2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நிதிச்சுதந்திரத்தை கருத்தில் கொண்டு முதலீடுகளை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் என்ன?

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 20 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாம் அனைவரும் முதலீட்டுப்பிரியர்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. சில முதலீடுகளினால் நாம் கவரப்பட்டு முதலீடு செய்கின்றோம் அல்லது முதலீடு செய்ய உத்தேசிக்கிறோம். எமக்குப் பரிச்சயமற்ற முதலீடுகளில் முதலீடு செய்யும் போது ஒன்றுக்கு இரண்டு தடவை தகுதியானவர்களுடன் சாதக, பாதகத் தன்மைகள் பற்றி கலந்து ஆலோசித்து தீர்மானத்திற்கு வருதல் ஆரோக்கியமானதாக அமையும். மாறாக முன் அனுபவமுடைய அல்லது பாரம்பரிய தொழில் முயற்சியைப் பொறுத்த வரையில் எமக்கு நிகர் நாங்களே என்ற தன்னம்பிக்கையுடன் ஆரம்பிக்க முடியும். 
 
முதலீட்டின் ஆரம்பத்தில் முதலீட்டின் நோக்கத்தினை தெளிவாக தீர்மானித்தல் முதலீட்டுப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற வழிவகுக்கும். அவ்வாறு அமையாவிடின் அது திசைகள் தெரியாத கப்பல் பயணமாக அமையும். உங்கள் முதலீடுகள் பெரிதாக அல்லது சிறிதாக, நீண்டகாலமாக அல்லது குறுங்காலமாக அமையலாம். எதுவாயினும் குறித்த நோக்கத்தினை அடையும் பாதையில் நாம் பயணிக்கின்றோமா என்பதனை காலத்திற்குக் காலம் உறுதிப்படுத்த தவறாதீர். எதிர்பாராத விளைவுகளை எதிர்நோக்க நேரிடின் தந்திரோபாயங்களை மாற்றி முதலீட்டுப் பயணத்தினைப் பயணிக்க முடியும். 
 
முதலீகள் பற்றி பல தெரிவுகள் மற்றும் பல மாற்றுக்கருத்துக்கள் இருப்பினும் உங்களின் முதலீடுகள் குறித்த காலத்தில் உங்களுக்கு பூரண நிதிச் சுதந்திரத்தினை பெற்றுத் தருகின்றதா என்பது பற்றிச்சிந்திக்க மறக்காதீர்கள். திட்டமிட்டு செலவீனங்களைக் குறைத்து அல்லது காலம் தாழ்த்தி பணத்தினை சேமிக்க முடியும். அவற்றில் சிறு தொகையினை கிரமமாக முதலீடு செய்ய பழகிக் கொள்வதன் ஊடாக நாம் ஒவ்வொருவரும் நிச்சயமாக நிதிச்சுதந்திரத்தினை அடைந்துகொள்ள முடியும். இது ஓர் இலகுவான நடைமுறை. 
 
உண்மையில் நிதிச்சுதந்திரம் என்பது எம்மிடமுள்ள சேமிப்புத் திரட்டினைக் கருதவில்லை என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக ஒருவர் தனது மகளின் திருமணத்திற்காக 25 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு சொத்தினை அதாவது காணி, கட்டிடம் அல்லது கார் அல்லது தங்க ஆபரணம் அல்லது வங்கிவைப்பாக அமையலாம். இந்நிலையில் அவர் நிதிச்சுதந்திரம் பெற்றுவிட்டதாக ஒருபோதும் கருதமுடியாது. 
 
உண்மையில் நிதிச்சுதந்திரம் என்பது எமது இருப்பினைக் கருதவில்லை, மாறாக முயற்சி இன்றி உங்கள் வாழ்க்கைத் தரத்தினை உயர்வாகப் பேணக்கூடிய வகையில் நாளாந்த தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்யக் கூடிய நிலையானதும் நிலைத்திருக்கக் கூடியதுமான வருமானத்தினை நீங்கள் பெறுவீர்களே ஆனால் அதுதான் உண்மையில் உங்களுடைய நிதிச்சுதந்திரம். இது ஓர் இலகுவாக புரிந்துகொள்ள மற்றும் நடைமுறைப்படுத்தக் கூடிய எளிய பொறிமுறை ஆகும்.
 
உதாரணமாக ஒருவர் 2000 ஆண்டு தொடக்கம் வங்கியில் 10 இலட்சம் ரூபா பணத்தினை வைப்பாக வைத்து அதிலிருந்தான வட்டிவருமானத்தைப் பயன்படுத்தி தனது வாழ்க்கைச் செலவினை ஈடுசெய்வாராக இருந்தால், அவரது வாழ்கைத் தரம் இன்றைய காலத்தில் எப்படியிருந்திருக்கும் என்பதனை விடுத்து, அவர் எவ்வளவு பணத்தை சேமித்திருப்பார் என்பது எனது கேள்வி? சேமிப்புக்கள் இன்றி குடும்பத்தின் பொருளாதாகர வளர்ச்சி சாத்தியமாகாதென்பதை நீங்கள் அறிவீர்கள்.
 
நிதிச் சுதந்திரத்தினை அடைந்து கொள்ளும் வகையில் எமது முதலீட்டுத் திட்டமிடல்கள் மற்றும் தீர்மானங்கள் அமையவேண்டும் என்பதற்கு பின்வருவனவற்றை நாம் குறிப்பிடலாம்.
 
1. எமது உடல் மற்றும் உளரீதியான இயலுமை இயற்கையினால் வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது பணம் உழைக்க வேண்டும் என்ற விருப்பம் அல்லது தேவையிருந்தும் எம்மால் ஓர் எல்லைக்கு அப்பால் முயற்சிசெய்ய இயலாமை.
2. நிச்சயமற்ற தன்மை. பல்வேறு நிச்சயமற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில் எமது வாழ்க்கைப் பயணத்தினைத் தொடர்கின்றோம். எல்லாம் நாம் எதிர்பார்ப்பது போல் அமைவதில்லை. இவ்வாறான நிலைமைகளைச் சமாளிக்க நாம் எம்மை தயார்ப்படுத்த வேண்டும். 
3. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள். எம்மைச் சார்ந்துள்ளவர்களின் நலன்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய கடமைப்பாடு எம்மில் பலருக்கு உண்டு.
4. நிரந்தரமான ஓய்வில் எமது வாழ்க்கையினை வசதியாகவும் கௌரவமாகவும் வாழவேண்டும் என்ற தன்னம்பிக்கை போன்ற சிலவற்றை குறிப்பிட முடியும்.
 
இவற்றினை அடைந்துகொள்ள நிதிச்சுதந்திரம் எமக்கு வேண்டுமல்லவா! எப்படி எம்மை நாம் தயார்ப்படுத்திக் கொள்வது? சிந்தியுங்கள் உங்கள் வருமானத்தினை எப்படி பெருக்கிக்கொள்ள முடியும். உங்கள் நடுத்தர வயதில் (25 – 45) வாழ்க்கையில் மிக உயர்ந்த வருமானத்தினைப் பெற்றுக்கொள்ளும் பொற்காலம். உங்கள் உடல் ரீதியான மற்றும் உள ரீதியான ஆற்றல்களைப் பயன்படுத்தி செயற்படு வருமானமான (Active income) கூலி அல்லது ஊதியம் அல்லது இலாபத்தினை பெறுகின்றீர்கள் அல்லவா? இவ் வருமானம் உங்கள் உடல் இயக்கத்துடன் சார்ந்ததாக உருவாக்கப்படுவதனை நீங்கள் அறிவீர்கள். எமது செயற்பாடு இன்றி இவ்வகையான செயற்படு வருமானங்களை நாம் பெற்றுக்கொள்ள முடியாது.
 
எனவே நாம் உழைக்கக் கூடிய அதாவது Active Income பெற்றுக்கொள்ளும் காலத்தில் செயலற்ற வருமானத்திற்கான விதையினை விதைக்க வேண்டும். எமது முயற்சி இன்றி எமது முதலீட்டின் மூலமாக வருமானம் பிறப்பிக்கப்படுவதனால் அதனை நாம் செயலற்ற வருமானம் எனலாம். உதாரணமாக நீங்கள் கட்டிடத் தொகுதி ஒன்றினை வாடகைக்கு விடுவதன் ஊடாகக் கிடைக்கும் வாடகைப்பணம் அல்லது பங்குச்சந்தையில் கம்பனியின் பங்குகளின் முதலீடுசெய்து கிடைக்கும் பங்குலாபம் போன்ற வருமானங்கள் செயலற்ற வருமானமாக கருதலாம். 
 
முதலீட்டு ஆர்வலர்களே! நீங்கள் எத்துறைசார்ந்த முதலீட்டாளாராக இருப்பினும் உங்கள் உழைப்பினால் கிடைக்கப்பெற்ற செயற்படு வருமானத்தின் சிறு தொகையினை நிலையானதும் நிலைத்திருக்கக் கூடியதுமான செயலற்ற வருமானத்தை பிறப்பிக்கும் முதலீடுகளில் பன்முகப்படுத்தி முதலீடு செய்வதன் ஊடாக நிதிச்சுதந்திரத்தினை அடைந்து கொள்ள முடியும். 
 
ஓர் ஓய்வூதியத்தின் நிதிச்சுதந்திரம் என்பது தமது ஒய்வூதிய நிதியங்களை (Retirement Fund) தமது நாளாந்த தேவைகளைப் பூர்த்தி செய்து நிதியத்தைக் கரைக்காது தொடர்சியான வருமானத்தைத் தரக்கூடியதும் சேமிக்கக் கூடியதுமான சிறந்த பன்முகப்படுத்தப்பட்ட ஓய்வூதிய முதலீட்டு நிதியமாக (Retirement Portfolio) மாற்றிப் பேணுதல் வேண்டும்.
 
உதாரணமாக ஒருவருக்கு ஓய்வுதிய நிதியாகக் கிடைக்கும் 25 இலட்சம் ரூபா பணத்தை குறைந்தது மாதாந்தம் 35ஆயிரம் ரூபா தரக்கூடிய முதலீட்டில் முதலீடுசெய்து, தனது நாளாந்த வாழ்க்கைச் செலவுகள் போக குறைந்தது ஆயிரம் அல்லது இரண்டாயிரம் வரை தவணை முறையில் சேமிக்கும் திட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும். இது பணவீக்கத்தினால் ஏற்படும் கொள்வனவு இழப்புக்களை ஓர் அளவுக்கு ஈடுசெய்ய உதவும்.
 
உங்கள் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை செயலற்ற வருமானத்தினைக் கொண்டு பூர்த்தி செய்யக்கூடிய சிறந்த முதலீட்டுத்திட்டத்தை ஒவ்வொரு குடும்பத்தவர்களும் உருவாக்கி, சேமிப்பைப் பெருக்கி வாழ்க்கையை வளமாக்குவோம்.
 
-மு.திலீபன், கொழும்பு பங்குப்பரிவர்த்தனை

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .