியில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக சிந்திக்க வைக்கிறது.
 
உலகளாவிய ரீதியில் மக்கள் பாலை தமது உணவு வேளையுடன் உள்ளெடுக்கின்றனர். இலங்கையில் மாத்திரமே பால் உள்ளெடுக்கத் தேவையில்லை என உலகில் முதல் தடவையாக அறிவிக்கப்பட்டிருக்கும் போல எண்ணத் தோன்றுகிறது.
 
இதுபோன்ற முரணான, சிந்தனை மந்தத்தினால் வெளிவரும் கருத்துக்கள் மற்றும் அறிவுரைகளின் காரணமாக பாதிக்கப்படுவது எப்போதும் வறிய மக்களே. 
 
நாளாந்தம் இலங்கையர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு இன்னல்களுக்கு மத்தியில் இந்த விவகாரம், ஒவ்வொரு இலங்கையரும் உள்ளெடுக்கும் வெவ்வேறான உணவு வகைகளின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்ப ஆரம்பித்துள்ளது. 
 
பால் மா வகையை தொடர்ந்து, இந்த பிரச்சினை தற்போது சீஸ் வகைகள், மாஜரின் வகைகளையும் பின்தொடர தொடங்கியுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் பிஸ்கட் வகைகள் மற்றும் சொக்லட் வகைகளையும் தாக்கும் வகையில் அமைந்திருக்கும் என எதிர்பார்க்க வைக்கிறது.
 
பால் என்பது ஒருவரின் நாளாந்த உணவுத் தேவையில் உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உள்ளடக்கமல்லாவிடின், அது தொடர்பாக ஏன் இலங்கை அரசாங்கத்தின் முக்கிய பிரிவான சுகாதார அமைச்சு ஓர் உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிடக்கூடாது? இது மக்களை மேலும் தெளிவுபடுத்துவதாக அமையும். 
 
எனவே அனைத்து தரப்பினரும் ஒரு பிரச்சினையை தத்தமக்கு சாதகமான முறையில் பயன்படுத்திக் கொண்டு, அதில் ஒரு வியாபார இலாபத்தை தேடும் நடவடிக்கையில் கவனமாக இருப்பதை அவதானிக்க முடிகிறதே தவிர, சமூக பொறுப்பு வாய்ந்த வகையில் மக்களை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .