2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

2018 பாதீடும் நடைமுறை சிக்கல்களும்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2017 நவம்பர் 27 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டமானது, இலங்கையின் நிதியமைச்சர் மங்கள சமரவீரவால், அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டுகளைப் போன்றதாக இல்லாமல், மிக இலகுவான புரிதலுடன், மிகக் குறைந்த சர்ச்சைகளுடன் இந்த வரவு-செலவுத்திட்டம்,  சபையில் சமர்பிக்கப்பட்டமைதான் இதன் விஷேடமான அம்சமாகும். 

அடுத்த ஆண்டுக்கான பாதீடு தொடர்பிலும் அதன் உள்ளடக்கங்கள் தொடர்பிலும், ஆய்வு செய்வதற்கு முன்பு, நாம் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமானதொரு விடயம் இருக்கிறது. அது, இதே அரசாங்கத்தினால், கடந்தமுறை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட 2017ஆம் ஆண்டுக்கான பாதீடு என்ன ஆனது? அதன் அடைவுமட்டம் என்ன என்பது தொடர்பில், அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. அப்போதுதான், தற்போதைய பாதீடு யதார்த்தத்துக்குப் பொருத்தமானதா என்பதனை, உறுதி செய்துக்கொள்ள முடியும். 

2017ஆம் ஆண்டுக்கான பாதீடு என்ன ஆனது?

2016ஆம் ஆண்டு, நவம்பர் மாதம்,  இலங்கையின் நிதியமைச்சராகவிருந்த ரவி கருணாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் இந்தப் பாதீடு சமர்பிக்கபட்டது. இந்தப் பாதீடு சமர்பிக்கப்பட்டது முதலே, மிகப்பெரும் சர்ச்சைகளையும் மாற்றங்களையும், தன்னகத்தே கொண்டதாகவே அமைந்திருந்தது. குறிப்பாக, பாதீட்டில் அறிவிக்கப்பட்ட சில விடயங்கள் மீளப்பெறப்பட்டுக் கொள்ளப்பட்டதுடன், பல விடயங்கள் மாற்றிக் கொள்ளப்பட்டன. அவ்வாறு மாற்றங்களுக்கு உட்பட்ட போதிலும், ஏனைய விடயங்கள் அனைத்துமே நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கின்றனவா? 

கடந்த ஆண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட பாதீட்டின் 51சதவீதமான விடயங்கள் என்ன ஆனது?  அதன் நிலை என்ன என்பது தொடர்பில்,  போதுமான தகவல்கள் வெளிப்படையாக எங்குமில்லை. அதாவது, இது தொடர்பான தகவல்கள் எதுவுமே பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை என்பதே, நிதர்சனமான உண்மையாகும்.இவ்வாறு வெளிப்படுத்தப்படாத திட்டங்களின் மொத்த பாதீட்டு பெறுமதி சுமார் 67 பில்லியன்கள் ஆகும். 

ஒட்டுமொத்த பாதீட்டில் வெறும் 49 சதவீதம் விடயங்கள் தொடர்பில் மாத்திரமே, மக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன அல்லது 49 சதவீதமான விடயங்கள் மாத்திரமே முன்மொழியப்பட்டன போல, நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டிருக்கிறது;  அது தொடர்பிலான தகவல்கள் மட்டுமே மக்களுக்குப் பயன்படுத்தக்கூடியவகையில் உள்ளன. 

இந்தப் பாதீட்டில், நிதி அமைச்சரினால் 37 முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன.  இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு,  சுமார் 116.91 பில்லியன் ரூபாயாகும். இது, ஒட்டுமொத்த பாதீட்டின், 80சதவீத செலவீனமாகும். அவ்வாறு, உறுதியளிக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்ட ஒட்டுமொத்த 49சதவீதமானத் திட்டங்களின் நிலை, என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா ? 

  • 3சதவீதமான விடயங்கள், குறித்த காலத்தில் நிறைவேற்றப்பட்டும், குறித்த காலத்தில் நிறைவேற்றப்படவும் உள்ளன. 
  • 14 சதவீதமான விடயங்கள் இதுவரை ஆரம்பிக்கப்படவேயில்லை. 
  • 32 சதவீதமான விடயங்கள், திட்டமிட்ட காலத்தையும் தாண்டிச் சென்றுக் கொண்டிருக்கின்றன. 

இதில், 3 சதவீதமான திட்டங்கள் என்பது, வீதி அபிவிருத்தி மற்றும் கிராமப்புற பகுதிகளை மறுசீரமைப்பது ஆகும். இதற்கென ஒதுக்கப்பட்ட நிதி, 4.5 பில்லியன் ரூபாயாகும்.  

ஆகவே, செலவீனங்களுக்கு ஒதுக்கப்பட்ட,  மீதமாகவுள்ள 112.41 பில்லியன்  ரூபாய் எப்படி,  எவ்வாறு, எப்போது பயன்படுத்தப்படும் என்பது தொடர்பில், போதிய தகவல்கள், நிதியமைச்சு உட்பட, அந்ததந்தத் துறைகள்சார் அமைச்சுகளிலும் இல்லை. ஆக மொத்தத்தில்,  கடந்த ஆண்டு முன்மொழியப்பட்ட பாதீடானது, வெறுமனே தாள்களிலேயே தேங்கிப்போன பாதீடாகவே, இன்றுவரை இருப்பதாக எடுத்துக் கொள்ளவேண்டும். இது, கடந்த அரசாங்கத்திலிருந்து மாற்றங்களை எதிர்பார்த்து, நல்லாட்சி அரசாங்கத்​ைத ஆட்சிக்குக் கொண்டுவந்த மக்களுக்கு ஏமாற்றமே! 

அரசாங்கமும் அதன் அதிகாரிகளும், இலங்கை வரலாற்றில் மற்றுமொரு ஆண்டை, மக்களுக்கு வெறும் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, வீணாக்கியிருகிறார்கள் என்பதுதான், ஜீரணிக்க முடியாத உண்மை. 

2018​ஆம் ஆண்டுக்கான பாதீடு

இந்தப் பாதீடு, “Blue Green Budget” என்கிற பெயரினால் அழைக்கப்படும் என, இதனைச் சமர்ப்பித்த நிதியமைச்சர் தெரிவித்திருந்தார். இதற்கானக் காரணம், இம்முறை பாதீடானது, முழுமையாக, துறை ரீதியான வளர்ச்சியையும் பொருளாதார முன்னேற்றத்தையும், அடிப்படையாக கொண்டிருப்பதுடன், சூழலுக்கு இசைவானச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்குவதுமே ஆகும். 

இந்தப் பாதீட்டில், வரி மூலமாக 110,000 மில்லியன் ரூபாய் வருமானத்தைத் திரட்ட அரசாங்கம் எதிர்பார்க்கிறது.குறிப்பாக, இந்த வரிவருமானத்தின் 22 சதவீதமானது, மோட்டார் வாகன மற்றும் ஆடம்பர வரிகள் மூலமாகவும் (excise duty and luxury tax), அடுத்த 22 சதவீதமானது பெறுமதிசேர் வரி மற்றும் நாட்டை கட்டி​ெயழுப்பும் வரி மூலமாகவும் திரட்ட எதிர்பார்க்கப்படுவதுடன், ஏனைய 33 சதவீதமான வரி வருமானம், இந்தப் பாதீட்டில், புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட தொலைத்தொடர்பாடல் வரி, குறுஞ்செய்தி வரி, கடனை மீளசெலுத்துவதற்கான வரி, கார்பன் வரி போன்றவற்றின் மூலமாக திரட்டவும் எதிர்பார்க்கிறது. வருமான வரி மூலம் திரட்டிக்கொள்ள எதிர்பார்க்கப்படும் அளவு மற்றும் விகிதங்கள் இந்த வருமானத்தில் உள்ளடக்கப்படவில்லை. 

இம்முறை பாதீட்டின் மிகச்சிறந்த விடயமே, மறைமுக வரிமூலமாக திரட்டப்படும் வரி வருமானத்தைக் குறைத்து, நேரடி வரி வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்திருப்பதாகும். இதன் விளைவாக, வருமான ஏற்றதாழ்வுக்கமைய வரியும் மக்களிடையே தாக்கத்தைச் செலுத்தும். 

இந்தப் பாதீட்டில் கவனம்செலுத்தக்கூடிய மற்றுமொரு வரி, “சீனி வரி” ஆகும். இதுமக்கள் நுகரும் சீனி சார்ந்த பயன்பாட்டைக் குறைப்பதன் விளைவாக, நமது நாட்டில் மிகப்பெரும் நோயாகவுள்ள நீரழிவு நோயைக் கட்டுக்குள் கொண்டுவருவதை நோக்காகக் கொண்டுள்ளது. இதன்போது, ஒரு கிராமுக்கு 50சதம் எனும் வகையில், சீனியைக் கொண்டுள்ள குடிபானங்களுக்கு, இந்த வரி விதிக்கப்படுகிறது. 

வரிவிதிப்புக் கொள்கையில், சீனி வரி மற்றும் பொலித்தீன் வரி ஆகியவைதான், கொள்கை வகுப்பாளர்கள் விலைநிர்ணய நுட்பத்தைப் பயன்படுத்தி விலையிடல் கொள்கையை வகுத்துள்ளார்கள் என்ப​ைத வெளிப்படுத்துகிறது. பொலித்தீன் பாவனையை பொறுத்தவரையில், அதன் பயன்பாட்டை குறைக்க, சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய பொலித்தீன் ஒவ்வொரு கிலோவுக்கும் 10 ரூபாய் என வரி விதிக்கப்பட்டுள்ளது. 

அடுத்து,“Blue Green Budget” எனும் பெயருக்கு ஏற்ப, சூழலுக்கு இசைவாக்கத்தன்மை கொண்டவகையில், வாகனங்களுக்கான வரிவிதிப்பு உள்ளது. கடந்த காலங்களைப்போல் பொருத்தமான காரணங்களின்றி, வெறுமனே வாகன போக்குவரத்தை குறைப்பதற்காக வரி அதிகரிப்பதாகவில்லாமல், ஒரு இலக்கை நிர்ணயித்து, அதன் அடிப்படையில் வரிவிதிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. 2040ஆம் ஆண்டளவில் முழுமையாக எரிபொருள் சார் வாகனப் பயன்பாட்டை நடைமுறைக்குக் கொண்டு வருவ​ைத இலக்காக்கொண்டு மின்சக்தியில் இயங்கும் வாகனங்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதுபோல, சூழலுக்கு மாசுதரும் எரிசக்தியிலான வாகனங்களுக்கு தீர்வை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதனுடன் சேர்ந்ததாக ஆடம்பர வாகனங்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது, மின்பாவனை அதிகரிக்கும் என்பதனை கருத்திற்கொண்டு சூரியசக்தியை பயன்படுத்துவோருக்கும், அதனை பயன்படுத்தி மின் வாகனங்களுக்கு மின்சக்தியை வழங்குபவர்களுக்கும் அதற்கான உபகரணங்களை கொள்வனவு செய்யவும், நிர்மாணித்துக் கொள்ளவும் வெவ்வேறுவகையிலான வரிச்சலுகை வழங்கப்பட்டு இருக்கிறது. 

மதுபான வரி

மதுபானங்கள் மீது விதிக்கப்பட்ட வரி மற்றும் வரி குறைப்பானது மிகப்பெரும் பேசுபொருளாக உள்ளது. காரணம், பியர் போன்ற மதுபான வகைகளுக்கு விலக்களிக்கப்பட்ட வரிகளின் காரணமாக,  அவற்றின் விலை குறைவடைந்துள்ளது. இது இலங்கையர்களை மேலும் மதுபாவனைக்குள் இழுத்து செல்வதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் மதுபாவனை அதிகரித்துவரும் நிலையில், இதனை பொருளியலாளர்கள் கவனத்தில் கொள்ளாமை, நிச்சயம் வருத்தத்துக்குரியதே! 

ஆனாலும், மதுபானங்களுக்கான வரியை விதிக்கும்போது, கொள்கை வகுப்பாளர்கள் கவனத்தில், கொண்ட விடயம் வேறாக இருக்கிறது. இலங்கையில் 49சதவீதமான மதுபான நுகர்வோர், சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் மதுபானங்களை அருந்துவோராக இருக்கின்றார்கள். அத்துடன், சட்டரீதியான மதுவை அருந்துபவர்களில் 80சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் கடின மதுபானவகையை (Hard Liquor) அருந்துபவர்களாக இருக்கிறார்கள். எனவே, இதனைக் கட்டுபடுத்தும்பொருட்டு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல், கடினவகை மதுபானங்களுக்கான வரி விதிப்பை அதிகரித்து இருக்கிறார்கள். பெரும்பாலான நாடுகளில், கடினவகை மதுபான நுகர்வை தவிர்ப்பதை நோக்காகக் கொண்டு, மதுவின் அளவு விகிதாசாரம் அடிப்படையிலேயே, வரி விதிக்கப்படுகிறது. அதனை பின்பற்றியே, நமது கொள்கை வகுப்பாளர்களும் வரி கட்டமைப்பை நிர்ணயிக்கப்போய் சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார்கள். 

ஆடம்பர வரி

இலங்கையின் வரிக்கட்டமைப்பில் மிக முக்கிய மாற்றங்கள் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைமுறைக்கு வரும் புதிய இறைவரி சட்டம் மூலமாக அமுல்படுத்தப்பட இருக்கிறது. பெரும்பாலும், இந்தப் புதிய இறைவரி சட்டமானது, வருமானவரி, சொத்துகள் மீதான வரி, மூலதன ஆதாய வரி என்பவற்றின் ஊடாக வருமானம் மற்றும் வளங்களை மக்களிடையே மீள் விநியோகிக்கும் ஓர் உபகரணமாகத் தொழிற்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இது தொடர்பில், அதீதமாகப் பாதீட்டில் குறிப்பிடப்படாத போதும், ஆடம்பர செலவீனங்களுக்குத் தயாராகவுள்ளவர்கள், அதற்கென பிரத்தியேக வரியைச் செலுத்த வேண்டும் என்ப​ைத, இந்தப் பாதீடு வலியுறுத்தியிருக்கிறது எனலாம். இதற்கு, மிக சிறந்த உதாரணமாக, ஆடம்பர வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட வரியைச் சுட்டிக் காட்டலாம். 

பழைய பாதீடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டவை

முன்னைய பாதீடுகள் சமர்பிக்கப்பட்டபோது, முன்மொழியப்பட்டு நடைமுறைக்கு வராத சில திட்டங்கள், இம்முறை பாதீட்டின் வழியாக நடைமுறைப்படுத்தப்பட முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வெளிநாட்டு உரிமையாளர்களைக் கொண்டுள்ள நிறுவனங்கள் நிலக்கொள்வனவில் ஈடுபட அனுமதி, வெளிநாட்டவர், 4ஆம் மாடிக்கு கீழ் வீடுகளைக் கொள்வனவு செய்ய அனுமதி, சுற்றுலா பயணிகளுக்கு பெறுமதிசேர் வரி மீளளிப்பு, கடனை மீளச் செலுத்தும் வரி அமுலாக்கம் என்பவற்றை குறிப்பிட்டு சொல்ல முடியும்.

பெறுமதிசேர் வரியின் பெருமதியிறக்கம்

இலங்கையில் எந்தவொரு பொருளிலும் மறைமுகமாக உட்சேர்ந்திருக்கும் வரிகளில் ஒன்று இந்தப் பெறுமதிசேர் வரியாகும். ஆனால், இந்த வரியின் தாக்கத்தைக் குறைக்கும் பொருட்டு, குறைந்தது 150 பொருட்களுக்கு வரிவிலக்கு அல்லது வரி குறைப்பு, இந்தப் பாதீட்டில் வழங்கப்பட்டு இருக்கிறது. 

சுற்றுலாத் துறை

இலங்கை விவசாய நாடு என்பதிலிருந்து சுற்றுலாவுக்கு உகந்த நாடு எனும் பெயரை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டது. இதனை உறுதி செய்யக்கூடியவகையில், சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க NBT , PAL வரிகளில் விலக்களிக்கப்பட்டுள்ளதுடன், சுற்றுலாத்துறை வருமானத்தை, அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ள, சுற்றுலாசார் தரகர்களின் வருமானத்துக்கு வரி விதிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

நல்லிணக்க பாதீடு

நல்லிணக்கத்தைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கின்ற வேளையில், அதற்கு வலுசேர்க்கும் வகையில், சில விடயங்களை, இந்தப் பாதீடு உள்ளடக்கி இருக்கிறது. 

காணாமல்போனோர் தொடர்பான செயற்பாடுகளுக்கும் உதவிகளுக்கும் 1.4 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டமை,  பாதிக்கப்பட்ட கிராமங்களின் அபிவிருத்திக்கு 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டமை, வடக்கிலுள்ள பெண்களது வாழ்வாதார முயற்சிகளை முன்னேற்றவும் தொழில்சார் உதவிகளை வழங்கவும் 2.75 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டமை, விடுதலைப் புலிகளால் கட்டாயப்படுத்தப்பட்டு வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்களின் புனர்வாழ்வுக்கு 2.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டமை, வடமாகாண கூட்டுறவு சங்கம் வாயிலாக சிறு உற்பத்தியாளர்களுக்கு 1 பில்லியன் ரூபாய் உதவு தொகை பகிர்ந்தளிக்க உத்தேசிக்கப்பட்டமை, மயிலிட்டி துறைமுகம் சார்ந்த பகுதிகளின் அபிவிருத்திக்கு 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டமை, அச்சுவேலி தொழிற்றுறை வலயத்தில் செயல்படும் நிறுவனங்களின் 50சதவீத மின்கட்டணத்தைக் குறைந்தது, 2 வருடங்களுக்கு அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ளமை, அம்மாச்சி உணவகங்களுக்கான வரவேற்பு காரணமாக அவற்​ைற அதிகப்படுத்த, 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு, முன்னாள் போராளிகளை தொழிலாளர் படையில் உள்வாங்கவும், அவர்கள் திறனை விருத்தி செய்யவும் 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு, முன்னாள் போராளிகளை தனியார் நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்தும்போது, அவர்களின் முதல் 12 மாதங்களுக்கான 50சதவீதமான ஊதியத்​ைத (10,000 ரூபாய் அதிகபட்சம்) அரசாங்கம் பொறுப்பேற்கும் வகையில் 250 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையைக் குறிப்பிட முடியும். 

நடைமுறைப்படுத்தல் (IMPLEMENTATION)

2018ஆம் ஆண்டுக்கான பாதீடானது, ஏனைய பாதீடுகளுடன் ஒப்பிடுமிடத்து, கொள்கை வகுப்பாளர்கள் மிகத் தெளிவாகத் தமது நீண்டகால இலக்குகளை அடைவதனை நோக்காகக்கொண்டு கொள்கை வகுப்பை செய்துள்ளமை புலனாகிறது. பாதீட்டில் வழங்கப்பட்டுள்ள ஒவ்​ேவார் உறுதிமொழிக்குப் பின்னாலும், அதற்கான சரியான காரணங்களும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தப்பட்டும் இருக்கிறது. 

ஆனால், இவை எவ்வளவு தூரம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதுதான் மக்கள் ஒவ்வொருவரதும் கேள்வியாக இருக்கிறது ? 

கடந்த ஆண்டு அள்ளி வழங்கப்பட்ட பாதீட்டு வாக்குறுதிகளில் வெறுமனே 3சதவீதத்ைத மாத்திரமே நடைமுறைபடுத்தியுள்ள நிலையில், இந்தப் பாதீடு நம்பிக்கையான வாக்குறுதிகளைக் கொண்டுள்ள நிலையிலும் எவ்வளவு தூரம் நடைமுறைக்கு வரும் என்பது தொடர்பில் மக்களுக்குச் சந்தேகமே உள்ளது. 

ஒவ்வொரு வருடமும், மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, அதன் பெறுபேறுகளைக் கவனிக்காமலிருக்கும் அரசியல்வாதிகளும், திறனற்ற அரசாங்க அதிகாரிகளும் இருக்கும்வரை, 2018ஆம் ஆண்டு பாதீடு போல எத்தனை பாதீடுகள் வந்தாலும், மக்களுக்கான நலனில் மாற்றம் வரப்போவதில்லை. எனவே, திறமையான பாதீட்டுக் கொள்கை வகுப்பாளர்கள், அதே திறனுடன் அதன் நடைமுறைபடுத்தலையும் முறைப்படுத்துவது பிரதானமாகும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .