2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உண்ணாட்டரசிறை சட்டமும் அடையப்படக்கூடிய இலக்குகளும்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2017 ஒக்டோபர் 02 , மு.ப. 10:06 - 1     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை சர்வதேச நாணய நிதியத்தைத் திருப்திபடுத்துவதற்காகவும் 2020இல் அடையப்படவேண்டிய இலக்குகளுக்காகவும், உண்ணாட்டரசிறைச் சட்டத்தை அமுல்படுத்தத் தயாராகிவிட்டது. அதனடிப்படையில் பெரும்பாலான மாற்றங்கள் எதிர்வரும் ஆண்டின் சித்திரை மாதம் அமுலுக்கு வரவுள்ளது. உண்ணாட்டரசிறைத் திட்டத்தைப் பொறுத்தவரையில், மிக முக்கியமான மூன்று இலக்குகளை அது தன்னகத்தே கொண்டுள்ளது. பாதீட்டு பற்றாக்குறையைக் குறைத்தல், வருமானத்தை அதிகரித்தல், வினைத்திறன் வாய்ந்த வரிக் கட்டமைப்பை உருவாக்குதல் என்பன ஆகும். இவை அனைத்துமே அடிப்படையில் இலங்கையின் பொருளாதாரத்தைத்தான் மேம்படுத்தப் போகின்றன. ஆனால், இந்தப் பொருளாதார இலக்குகளை அடைவதிலும் பொருளாதாரத்தை முன்னேற்றுவதிலும், எவ்வளவு தூரம் அரசு வெற்றியடையும் என்பதே நம்முன் கேள்வியாய் தொக்கி நிற்கிறது.  

வருமானத்தை அதிகரித்தல்

உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் முதன்மை நோக்கங்களிலொன்று, இறைவரி வருமானத்தை அதியுட்சபட்சமாக அதிகரிப்பதாகும். இதன்மூலம், இலங்கை அரசுக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய நன்மை, மொத்த தேசிய உற்பத்தியில் மிகக்குறைந்த பங்களிப்பை செய்யும் வரி வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் நிதிப்பற்றாக்குறையைக் குறைவடையச் செய்வதாகும். இதன்மூலம், பொருளாதார வளர்ச்சிக்கான செலவீனங்களை அதிகரிக்கவும் அதற்கான நிதிப் பங்களிப்பை அரசால் செய்யவும் முடியும்.  

கடந்த காலங்களில், இலங்கை அரசாங்கமானது, ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த வரி வருமானத்தைக் கொண்டே, தனது பாதீட்டுத் தேவைகளை நிறைவேற்றியிருக்கிறது. குறிப்பாக, நபர் ஒருவருக்கான தலா வருமானம் இலங்கையில் அதிகரித்து இருந்தாலும், நாட்டின் மொத்த தேசிய வருமானமானது, ஆண்டுதோறும் மொத்த தேசிய உற்பத்தியில் பங்களிப்பு செய்யும் விகிதத்தில் குறைவடைந்தே வந்திருக்கிறது. 1990ஆம் ஆண்டுக்கு முன்பு, மொத்த தேசிய உற்பத்தியில் 20 சதவீத பங்களிப்பைக் கொண்டிருந்த மொத்த வருமானமானது, அதற்கு பின்னாக குறைவடைந்து, 10 சதவீதத்துக்கும் குறைவான பங்களிப்பையே கொண்டிருந்தது. ஆனாலும், ஆட்சி மாற்றத்துக்குப் பின்னான 2014-2016ஆம் ஆண்டுப் பகுதியில், இந்த மொத்த வருமானப் பங்களிப்பில் அதிகரிப்பு ஏற்பட்டு 14-16 சதவீத பங்களிப்பை எட்டியிருந்தது.  

இதற்குப் பிரதான காரணம், வருமான முறையிலும் வரி விதிப்பு முறைகளிலும் ஏற்படுத்தப்பட்ட ஒரு சில மாற்றமே ஆகும். 2017இல், இந்த நிலை மேலும் அதிகரித்து, பெரும்பாலும் 17 சதவீதம் எனும் நிலையை அடையும் எனவும் 2020இல், மொத்தத் தேசிய உற்பத்தியில் வரி வருமானப் பங்களிப்பானது, 20 சதவீதத்தை அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  

மேற்கூறிய எதிர்பார்க்கைகள் ஆவணங்களில் கணக்கிடப்பட்டவைதான், புதிய நடைமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும்போது, அவை அடையும் வெற்றியில்தான் இந்த ஆவண கணிப்புகளின் நமிபிக்கைத்தன்மை தங்கியுள்ளது.  

வருமானத்தை அதிகரிக்கக் கூடியவகையில் உண்ணாட்டரசிறைச் சட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உள்ளடக்கப்பட்டு இருக்கிறது. அவை,  

  • பெருவாரியான வரிச் சலுகைகள் நீக்கப்பட்டுள்ளன.  
  • நிறுவனங்களின் வருமானத்திலான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.  
  • மூலதன ஆதாய வரி உட்பட இன்னும் பிற புதிய வரிகள் அமுல்படுத்தப்பட்டு உள்ளன.  
  • வரிஏய்ப்பு மற்றும் வரி தவிர்ப்புக்கு எதிரான நடைமுறைகள் தீவிரபடுத்தபட்டுள்ளது.  

இலங்கையின் வரி அடிப்படை

இலங்கையின் வரி அடிப்படையானது, வரி ஏய்ப்பு மற்றும் வரி தவிர்ப்பின் விளைவாக, மிகக் குறைவான மட்டத்திலேயே உள்ளது. ஒவ்வொரு வருடமும், புதிய பாதீட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்படும்போது, வரி அடிப்படையில் நியமனத்தன்மையைப் பேணும் விதமாக, புதிய புதியச் சட்டங்கள் நடைமுறைபடுத்தபட்டு வந்திருக்கிறது. ஆனால், அவற்றால் வரிஏய்ப்பு, வரி தவிர்ப்பு முறைகேடுகளைத் தவிர்க்க இயலவில்லை. எனவே, இதற்குத் தீர்வு காணும் பொருட்டு, புதிய இறைவரி சட்டத்தில், இலங்கை பிரஜாவுரிமையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரி அடையாளப்படுத்தல் இலக்கத்தை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.  

இதன்மூலமாக, வருமானம் உழைக்கும் தகுதிநிலை கொண்ட ஒவ்வொருவரும், இறைவரி திணைக்களத்தின் கண்காணிப்புக்குள் வருவதுடன், அவர்கள் வருடந்தோறும் தமது வரி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டிய நிலையும் ஏற்படும். இதன்மூலமாக, வரி ஏய்ப்பு மற்றும் வரி தவிர்ப்பு முறைகேடுகளை முழுமையாகத் தவிர்க்க முடியும்.  

இவற்றுக்கு மேலாக, புதிய உண்ணாட்டரசிறைச் சட்டத்தில், முதலில் முன்மொழியப்பட்ட மதசார் நிறுவனங்களின் வரி விதிப்பு விகிதத்தில் குறைப்பு செய்யப்பட்டுள்ளதுடன், இனங்காணப்பட்ட சில துறைகளுக்கு, வரி விகித குறைப்பு மற்றும், சலுகைகள் வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.  

அத்துடன், வருமானவரி விதிப்பிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. வருமானம் குறைந்தவர்களுக்கு வரி குறைவாகவும் வருமானம் கூடியவர்களுக்கு அதிக வரி என்கிற நியமமும் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதே நடைமுறை, அதிக வருமானம் உழைக்கும் நிறுவனங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  

வரி நிர்வாகம்  

வரிவிதிப்பிலும், வரி வருமானத்திலும் முன்னேற்றகரமான மாற்றங்கள் நிகழ வேண்டுமெனின், அதற்கு வரி நிர்வாகம் மிகச்சிறந்த முறையில் செயற்பட வேண்டியது அவசியமாகிறது. வரி வருமானச்சேகரிப்பில், மிக முக்கிய வரி முறைகேடாக பார்க்கப்படுவது வரி ஏய்ப்பாகும். அதாவது, வரியை முழுமையாக செலுத்தாது தவிர்த்தல் அல்லது மிகக்குறைவான வரியை செலுத்தி தப்பித்துகொள்ளும் நிலை. இந்தநிலை தொடர்வதற்கு மிகமுக்கிய காரணம், வரி நிர்வாகமும் அது சார்ந்துள்ள நடைமுறைகளும் வினைத்திறனற்ற வகையில் செயல்படுவதாகும். மிகப்பெரிய வணிக நிறுவனங்களும், செல்வந்தர்களும் இந்த வரி ஏய்ப்பின் மூலமாக, அரசாங்கத்துக்கு வரவேண்டிய பெரும்தொகை வருமானத்தை தமதாக்கிக் கொள்ளுகிறார்கள். வரி நிர்வாகமும் வினைத்திறன் வாய்ந்த வகையில் செயற்படாததனால், அவர்கள் மீது நிரூபிக்கக்கூடிய குற்றசாட்டுக்களுக்கு போதிய ஆதாரம் திரட்டப்படாமல் கடந்து செல்லப்படுகிறது. ஆனாலும், உண்ணாட்டரசிறைச் சட்டத்திலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்,  வரி அடையாளப்படுத்தல் இலக்கத்தை வழங்கும் நடைமுறையானது, அனைவரின் வருமான மூலங்களையும் இறைவரித் திணைக்களத்தின் கண்காணிப்புக்குள் கொண்டுவருவதால், வரிஏய்ப்​ைப குறைக்கக் கூடியதாக அல்லது இல்லாதொழிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, இறைவரி திணைக்களத்தின் வினைத்திறன் வாய்ந்த பங்களிப்பு இன்றியமையாத காரணியாக இருக்கும்.  

நிதி ஒருங்கிணைப்பு

உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் மிக முக்கிய இலக்குகளில் ஒன்று, நிதி ஒருங்கிணைப்பின் வழியாக வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதுடன், இலங்கையின் கடன்படு நிலையிலும் மாற்றத்தைக் கொண்டு வருவதாகும். அதுபோல, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் விளைவாக கிடைக்கப் பெறும் வருமானம் மீளவும், வினைத்திறனற்ற அரசதுறை நிறுவனங்களுக்கே வழங்கப்படுமாயின்,  அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட இலக்குகளை அடைவதென்பது இயலாத காரியமாகவே அமையும். எனவே, வரிச்சட்ட அறிமுகத்துடன் நிதி ஒருங்கிணைப்பு பணிகள் மற்றும் துறைசார் முன்னேற்றங்களையும், அரசாங்கம் பரிசீலனை செய்யவேண்டியது அவசியமாகிறது.  

முற்போக்கான புதிய வரி அமைப்பு

உண்ணாட்டரசிறைச் சட்டமானது,  நடைமுறையிலுள்ள பல்வேறு குறைபாடுகளை நிவர்த்திப்பதாக உள்ளமை, பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். குறிப்பாக, வருமானம் குறைந்தவர்கள் மீதான வரி விதிப்பில் மாற்றம் ஏற்படுத்தபட்டுள்ளது. உதாரணமாக, 600,000/- வருடாந்த வருமானம் பெறுபவர்கள் வரிவிதிப்புக்கு தகுதியானவர்கள் என்கிற நிலை மாற்றப்பட்டு, இந்த எல்லையானது, 1.2 மில்லியன் வருட வருமானமாக மாற்றப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், மாத வருமானம் 100,000/- வரை பெறுபவர்கள் வரிவிதிப்பிலிருந்து
விதி விலக்களிக்கப்பட்டுள்ளார்கள். அதுமட்டுமல்லாது, அரசாங்கமானது,  தனது மறைமுக வரி வருமானத்தை 80 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதுடன், நேரடி வரி வருமானத்தை 18 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதனடிப்படையில், சாமானியர்களும் பங்களிக்கும் மறைமுக வரியின் அளவு குறைவதுடன், பெரும் செல்வந்தர்கள்,  இலாபம் உழைக்கும் நிறுவனங்களின் மூலாமான நேரடி வரி வருமானம் அதிகரிக்கும். இவை அனைத்துமே, 2020ஆம் ஆண்டில், நேரடி மற்றும் மறைமுக வரி வருமானத்தின் விகிதாசாரமானது, 40:60 என அமைய வேண்டும் என்கிற முனைப்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் ஆகும். இதன் மூலம், வருமான பரம்பலை அடிப்படையாகக்கொண்டு வரிவிதிப்பில் நியாத்துவத்தைப்பேண முடியும்.  

உணவில் வரி

இலங்கை அரசாங்கத்தின் வரி முறைகளில் அதிகம் விமர்சனத்துக்குள்ளாவது, அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரியாகும். குறிப்பாக, கோதுமை மா, வெங்காயம், அரிசி , பருப்பு, பால் போன்ற பொருட்கள் மீது விதிக்கப்படும் வரியாகும். இதற்கு அரசாங்கத்தினால், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், உள்நாட்டு விவசாயிகளின் நலன் காக்கவும், இத்தகைய வரிகள், இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்படுவதாகச் சொல்லுகிறார்கள். அதில் பாதியளவு உண்மையும் இருக்கிறது.ஆனால், அரசாங்கத்தினால் நிச்சயமாக இந்த வரியை குறைக்க முடியும். அதற்கு நேரடி வரியில் பொருத்தமான அதிகரிப்பையும் வசூலிப்பையும், அரசாங்கம் உறுதி செய்வது அவசியமாகிறது. புதிய இறைவரிச் சட்டத்தின் மூலம், இந்தநிலை அடையப்படுமானால், எதிர்காலத்தில் உணவுப் பொருட்கள் மீதான வரிச் சுமையை மக்கள் அனுபவிக்க நேரிடாது.   பெரும்பாலான உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் இலக்குகளும் கொள்கைகளும்,  நீண்டகாலத்தில் அடையப்படுகின்ற இலக்குகளாகவே இருக்கிறது. இதன் மூலம், அரசாங்க நிதி ஒருங்கிணைப்பைச் செய்து, அபிவிருத்தியை ஏற்படுத்த எதிர்பார்த்தாலும் இவை அனைத்துமே சரியான வகையில் அமுல்படுத்தப்பதுவதிலும், வரி நிர்வாகம் வினைத்திறனாக செயல்படுவதிலும்தான் தங்கியுள்ளது.    

 


You May Also Like

  Comments - 1

  • S. Ajendra Saturday, 28 October 2017 06:53 AM

    அருமையான கட்டுரை... உள்நாடு என்ற சொல் சரியான புணர்தலோடு உண்ணாடு என்று பயன்படுத்தப்பட்டுள்ளது சிறப்பு. எனினும் direct tax , indirect tax போன்ற சொற்களுக்கு நேர்வரி நேரில்வரி என்ற சரியான கலைச்சொற்களைப் பயன்படுத்தலாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .