2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சுய நிதிமுகாமைத்துவமும் அதன் அவசியமும்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2018 டிசெம்பர் 04 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய தினத்தில், பலரது குறையாக இருப்பது, வருமானத்துக்கு மேலான செலவீனங்கள் இருக்கிறன என்பதேயாகும். வருமானம் இதுதான் என, முன்கூட்டியே தெரிந்துகொள்கின்ற நாம், நமது சேமிப்புகள், முதலீடுகள், செலவுகள் என்பவற்றை முறையாக முகாமைத்துவம் செய்யாமல், தனியே எனக்கான வருமானம் போதாது என்று குறைக் கூறிக்கொண்டிருப்பது அர்த்தமற்ற செயற்பாடே ஆகும். அப்படியாயின், தனிநபரின் அல்லது குடும்பத்தின் சுய நிதியை எவ்வாறு முகாமைத்துவம் செய்யவேண்டும் என்பது தொடர்பில், அறிந்திருத்தல் அவசியமாகும்.  

வேகமாக நகரும் இன்றைய உலகில் நின்று, நிதானித்து எம்முடைய தேவைகளைக்கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாதவர்களாகவே இன்றும் நாம் ஓடிக்கொண்டு இருக்கிறோம். எமது வளங்களை, எத்தகைய வழிகளில் வினைத்திறனாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை மறந்துவிட்டு, அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவீனங்கள் மீதும், இதர விடயங்கள் மீதும், பழி சுமத்திக் கொண்டே, நாள்களை நகர்த்திக்கொண்டு இருக்கிறோம். உண்மையில், நமக்கான வாய்ப்புகளை உருவாக்க, மாற்றமானது  நம்மிடத்தில் இருந்துதான் ஏற்பட வேண்டும். அவ்வாறு, ஏற்படும் சிறிய மாற்றமானது, வேகமாக மாற்றமடைகின்ற இவ்வுலகில், உங்களை வெற்றியாளர்களாகவே வைத்திருக்கும்.  

ஒவ்வொரு தனிநபரும், தனது வருமான மூலங்களை வினைத்திறன் வாய்ந்த முறையில் பயன்படுத்திகொள்ளுவதன் மூலமாக, எதிர்காலத்துக்கான வளங்களை உருவாக்குவதோ அல்லது வருமானங்களை முதலீடாக மாற்றி, மேலதிக வருமானத்தைப் பெற்றுக்கொள்வதையோ உறுதி செய்கின்ற முறைமையே சுயநிதி முகாமைத்துவம் ஆகும்.  

அப்படியாயின், எந்தந்த வழிமுறைகளின் ஊடாக அல்லது எவற்றை கடைப்பிடிப்பதன் ஊடாக அல்லது எதனை அறிந்துகொள்வதன் மூலமாக சுயநிதியை வினைத்திறனாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.   

1. வருமானத்துக்கும் சேமிப்புக்குமிடையே வேறுபாடு உண்டு  

   சுயநிதி முகாமைத்துவத்தின் மிகப்பெரும் அடிப்படையே இதுதான். நீங்கள் உழைக்கும் பணத்தை விட, உங்களிடமுள்ள நிகரப்பெறுமதியான (Net Worth) தொகையே உங்களது சேமிப்பாக அமையும். ஒருவர் அதிகமாக வருமானம் உழைப்பதால், அவரை செல்வந்தராகவும் குறைவாக வருமானம் பெறுவதனால் ஏழையாகவும் நினைத்துகொள்வது தவறாகும். அவர்களது வருமானத்தில், செலவீனங்கள் எப்படி உள்ளது என்பதனைப் பொறுத்தே ஒருவரது நிலை தீர்மானிக்ககூடியதாக அமையும்.  

2. சேமிப்புயில்லாமல் முதலீடு இல்லை   

முதலீட்டு எண்ணத்தை வளர்த்துக்கொள்ள முதல், அந்த முதலீட்டை உருவாக்கக்கூடிய சேமிப்புப் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுவது அவசியமாகிறது. இந்தச் சேமிப்பு தன்மையில்லாமல், எந்த முதலீட்டையும் உருவாக்கிக்கொள்ள முடியாது.  

3. கடனட்டை கடன்களை மாதம்தோறும் காவி செல்லாதீர்கள்  

   இன்றைய நிலையில் மக்களால் வங்கிகளில் பெறப்படுகின்ற கடன்களுக்குச் சமனாக, கடனட்டை மூலமான கடன்களின் அளவும் உள்ளது. சாதாரணமான ஒருவர், கடனட்டை பழக்கத்துக்கு அடிமையான பின்பு, இயல்பாகவே மாதாந்தக் குறைந்த கட்டணத்தை மாத்திரம் செலுத்தி, கடனை பிற்போடும் நிலையே காணப்படுகிறது. இது சாதாரண ஒருவர் கடனை மீளச் செலுத்தாமல் காவி செல்லும் நிலையையும், பணத்தை சேமிக்க முடியாத நிலையையும் ஏற்படுத்தும். எனவே, கடனட்டை பயன்பாட்டை தவிர்த்தல் மிகநன்று அல்லது வருமானத்துக்கு ஏற்ப, மாதசெலவீனத்தை அடிப்படையாகக் கொண்டு கடனட்டையைப் பயன்படுத்துவது உசிதமானது.  

4. செலவீனங்கள் தொடர்பில் அறிந்திருப்பது அவசியமாகும்  

பணத்தைச் சேமிக்க வேண்டும் என்கிற எண்ணம் மாத்திரமே போதுமானது அல்ல. மாறாக, செலவீனக் கோலத்தை கட்டுப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஊதாரித்தனமாக செலவு செய்வதைக் கட்டுபடுத்திக் கொண்டாலே, மாத இறுதியில் ஏற்படும் இறுக்க நிலையும் குறையும். கூடவே, சேமிப்பும் உருவாகும்.  

5. முறைமையை கையாளுதல்  

    கடந்தகாலத்தில் மாதம்தோறும் செலுத்தவேண்டிய கட்டணங்களையும், செலவுகளையும் குறித்துவைத்துக் கொண்டு, குறித்த தினத்தில் அதைச் செலுத்துவதற்கு பரபரத்துக்கொண்டிருக்கும் நிலையிருந்தது. ஆனால், தற்போதைய நிலையில், மாதம்தோறும் செலுத்தவேண்டிய நிலையான தொகையை வங்கிகளின் மூலமாக முன்னதாகவே முறைமைப்படுத்திக் கொள்ள முடிகிறது. இது, வருமானத்தில் எவ்வளவு பணத்தைச் செலவிடவேண்டும் என்பதனை முன்கூட்டியே திட்டமிடக் கூடியதாகவும் இருப்பதால், இத்தகைய முறைகளை நமது பழக்கத்துக்குக் கொண்டுவருவது சிறந்தது.  

6. மிகப்பெரிய செலவுகளை அவதானமாகச் செய்தல்  

   ஆடம்பரத்துக்கும், அத்தியாவசியத்துக்குமான வேறுபாடு சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால், வீடு வாங்குவதிலும், போக்குவரத்து சாதனங்கள் வாங்குவதிலும் நம்மவர்கள் ஆடம்பரத்துக்கும் அத்தியாவசியத்துக்குமான இடைவெளியை மறந்து விடுவார்கள். இதன் காரணமாக, மிகப்பெரிய கடனை வாழ்நாள் முழுவதும் சுமந்து கொண்டு செல்பவர்களாகவே இருக்கிறார்கள். அதாவது, மிகப்பெரிய செலவீனங்களை செய்யத் தயாராகும்போது, ஆடம்பரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்க்கிலும், அதன் அத்தியாவசியத் தன்மையை உணர்ந்துகொள்ள வேண்டும். அதற்கேற்ப செலவுகளை மேற்கொள்ளும்போது, எதிர்காலத்துக்கும் பயனுள்ளதாக அமையும்.  

7. உடனடிச் செலவீனங்களை கையாளுதல்

   ஒவ்வொரு மனிதருக்குமே, திட்டமிடாத செலவீனங்கள் நிச்சயமாக இருக்கும். அவற்றைக் கையாளக்கூடிய வகையில், திரவப் பணத்​தைக் கொண்டிருத்தல் அவசியமாகும். திட்டமிட்ட செலவுகள் போக, எஞ்சிய அனைத்தையுமே சேமிப்பது என்பது முட்டாள்தனமே ஆகும். காரணம், எதிர்பாராத செலவுகளுக்கு எப்போதுமே நாம் தயாராக இருத்தல் அவசியமாகிறது. எனவே, எப்போது? எவ்வளவு? சேமிப்பது என்பது தொடர்பில் அவதானமாக இருத்தல் அவசியமாகிறது.  

8. வருடம்தோறும் பழக்கத்தை மாற்றல்  

   எப்படி ஒரு கெட்ட பழக்கத்தை உடனடியாகக் கைவிட முடியாமல், சிறிது சிறிதாக கைவிடுவதாக முடிவு செய்கின்றமோ அதுபோல, எந்தவொரு சேமிப்பு மற்றும் முதலீட்டையும் உடனடியாகவே மிகப்பெரிய அளவில் செய்வதென்பதும் கடினமானதாகும். எனவே, சிறிது சிறிதாக அதிலும் மாற்றத்தைக் கொண்டு வருதல் அவசியம். இந்த வருடத்தில் இந்தளவு தொகையைச் சேமிப்பதாகவோ அல்லது முதலிடுவதாகவோ முடிவு செய்திருப்பின், அடுத்துவரும் காலங்களில் அதைவிட அதிகமாக முதலீடு செய்யப் பழகிக்கொள்ள வேண்டும்.  

9. அருகிலிருப்பவர்களுக்கும் கற்றுக்கொடுத்தல்  

   தனியாக நீங்கள் மட்டும் சுய முகாமைத்துவத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமாக, உங்கள் நிதியை வளமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது. மாறாக, உங்கள் அருகிலிருக்கும் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியிலும் இந்தப் பழக்கத்தைக் கற்றுகொடுக்க முயற்சியுங்கள். அப்போதுதான், மிகச்சிறந்த முறையில் நிதியைக் கையாளக் கூடியதாக அமையும்.  

10. பொருத்தமானவர்களிடம் ஆலோசனை கேட்பதில் தவறில்லை  

   நம் சமூகத்தைப் பொறுத்தவரை, நமது சொத்துகள் தொடர்பிலோ,வருமானம் தொடர்பிலோ அடுத்தவருக்குத் தெரிந்துவிடக் கூடாது என்கிற எண்ணத்தைக் கொண்டவர்களாகவே இருக்கிறோம். இதனால்தான், பல சந்தர்ப்பங்களில் பொருத்தமான ஆலோசனைகளைப் பெறத்தவறிவிட்டு, வருமானம் உழைக்கும் வழிகளையும் மூலதனங்களையும் இழந்து நிற்போம்.

எனவே, பொருத்தமானவர்களிடம் தேவையான தகவல்களை வழங்கி ஆலோசனைகளைப் பெறுவதில் தவறில்லை. இது உங்கள் செல்வத்தை மேலும் பெருக்குவதாகவே அமையுமே தவிர, பாதிப்படையச் செய்யாது.  

11. தற்போதைய நிலை என்ன என்பதனை உணர்தல்  

சுயநிதி முகாமைத்துவ செய‌ற்பாட்டில் ஈடுபட முதலோ அல்லது அதனை நடைமுறைப்படுத்த ஆரம்பிக்க முதலோ, நாம் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதனை அறிந்துகொள்வது அவசியமாகிறது.

காரணம், நமது தற்போதைய நிலை என்ன என்பதை அறியாமல் எதிர்காலத்தைத் திட்டமிடுவதுபோல முட்டாள்தனம் வேறேதுவுமில்லை. எனவே, நமது தற்போதைய நிலை என்ன? நமது சேமிப்பு மற்றும் செலவீன சக்தி என்ன? பலம்,பலவீனம் என்ன? என்பது தொடர்பில் ஆராய்வது அவசியமாகிறது.  

12. வரிகள் தொடர்பில் அறிந்து வைத்திருத்தல்  

கடந்த காலங்களில் இலங்கையில் தனிநபர் வருமானம் சார்ந்த வரிகளில் இறுக்கமான நடைமுறைகள் இருந்ததில்லை. ஆனால், தற்போதே அரசாங்கம் தனிநபர்களிடமிருந்து எவ்வாறு வருமானத்துக்கு ஏற்ற வரிகளை அறவிடலாம் என்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறது. இது எதிர்காலத்தில் நிச்சயம் வருமான வரிகளில் இறுக்கமான நடைமுறை கடைப்பிடிக்கப்படப் போகின்றதென்பதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

எனவே, ஒவ்​வொரு  தனிநபரும் தனது வருமான மூலங்களை முதலீட்டு நடைமுறைகளுக்குப் பயன்படுத்தும்போது, எவ்வாறு வரி வினைத்திறன் தன்மையைக் கையாள முடியும் என்பதனை அறிந்திருத்தல் அவசியமாகிறது. இல்லாவிடின், தேவையற்றவகையில் வீணாக நிறைய வரியைச் செலுத்துகின்ற நிலை உருவாகக்கூடும்.  

மேலேகூறிய வழிமுறைகள் அனைத்துமே, தற்சமயம் உழைக்கும் வருமானத்தை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி மேலதிகமாக எதிர்காலத்தில் எத்தகைய நலன்களைப் பெறலாம் என்பதனையே தெளிவுபடுத்துகின்றன. இதன் மூலமாக, உழைக்கும் வருமானத்தை வினைத்திறனாகப் பயன்படுத்தி மேலதிக பணத்தை உழைக்கக் கூடியதாக இருக்கும்.

உண்மையில், ஒவ்வொரு தனிநபருக்குமே இயலுமை காலம் என்கிற ஒன்று கட்டாயமாக இருக்கும். அதற்குள் முடிந்தவரை உழைத்துவிட வேண்டும் எனவும், தனக்கும் எதிர்கால சந்ததிக்கும் தேவையானவற்றைச் சேர்த்துவிட வேண்டும் என்கிற சுமையும் நிச்சயமாக இருக்கும்.

ஆனால், ஒவ்வொருவருமே தமக்கான சுயநிதி முகாமைத்துவத்தைச் சரியாகப் பின்பற்றும் போதுதான், மனதிலே ஓய்வுகால பயம் என்பதைத் தாண்டி, நிதி சுதந்திரம் கண்டிப்பாக இருக்கும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X