2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அரச நிறுவனங்களை கண்காணிக்க வேண்டியதன் முக்கியத்துவம்

ச. சந்திரசேகர்   / 2019 ஜூன் 12 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கம், தனது கட்டுப்பாட்டின் கீழ் எத்தனை அரச நிறுவனங்களை கொண்டுள்ளது என்பது தொடர்பில் தெளிவற்ற ஒரு நிலையில் காணப்படுகின்றது.   

பிரதான அரச நிறுவனங்கள் 55இன் நிதி நிலைவரங்களை நிதி அமைச்சு கண்காணிக்கின்ற போதிலும், மொத்தமாக எத்தனை அரச நிறுவனங்களை தனது பொறுப்பின் கீழ் கொண்டுள்ளது என்பது தொடர்பில், உத்தியோகபூர்வ பெறுமதி, அரசாங்கத்தின் வசம் காணப்படவில்லை. நிதி அமைச்சின் வருடாந்த நிதி அறிக்கையில், 400 அரச நிறுவனங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஓரளவு ஏற்றுக் கொள்ளக்கூடிய பெறுமதியாகும்.  

Advocata நிறுவனத்தின் 2019ஆம் ஆண்டின் அறிக்கையில், 424 அரச உரிமையாண்மையில் இயங்கும் நிறுவனங்கள், 84 துணை அரச உரிமையாண்மையில் இயங்கும் நிறுவனங்கள், 19 அரச உரிமையாண்மையின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் துணை நிறுவனங்களின் பங்கு நிறுவனங்கள் என மொத்தமாக 527 அரச நிறுவனங்கள் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

அரசாங்கத்தின் பொறுப்பில், 527 நிறுவனங்கள் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்த நிறுவனங்களால் பதிவு செய்யப்படும் இழப்புகள், பெருமளவு கவனத்தை ஈர்த்துள்ளன. மூலோபாய அடிப்படையிலான அரச நிறுவனங்கள் 55இன் நிதிப் பெறுபேறுகளைக் கவனத்தில் கொண்டால், 2006ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், மொத்த இழப்பு 795 பில்லியன் ரூபாயாகும்.  
இது தொடர்பில், அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இவற்றை மீளமைப்பது தொடர்பில், அரசியல்வாதிகள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர்.   

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன குறிப்பிடுகையில், “அரச வங்கிகள், துறைமுகம், வலு, நீர் விநியோகம், விமான நிலையங்கள்,  போக்குவரத்து போன்ற அரச பொறுப்பின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் நிர்வாக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கு, சிங்கப்பூரின் டெமாசெக் மாதிரிக்கு நிகரான திட்டமொன்றை அறிமுகம் செய்வேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.  

இது உண்மையில் சிறந்த ஆரம்ப நிலையாகக் காணப்பட்டது. சிங்கப்பூரின் டெமாசெக் மாதிரி என்பது, ஒரு தாய் நிறுவனம். நாட்டின் சகல அரச நிறுவனங்களின் பொறுப்புகளையும் நிர்வகிக்கும். இந்த முறை ஏனைய நாடுகளிலும் சில மாற்றங்களுடன் பின்பற்றப்பட்டு வெற்றியளித்துள்ளது.

இந்தோனேசியாவில் காணப்படும் இது போன்ற திட்டத்தில், ஒவ்வொரு துறைக்கும் ஒரு தாய் நிறுவனம் காணப்படுகின்றது. இலங்கை மிகவும் சிறிய நாடு என்பதால், ஒரு தாய் நிறுவனத்துடன் சகல அரச நிறுவனங்களின் செயற்பாடுகளையும் நிர்வகிக்கக்கூடியதாக இருக்கும்.  

இந்த மாதிரியை பின்பற்றுகின்றமையினூடாக, உருவாக்கப்படும் பொறுப்புக்கூறல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவ்வாறான தாய் நிறுவனம் ஒன்றை உருவாக்குவதனூடாக, அரசாங்கத்துக்கும், அரச நிறுவனங்களுக்கும் இடையிலான அரசியல் தலையீடுகளைக் குறைத்துக் கொள்ள முடியும்.

இந்த மாதிரிக்கு பிரதமரும் தமது ஆதரவை வெளியிட்டிருந்தார். டெமாசெக் மாதிரி முறை சரியான வழியில் அரச நிறுவனங்களை வழிநடத்தும் என்பதுடன், தனியார் மயமாக்கலை தவிர்த்துக் கொள்ளக்கூடிய சிறந்த மாற்று வழிமுறையாக அமைந்துள்ளது.  

அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டம் தொடர்பாக 2016ஆம் ஆண்டு பாதீட்டு உரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பாக, இழப்புகளைப் பதிவு செய்யும் அரச நிறுவனங்களின் நிலை, அவை பாதீட்டில் ஏற்படுத்தும் மறைத் தாக்கம் தொடர்பிலும் இந்த உரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அரச நிறுவனங்களைப் பொருளாதார ரீதியில் நிர்வகிக்கக்கூடிய நிலைக்கு மாற்றும் சீராக்கல் செயற்பாடுகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது தீர்வாகப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. பரிந்துரைக்கப்பட்ட முறைகளில் தெரிவுசெய்யப்பட்டனவாகவும், பொது அத்தியாவசிய சேவைகளில் சந்தை அடிப்படையிலான விலை பொறிமுறைகள் அறிமுகம், தொழிலுக்கமர்த்தல் செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் மற்றும் அரச -தனியார் பங்காண்மை வாய்ப்புகளை இனங்காணல் போன்றன அடங்கியிருந்தன.  

2017ஆம் ஆண்டு பாதீட்டின் போதும், செலவு வெளிப்படுத்தல் விலை கட்டமைப்புகள், செயற்பாட்டு மீளமைப்புகள் போன்றவற்றினூடாக அரச நிறுவனங்களை சகாயமான வியாபார நிறுவனங்களாக மாற்றியமைப்பது பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் மூலோபாயமற்ற நிறுவனங்களை பொதுப் பட்டியலிடுவதனூடாக திரட்டப்படும் நிதியை, கடன் மீளளிப்புகளைப் பயன்படுத்த முடியும் என்பது இதன் பின்புலமாக அமைந்திருந்தது. குறிப்பாக 2018 மற்றும் 2019 பாதீடுகளில் அரச நிறுவனங்களை மீளமைப்பது பற்றி எவ்விதமான விடயங்களும் குறிப்பிடப்படவில்லை.   

இந்த உறுதி மொழிகள் சிறந்த நம்பிக்கையின் பிரகாரம் வழங்கப்பட்டவை எனும் கருதுகோளின் பிரகாரம், இந்த மீளமைப்பு செயற்பாடுகள் ஏன் முன்னெடுக்கப்படவில்லை எனும் கேள்வி எழுகின்றது. அரச நிறுவனங்களின் இழப்புகள் குறைக்கப்பட வேண்டிய நிலையில், சிறியளவு, சகித்துக் கொள்ளக்கூடிய கட்டங்களில் மீளமைப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பது சிறந்ததாகும்.   

அண்மையில் வெளியிடப்பட்டிருந்த சர்வதேச நாணய நிதிய ஊழியர் அறிக்கையில், அரச நிறுவனங்களால் பதிவு செய்யப்பட்டுள்ள இழப்புகள் பற்றி கவனம் செலுத்தப்பட்டிருந்தது. மூன்று பிரதான அரச நிறுவனங்களாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை, ஸ்ரீலங்கன் விமான சேவை போன்றன 2018ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் 1.3% இழப்பை பதிவு செய்திருந்தன. 2017ஆம் ஆண்டில் இந்த பெறுமதி மொத்த தேசிய உற்பத்தியில் 0.5% இழப்பை பதிவு செய்திருந்தது. மொத்த தேசிய உற்பத்தியில், நிதிசாரா அரச நிறுவனங்களின் நிதி கடப்பாடுகள் 11.8% எனவும், இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

 அதிகரித்துச் செல்லும் இழப்புகள் மற்றும் துரித கதியில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய தேவைகளை கவனத்தில் கொண்டு, சிறியளவு, எய்தக்கூடிய மீளமைப்புச் செயற்பாடுகள் பற்றி அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். 

அரச நிறுவனங்கள் பற்றிய Advocataஇன் 2019ஆம் ஆண்டுக்கான அறிக்கையில், சில முக்கியத்துவம் வாய்ந்த மீளமைப்புகள் இனங்காணப்பட்டிருந்தன. இவை, அரசியல் ரீதியில் சகாயமானவை, அரச நிறுவனங்களின் இழப்புகளுக்கு காரணமான தாக்கங்களை இலக்கு வைத்து அமைந்துள்ளமை போன்ற காரணங்களால் இவை தெரிவு செய்யப்பட்டிருந்தன. இதில் இரண்டு பிரதான மீளமைப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.  

 1. அரச நிறுவனங்கள் பற்றிய கருத்தாய்வொன்றை முன்னெடுத்தல்: 

அரசாங்கம் தனது பொறுப்புகள் தொடர்பில் உறுதியற்ற நிலையில் இயங்கும் போது, இந்த நிறுவனங்களை ஒழுங்குபடுத்தி கண்காணிப்பது என்பது அரசாங்கத்துக்கு இயலாத காரியமாகும். இந்த கருத்தாய்வு பூர்த்தி செய்யப்பட்டதும், அடிப்படை அறிக்கையில் பொறிமுறைகளை அரசாங்கத்தால் நிறுவக்கூடியதாக இருக்கும்.   

 2. COPE, COPA மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றை வலுப்படுத்தல்: 

அரச நிறுவனங்களின் பிரதான பொறுப்புக்கூறும் அமைப்புகளாக இவை காணப்படுகின்றன. இவற்றுக்கு போதியளவு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அதிகாரத்தை வழங்க வேண்டும்.  

குறுகிய கால அடிப்படையில் மேற்படி இரு மீளமைப்பு செயற்பாடுகளையும் முன்னெடுப்பது மிகவும் முக்கியமான நடவடிக்கைகளாக அமைந்துள்ளதுடன், அரச நிறுவனங்களை வெளிப்படைத்தன்மை வாய்ந்த, வினைத்திறன் வாய்ந்த நிலையில் தொடர்ந்தும் நீண்ட கால அடிப்படையில் பேணுவதற்கு பொருளாதார ஒன்றிணைவு, அபிவிருத்திக்கான நிறுவனத்தின் (OECD) வழிகாட்டல்களை பின்பற்றுவது சிறந்தது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X