2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தனிமனித நிதி ஒழுக்கம்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2019 மே 20 , பி.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு நாட்டின் நிதி நிர்வாகமும் நிதி ஒழுக்கமும் எவ்வளவு அவசியமோ, அதேயளவுக்கு தனி மனிதர்களின் நிதி ஒழுக்கமும் அவசியமாகிறது.

தனிமனித நிதி ஒழுக்கத்தின் மிக மிக அடிப்படையான விடயமே, வரவுக்கேற்ற செலவீனம் என்பதாகும். இந்த நிதி ஒழுக்கமானது, தனிமனிதர்கள் எவராயினும் அவர்கள் எத்துறை​ையச் சார்ந்தவர்களாக இருப்பினும், இருக்க வேண்டியது அவசியமாகும்.

அவ்வாறு நிதி ஒழுக்கத்தை கொண்டிராதபட்சத்தில், அவர்கள் எவ்வளவுதான் கோடி கோடியாக பணத்தை   உழைத்தாலும், அதை, அவர்களை முழுமையாக, திருப்தியாக அனுபவிக்க முடியாத நிலையே காணப்படும். எனவே, தனிமனித ஒழுக்கம் தொடர்பிலும், அதன் அடிப்படை தொடர்பிலும் அறிந்திருப்பது அவசியமாகிறது.   

வரவுக்கேற்ற செலவு செய்யுங்கள்

 உங்களுக்கு ஒரு பொருளை வாங்குவதற்கான பணம் இல்லையென்றால், சேர்த்து வைத்து விட்டு வாங்க முயற்சி செய்யுங்கள். உங்களுடைய செலவுகள் ஒவ்வான்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அவற்றுக்கேற்ற வகையில் வருமானத்தை அதிகரிக்கவோ, அதன் அடிப்படையில் திட்டமிட்டு செலவு செய்யவோ முயற்சி செய்யுங்கள் .  

அவசர கால நிதியின் முக்கியத்துவம் 

அவசர கால நிதி என்பது, உங்களுடைய அவசரத் தேவைகளுக்கு, பிறரிடம் கையேந்தாமல், கடன் வாங்காமல், நீங்களே சமாளிப்பதற்கு உதவுவது ஆகும். இது உங்களுடைய எதிர்கால முதலீடுகளுக்கு பங்கம் விளைவிக்காமல், அவசரத் தேவைகளைப் பார்த்துக் கொள்ள உதவுவது ஆகும்.

திடீரென்று வீட்டின் அவசர வேலைகள், வீட்டு உறுப்பினரின் உடல் நலக் குறைவு, திடீரென்று வேலை இழத்தல் போன்றவை, யாருக்கும் நிகழலாம். உங்களிடம் அவசர கால நிதி இல்லையென்றால், இப்போதே அதை கையிருப்பில் வைத்திருப்பதற்கான வேலையைத் தொடங்குங்கள். குறைந்தபட்சம் ரூபாய் 10,000இல்  ஆரம்பித்து, உங்களுடை மாத செலவின் 3 மடங்கு முதல் 6 மடங்கு வரை சேமித்து வைத்திருப்பது சிறப்பானதாகும். இதை முதலீட்டுத் தேவைகளுக்கு மேலதிகமாக வைத்திருப்பது மிகச் சிறந்ததாகும்.   

கடன் வேண்டவே வேண்டாம்

 கடைகளில் கூறப்படுவதைப் போல், கடன் அன்பை மட்டுமல்ல, வாழ்க்கையின் எல்லா சந்தோஷங்களையும் இல்லாதொழிக்கக் கூடியது. கடன் அட்டையோ, தனிநபர் கடனோ அல்லது எந்தவொரு ரூபத்திலும் கடனைக் கொண்டிருக்காதீர்கள். வீட்டுக்கடன், மேல்படிப்புக்கான கடன் போன்றவற்றைக் கூட உங்களை வருமானத்தின் இயலுமை தன்மையை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்யுங்கள்.

வீடு என்பது அத்தியாவசியமானத் தேவை. மேல்படிப்பு என்பது, எதிர்காலத்துக்கான முதலீடு. இவற்றுக்காகக் கடனை பெற்றுக்கொண்டாலும் கூட, அ​ைத  எவ்வளவு விரைவாக அடைக்க முடியுமோ அடைக்கப்பாருங்கள்.  

சேமிப்பு வேறு; முதலீடு வேறு 

சேமிப்பு என்பது செலவு போக, வரவைச் சேமித்து வைத்திருப்பது. பணவீக்கச் சமூகத்தில், சேமிப்பு என்பது போதாது. முதலீடு என்பது மிக முக்கியம்.  

முதலீடு என்பது, வங்கியின் சேமிப்பு கணக்கு முதல், வங்கி வைப்பு நிதி, தபால் நிலைய வைப்பு நிதி, பங்குச் சந்தை பங்குகள், கடன் பத்திரங்கள், அசையா மற்றும் அசையும் சொத்துக்கள் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒவ்வொரு வகை முதலீட்டிலும் சில பல நிறை குறைகள் உள்ளன. ஆனால், முதலீடு செய்வதென்பது மிகவும் அவசியமானதாகும்.  

உதாரணமாக, ஒருவர் 2009ஆவது ஆண்டு  1,000 ரூபாய் சேமித்து வைத்திருந்தால், இன்று திடீரென்று 2019இல், கண்டெடுத்தால், அது​ ெவறும் 1,000 ரூபாய் மாத்திரமே ஆகும். 

ஆனால், அந்த 1,000 ரூபாயை, பங்குச்சந்தையில் அல்லது முதலீட்டு நிதிகளில் முதலீடு செய்திருப்பின், அதை பன்மடங்கு வருமானம் மிக அதிகமாகும்.   

முதலீட்டை உச்சப்படுத்துங்கள் 

உங்களால் மாத வருமானத்தில் எவ்வளவு தூரம் அதிகமாகச் சேமிக்க முடியுமோ, அவ்வளவு தூரம் சேமிக்கப் பாருங்கள். குறைந்தபட்சம் 10% முதல் 15% சேமித்து அதை முதலீடு செய்யப் பாருங்கள். 

உங்களுடைய செலவுகளை பட்டியலிட்டு, எவ்வாறு குறைப்பது, எவ்வாறு அதிகமாகச் சேமிப்பது என, பல்வேறு வழிமுறைகளை யோசியுங்கள். ஆங்கிலத்தில், Don’t put all your eggs in a single basket, என்று கூறுவார்கள். அதாவது, உங்களுடைய எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடாதீர்கள்.

என்பதுபோல, உங்களுடைய ஒட்டுமொத்த சேமிப்பையும் ஒரேவகை முதலீட்டில் முதலீடு செய்யாதீர்கள். பொருத்தமான முதலீட்டு தேர்ச்சியாளர்கள் மூலமாக, பல்வேறு முதலீட்டு மூலங்களை இனம்கண்டு, அவற்றில் முதலீடு செய்ய முயற்சி செய்யுங்கள்.  

 காப்புறுதியை முதலீட்டுடன் குழப்பிக்கொள்ளாதீர்கள் 

காப்புறுதி திட்டமென்பது, குடும்பத்தின் சம்பாதிக்கும் நபர், திடீரென்று இறக்க நேரிட்டால், குடும்பம் அவர்களைச் சமாளித்துக் கொள்வதற்கு கிடைக்கக் கூடிய பணமாகும். இதற்கு, கால வரையான காப்புறுதி திட்டம் (Term Insurance Plans) சிறந்தது. குடும்பத்தின் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப, காப்புறுதி திட்டத்தைத் தேர்ந்தெடுங்கள். உதாரணமாக, குடும்பத்தலைவர் 60 வயது வரை உயிர்வாழ்ந்தால் எவ்வளவு பணம் மாதம் செலவுக்கு அவர் கொடுத்திருப்பாரோ, ஏறக்குறைய அவ்வளவு பணத்துக்கான காப்புறுதித் திட்டத்தை தேர்ந்தெடுப்பது நல்லது. எனவே, காப்புறுதி என்பது முதலீட்டு வகையாகாது.  
வாங்கும்போது ஆராயுங்கள். 

வீடு, கார் ஆகிய இரண்டும் தான், தற்போதைய நிலையில் ஒரு மனிதன் தனது வாழ்நாளில் செய்யும் மிகப்பெரும் பெரிய செலவுகளாக உள்ளது. அவை இரண்டையும் உங்களுடைய தேவைக்கேற்பத் தெரிவு செய்யுங்கள். அதற்காக, உங்களால் இயலாத பெரிய செலவில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.

பெரும்பாலானோர், இவ்விரண்டையும் கொள்வனவு செய்தபின், வாழ்நாள் முழுவதுமே அதிகக் கடன் சுமைக்கு ஆளாகி தவிர்ப்பவர்களாக இருப்பார்கள்.  

மேலதிக வருவாய்க்கு முயலுங்கள் 

அதிகமாகச் சம்பாதிப்பதற்கு, மற்றொரு வகையில் வருமானத்தை ஈட்ட முடியுமா என்று பாருங்கள். குடும்பத்தின் வருமானம் குறைவாக இருக்கும் பட்சத்தில், பகுதிநேர வேலை அல்லது சிறிய தொழில் மூலமாக ஏதேனும் வருமானத்தை ஈட்டிக்கொள்ள வழிவகைகளை செய்துகொள்ளுங்கள்.  

இவற்றின் மூலமாக, தனிமனிதனாக உங்களது வாழ்வியலில் நிதி ரீதியான ஒழுக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முடிவதுடன், இதன்மூலமாக நிதிரீதியான அழுத்தங்களற்ற வாழ்க்கையை வாழ முடியும்.  

தற்காலத்தில், கடன்சுமை காரணமாகவும் வாழ்க்கை செலவீனங்கள் காரணமாகும் மன அழுத்தத்துக்குள்ளாகும் பலரையும், தற்கொலை செய்து கொள்ளுகின்ற சிலரையும் நாம் கடந்தே வந்திருப்போம். இத்தகையவர்கள் உட்பட நாம் அனைவருமே தனிமனித நிதியியல் ஒழுக்கத்தை முறையாக கையாளும்போது பல்வேறு பிரச்சினையிலிருந்து விடுபட முடிவதுடன் சிறப்பான வாழ்க்கையை வாழவும் முடியும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .