2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

2018இல் இலங்கையின் பொருளாதாரமும் 2019இன் ஆரம்பமும்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2019 ஜனவரி 14 , மு.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

2018ஆம் ஆண்டு, இலங்கையின் பொருளாதாரத்துக்கு பலம் சேர்த்த ஆண்டா இல்லை பலவீனமான ஆண்டா என்பதை, நாட்டின் இறுதி  காலாண்டில் இடம்பெற்ற விடயங்களை மாத்திரம் முன்னிறுத்தி முடிவுக்கு வரமுடியாது. ஒட்டுமொத்தமாக வருடம் முழுவதும் இடம்பெற்ற பொருளாதார மாற்றங்களைக் கருத்திற்கொண்டே முடிவுவொன்றுக்கு வரமுடியும். உண்மையில், 2018ஆம் ஆண்டு, இலங்கைப் பொருளாதாரத்தைப் பொறுத்த வரையில், பல்வேறு மூடிமறைக்கப்பட்ட உண்மைகள் வெளியான மற்றும் இலக்குகள் அடையப்பட்ட ஆண்டாகவுள்ளது.

ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் போக்கு, மிகச்சரியான பாதையில் அமைந்துள்ளதா என்பதை, நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை அடிப்படையாகக்கொண்டு கணிக்க முடியும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதமானது, மெல்ல மெல்ல அதிகரித்துச் செல்வதாக அமைந்திருப்பின், அதன்மூலமாக, நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதுடன், மக்களின் வேலை வாய்ப்புக்களை அதிகரித்து,  வறுமையைக் குறைக்க உதவலாம். அதேபோல, பொருளாதார வளர்ச்சி சாதகமாகவுள்ளபோது, நாட்டின் பாதீட்டை சரிவர பராமரிக்க, அரசாங்கத்துக்கு போதிய வருமானமும் அவகாசமும் அமையும். 

இலங்கையின் பெரும்பாலான பொருளாதார வளர்ச்சி வீதங்களை வெளியிடும் இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம், கடந்த ஆண்டின் இறுதி காலாண்டை தவிர்த்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது சுமூகமாகவே  இருந்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் மூன்று காலாண்டில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதமானது,  3.4%, 3.6% மற்றும் 2.9%ஆக அமைந்திருந்தது. இறுதி காலாண்டில்,  இலங்கையில் நிலவிய நிச்சயமற்றத் தன்மை காரணமாக, முந்தைய மூன்று காலாண்டுகளுடன் ஒப்பிடுகையில், பெரிதான வளர்ச்சி வீதத்தைக் கொண்டிராத நிலையில், வருடாந்த பொருளாதார வளர்ச்சி வீதமானது,  சராசரியாக 3.5%கவே அமைந்துள்ளது. 

2018ஆம் ஆண்டு ஆரம்பிக்க முன்னதாக, உலக வங்கி தனது கணிப்பீட்டில், 2018ஆம் ஆண்டில் தெற்காசிய வலயத்தில் பொருளாதார வளர்ச்சியானது மிகவேகமாக அமையும் என்றும் சராசரி பொருளாதார வளர்ச்சி, 4 சதவீதமாக அமையுமெனவும் கணித்திருந்தது. உண்மையில், உலகவங்கியின் கணிப்பீட்டைப் பொய்யாக்கிய வகையில்தான், பெரும்பாலான நாடுகளின் பொருளாதார வளர்ச்சியானது, தெற்காசிய வலயத்தில் அமைந்திருந்தது. இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல.

உண்மையில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது, பேண்தகு அபிவிருத்தியாக, கடந்த ஆண்டில் அமைந்திருக்க வேண்டியது அவசியமாகவிருந்தது. இதன்போது, நாட்டின் வளர்ச்சியானது, அதனது மிக முக்கியமான மூன்று துறைகளான விவசாயம், உற்பத்தி மற்றும் சேவை ஆகிய துறைகளில், ஏதேனுமொன்றில் மாத்திரம் தனியே தங்கியிராத, பரவலான வளர்ச்சியைக் கொண்டதாக அமைந்திருக்கும். ஆனாலும், இலங்கையின் கடந்த ஆண்டிலான பொருளாதார வளர்ச்சியோ அல்லது பொருளாதார அபிவிருத்தியோ, அவ்வாறானதாக அமைந்திருக்கவில்லை.

இலங்கையின் விவசாயத்துறையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புக்களால்,  அதன் வளர்ச்சி விகிதமானது, எதிர்மறை வளர்ச்சியைக் கொண்டதாக அமைந்திருப்பதுடன், இலங்கையில் விவசாயத்துறையில் நுட்பரீதியாக பெரிதாக மாற்றம் நிகழாத நிலையில், தனது உற்பத்தி இயலுமையை அதிரித்துக்கொள்ள முடியாத நிலையில், இந்தத் துறை காணப்படுகின்றது. ஆனால், மறுபுறத்தில் அரசியல் குழப்பநிலை காலத்தைத் தவிர்த்து உற்பத்தி மற்றும் சேவைகள் துறையானது, 1.1% இல் இருந்து 4.4%ஆன வளர்ச்சி விகிதத்தைக் கொண்டிருப்பதாக இருந்திருக்கின்றது. எனவே, இலங்கையின் பொருளாதாரத்தில், ஒட்டுமொத்த வளர்ச்சிநிலை காணப்பட்ட போதிலும், அதன் வளர்ச்சி, பேண்தகு அபிவிருத்தியைக் கொண்டதாக அமைந்திருக்கவில்லை.

இவற்றுக்கு மேலாக, இலங்கையின் ஏற்றுமதி-இறக்குமதி ஆகியவற்றுக்கு இடையிலான வளர்ச்சி விகிதத்திலும், கடந்த ஆண்டு மிகப்பாரிய வேறுபாடு காணப்பட்டதுடன், அந்த வேறுபாடானது, நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பிலும் வெளிநாட்டு நாணயங்களுக்கெதிராக இலங்கை நாணயத்தின் பெறுதியிலும், மிகப்பெரும் தாக்கத்தைச் செலுத்துவதாக அமைந்திருந்தது. குறிப்பாக, இலங்கையின் ஏற்றுமதி வளர்ச்சி விகிதம்,  5% ஆகவும் இறக்குமதி வளர்ச்சி விகிதம் 10% ஆகவும் அமைந்திருந்தமை இதற்கு காரணமாகவுள்ளது.

இலங்கையின் நாணயப்பெறுமதியிலான பெறுமதியிறக்கமானது, கடந்த ஆண்டின் மிகப்பெரும் பேசும்பொருளாக அமைந்திருந்ததுடன், ஒரு கட்டத்தில், இலங்கை ரூபாயானது, ஒரு அமெரிக்க டொலருக்கு எதிராக 200 ரூபாய் எனும் உச்சத்தைத் தொடுவதற்கான சாத்தியப்பாடுகள் 2018ஆம் ஆண்டின் இறுதிக்காலப்பகுதியில் தென்பட்டுமிருந்தது. எனினும், இலங்கையில் நிலவிய இறுதிநிலை, அரசியல் குழப்பங்களில் ஏற்பட்ட மாற்றமானது, இதற்குத் தற்காலிக முட்டுக்கட்டையாக அமைந்தது. ஆனாலும், அரசியல் குழப்ப நிலையில் பிரதமராக பதவிவகித்த மஹிந்த ராஜபக்ஷவால், குறுங்கால அரசியல்நலனை கொண்டு எடுக்கப்பட்ட சில அரசியல் முடிவுகளால், தற்போதும் கூட இலங்கை நாணயத்தின் பெறுமதியை ஸ்திரமாகப் பேணுவதில், இலங்கை அரசாங்கம் பல்வேறு தடுமாற்றங்களை சந்தித்துக் கொண்டுள்ளது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, 2018ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டபோதிருந்த நிலைமைகள் தொடர்ந்திருக்குமாயின், நாம் 2019ஆம் ஆண்டில் மீளச்செலுத்த வேண்டிய கடன் நிலுவையில் தொடர்பில் மிகக்குறைந்த தயார்படுத்தலுடனாவது, ஆண்டை ஆரம்பித்திருக்க முடியும். ஆனால், 2018ஆம் ஆண்டின் இறுதி 52 நாட்கள் நாட்டின் பொருளாதாரமே வீணடிக்கப்பட்டதன் விளைவாக, மீளவும் பூச்சியத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டிய சூழ்நிலை, அரசாங்கத்துக்கு எழுந்திருக்கிறது. இதனைத்தான், அண்மைய வரி தொடர்பிலான மாற்றங்களும் நமக்கு உணர்த்துகின்றது.

இலங்கையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட, இன்னும் முழுமையாக ஒரு மாதம் உள்ளநிலையில், மேற்கொள்ளப்படும் இந்த மாற்றங்கள், பாதீட்டில் வரவுள்ள பல்வேறு மிகப்பெரும் மாற்றங்களுக்கான ஒத்திகையாகவே பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, நாட்டின் நாணயப்பெறுமதியின் உறுதியை, தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள வெளிநாட்டு வருமானங்களை இலங்கைக்குள் கொண்டுவரும் செயற்பாட்டின் முதற்கட்டமாக, வெளிநாட்டில் ஈட்டப்படும் வருமானங்கள் இலங்கையின் உள்நாட்டு வங்கிகள் மூலமாக இலங்கைக்குள் கொண்டுவரப்படும்போது, அதற்கான வரிவிலக்கு முழுமையாக வழங்கப்படவுள்ளது. 

அதுபோல, வெளிநாட்டில் இலங்கையின் வருமானத்தை வைத்திருப்பதிலும் பார்க்க, NRFC மற்றும் RFC கணக்குகளில் வெளிநாட்டு பணத்தை இலங்கையில் வைத்திருப்பதை ஊக்குவிக்கும்பொருட்டு, அவற்றின் வட்டி வருமானத்துக்கான வரிவிலக்கு வழங்கப்படவுள்ளது. இவற்றுடன், அரச வருமானத்தை அதிகரிக்க, கடந்த ஆண்டு பிரேரிக்கப்பட்ட  வாகனங்களுக்கான கார்பன் வரி நடைமுறைக்கு வருவதுடன், மக்களது வருமானத்தில் மேலதிக சுமையாகவுள்ள Withholding Tax இல் வரித் தளர்வுகளும் மேற்கொள்ளப்படுகிறது. 

ஆக மொத்தத்தில், 2018ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கமும் இலங்கை பொருளாதாரமும் ஸ்தம்பித்த 52 நாட்கள் தற்போதைய அரசியல்வாதிகளையும் பொருளாதார வல்லுநர்களையும் நிறையவே சிந்திக்க வைத்திருக்கிறது. இந்தச் சிந்தனையின் மாற்றத்தைப் பொருளாதாரம் சார் முடிவுகள் பிரதிபலிப்பதாகவும் உள்ளது.

இந்த நிலை தொடருமாயின், நிச்சயம் 2019-20ஆம் ஆண்டுகளில் இலங்கை எதிர்கொள்ளவுள்ள மிகப்பெரும் கடன் மீளச்செலுத்தல்களை பொருத்தமான அணுகுமுறைகள் மூலமாக மீளச்செலுத்த கூடியதாயிருப்பதுடன், அதன் தாக்கத்தை சாதாரண மக்கள் அனுப்பிவிக்காத வகையிலும் மேற்கொள்ள முடியும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .