2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சகல பங்காளர்களின் பங்களிப்பு, தொடர்ச்சியான விருதுக்கு காரணம்: கிம்ஹான் ஜயதிலக

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 05 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்


தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாக ரல்ஸ்டன் திசெரா விருதை தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மட்டக்கலே எஸ்டேட் தனதாக்கியுள்ளது. தேயிலை உற்பத்தித் துறையில் அளவு மற்றும் தரம் ஆகியவற்றை சிறப்பான முறையில் பேணுவதன் மூலம் வருடம் முழுவதும் இடம்பெறும் தேயிலை ஏல விற்பனையின் போது உயர்ந்த சராசரி பெறுமதியை பதிவு செய்யும் எஸ்டேட்களின் செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் இந்த விருது பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் மூலம் வழங்கப்படுகிறது.

வெஸ்டர்ன் ஹை க்ரோன் (Western High Grown) பிரிவில், 'தேயிலை உற்பத்திச் சிறப்பு' விருது முதல் தடவையாக 2009ஆம் ஆண்டு மட்டக்கலே எஸ்டேட் வென்றது. இதனை தொடர்ந்து, 2010, 2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளிலும் இந்த உயர் மதிப்புக்குரிய விருதை மட்டக்கலே எஸ்டேட் தனதாக்கியிருந்தது.

தேயிலை உற்பத்திச் சிறப்புக்காக 2012 ஆம் ஆண்டில் மட்டக்கலே எஸ்டேட் பெற்றுக் கொண்ட ரல்ஸ்டன் திசெரா விருது கேடயம்

தேயிலை உற்பத்தி துறையில் நீண்ட காலமாக தனது சேவைகளை வழங்கி வந்த ரால்ஸ்டன் திசெரா அவர்களின் மூலம் இந்த விருது வழங்கல் திட்டம் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் இணைந்து 2008ஆம் ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் தேயிலைத் துறையின் சிறப்பான செயற்பாடுகளை கௌரவித்து, தேயிலை உற்பத்தி செயற்பாடுகளில் ஈடுபடும் முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது. 

இந்த விருதை பெற்றுக் கொண்டமை தொடர்பில் மட்டக்கலே எஸ்டேட் முகாமையாளர் கிம்ஹான் ஜயதிலக கருத்து தெரிவிக்கையில், 'நான் 2009ஆம் ஆண்டு முதல் மட்டக்கலே முகாமையாளராக பணியாற்றி வருகிறேன். தேயிலை ஏல விற்பனையின் போது தொடர்ச்சியாக உயர்ந்த சராசரி பெறுமதிகளை பேணுவது மிகவும் சவால்கள் நிறைந்த விடயமாக அமைந்துள்ளது. இதுவரையில் தொடர்ச்சியாக இந்த உயர் பெறுமதிகளை வேறு எவரும் ஒரு தடவைக்கு மேல் தொடர்ச்சியாக பதிவு செய்ததில்லை. எனவே தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் உயர்ந்த சராசரி பெறுமதிகளை பதிவு செய்வது என்பது எம்மைப்பொறுத்தமட்டில் ஒரு சாதனை என குறிப்பிட வேண்டும்' என்றார்.

மட்டக்கலே எஸ்டேட் தொழிற்சாலையில் ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள பதாதைகள்

இந்த உயர்ந்த பெறுமதிகளை தொடர்ந்து பெற்றுக் கொண்டமையில் எவ்வாறான காரணிகள் பங்களிப்பு வழங்கியிருந்தன என்பது தொடர்பில் அவரிடம் கேட்ட போது, 'உண்மையில் இந்த உயர் சராசரி பெறுமதியை எய்துவதில் தரம் மற்றும் அளவு ஆகிய இரண்டும் அங்கம் வகிக்கின்றன. இவை இரண்டையும் சீராக பேணுவதில் அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாக அமைந்துள்ளது. குறிப்பாக தேயிலைச் செடிகளை வளர்ப்பது முதல், கொழுந்து எடுப்பது, அவற்றை பாதுகாப்பான முறையில் தொழிற்சாலை பகுதிக்கு கொண்டு வந்து பதப்படுத்துவது, உரிய உற்பத்தி செயற்பாடுகளை கையாள்வது, பாதுகாப்பான முறையில் பொதி செய்து அனுப்புவது போன்ற சகல விதமான செயற்பாடுகளிலும் கவனமான செயற்பாடு அத்தியாவசியமானதாக அமைகிறது' என்றார்.

'எனது இந்த சாதனைப் பயணத்தில் தாய் நிறுவனமான ஹேலீஸ் பிளான்டேஷன்ஸ் நிறுவனத்தின் பங்களிப்பு என்பது கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு விடயமாக அமைந்துள்ளது. குறிப்பாக தாய் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளின் வழிகாட்டல்கள் எமக்கு இந்த உயர்ந்த பெறுமதிகளை பெற்றுக் கொள்வதில் அடிப்படை நடவடிக்கைகளை சீரான முறையில் முன்னெடுப்பதற்கு ஏதுவானதாக அமைந்திருந்தது' என மட்டக்கலே எஸ்டேட் முகாமையாளர் கிம்ஹான் ஜயதிலக மேலும் குறிப்பிட்டிருந்தார்.

மட்டக்கலே எஸ்டேட் தொழிற்சாலையில் வளாகத்தில் பச்சை தேயிலை இலை பெற்றுக் கொள்ளும் பகுதி

இந்த தேயிலை பிராந்தியம் என்பது இலங்கையின் உயர்ந்த ரக தேயிலை பயிரிடப்படும் பகுதியாக அமைந்துள்ளது. அதாவது திம்புல தேயிலை எனப்படும் உயர்நில தேயிலை இந்த பகுதியில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தேயிலை வகைகளுக்கு மேலைத்தேய நாடுகளில் சிறந்த வரவேற்பும் கேள்வியும் காணப்படுகிறது.

தேயிலை உற்பத்தி தரச்சிறப்புக்காக மட்டக்கலே எஸ்டேட் பெற்றுள்ள விருதுகள்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .