2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தடுமாறும் அரசியலும் பொருளாதார விளைவுகளும்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2018 நவம்பர் 19 , மு.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நீடிக்கும் அரசியல் குழப்ப நிலைமைகள், நாளுக்கு நாள் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரும் குழப்பகரமான விளைவுகளை ஏற்படுத்திக்கொண்டே வருகின்றன. நாட்டின் சட்ட ஒழுங்கில் ஏற்பட்டிருக்கும் சரிவானது, பொருளாதார சரிவுக்கு வழிகோலியுள்ளது.  

தற்போதைய நிலையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைமைகளானது, எப்போது, எவ்வாறு தீர்க்கப்படும் என்பதற்கான அறிகுறிகள் எதுவுமே தென்படுவதாக இல்லை. ஆனாலும், இந்தக் குழப்பநிலை, மிக விரைவாகத் தீர்க்கப்படாதவிடத்து, அது சிக்கலாகவுள்ள நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களது வாழ்வாதாரத்தையும், மேலும் சிக்கல் நிலைக்கே எடுத்துச் செல்லுவதாக இருக்கும்.   

இந்த நீடித்த அரசியல் நெருக்கடியானது, பொருளாதாரத்தில் நீடித்தளவில் தாக்கத்தைச் செலுத்துவதாகவே உள்ளது. அரசியலில் நிலவும் இந்த நிச்சயமற்ற தன்மையானது, தற்போதே நாட்டுக்குள் வரவேண்டிய மற்றும் வரவிருக்கும் வெளிநாட்டு நிதிகளை, மிகப்பாரிய அளவில் குறைத்துள்ளது.

அத்துடன், இந்த நெருக்கடியானது, நாட்டின் கடன் மீளச்செலுத்தல் இயலுமையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது எனலாம். இதற்கு மேலாக, நாட்டின் கடன் தரப்படுத்தல் தொடர்பாக அண்மையில் வெளியான அறிக்கையும் இலங்கையின் கடன் மீளச்செலுத்துகையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. இதற்கு மேலதிகமாக, நாட்டின் மீதான முதலீட்டாளர்களுக்கு, முதலீட்டுத் தயக்கத்தை உருவாக்கியுள்ளது.   

கடந்த 20 நாள்களுக்கும் மேலான அரசியல் நெருக்கடி நிலைமையானது, பங்குச்சந்தையின் வெளிநாட்டு மூலதன வெளியேற்றம், சுற்றுலா பயணிகளின் வகையிலான வீழ்ச்சி, நாணய பெறுமதி வீழ்ச்சி, அதிகரிக்கும் கடன் விகிதங்கள் என்பவற்றின் வழியாக, உடனடிப் பாதிப்புகளை நமக்கு வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளது.   

மேற்கூறிய நிகழ்வுகள் அனைத்துமே, ஏறக்குறைய கடந்த 25 நாள்களாக நீடிக்கும் அரசியல் நெருக்கடிகளால் உருவான குறுகியகால பிரச்சினைகளாகும். ஆனால், இவற்றின் தாக்கம், மிக நீண்டகாலத்துக்கு இலங்கைப் பொருளாதாரத்தைப் பாதிப்பதாகவே இருக்கும். இவற்றையெல்லாம் எந்த அரசியாவாதியாவது உணர்ந்து செயல்படுகிறார்களா எனக் கேட்டால், இல்லை என்பதை, மறுகணமே பதிலாகத் தந்துவிட முடியும்.  

2019ஆம் ஆண்டு தொடக்கம் 2020ஆம் ஆண்டளவில், மிகப்பெரும் மீள்கடன் செலுத்துகையை, இலங்கை கொண்டுள்ள நிலையில், அதை ஈடுகட்டவும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள, இலங்கைப் பிரதிநிதிகள் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதேவேளை, ஏற்றுமதி வருமானத்தை, அதிகரித்து, இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலமாக, பொருளாதார சமநிலையை ஏற்படுத்தவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவற்றை நடைமுறைப்படுத்த, ஆசுவாசமான அரசியல் காலநிலை இன்றியமையாததொன்றாக இருக்கின்றது.

ஆனால், தற்போதைய அரசியல் சூழ்நிலை, அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நிர்மூலமாக்கி விடுவதாகவே அமைந்திருக்கிறது எனலாம்.  

தற்போதைய அரசியலின் உறுதியற்ற தன்மை, நாட்டின் நன்கு வரையறுக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகள், ஒழுங்குபடுத்தப்பட்ட தொழிலாளர் படையின் உழைப்பு விதிமுறைகள்,  அமைதியான நிலைமைகள் ஆகியவற்றை உருக்குலைப்பதுடன், வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் பாதிக்கவே செய்கிறது. 

இத்தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகள், நாட்டின் 4.5 சதவீதமான வருடாந்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பாதிப்பதுடன், பிராந்திய பொருளாதார வளர்ச்சி விகிதமான 7 சதவீதத்தை அடைந்துகொள்ளுவதிலும் சிக்கல் நிலையை ஏற்படுத்தியுள்ளது.  

அதுமட்டுமல்லாது, வெளிநாட்டு நேரடி முதலீடுகளாகக் கருதப்படும் பங்குச்சந்தை முதலீடுகள் தொடக்கம், சுற்றுலாப்பயணிகள் வருகை மூலமான வருமானம் வரை, கடந்த நிலைதளம்பல் நாள்களில், மிகப்பெரும் அளவில் வீழ்ச்சி அடைந்து வருவதாகவே அமைந்துள்ளது.

குறிப்பாக, இவ்வாண்டு, சுற்றுலா பயணிகளின் வருகை மூலமாக மாத்திரம், சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைப் பெற்றுக்கொள்ள, அரசாங்கம் எதிர்பார்த்திருந்தாலும் தற்போதைய நிலையில், இந்த வருமான எல்லையானது கேள்விக்குறியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாது, இந்த அரசியல் நெருக்கடியின் விளைவாக, நாட்டுக்கு வரவேண்டிய வெளிநாட்டுக் கடன்கள், வெளிநாட்டு முதலீடுகள்,ஈ வெளிநாட்டு வணிக ஒப்பந்தங்கள் கூட, பின்தள்ளிப்போக, இரத்துச் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் எழுந்துள்ளன.  

இவற்றுக்கெல்லாம் மேலாக, ஐரோப்பிய யூனியன், தான் வழங்கி வருகின்ற GSP+ சலுகையை நிறுத்தப்போவதாக, முதலாவது எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது, இலங்கையின் வளர்ந்துவரும் ஏற்றுமதிச் செயற்பாட்டையும் கடலுணவு சார்ந்த ஏற்றுமதிகளையும், மிகப்பாரிய அளவில் பாதிப்பதுடன், இலங்கைப் பொருளாதாரத்தை, மென்மேலும் பாதிப்படையச் செய்யும்.

2017ஆம் ஆண்டளவில், GSP+ சலுகையை, இலங்கையானது, மிகப்பாரிய பிரயத்தனங்களுக்கு மத்தியிலேயே பெற்றுக்கொண்டிருந்தது. இதன் விளைவாக, 2017ஆம் ஆண்டில், நாட்டின் ஏற்றுமதியானது, 10.2% மாக உயர்வடைந்திருந்தது. இதில், உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி அதிகரிப்பானது, 7.6%மாகவுள்ளதுடன், கடலுணவு ஏற்றுமதி அதிகரிப்பானது, சுமார் 42%மாகவிருந்தது. இந்த GSP+ சலுகையில் விளைவாக, கடந்த ஆண்டில், இலங்கையின் ஏற்றுமதி வருமானம், சுமார் 7.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்திருந்ததுடன், குறித்த சில மாதங்களில் மட்டும், மாதமொன்றுக்கு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை, இலங்கை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. எனவே, இலங்கையின் அரசியல் குழப்ப நிலைக்கான தீர்வு, தனித்து அரசியல் ரீதியாக மட்டுமல்லாது பொருளாதார ரீதியாகவும் பன்மடங்கு நலனைத் தருவதாக அமைந்திருக்கும்.  

இவற்றுக்கு மேலதிகமாக, அண்மைக்காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்தின் மிகப்பெரும் பலமாகவிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் கொடுப்பனவுகள், கடன்கள் ஆகியவை, உடனடியாக நிறுத்தப்பட்டிருக்கிறது அல்லது ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக, இலங்கைக்கு, அதன் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் கடன் மீளச்செலுத்துகைக்கும், உடனடியாகக் கிடைக்கப்பெற வேண்டிய சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியானது, கிடைக்காதநிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிதி, இலங்கைக்காக சர்வதேச நாணய நிதியத்தில் மிகநீண்டகாலத்துக்கு ஒதுக்கப்பட்டு வைத்திருக்கப்படமாட்டாது.

குறிப்பிட்ட காலத்தில், சர்வதேச நாணய நிதியத்திடம், வேறு நாடொன்று, நிதிதேவைக்காக கோரிக்கையை முன்வைக்கும்போது, அவர்களுக்கு குறித்த நிதியானது வழங்கப்படலாம். எனவே, குறித்த சிலகாலங்களுக்குப் பின்னதாக, இலங்கையில் அரசியல் நிலைமைகள் சீரடைகின்றபோது, குறித்த நிதியைப் பெறுவதில் மேலும் தாமதத்தை எதிர்கொள்ள நேரிடும்.  

இவற்றுக்கு மேலாக, ஐக்கிய அமெரிக்காவின் MCC நிறுவனம், எதிர்வரும் டிசெம்பரில் இலங்கைக்கு வழங்கவுள்ள சுமார் 460 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டம், ஜப்பானின் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர், 480 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டங்கள் ஆகியவற்றையும் ஒத்தி​வைத்துள்ளது.

தற்போதைய நிலையில் மாத்திரம் இலங்கைக்கு கிடைக்கப்பெறவேண்டிய சுமார் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதுடன், நாட்டின் முதலீட்டு உட்பாய்ச்சலும், இதன்விளைவாக பாதிப்புகள் ஏற்படுவதாக அமைந்திருக்கிறது.  

தற்போதைய அரசியல் நெருக்கடியும் நிச்சயமற்ற தன்மையும், பொருளாதாரத்தை பல வழிகளில் பாதிப்பதாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாது, எதிர்காலத்தில் இதேபோன்று எரிபொருள் சந்தையில் மீளவும் விலை அதிகரிப்பு ஏற்படுமாயின், அதை எதிர்கொள்ளவும், அதனுடன் சேர்ந்ததான கடன் மீள்செலுத்துகையையும் மேலும் பாதிப்படையும்.

நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதியான நிலைமைகளை உறுதி செய்யாதவரை, இலங்கையின் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண முடியாதென்பதுடன், இந்தப் பாதிப்பானது, நேரடியாகவோ, மறைமுகமாகவோ மிக நீண்டகாலத்துக்கு இலங்கை மக்களைப் பாதிப்பதாகவே அமைந்திருக்கும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .