2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

எரிபொருள் விலையேற்றமும் விமர்சனங்களும்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2018 மே 21 , மு.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பொருளாதாரப் பிறழ்வு நிலைக்கு மிகச்சிறந்த உதாரணமாக, எரிபொருள் விலையேற்ற நிலையைச் சொல்லலாம். ஆண்டாண்டு காலமாக மக்களின் நம்பிக்கையைப் பொய்யாகப் பெற்றுக்கொள்ள, இந்த அரசாங்கங்கள் நடாத்திய வாக்குறுதி விளையாட்டின் பிரதிபலனை நாம் இந்த எரிபொருள் விலையேற்றத்துடன் அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறோம் என்றால் மிகையாகாது. 

     இலங்கை வரலாற்றில், பொருளாதார நலன் மற்றும் மக்கள் நலனை அடிப்படையாகக்கொண்டு, தேர்தல் வாக்குறுதிகள் தீர்மானிக்கப்படுவதில்லை. தேர்தலில் வெற்றி பெறுவதற்குப் பொருளாதார ரீதியாகச் செய்ய முடியாது என்கிறபோதிலும், அதையே வாக்குறுதியாகத் தந்து, மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றியே வந்திருக்கிறார்கள் அரசியல்வாதிகள்.

     அந்தவகையில், நல்லாட்சி அரசால் நமக்குத் தரப்பட்ட முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று, எரிபொருள் விலைகளில் பாரிய விலைக் குறைப்பு. பாரியவிலைக் குறைப்பு சாமானியர்களுக்கும் சாதகமாகத் தென்பட, அதன் குறுங்கால மற்றும் நீண்டகால நலன்களையும் விளைவுகளையும் கருத்தில் கொள்ளாது ஏற்றுக்கொண்டோம். இன்று அதற்கான பிரதிபலனையும் விளைவுகளையும் நல்லாட்சி அரசு நம்மீதே சுமத்தும்போது, விசனத்துடன் தாங்கி நிற்கிறோம்.  

உண்மையில் எரிபொருள் விலையேற்றம் சரியானதா அல்லது மக்களுக்கு அரசாங்கம் பூச்சாண்டி காட்டுகிறதா என்பது தொடர்பில் எல்லாம் அறிந்திருப்பதற்கு, உலக எரிபொருள் விலை தொடர்பிலும், அதனுடன் தொடர்புபட்ட இலங்கையின் பொருளாதாரம் தொடர்பிலும் அறிந்திருக்கவேண்டியது அவசியமாகிறது.  

உலக எரிபொருள் சந்தை விலையிலான மாற்றங்கள்  

கடந்த வாரத்துக்கு முந்தைய வாரத்தில், உலக எரிபொருள் சந்தையில், கச்சா எண்ணெய் பரல் ஒன்றுக்கான விலை 70 அமெரிக்க டொலர்களைத் தாண்டியிருந்தது. 

இது, கடந்த ஒருசில வருடங்களுக்கு முன்பு, 50 அமெரிக்க டொலர்களுக்கும் குறைவாகவே இருந்திருந்தது. இன்னமும் கொஞ்சம் முன்னோக்கிச் சென்று பார்ப்போமானால், மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த இறுதிக் காலக்கட்டத்தில், இந்தக் கச்சா எண்ணெய் பரல் ஒன்றுக்கான விலை, சுமார் 100 அமெரிக்க டொலர்களாக இருந்தது. இது, உலக எரிபொருள் சந்தையில், எரிபொருள் விலையில் ஒரு நிலையில்லாத் தன்மையக் கொண்டுள்ளமைக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது.  

இந்த எரிபொருள் விலையானது, ஏற்ற இறக்கத்துடன் அமைந்திருப்பதற்குப் பல்வேறு அகப், புறக் காரணிகள் காரணமாக அமைந்திருக்கின்றன. இவற்றில், சகல காரணங்களுமே எரிபொருளுக்கான கேள்வியை அல்லது நிரம்பலை மிக அதிகளவில் பாதிப்பதாக அமைந்திருக்கின்றன. இதன்காரணமாக, எரிபொருள் விலையில் ஏற்ற, இறக்கங்கள் சடுதியானவையாக இருக்கிறது.  

உதாரணமாக, ஒவ்வொரு நாட்டையும் பொறுத்தவரை, எரிபொருள் பயன்பாட்டுக்கு ஒரு பருவநிலை இருக்கிறது. உச்சமான பருவநிலையில் அதிகமான எரிபொருளை அந்தநாடுகள் கொள்வனவு செய்வதுடன், ஏனைய காலங்களில் குறைவாகக் கொள்வனவு செய்யும். 

ஆனால், கடந்த காலங்களில் சீனா, இந்தியா போன்ற துரித அபிவிருத்தியடையும் நாடுகள், தமது அபிவிருத்தி நோக்கிய பணியைத் துரிதபடுத்தியதன் விளைவால், எரிபொருள் சந்தையில், எரிபொருளுக்கான கேள்வி அதிகரித்து விலை அதிகரிக்கக் காரணமாகியுள்ளது. 

அதுபோல, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகள், எரிபொருளின் நிரம்பலைக் குறைவடையச் செய்து, மற்றுமொரு பக்கத்தால் விலை அதிகரிப்புக்குக் காரணமாக அமைந்துள்ளது.  

மேற்கூறிய இரண்டு பிரதான உதாரணங்கள் தவிர்த்து, ஏனைய சில காரணிகளும் உலக எரிபொருள் சந்தையில், எரிபொருள் விலையேற்றத்துக்கும், ஒரு நிலையான விலையைத் தொடர்ச்சியாகப் பேணமுடியாத நிலைக்குக் காரணமாக அமைந்துள்ளது. 

இந்தநிலையில், இந்தச் சடுதியான விலை ஏற்றத்தாழ்வுகளை, இலங்கை எவ்வளவுதூரம் தனக்கு ஏற்றால்போல பயன்படுத்திக்கொண்டுள்ளது என்கிற கேள்வி எழாமல் இல்லை.  

இலங்கையின் எரிபொருள் பயன்பாடு   

உலக எரிபொருள்ச் சந்தையுடன் இணைந்துள்ள நாடுகள், எரிபொருள் உற்பத்தியாளர்களாக, எரிபொருள் இறக்குமதியாளர்களாக, எரிபொருள் வர்த்தகர்களாக இருப்பார்கள். 

இலங்கையைப் பொறுத்த வரையில், அது எரிபொருள் இறக்குமதியாளராக இருக்கின்றது. இலங்கை, எரிபொருள் தயாரிப்பு நாடாக மாறியிருக்க வேண்டிய நிலையில், அதற்கான திட்டங்கள் வினைத்திறனாக முன்னெடுக்கப்படாத காரணத்தாலும், அதற்கான முதலீடுகள் முறையாக மேற்கொள்ளப்படாததாலும் தொடர்ச்சியாக எரிபொருளை இறக்குமதி செய்யும் ஒருநாடாகவே இலங்கை இருந்து வருகின்றது.  

அத்துடன், 1960ஆம் ஆண்டுக்குப் பிற்பாடாக, நாட்டின் எரிபொருள் வர்த்தகமானது தேசியமயமாக்கப்பட்டதன் விளைவாக, எரிபொருள் வர்த்தகர் என்கிற நிலையை எட்டமுடியாத வட்டத்துக்குள்ளும் கட்டுண்டு விட்டது. 

இதனால், பல்வேறு பல்தேசியக் கம்பனிகளும் சிங்கப்பூரை நோக்கி நகர, இலங்கை அதன்மூலமான வர்த்தக நலனையும் இழந்துவிட்டது. இதன் காரணமாக, இலங்கை அரசு வேறு எதுவிதமான வாய்ப்புகளுமின்றித் தொடர்ச்சியாக, எரிபொருளை இறக்குமதி செய்யும் நாடாகவேயிருந்து வருகின்றது. 

இதன்காரணமாக, உலகசந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் சடுதியான மாற்றங்களும் எரிபொருள் விலையை மிக அதிகளவில் பாதிப்பதாக அமைந்திருக்கிறது.  

தேர்தல்களும் இலங்கையின் எரிபொருள் விலையும்  

எரிபொருள் சந்தையில், எரிபொருளை இறக்குமதி செய்யும் பெரும்பாலான நாடுகளில் எரிபொருள் விலையானது, வெளிப்படைத் தன்மை வாய்ந்ததாகவும் உள்நாட்டு எரிபொருள் விலையானது, சர்வதேச சந்தையின் விலை மாற்றங்களை எதிரொலிப்பதாகவும் உள்ளது.

 இதன் காரணமாக உள்நாட்டு நுகர்வோர், தாம் பயன்படுத்தும் எரிபொருள் விலைக்கு மூன்றாம் தரப்பினர் ஒருவரைத் தங்கியிருக்கவோ அல்லது நுகர்வோரின் விலையை இன்னுமொரு மூன்றாம் தரப்பினர் செலுத்தும் நிலையோ உருவாக்கப்படவில்லை.  

ஆனால், இலங்கையை பொறுத்தவரையில், எரிபொருள் விலை மாற்றமானது, உலகசந்தையின் விலை மாற்றத்துடன் தொடர்புபட்டதல்ல. மாறாக, இந்த விலை மாற்றமானது, அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதிகளுடன் தொடர்புபட்டதாக அமைந்திருக்கிறது. 

உதாரணத்துக்கு, 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்ற சமயத்தில், 92-octane எரிபொருள் லீற்றர் ஒன்றுக்கான விலையை 150 ரூபாயிலிருந்து 117 ரூபாயாகக் குறைத்திருந்தது. இதற்கு, அந்தச் சமயத்தில் உலக எரிபொருள் சந்தையில் குறைந்திருந்த விலையும் ஒரு காரணமாக அமைந்திருந்தது. ஆனால், இந்த நிலையை, இலங்கை அரசு எவ்வித பொருளாதார நலன்களையும் கருத்தில்கொள்ளாது தொடர்ந்தமையே தவறானதாக மாறியிருக்கிறது.  

2017ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே, உலக எரிபொருள் சந்தையில் எரிபொருளுக்கான விலை, படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. இதன்பிரகாரம், இலங்கை அரசு எரிபொருளைக் கொள்வனவு செய்ய, மிக அதிகமான அமெரிக்க டொலர்களைச் செலவிட வேண்டியநிலை ஏற்பட்டது. ஆனால், அரசாங்கத்தின் கொள்கையின் காரணமாக, உள்நாட்டில் இந்த விலை மாற்றத்தைப் பிரதிபலிக்க முடியவில்லை. 

இதன்காரணமாக, இந்த நட்டத்தை இலங்கைப் பெற்றோலிய கூட்டுத்தாபனமே ஏற்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கைப் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கையின் பிரகாரம், 2016ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் பரல் ஒன்றுக்கான சாராசரி விலை 46.30 அமெரிக்க டொலராக இருந்ததுடன், 2017இல் 57.79 அமெரிக்க டொலர்களாக அதிகரித்திருந்தமை சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.  

சர்வதேச சந்தையில் எரிபொருளை உற்பத்தி செய்யும் நாடுகளைத் தவிர்த்து ஒப்பிடும்போது, இலங்கையில் எரிபொருள் விலையானது மிகக்குறைவாகவே இருக்கிறது. 

கடந்த ஏப்ரல் மாதத்தின் முடிவோடு, உலக எரிபொருள் விலையில் குறிப்பாக, பெற்றோல் ஒரு லீற்றருக்கான உலகநாடுகளின் சராசரி விலையாக 1.15 அமெரிக்க டொலர்கள் உள்ளநிலையில், இலங்கையின் விலை 0.81 அமெரிக்க டொலராக இருந்திருக்கிறது. இலங்கையுடன் ஒப்பிடுமிடத்து, உலக எரிபொருள் சந்தையின் விலை அதிகரிப்புக்கு ஏற்றவகையில், ஏனைய நாடுகள் தமது உள்நாட்டு எரிபொருள் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்த போதிலும், இலங்கை அரசாங்கமானது கடந்த மூன்று வருடங்களாக, விலையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாமலே இருந்திருக்கிறது. இதன் விளைவாக, ஏற்பட்ட நட்டம் மற்றும் கடன்கள் மேலும் ஒரு பொருளாதாரச் சுமையாக மாறியிருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.  

2018ஆம் ஆண்டின் எரிபொருள் கடன்சுமை  

ஏனைய அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து இலங்கை அரசின் எரிபொருளுக்கான கடன் மிகமிக அதிகமாகும். குறிப்பாக, இலங்கை அரசாங்கம், தனது ஏற்றுமதி வருமானத்தில் 30%த்தை எரிபொருள் கொள்வனவுக்கே பயன்படுத்தும் நிலை இருக்கிறது. 2018ஆம் ஆண்டில், உலக எரிபொருள் சந்தையில் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து, இன்னும் அதிகமான ஏற்றுமதி வருமானத்தைச் செலவிடவேண்டிய நிலைக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டிருந்தது.  

இந்த நிலையானது இலங்கைக்கு மேலதிக ஏற்றுமதி வருமானம் வேண்டும் என்கிற நிலையையும், ஏற்படுகின்ற கடனை மீளசெலுத்த வேண்டும் என்கிற நிலையும் உருவாக்கியுள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிக்கைகளின் பிரகாரம், 2017ஆம் ஆண்டில் இலங்கை அரசு 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஏற்றுமதி வருமானத்திலிருந்து கடன் மீளச்செலுத்தல் செயற்பாட்டுக்காக பயன்படுத்தியுள்ளது. இது இலங்கையின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானத்தில் 24%மாகும். 

இவ்வாறு, ஏற்றுமதி வருமானத்தின் பெரும்பகுதி இலங்கையின் பெற்றோலியக் கடனை மீளச்செலுத்தப் பயன்படுமாயின், நாட்டின் அபிவிருத்திக்குப் பணத்தை எப்படிச் செலவிட முடியும்?  

அதுபோல, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கடன்களை மீளச்செலுத்த, இலங்கை அரசு பயன்படுத்தும் மற்றுமொரு வருமான மூலமாக, வரி வருமான மூலம் உள்ளது. தற்போது கடன்நிலை படிப்படியாக அதிகரிக்கின்ற நிலையில், இலங்கை அரசுக்கு வரி வருமானமும் போதாது என்கிறபோது, புதிய வரிகளையும் வரிச்சுமையையும் மக்கள் மீது சுமத்துகின்ற நிலை உருவாகியுள்ளது.  

மேற்கூறிய செலவுகளின் உண்மை அர்த்தம் என்னவெனில், இலங்கை அரசு எரிபொருள் விற்பனையில் ஏற்படும் நட்டத்தை அல்லது இழப்பை ஈடுசெய்ய, அரச வருமானத்தையும் ஏற்றுமதி வருமானத்தையும் தொடர்ச்சியாகப் பயன்படுத்துமாயின், அதன் நிதிசார் பிரதிகூலத்தை  நாட்டின் பாதீட்டின் மூலமாகவும் நிதியியல் கொள்கைகள் மூலமாகவும் மீளவும் மக்களே சுமக்க வேண்டியிருக்கும் என்பதே ஆகும்.  

தீர்வு என்ன?  

இலங்கை போன்ற நாடுகளின் அரசியல்வாதிகளும் சரி, பொருளியல் வல்லுநர்களும் சரி, தமது கழுத்தை சுற்றி இறுகியிருக்கும் கடன் எனும் கயிற்றின் வலியைப் பொறுக்க முடியாதபோது மட்டுமே எதிர்வினையாற்றத் தொடங்குவார்கள். அதுவரை, அதை அதன்போக்கிலேயே விட்டுவிட்டு, அதன்மூலம் ஏதேனும் அரசியல் இலாபங்களைப் பெற்றுக்கொள்ள முடியுமா என மட்டுமே பார்ப்பார்கள். 

நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வரும்போதே, உலக எரிபொருள் சந்தையின் விலையைப் பிரதிபலிக்கும் உள்நாட்டு எரிபொருள் விலைப்பொறிமுறையை இலங்கை அரசு உருவாக்கியிருக்க வேண்டும். 

அப்படியாயின், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கடன், மேலும் மேலும்அதிகரித்து இருக்காது. இலங்கை அரசும் அதீத வருமானத்தை இதற்குச் செலவிட வேண்டி ஏற்பட்டிருக்காது. 

ஆனால், தற்போதுதான் நல்லாட்சி அரசாங்கம் விழித்துகொண்டது போல, புதிய விலைப்பொறிமுறையைச் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்பந்தத்தின் பெயரில் அறிமுகப்படுத்தி, படிப்படியாக அதிகரிக்க வேண்டிய விலையை, ஒரே நேரத்தில் மிக அதிகமாக அதிகரித்து இருக்கிறது.

 தற்போதைய நிலையில், கழுத்தை இறுக்கும் கயிற்றை தளர்த்த இதுதான் வழியாக இருந்தாலும், இந்தச் செய‌ற்பாடு, மக்களின் அன்றாடப் பயன்பாட்டுக்கான ஏனைய பொருட்களின் விலையில் அதிகரிப்பை ஏற்படுத்தி, நல்லாட்சி அரசாங்கத்தின் தலைக்கு மேலே தொங்கிக்கொண்டிருக்கும், மக்களின் செல்வாக்கு எனும் கத்தியின் ஒரு முடிச்சுக் கயிற்றைத் தளர்த்தியிருக்கிறது. 

இதன் காரணமாக, ஏற்படக்கூடிய எதிர்வினைகளை எதிர்காலத்தில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .