2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கையின் கடன் மீள்நிலையும் ஸ்திரத்தன்மையும்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2018 ஜனவரி 29 , மு.ப. 01:52 - 2     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் அரசியல்நிலை மிகவும் குழப்பகரமாகவுள்ள நிலையில், 2019ஆம் ஆண்டில் மீளச்செலுத்தவேண்டிய மிகப்பெரும் கடன்சுமையை நோக்கி இலங்கையின் பொருளாதாரம் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டுள்ளது. இலங்கையின் அரசியல் நகர்வுகள், அதன் பொருளாதாரத்துடன் பின்னிபிணைந்துள்ளதன் விளைவால், இலங்கையின் முதலீடுகளிலும், வெளிநாட்டு நாணய வருகையிலும் இது நிச்சயம் தாக்கத்தைச் செலுத்துவதாகவே அமையப்போகிறது.  

இலங்கையின் நடைமுறைக்கணக்கில் வெளிநாட்டுக் கடன்களை மீளச்செலுத்தப் போதுமான மேலதிக நிதியைப் பேணுவது, தற்போதைய அரசாங்கத்துக்குக் குதிரைக்கொம்பான விடயமாகவே உள்ளது. நடைமுறைக் கணக்கில் மேலதிக நிதியைப் பேண மேலும் வெளிநாட்டுக் கடன்களைப் பெற்று, நீண்டகாலக் கடன்சுமையை அதிகரிப்பதிலும் பார்க்க, மாற்றுவழி முறைகளைக் கையாளவேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது.   

வர்த்தகப் பற்றாக்குறை  

1950ஆம் ஆண்டுமுதல் இன்றுவரையான இலங்கைப் பொருளாதாரத்தில் குறைந்தது 4 அல்லது 5 வருடங்களில் மாத்திரமே வர்த்தகப் பற்றாக்குறையின்மை நிலையை இலங்கை எட்டியிருந்தது. அதைத் தவிர்த்து அனைத்து காலங்களிலுமே வர்த்தகப் பற்றாக்குறையையே கொண்டிருந்துள்ளது. 

இது, எதிர்வரும் ஆண்டில் மிகப்பெரும் கடன்தொகையை மீளச்செலுத்தவுள்ளநிலையில் பற்றாக்குறையைக் கட்டாயமாக மிகக் குறைவான அளவில் கொண்டிருக்கவேண்டிய நெருக்கடியான சூழலை, இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

காரணம், வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும்போதுதான், இலங்கையின் நாணயமாற்றுவீதம், பணவீக்கம் உட்படப் பல்வேறு காரணிகள் கட்டுக்குள் இருக்கும். இது கடன் மீளச்செலுத்தலின்போது, அதீத தாக்கத்தை செலுத்தும். 

தற்போதைய நிலையில், இலங்கையின் வர்த்தகப் பற்றக்குறையின் பெரும்பகுதியைச் சேவைத்துறை மூலமாக ஈட்டப்படும் வருமானமே நிவர்த்தி செய்கிறது. இதற்கு மேலதிகமாகவுள்ள வர்த்தகப் பற்றாக்குறையை, வெளிநாட்டு முதலீடுகள் மூலமாகவே ஈடுசெய்யத் திட்டமிடப்பட்டு இருக்கிறது. 

ஆனால், தற்போதைய அரசியல் நிலைமைகள் 2018ஆம் ஆண்டின் முதலாம் அரையாண்டில் திட்டமிடப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளைத் திரட்டிக்கொள்ள ஏதுவானதாகவுள்ளதா என்கிற கேள்வியை ஏற்படுத்தி இருக்கிறது.  

வர்த்தகப் பற்றாக்குறை மீதியை குறைவடையச் செய்வதென்பது, மறைமுகமாக இலங்கையின் ஏற்றுமதி-இறக்குமதி வருமான மற்றும் செலவீனத்தில் சமநிலையை ஏற்படுத்துவதற்கு சமமானதாகும். 

தற்போதைய நிலையில், இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தைப் பார்க்கிலும் இறக்குமதி செலவீனம் அதிகமாகவே உள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் இலங்கையின் ஏற்றுமதியில் ஏற்பட்ட அதிகரிப்பின் விளைவாக, ஏற்றுமதி வருமானம் 15 பில்லியன் அமெரிக்க டொலர்களை அண்மித்திருக்கிறது. ஆனாலும், அதற்கேற்ப இறக்குமதி செலவீனங்களும் அதிகரித்திருந்தமை கடந்த ஆண்டின் ஒரு பாதகத்தன்மையாகும்.

எனவே, இந்த ஆண்டில் கடந்த ஆண்டைப்போல ஏற்றுமதி வருமானத்தைப் பேணிக்கொண்டு, இறக்குமதி செலவீனங்களை குறைக்க நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். 

ஆனாலும், எரிபொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு இலங்கையின் எரிபொருள் இறக்குமதி செலவீனத்தை அதிகரிக்கச் செய்வதனால், இறக்குமதியில் எரிபொருள் கட்டுபாட்டை செய்தாலும், அதன் செலவைக் குறைப்பது கடினமாகிறது. எனவே, அடுத்தடுத்த இடங்களில் உள்ள அரிசி மற்றும் முதலீட்டுப் பொருட்களின் இறக்குமதியைத்தான் இது பாதிக்கக்கூடும்.  

எனவே, அரசாங்கம் இறக்குமதி கட்டுபாட்டுகளின் விளைவாக, மக்களின் பொருளாதார நலன்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் நாணய மற்றும் நிதிக்கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டியது அவசியமாகிறது.  

கடன்நிலை  

2018ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, இலங்கை மீளச்செலுத்தவேண்டிய மூலதனக் கடனின் அளவு குறைவாகவே உள்ளது. இவ்வாண்டில், இலங்கையின் அபிவிருத்திக் கடன்முறிகள் முதிர்ச்சியடைகின்றன. இதன் அளவு 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். அதுதவிர, பெற்றுள்ள கடனுக்கான வருடாந்த வட்டிக் கொடுப்பனவானது 600 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் உள்ளது. 

இந்த மீள்செலுத்துகைத் தொகைகளை, இவ்வாண்டில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ள இலங்கையின் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அபிவிருத்தி கடன்முறிகள் மூலமாக ஈடுசெய்ய எதிர்பார்க்கப்படுகிறது.  

ஆனால், 2019ஆம் ஆண்டில் இந்தநிலை 2018ஆம் ஆண்டுக்கு நேர்எதிராகவுள்ளது. 2019ஆம் ஆண்டில் மீளச்செலுத்தவேண்டிய தொகை மட்டும் சுமார் 4.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து இரண்டு மடங்காகும். அடுத்து இதேபோன்ற மிகப்பெரும் தொகையை மீளச்செலுத்தவேண்டிய நிலை 2022ஆம் ஆண்டுக்கு பின்பே உள்ளது. 2020-2022வரை ஆண்டுதோறும் மீளச்செலுத்த வேண்டிய தொகை வருடத்துக்கு சுமார் 3.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.  

2018ஆம் ஆண்டு, இலங்கை அரசுக்கு மிகப்பெரும் கடன்தொகை மீளச்செலுத்துவதற்கு முன்பான ஓய்வுநிலை ஆண்டாகக் கொள்ளலாம். இந்த ஆண்டை 2019ஆம் ஆண்டு செலுத்தவுள்ள கடனுக்குத் தயார்செய்யும் ஆண்டாக வினைத்திறன் வாய்ந்தவகையில் பயன்படுத்தவேண்டியது அவசியமாகிறது.கடன்களைப் பெற்று, தற்போதுள்ள கடனை மீளச்செலுத்துவதைத் தவிர்ப்பதற்கும், முடிந்தளவு சென்மதி நிலுவைப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கும் இந்த ஒரு வருடத்தைச் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள முடியும். 

இலங்கையின் அரசியல் காரணிகள் பாதகமாகவுள்ள நிலையில் இதைத் திறம்படக் கொண்டுசெல்வதில்தான் பொருளாதார வல்லுநர்களின் தேர்ச்சி தங்கியுள்ளது.  

2019ஆம் ஆண்டை நோக்கிய மூலோபாயங்கள்  

இலங்கையின் மிக முக்கியமான மூலோபாயங்களில் ஒன்று அந்நியச்செலவாணி ஒதுக்கத்தைப் பேணிப் பாதுகாத்தலும், மேம்படுத்தலுமாகும். கடந்த பல ஆண்டுகளில் அந்நியச் செலவாணி ஒதுக்கத்தை நிலையாகக் கொண்டிருப்பதில் பெரிதும் சிரமங்களையே இலங்கை அரசாங்கம் எதிர்கொண்டு வந்திருந்தது. 

கடந்த 2017ஆம் ஆண்டில்தான் ஓரளவுக்கு அந்நிய செலவாணி ஒதுக்கத்தில் அதிகரிப்பைக் கொண்டிருக்க முடிந்தது. கடந்த ஆண்டின் முடிவில் இது சுமார் 7.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்திருந்தது. 

இதற்குப்  பிரதான மூலமாகமைந்தது வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட நிதியாகும். குறிப்பாக, இந்த 7.9 பில்லியன் அமெரிக்க டொலரில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் குத்தகை மூலம் பெறப்பட்ட 1.1 பில்லியன் அமெரிக்க டொலர் உள்ளடங்கியுள்ளது. 

இதே ஆண்டும், கடந்த ஆண்டைப்போல வெளிநாட்டு நிதிகள் வரவிருப்பதன் காரணமாக, அந்நிய செலவாணியில் கடந்த வருடத்தில் எட்டப்பட்ட இலக்கை இலகுவாக எட்டக்கூடியதாக இருக்கும்.  

வெளிநாட்டு முதலீடுகளைக் கவருவது அடுத்தகட்ட முக்கியமான மூலோபாயங்களில் ஒன்றாகும். இந்த ஆண்டில் மாத்திரம் அபிவிருத்தி முறிகளின் ஊடாக சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களும், வெளிநாட்டு வர்த்தகக் கடன்கள் மூலமாக சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களும் இலங்கைக்குள் கொண்டுவர எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

இதில் அபிவிருத்தி முறி மூலமான வெளிநாட்டு நிதி இவ்வருடத்துக்கான கடன் மீளசெலுத்தலுக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது. இதைத் தவிர்த்து வரவுள்ள, வர எதிர்பார்க்கும் வெளிநாட்டு நிதியை அடுத்த வருடத்துக்கு எவ்வாறு திறம்பட பயன்படுத்தலாம் என்பதிலேயே பொருளாதார மூலோபாய வெற்றி தங்கியுள்ளது.  

அடுத்து, கடந்த வரவு-செலவு திட்டத்தில் குறிப்பிட்டதுபோல, வினைதிறனற்று இருக்கும் அரசாங்கச் சொத்துகளைத் தனியார்மயபடுத்தல் அல்லது அரசாங்கத்தின் சொத்துகளைக் குத்தகைக்கு வழங்குதல் மூலமாக நிதியைத் திரட்டிக் கொள்ளும் செயல்பாட்டை நடைமுறைபடுத்துவதாகும். இதன் ஊடாக கடன் மீளசெலுத்துவதற்கான வருமானத்தையும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும். ஆனால், இதனை நடைமுறைபடுத்துவதில் அரசியல்ரீதியான எதிர்ப்புகளை உறுதியற்ற அரசாங்கம் எவ்வாறு கையாளப்போகிறது என்பது விடையற்ற கேள்வியாகத் தொக்கியே நிற்கிறது.  

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை, இலங்கைக்குள் கொண்டுவருவது மற்றுமொரு மூலோபாயமாகும். கடந்த வருடங்களில் இலங்கையின் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் அளவு சராசரியாக 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்திருக்கிறது. இதனை இந்த வருடத்திலிருந்து குறைந்தது 2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது. இதன்மூலமும், அடுத்தடுத்த வருடங்களிலுள்ள மீளசெலுத்தல் நிலுவையைக் குறைக்க கூடியதாகவிருக்கும்.  

மேற்கூறிய மூலோபாயங்கள் இலங்கையின் குறுங்காலக் கடன் அழுத்தத்தை குறைக்கக்கூடியதும், பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணக்கூடியதுமான மூலோபாயங்கள் ஆகும். 

ஆனால், இதுமட்டுமே இலங்கையின் நிதிசார் பொருளாதாரக் கொள்கைகளை நீண்டகாலத்தில் ஸ்திரமாகப் பேணிக்கொள்ளப் போதுமானதாக அமையாது. கடந்தகால நிதிச்சீர்கேடுகளைக் களைந்து, பொருத்தமானதும், உறுதியானதுமான பொருளாதாரக் கொள்கைகளை நீண்டகாலநோக்குடன் திட்டமிட்டு, அதைச் செயல்படுத்தவேண்டியது அவசியமாகிறது.

கடந்த வரவு-செலவு திட்டத்தில் இதற்கான அடித்தளம் போடப்பட்டிருந்தது. மூலதனச் சந்தையை அதிகளவில் பயன்படுத்திக்கொள்ளத் தக்கவகையில் இந்த வரவு-செலவு திட்டங்கள் பாராட்டத்தக்க அம்சங்களைக் கொண்டதாக அமைந்திருந்தன. ஆனால், அவை எப்படி நடைமுறைபடுத்தப்படும் என்பதில்தான் அதன் வெற்றியும், பொருளாதாரத்தின் வெற்றியும் தங்கியுள்ளது.    


You May Also Like

  Comments - 2

  • Amal Wednesday, 04 July 2018 03:14 AM

    கருத்து தனிக்கை செய்வதானால் கருத்தை கேட்பதேன் ஆசிரியரே துணிந்து சொல்லும் காலம் வரட்டும் அப்போது விடை கிடைக்கும்

    Reply : 1       0

    கு.மதிவதனன் Thursday, 10 January 2019 08:06 AM

    ஒவ்வொரு இலங்கை பிரஜைக்கும் அரசு பெற்ற கடனில் பங்கு உண்டு எனவே ஒவ்வொரு பிரஜையும் தமது பங்கை செலுத்தினால் நமது நாட்டின் கடன் சுமை நீங்க வாய்ப்பு உள்ளது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .