2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சீனி வரி விதிப்பால் உள்நாட்டு நெக்டார், பழப்பான உற்பத்தியாளர்கள் பாதிப்பு

Editorial   / 2018 நவம்பர் 08 , மு.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டு நெக்டார் வகை மற்றும் பழப்பான வகை உற்பத்தியாளர்கள் சீனி வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

குறிப்பாக மென்பான வகைகளில் மாத்திரம் அறவிடப்பட்ட சீனி வரி விதிப்பு, சகல விதமான இனிப்பு சுவையூட்டப்பட்ட பான வகைகளுக்கும் நீடிப்பது தொடர்பில் 2018 ஜுலை மாதம் 12ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை தொடர்ந்து, பழப்பானங்கள் மற்றும் நெக்டார் தயாரிப்பின் போது பயன்படுத்தப்படும் ஒவ்வொரு கிராம் சீனிக்கும் 50 சதம் அல்லது ஒரு லீற்றருக்கு 12 ரூபாய் இவற்றில் உயர்ந்த தொகை வரியாக அறவிடப்பட தீர்மானிக்கப்பட்டது.  

2018 பாதீட்டின் பிரகாரம் நாட்டின் மொத்த வருமானத்தில் 4.5 சதவீதம் சீனி வரியிலிருந்து பெறப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  

இதன் காரணமாக உள்நாட்டு பழப்பானங்கள் மற்றும் நெக்டார் உற்பத்தியாளர்கள் இரு தெரிவுகளை கொண்டுள்ளனர், தமது உற்பத்திகளில் சீனியின் அளவை குறைத்து தயாரிப்பது அல்லது விற்பனை விலையை அதிகரித்து தமது வாடிக்கையாளர்களை இழப்பது போன்றன அந்த இரண்டு தெரிவுகளாக அமைந்துள்ளன.  

இந்த வரி அறவீடு 2018 ஜுலை 25 ஆம் திகதி முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் குறித்த உற்பத்தியாளர்கள் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்ததை தொடர்ந்து, குறித்த வரியிலிருந்து இந்நிறுவனங்களை விடுவிப்பது தொடர்பில் விசேட குழுவொன்றை நியமித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பதற்கு ஜனாதிபதி உறுதிமொழி வழங்கியிருந்த போதிலும் இதுவரையில் எவ்வாறான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், குறித்த வரி விதிப்பு தமக்கு பெரும் சுமையாக அமைந்துள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.  

இந்த வரி விதிப்பால் பழரசம் அல்லது பழப்பான விற்பனை விலை போத்தல் ஒன்றுக்கு 30 சதவீதத்தால் அதிகரிக்கும் நிலையை எதிர்கொண்டுள்ளதுடன், இந்த விலை அதிகரிப்பால் உள்நாட்டு பாவனையாளர்கள் அதிகளவு உடன் தயாரிக்கப்பட்ட சேதன தயாரிப்புகளை நாடுவார்கள். இதனால் தமது உற்பத்தி செயற்பாடுகள் பாதிப்படையும் என அறிவித்துள்ளனர்.  

உற்பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில், ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் வெளிநாட்டு நாணய வருமதியை இழக்க வேண்டிய நிலையையும் குறித்த நிறுவனங்கள் எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

உள்நாட்டு நிறுவனங்கள் தமது உற்பத்தி செயற்பாடுகளுக்காக உள்நாட்டு பழங்கள் உற்பத்தியாளர்களுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகின்றன.   

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உள்நாட்டில் உற்பத்தி செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வரி விலக்கழிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .