2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கைக்கான வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அவசியமா?

அனுதினன் சுதந்திரநாதன்   / 2018 ஜூன் 11 , மு.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான பொருளாதாரம் சார் பேச்சுகள் எழுகின்றபோதெல்லாம், மிகமுக்கியமாகப் பேசப்படும் பேசுபொருளாவிருப்பது, வெளிநாட்டு நேரடி முதலீடுகள் (Foregin Direct Investment - FDI) ஆகும். 

குறிப்பாக, 2020ஆம் ஆண்டுக்குள் இலங்கையின் நேரடி முதலீட்டின் நிர்ணயிக்கப்பட்ட எல்லையான, ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர்களை அடைந்துவிட வேண்டும் என்கிற பரப்புரைகளையும் அதற்கான பிரயத்தனங்களையும் நாம் கண்கூடாகவே காணக் கிடைக்கிறது. 

அப்படியாயின், நமது பொருளாதார பின்புலனை அதிகரித்து கொள்ளவும், அதை உறுதியாக மாற்றிக்கொள்ளவும் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அவசியமானவையா? அப்படியாயின் அவற்றின் தேவைப்பாடு என்ன? என்பதனை நாம் அறிந்திருப்பது அவசியமாகிறது.  

வெளிநாட்டு நேரடி முதலீடு என்பது, தனிநபர் அல்லது நிறுவனம் தனது நாட்டின் எல்லைகளைக் கடந்து மற்றுமொரு நாட்டில் அல்லது வெளிநாடுகளில் மேற்கொள்ளுகின்ற அனைத்துவகை முதலீடுகளுமாகும். 

இத்தகைய முதலீடுகள், இலங்கை போன்ற நாடுகளின் அபிவிருத்திக்கு மட்டுமின்றி, அடிப்படையான உட்கட்டமைப்பு வசதிகளைக் கட்டியெழுப்பவும் பயன்படுகிறது. குறிப்பாக, புதிய உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் என வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் பயன்பாடு, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது.   

பெரும்பாலும் ஒரு நாட்டுக்குள், வெளிநாட்டு நேரடி முதலீடுகள் வருவதென்றால், அவற்றின் மூலமாகப் புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகரிப்பதுடன், இலங்கைத் தொழிலாளர்களுக்கான ஊதிய அளவும் அதிகரிக்கும். இவற்றின் மூலமாக, தொழில்திறன் முன்னேற்றமடைவதுடன் பொருளியல்சார் வளர்ச்சியும் போட்டித்தன்மை கொண்டதாக மாற்றமடைவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும்.  

இலங்கை போன்ற நாடுகளில் அதிகரித்துள்ள அரசதுறைசார் தங்கியிருத்தலைத் தவிர்த்து, தனியார்மயப்படுத்தல் முயற்சியின் விளைவாக, நடுத்தர மக்களின் பொருளாதார ஸ்திரநிலையை உருவாக்கவும் இந்த வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும். இதன் காரணமாகவும் வௌிநாட்டு முதலீடுகளின் தேவைப்பாடு, இலங்கை போன்ற நாடுகளில் அதிகரித்துள்ளது.   
2017ஆம் ஆண்டு, இலங்கையால் உத்தியோகபூர்வமாக உறுதிசெய்யப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் பெறுமதி, 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இது, இதுவரையான ஆண்டுகளில் இலங்கையால் வருடம்தோறும் ஈட்டப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் பெறுதியிலும் பார்க்க அதிகமானது.  ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி பற்றிய மாநாட்டில் (UNCTAD) வெளியிட்ட உலக முதலீட்டு அறிக்கையின் பிரகாரம், 2017ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு நேரடி முதலீடாக, 1.8 திரில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவாகியிருந்தது. 2016ஆம் ஆண்டில் 1.75 திரில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. 

குறித்த அறிக்கையிலேயே, உலக நாடுகளில் ஒட்டுமொத்தமாகத் திரட்டப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீட்டில், இதுவரை அதிகமாகத் திரட்டப்பட்ட நிதியளவாக, இரண்டு திரில்லியன் அமெரிக்க டொலர்கள் 2007ஆம் ஆண்டில் திரட்டப்பட்டதாகச் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இதற்குப் பின்னதாக, இந்த நிலையைத் தொடர்ச்சியாகப் பேணமுடியாத நிலை 2008-2009ஆம் ஆண்டுகளில் உலகைத் தாக்கிய பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்டிருந்தது.  

 உலக வெளிநாட்டு நேரடி முதலீடுகளில், அதிகமானவற்றைத் தங்கள் நாட்டுக்குள் கொண்டுவருகின்ற முதல் பத்து நாடுகளில், நமது அண்டை நாடான இந்தியாவும் உள்ளடங்கியுள்ளது. வருடம்தோறும் சராசரியாக 44 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தனது வெளிநாட்டு நேரடி முதலீடாகக் கொண்டுள்ளது. 
பெரும்பாலான வெளிநாட்டு நேரடி முதலீட்டைப் பெறும் நாடுகளில், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளே முன்னிலை பெற்று இருக்கின்றன. 

இதற்குக் காரணம், பெரும்பாலான வெளிநாட்டு நேரடி முதலீடுகள், அபிவிருத்தி அடைந்த நாடுகளோ அல்லது அந்த நாட்டின் வெளிநாட்டு முதலீட்டாளர்களோ தங்களது இலாபத்தைப் பெருக்கிக்கொள்ள, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் முதலீடு செய்பவர்களாக இருக்கிறார்கள். 

 இவற்றை விடவும், அந்த முதலீட்டு அறிக்கையில், மேலும் சில சுவாரசியமான, கவனிக்கத்தக்க விடயங்களும் உள்ளடங்கியுள்ளன. 

அறிக்கையின் தரப்படுத்தலில் இலங்கையுடன் ஒப்பிடுமிடத்து, மிகச் சிறிய நாடுகளும் குறைவான சனத்தொகையைக் கொண்ட நாடுகளும் வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் கவருகின்ற நாடுகளாக, சில நாடுகள், முதல் பத்து இடங்களுக்குள்ளும் இடம்பெற்றுள்ளமை, நமது நாட்டின், சாதனை மிகு வெளிநாடுத் நேரடி முதலீட்டு தொகை, ஒன்றுமேயில்லை என்பதற்கு சான்றாகவுள்ளது. 

உதாரணமாக, ஹொங்கொங் , சிங்கப்பூர்,  நெதர்லாந்து ஆகியநாடுகள் இலங்கையுடன் ஒப்பிடுமிடத்து மிகக் குறைவான சனத்தொகையையும் நிலப்பரப்பையும் கொண்ட நாடுகளாகும். ஆனால், இவை இலங்கையை விடவும் மிக அதிகமான வெளிநாட்டு நேரடி முதலீடுகளை பெற்றுக்கொள்ளும் நாடுகளாக உள்ளன. 

இதில், ஏழு மில்லியன் சனத்தொகையை கொண்ட  ஹொங்கொங், சராசரியாக வருடம்தோறும் சுமார் 108 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் 56 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட சிங்கப்பூர், சராசரியாக வருடம்தோறும் சுமார் 62 பில்லியன் அமெரிக்க டொலர்களையும்  17 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட நெதர்லாந்து, சராசரியாக வருடம்தோறும் சுமார் 92 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளாகப் பெற்றுக் கொள்ளுகின்றன. 

இந்த நாடுகளின் இன்றைய வளர்ச்சி, இலங்கையோடு ஒப்பிட முடியாதபோதிலும், இந்த வெளிநாட்டு நேரடி முதலீடுகளின்றி, இந்த நாடுகள் இத்தகைய வளர்ச்சியைப் பெற்றிருக்க முடியாதென்பதே உண்மை.

இவ்வாறு, இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளும், அபிவிருத்தி அடைந்த நாடுகளும் தொடர்ச்சியாக வெளிநாட்டு நேரடி முதலீடுகளை நோக்கி நகர்வதற்கான பிரதான ஐந்து காரணங்கள் பின்வருமாறு:

1. வெளிநாட்டு நேரடி முதலீடுகள், நாட்டின் உள்நாட்டு முதலீடுகளுக்கான பொருளாதார வளர்ச்சியின் மையமாக உள்ளன.  

வெளிநாட்டு நேரடி முதலீடானது இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளை, நடுத்தர பொருளாதார வளர்ச்சி கொண்ட நிலையிலிருந்து, உயர் பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர்த்துவதற்கு உதவிகரமாகவுள்ளது. கடந்த 30 ஆண்டு காலமாக, இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியானது சராசரியாக 4%மாகவே உள்ளது. இதை 6%மாக உயர்த்துவதற்கு இலங்கையின் உள்நாட்டு வருமானம் மாத்திரம் போதாது. வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மூலமான பொருளாதார வளர்ச்சி அதிகப்படுத்தலும் அவசியமாகிறது. அப்போதுதான், எதிர்வரும் 30 ஆண்டுகளுக்குள் தற்போதைய சிங்கப்பூரின் நிலையை நோக்கி நகரவாவது முடியும்.  

2. பொருளாதாரத்தைத் தாங்கும் ஒரு தூணாக, வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அமைந்துள்ளது.  
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிலும் வெளிநாட்டு நேரடி முதலீடானது ஒருவகை வெளிப்புற நிதிமூலமாக இருக்கிறது. 

இது, அந்நாடுகளின் வெளிநாட்டு வருமானம் மற்றும் முதலீட்டு வருமானங்களை விடவும் அதிகமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தநிலை, அந்நாடுகள் தொடர்ச்சியாக அபிவிருத்தியை நோக்கி நகருவதையும் அதில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கவரப்படுவதையும் வெளிக்காட்டுவதாக உள்ளது.
இலங்கையை பொறுத்தவரையில், அதன் ஒவ்வொரு வருட பாதீடும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செலவுகளுக்கும் பொதுத்துறை முதலீடுகளுக்குமே போதுமானதாக இருக்கிறது. 

இந்தநிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது பாதீட்டில் திட்டமிடப்படும் வரிவருமானங்களிலன்றி, வெளிநாட்டு நேரடி முதலீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டியதாக உள்ளது. எனவேதான், இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சியின் ஒரு தூணாக இதுவுள்ளது.  

3.வெளிநாட்டு நேரடி முதலீடுகள், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துக்கு உதவியாக அமைந்துள்ளது.  
வெளிநாட்டு நேரடி முதலீடுகள், தனித்துப் பணமாக மட்டுமே ஒரு நாட்டுக்குள் வருவதில்லை. மாறாக, பல்வேறு செயற்திட்டங்களுக்கான தொழில்நுட்பங்களாகவோ அல்லது புத்தாக்க முயற்சிகளாகவோ வருகின்றன. இவை, நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், அதுசார் துறைகளின் வளர்ச்சிக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்களிப்புச் செய்கிறது.   

4. வெளிநாட்டு நேரடி முதலீடுகள் ஏற்றுமதிக்கு உதவுவதுடன், பொருளாதார பல்வகைமைபடுத்தலுக்கும் உதவுகிறது.  

வெளிநாட்டு நேரடி முதலீடுகளும் சரி, அதுசார் தொழில்நுட்பங்களும் சரி, இலங்கையின் ஏற்றுமதிசார் நடவடிக்கைகளுக்குப் பயன்படும்போது, அது உலக சந்தையில் இலங்கையின் ஏற்றுமதித் தரத்தை அதிகரிப்பதுடன், அதுசார் வருமானத்தையும் அதிகரிக்கிறது.   

அத்துடன், இலங்கையின் உற்பத்தியாளர்களை உலகளாவிய உற்பத்தி வலையமைப்பில் இணைக்கவும், புதிய அபிவிருத்திச் செயற்பாடுகளைச் செய்வதற்கும் இது துணை புரிகிறது. இதனால் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியானது விரைவுபடுத்தபடுகிறது. பாரம்பரிய துறைகளுடன் இணைந்து, புதிய துறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், இது பொருளாதாரத்தின் கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்த உதவும்.  

5. புதிய வெளிநாட்டு நேரடி முதலீடுகள் நாட்டின் அந்நியச் செலவாணி இருப்பை அதிகரிக்க உதவும்.  
அரச உள்நாட்டு வருமானம், பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களித்தாலும், இலங்கையின் வெளிநாட்டுக் கடன், நாணயப் பெறுமதியின் உறுதிப்பாடு மற்றும் இறக்குமதிச் செலவீன ஈடுகட்டல் ஆகியவற்றுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அந்நியச் செலவாணி ஊடாக உதவுகிறது. 

குறிப்பாக, வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அந்நிய நாணய பெறுமதியில்தான் இலங்கைக்குள் உள்வருகின்றன. இதனால், இலங்கையின் அந்நியசெலவாணி இருப்பின் பெறுமதி அதிகரித்து, இலங்கை நாணயத்தின் பெறுமதி அதிகரிக்கும். தற்போதைய நிலையில், அந்நிய செலவாணி பெறுமதியின் இருப்பு குறைவடைந்த காரணத்தால்தான், இலங்கை நாணயத்தின் பெறுமதி, ஓர் அமெரிக்க டொலருக்கு 160 என்கிற வீழ்ச்சியை அடைந்துள்ளது.  

இத்தகைய நன்மைகளைப் பெற்றுக்கொள்ள இலங்கை அரசானது, தென்கிழக்காசிய நாடுகளுடன் கடுமையாகப் போட்டியிட்டு வெளிநாட்டு நேரடி முதலீடுகளை பெற்றுக்கொள்ள வேண்டியதாகவுள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .