2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் புதிய தலைவர்

A.P.Mathan   / 2014 ஜனவரி 04 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் உள்நாட்டு பொருளாதாரத்துக்கு பெருந்தோட்ட பயிர்ச்செய்கைகளினூடாக வருடாந்தம் 71 பில்லியன் ரூபா வரை பங்களிப்பை வழங்குகின்றன என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் ராஜதுரை, ஊடகங்களுக்கு வழங்கியிருந்த செவ்வியில் தெரிவித்திருந்தார். 
 
தேசிய பொருளாதாரத்துக்கு பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் பங்களிப்பு மற்றும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் எதிர்கால நோக்கம் தொடர்பாக ராஜதுரை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 
 
1992ஆம் ஆண்டு முதல் இதுவரை பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் மொத்தமாக 55 பில்லியன் ரூபாவை மூலதன பங்களிப்பாக மேற்கொண்டுள்ளன.  
 
தனியார் மயப்படுத்தப்படுவதற்கு முன்னர் – ஒரு நோக்கு 
ஆரம்ப கால கட்டத்தில் இலங்கையின் அரச வளங்களுக்கு மிகவும் சுமையாக காணப்பட்டது, இதனைத் தொடர்ந்து பெருந்தோட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனியார் துறைகளுக்கு கையளிப்பதற்கான தீர்மானித்தை அரசாங்கம் மேற்கொண்டது.
 
தற்போது 1.1 மில்லியனுக்கும் அதிகமான பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் பெருந்தோட்டங்களின் கம்பனிகளால் பராமரிக்கப்படுகின்றனர். சுகாதாரம் முதல் நலன்புரி மற்றும் சமூக செயற்பாடுகளுக்கும் கம்பனிகளின் மூலம் பங்களிப்பு வழங்கப்படுகிறது. மேலும், பெருந்தோட்ட மாவட்டங்களில் காணப்படும் நூற்றுக்கணக்கான கிராமங்கள், சிறுவர்த்தகங்கள் மற்றும் சிறு சேவைகளை வழங்கும் அமைப்புகள் போன்றன பெருந்தோட்டத்துறையின் நிலையான செயற்பாட்டில் பெரும்பாலும் தங்கியுள்ளன. 
 
இந்த தூரநோக்குடனான செயற்பாட்டின் மூலம் சுகாதார மற்றும் சமூக பொருளாதார குறிகாட்டிகளில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பை பதிவு செய்ய முடிந்துள்ளது. உதாரணமாக, பெருந்தோட்டங்களில் தனியார்மயமாக்கலுக்கு முன்னதாக சிசுமரண வீதம் 1000 பிறப்புகளுக்கு 29 இறப்புகள் பதிவாகியிருந்தன. 2008ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 1000க்கு 10 ஆக குறைவடைந்துள்ளது. பிறந்த பின்னர் குழந்தைகள் மரணிக்கும் எண்ணிக்கை ஆரம்பத்தில் 1000க்கு 21 ஆக காணப்பட்டது, தற்போது இது 1000க்கு 3 ஆக குறைவடைந்துள்ளது. கர்ப்ப காலப்பகுதியில் மரணிக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை 1000க்கு 15 ஆக குறைவடைந்துள்ளது.   
 
மேலும், பெருந்தோட்டத்துறையை சேர்ந்த ஊழியர் ஒருவரின் நாட் சம்பளம் தனியார் மயப்படுத்தப்படுவதற்கு முன்னர் 60 ரூபாவாக காணப்பட்டது. அதாவது தேசிய நிகர விற்பனை சராசரி பெறுமதிக்கு ஒப்பானதாக பதிவாகியிருந்தது. (உதாரணமாக, தேசிய நிகர விற்பனை சராசரி பெறுமதி என்பது கொழும்பு தேயிலை ஏல விற்பனையின் போது பதிவாகியிருந்த ஒரு கிலோகிராம் தேயிலையின் பெறுமதிக்கு நிகரான தொகையாக அமைந்துள்ளது) ஆனாலும், 2013இல் ஊழியர் ஒருவரின் நாட்சம்பளமானது 620 ரூபாவாக அமைந்துள்ளது. இது தேசிய நிகர விற்பனை சராசரி பெறுமதியாகிய 450 ரூபாவுடன் ஒப்பிடுகையில் 145 வீத அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பெருந்தோட்ட ஊழியர்களுக்கான பங்களிப்பு
பெருந்தோட்ட கம்பனிகள், இந்த தொழிற்துறையின் நீண்ட கால செயற்பாட்டுக்கும், நிலையாண்மைக்கும், பெருந்தோட்ட சமூகத்தின் ஆரோக்கியமான செயற்பாடு குறித்தும் அதிகளவு கவனம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக, பெருந்தோட்ட கம்பனிகள் தமது ஊழியர்களுக்கு வீடமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, சமூக நலன்புரி செயற்பாடுகளுக்கான செலவீனங்களை வழங்குவது, பொது உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, சமூக சேவைகள், சுகாதார மற்றும் மருத்துவ செலவீனங்கள் மற்றும் சிறுவர்களுக்கான அடிப்படை கல்வி வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான கடுமையாக உழைத்து வருகிறது. பெருமளவான ஊழியர்கள் தாம் பணியாற்றும் பகுதிகளுக்கு அண்மித்து வாழ்ந்து வருகின்றமையால், போக்குவரத்து செலவீனங்களும் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன. பெருந்தோட்டத்துறையை சாராத ஊழியர்களை கருத்தில் கொள்ளும் போது, மேற்படி செலவீனங்கள் மட்டும் அவர்களின் மொத்த செலவீனத்தில் 40 வீதமாக அமைந்துள்ளன என அவர் சுட்டிக் காட்டியிருந்தார். மேலும், பெருந்தோட்டங்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் குழந்தைகளை பராமரிப்பதற்காக விசேடமாக அமைக்கப்பட்டுள்ள நிலைகளின் பயனை பெற்றுக் கொள்ள முடியும். இவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு, முறையாக பயிற்றுவிக்கப்பட்ட குழந்தைகள் பராமரிக்கும் அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். இதன் மூலம் குறித்த தாய்மார் தோட்டங்களில் பணியாற்றும் போது, அவர்களின் பிள்ளைகளுக்கு உகந்த பாதுகாப்பும் அரவணைப்பும் வழங்கப்படுகிறது.  
 
இந்த செயற்பாடுகள் அனைத்தும் சர்வதேச ரீதியில் போட்டிகரமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு செயற்படும் பெருந்தோட்ட கம்பனிகளின் மூலம் செயற்படுத்தப்பட்டுள்ளன. தேசிய உற்பத்தி செய்யப்படும் 95வீதத்துக்கும் அதிகமான உற்பத்திகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது இலங்கையில் ஊழியர் வேதனம் என்பது எமது போட்டி நாடுகளில் வழங்கப்படும் வேதனங்களுடன் ஒப்பிடுகையில் இரட்டிப்பு மடங்காக அமைந்துள்ளது. உதாரணமாக இந்தியா மற்றும் கென்யா நாடுகளுடன் ஒப்பிட முடியும். 
 
எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள்
சவால்கள் நிறைந்த சூழலில் இயங்கும் பெருந்தோட்ட கம்பனிகள், சர்வதேச பொருளாதார சரிவு, கடுமையான காலநிலை மாற்றங்கள் போன்ற சகல பாதகமான சவால்கள் நிறைந்த சந்தர்ப்பங்களிலும் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இயலுமான வரை தமது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தன. ஊழியர்களின் வேதனம் என்பது எமது உற்பத்திச் செலவில் 67 – 70 வீத பங்களிப்பாக அமைந்துள்ளது. மூலப்பொருட்களுக்கான செலவு சாதாரணமாக 16வீதமாக அமைந்துள்ளது. நலன்புரி செலவீனங்கள் 6 வீதமானதாகவே அமைந்துள்ளன. ஏனைய செலவீனங்கள் ஏறத்தாள 5 வீதமானதாகும்.
 
இந்த அனைத்து மூலதனங்களுக்குமான வருமானம் அல்லது இலாபம் என்பது ஏல விற்பனையில் கிடைக்கும் உயர்ந்த விலைகளிலேயே தங்கியுள்ளது. 
 
மற்றுமொரு மிகப்பெரும் சவாலாக இறப்பர் விலைகளில் மாபெரும் சரிவு பதிவாகியுள்ளமை அமைந்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டில் இந்த பெறுமதி சுமார் 70 ரூபாவினால் சரிவடைந்துள்ளது. இந்த இழப்பை ஈடுசெய்யும் வகையில், பெருந்தோட்ட கம்பனிகள் தற்போது தமது பொறுப்பில் அமைந்துள்ள காணிகளிலிருந்து உச்ச பயனை பெற்றுக் கொள்ளும் வகையில், மாற்று பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ஒயில் பாம் என்பது வேகமாக அனைவராலும் மாற்றுப்பயிர்ச்செய்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு செய்கையாகும். ஏனெனில் இந்த பயிர்ச்செய்கையின் மூலமாக உயர்ந்த பொருளாதார வருமானங்களை பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன், சிக்கனமான காணி பயன்பாட்டை முன்னெடுக்கவும் இதன் மூலம் முடியும் என்றார்.
 
எதிர்கால செயற்பாடு
சவால்கள் நிறைந்ததாக இந்த துறை காணப்பட்ட போதிலும், எதிர்காலத்தின் செயற்பாடுகள் நேர்த்தியானதாக அமைந்திருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
 
தேயிலை ஏற்றுமதி என்பது மொத்த ஏற்றுமதியில் 15 வீதத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆடைத்தொழில் துறையை தொடர்ந்து இந்த துறை இரண்டாமிடத்தில் அமைந்துள்ளது. வெரிடே ஆய்வின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதை போல, ஏற்றுமதியில் தேயிலை தனது பங்களிப்பை 2007 – 2010 வரையிலான காலப்பகுதியில் ஆடைத் தொழில் துறையை போலல்லாத வகையில் தொடர்ந்து பேணி வருகிறது. 2013ஆம் ஆண்டில் ஒரு கிலோகிராம் தேயிலையின் விலை அதிகரித்திருந்தது. 2012ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கென்யா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் விலைச் சரிவை எதிர்நோக்கியிருந்தன. இந்த விலை அதிகரிப்புக்கு காரணம், இலங்கை தேயிலைக்கு சர்வதேச நாடுகளில் காணப்படும் வரவேற்பு மற்றும் உயர்ந்த தரம், சூழல் பாதுகாப்பான உற்பத்தி செயற்பாடுகள் மற்றும் நிலையான உற்பத்தி செயற்பாடுகள் போன்றன உள்ளடங்குகின்றன என்றார்.
 
பெருந்தோட்டத்துறையின் நிலையான செயற்பாட்டுக்கும், துறையில் அபிவிருத்திகளை மேற்கொள்வதும் எமது நோக்கமாக அமைந்துள்ளது. அனைத்து பங்குதாரர்களும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டிய தேவை காணப்படுகிறது. குறிப்பாக தொழிற்சங்கங்கள் நிர்வாகங்கள் ஆகியன உற்பத்தித் திறன் தொடர்பாக ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். துற்போதும் பெரும்பாலானவர்கள் சிறப்பாக ஒன்றிணைந்து இந்த நோக்கத்தை இலக்காக கொண்டு செயலாற்றி வருகின்றனர் இது பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயமாகும் என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .