2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தனியாள் நிதித் திட்டமிடல்: நிதி மேலாண்மைக்கான ஓர் அங்கிகாரம்

Editorial   / 2019 ஜனவரி 30 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.திலீபன்   
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை, யாழ்ப்பாணம்   

வாழ்க்கையில் குறிக்கோள்களை திட்டமிடுதல், வகுத்துக் கொள்ளுதல், மீளாய்வு செய்தல், அடைதல் போன்ற செயலொழுங்குகளுடன் பொருத்தமான நிதி மேலாண்மையும் இணைந்த செயல்முறை ‘நிதித் திட்டமிடல்’ எனப்படும்.  

ஒரு முழுமையான நிதித்திட்டமானது, பணத்தை முதலீடு செய்தல், சொத்தைப் பெருக்குவதுடன் மட்டுமன்றி உங்களுடைய கடன், வருமானவரி பொறுப்புகள், நாளாந்தச் செலவீனங்கள், குடும்பத்திட்டமிடல், உங்களுக்கான சொந்த வீடு, பிள்ளைகளின் எதிர்காலக் கல்விக்கான சேமிப்புகள், ஓய்வூதியத்துக்கான சேமிப்புத்திட்டம் என்பவற்றுடன் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்கத்தக்க பொருத்தமான ஆயுட்காப்புறுதி உடன்படிக்கை, சொத்துகள் கையகப்படுத்தல் தொடர்பான முன்னேற்பாடு போன்ற அனைத்து அம்சங்களையும் ஒன்றிணைக்கின்றது. 

நிதித் திட்டமிடல் ஒரு தொடர்ச்சியான செயன்முறை. இது தனியாள் நிதி வாழ்க்கை தொடர்பான திட்டமிடல்கள் ஊடாக, வாழ்க்கையில் ஏற்படும், எதிர்பார்த்த, எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்ளத் தயாரிக்கப்படும் குடும்ப நிதிமேலாண்மைத் திட்டம் ஆகும்.  

சுருக்கமாக கூறுவதாயின், நீங்கள் உழைத்துக் கொண்டு இருக்கும் வரைக்கும் ஏற்படுகின்ற அனைத்துச்செலவுகளும், உங்கள் உழைப்பினூடாக ஈடுசெய்யப்படுகின்றது. உங்களால் எவ்வளவு சேமிக்க முடிகின்றதோ, அதை  முதலீடு செய்ய முடியும்.

ஓய்வை நெருங்குகின்ற போது, வாழ்க்கையின் எஞ்சிய காலத்தை அமைதியாக வாழ்ந்து முடிப்பதற்குப் போதுமான பணத்தைக் கொண்டிருப்பதற்கான முழுநம்பிக்கைத் திட்டம் ஆகும்.  
இலாபகமாக உங்கள் எதிர்காலத்தைத் திட்டமிட்டுக் கொள்வதற்கும், உங்கள் நிதி இலக்குகளைக் கட்டுப்பாட்டுக்குள் சரியாகப் பேணிக்கொள்வதற்கும், நிதித் திட்டமிடல் மிக அவசியமான வாழ்க்கை தேர்ச்சியாக அமைவதுடன், யதார்த்தமான திட்டங்களின் தோற்றம், மாற்று வழியிலான மதிப்பீடு, வினைதிறனான அளவீடுகளுக்கும் உதவுகின்றது.  

இது, ஒரு கடினமான செயல்முறை அல்ல! இந்த எளிய வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள படிமுறைகளைப் பின்பற்றி, நீங்கள் ஒவ்வொருவரும், உங்களுக்குரிய பிரத்தியேக அடிப்படை நிதித் திட்டத்தை வகுத்துக்கொள்ள முடியும்.  

நிதித் திட்டமிடல் தொடர்பான தவறான அபிப்பிராயங்கள்: 

1. நிதித் திட்டமிடல் ஆரம்பிப்பதற்கான ஒரே ஒரு தேவையாக பணியில் ஓய்வு அமைதல்:

நிதித் திட்டமிடல் நீண்டதொரு செயன்முறை. நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக ஆரம்பிப்பீர்களோ, அந்த அளவுக்கு விரைவாக நன்மைகளை அனுபவிக்க முடிவதுடன், அதிக காலமானது உங்கள் சேமிப்புக்கான வளர்ச்சியை விரைவுபடுத்துகின்றது. 

2. முதலீட்டுக்கான மறுபெயர் நிதித் திட்டமிடல்:

முதலீடு செய்வதைக் காட்டிலும் நிதித் திட்டமிடல் தான் காத்திரமானது. இது முழுமையானதும் தெளிவானதுமான ஆரம்பம். உங்களுடைய (நிதி) குறிக்கோள்க​ளை அடைந்துகொள்ளும் வகையில், அனைத்துப் பொருளாதார அம்சங்களையும் ஒன்றிணைக்கின்ற நீண்டகாலச் செயன்முறை.  

3. ஒரு தடவை நிதித் திட்டம் வகுத்துக் கொண்டால் போதும், அதனை நீங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இல்லை:

நிதித் திட்டமிடல் ஒரு தடவை இடம்பெறும் செயலொழுங்கு அன்று. நீங்கள் கிரமமாக உங்கள் நிதித் திட்டமிடல்களை மீளாய்வு செய்து கொள்வதன் மூலமாக, உங்களுடைய குறிக்கோள்களை அடைவதற்கான சரியான பாதையில் பயணிப்ப​தை  உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.  

நிதித் திட்டமிடல் வகுத்துக் கொள்வதற்கு அதிக பணம் தேவைப்படும்:  

கோடீஸ்வரர்கள் மட்டுமன்றி, ஒவ்வொருவரும் நிதித் திட்டமிடல் ஊடாக, அனுகூலங்களை அடைந்து கொள்ள முடியும். உங்களது மாதாந்த வருமானம், சேமிப்பு, எவ்வளவு என்பது முக்கியமல்ல. உங்களுக்கான பொருத்தமான நிதித் திட்டமிடல் ஊடாகப் பெறப்படும் அனுகூலங்களே காத்திரமானவை.  

ஏன் நிதித் திட்டமிடல் அவசியம்?  

வாழ்க்கையில் வேறுபட்ட கால கட்டங்களில் காணப்படுகின்ற நிதிக் குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்கு விவேகமான நிதித் திட்டமிடல் மிகவும் முக்கியமானது.  

விவேகமான திட்டம்  

• செலவுகள் மற்றும் சேமிப்புகளைக் கண்காணிப்பதன் ஊடாக, இந்நாள் நிதித் தேவைகளைத் திருப்திப்படுத்திக் கொள்ள முடிதல்.  

• சொந்த வீடு, திருமணம் போன்ற எதிர்கால குறிக்கோள்களைத் திட்டமிட்டுச் செயற்படுத்திக் கொள்வதற்கு   

• விரும்பத்தகாத ஏதாவது நிகழ்வுகள் நிகழுகின்ற சந்தர்ப்பங்களில் உங்களையும் உங்களைச் சார்ந்தவர்களையும் பொருத்தமான ஆயுட்காப்புறுதி ஊடாகப் பாதுகாத்துக் கொள்வதற்கு.  

• எதிர்காலச் செலவுளைச் சமாளிப்பதற்குத் தேவையான சொத்துகளைப் பெருக்குவதற்குப் பொருத்தமான ஓய்வூதியத் திட்டம்.  

• எதிர்பாராத அவசர நிதி நெருக்கிடைகளைச் சமாளிப்பதற்குத்தேவையான, போதுமான சேமிப்புகளைப் பேணுதல்.  

நிதித் திட்டமிடல் செயல்முறை 

பின்வரும் முக்கிய படிமுறைகளின் அடிப்படையில் நிதித் திட்டமிடல் வகுக்கப்படுகின்றது.  

1. உங்கள் நிதி நிலைமையை மதிப்பீடு செய்தல்.  

2. பாதீட்டைத் தயாரித்தல்.  

3. உங்களுக்குரிய நிதிக் குறிக்கோளை வகுத்தல்.  

4. உங்கள் இசைவாக்க இடர்நேர்வை (சகிப்புத்தன்மை) அறிந்திருத்தல்.  

5. அடிப்படை நிதித் திட்டமிடல் செயற்பாடு, நடைமுறைப்படுத்தல்.  

6. கிரமமான மீளாய்வு, நிதித் திட்டச் சீராக்கம்.  

படிமுறை -1:  

நிகழ்கால நிதி நிலைமைகளை மதிப்பீடு செய்தல்  

உங்களுடைய நிகழ்கால நிதி நிலைமையை தெளிவான புரிந்துணர்வுடன், பொருத்தமான முறையில் மதிப்பீடு செய்தல், நிதித் திட்டமிடலின் முதலாவது படிமுறையாகும். இதில் எப்பொழுது எங்கிருந்து இதனை ஆரம்பிக்க வேண்டும், நிதிக் குறிக்கோள்களாக எவற்றை எல்லாம் அடைந்து கொள்ள எதிர்பார்க்கின்றீர்கள் என்பவற்றில் வெளிப்படையான புரிந்துணர்வு அவசியமாகும்.   

நிதித் திட்டமிடலின் முக்கிய அங்கமாக உங்களுடைய தேறிய சொத்தை அறிந்திருத்தல் அமைகின்றது. இது உங்களுடைய சொத்துகள், பொறுப்புகளைப் பட்டியற்படுத்துவதில் இருந்து ஆரம்பிக்கின்றது.

தேறிய சொத்து, பொதுவாக உங்களுடைய சொத்துகளில் இருந்து உங்களுடைய பொறுப்புகளை கழிப்பதன் ஊடாக மதிப்பீடு செய்யப்படுகின்றது. இங்கு, எமக்கு உடைமையான (சொந்தமான) அனைத்து வளங்களையும் அதாவது வங்கி, நிதி நிறுவனங்களில் இருக்கும் சேமிப்புகள், ஆதனங்கள், முதலீடுகள் என்பவை சொத்துகள் என்ற வரையறைக்குள் உள்ளடங்கும்.   

பொறுப்புகளான உங்களால் செலுத்தவேண்டிய (செலவீனங்கள்) உங்களுக்குச் சொந்தமில்லாத அதாவது நிலுவையில் உள்ள கடன்கள், தேறிய செலவுகள், ஒத்திவைக்கப்பட்ட வரிநிலுவைகள், பொறுப்பாகப் பெற்ற கடன்கள் போன்றவற்றையும் உள்ளடக்குகின்றது.   
சொத்துகள் - பொறுப்புகள் = தேறிய சொத்துகள்   

படிமுறை - 2:   

பாதீடு தயாரித்தல்   

உங்களுடைய பணப்புழக்கப் புரிந்துணர்வுக்கு அமைவாக, பணத்தின் உட்பாய்ச்சல், வெளிப்பாச்சல்களை வேறுபடுத்தி ,உங்கள் செலவுகள், சேமிப்புகளை முறைமைப்படுத்தல்.   

தேவை, விருப்பம் போன்ற முன்னுரிமைகளின் அடிப்படையில், ஏதாவது அவசியமற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தி, காலம் தாழ்த்தி பணத்தை சேமிக்கமுடிகின்றது. குறிப்பாக, அதிக செலவுகளைத் தூண்டுகின்ற கடன்அட்டைப் பாவனைகளில் இருந்து விலகியிருத்தல் நன்று. 

மாறாக, கடன்களைப் பெற்றுக்கொள்ள முன்வருகின்றபோது, அதைப் பெறுவதற்கு முன்னர், அந்தப் புதிய கடனுக்கான மீள்கொடுப்பனவுகளை நடைமுறையில் இருக்கும் செலவுகள், அர்ப்பணிப்புகளுடன் ஒப்பிட்டு, முன்னுரிமை அடிப்படையில் கொடுத்துத் தீர்க்கும் ஆற்றலை உறுதிப்படுத்துதல் வேண்டும்.   

பாதீட்டு திட்டம்  

பாதீடு உங்களுடைய அனைத்து விதமான உள்நோக்கிய மற்றும் வெளிநோக்கிய வருமானங்களின் பாய்ச்சல்களை அறிக்கைப்படுத்த உதவுகின்றது. உதாரணமாக, பின்வரும் பரந்த வகைப்படுத்தல்களின் அடிப்படையில் உங்களுடைய ஒவ்வொரு வாராந்த, மாதாந்த, வருடாந்த கால அடிப்படைகளில் வேறுபடுத்திக் கொள்ள முடியும்.

வீட்டுத்தேவைகள், போக்குவரத்து, உணவு, குடிபானம், பொழுதுபோக்கு, உடல் ஆரோக்கியம்,  பாராமரிப்பு, பிள்ளைகளின் கல்வி, தொழில் கல்வி, பொருட்களை வாங்கல், குடும்பம், நண்பர்கள், வரிகள், நிதி அர்ப்பணிப்புகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.   

பாதீடு மாதிரி   

உங்களுடைய பாதீட்டை கணினியின் உதவியுடன் ஒரு Excel Sheetஐப் பயன்படுத்தி, இலகுவாகப் பதிவேற்றிக் கொள்வதன் ஊடாக, அதை தேவைக்கு ஏற்ப பிரதி செய்து தொடர்சியாகப் பயன்படுத்திக் கொள்ள முடிகின்றது.   

வாழ்க்கை நிகழ்வுகளும் நீங்களும்   

தொழில் ஆரம்பம்   

வாழ்க்கையில் உங்களுடைய முதலாவது தொழிலின் ஆரம்ப காலமானது, ஓர் அற்புதமான வாழ்க்கைத் தருணமாக அமைகின்றது. நீங்கள் நிதிச் சுகந்திரத்தை முதல் முதலாக அனுபவிக்கத் தொடங்கும் காலமாக இதைக் கொள்ளலாம். இக்காலத்தில் உங்களுடைய நிலைபேறான நிதி நிலைமையை மேம்படுத்திக் கொள்வதற்கான நிதி மேலாண்மையை விருத்தியடையச் செய்தல் மிகவும் அவசியம்.   

நிதி முன்னுரிமைகள் (வருமானம் - சேமிப்பு = செலவு)   

நீங்கள் ஏதாவது கடன் பெற்றிருந்து (தனிப்பட்ட கடன் அல்லது வீட்டுக்கடன்) அக்கடன் நிலுவையில் இருக்குமானால், அதனை முன்னுரிமை அடிப்படையில் உரிய முறையில் விரைவாகச் செலுத்தி அந்தப் பொறுப்பிலிருந்து விடுபடுவதுடன், அதற்கு அடுத்த முன்னுரிமையாக வாழ்க்கையில் எந்நேரத்திலும் ஏற்படக்கூடிய சில பல நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்ளக்கூடிய போதுமான பாதுகாப்பு ஒதுக்கத்துக்கான (பணம்) சேமிப்புகளைப் பெருக்குதல் அமைந்திருத்தல் வேண்டும்.   

பாரம்பரிய சிந்தனைக்கு அமைவாக எமது வருமானத்திலிருந்து எமக்கு ஏற்படக்கூடிய செலவுகளைக் கழித்து, மீதியாக உள்ள பணத்தை, நாம் வங்கி போன்ற நிதி நிறுவனங்களில் நீண்டகாலம், குறுங்கால அடிப்படைகளில் சேமிக்கின்றோம். மாறாக வாழ்க்கைச் செலவானது நாளாந்தம் அதிகரித்துச் செல்வதால், நடைமுறையில் செலவுகளுக்குப் பிந்திய வருமானத்துக்கான சாத்தியம் மிகவும் அரிதாகி வருகின்றது. ஆகவே, நடைமுறைச் செலவுகளுடன் ஒப்பிடுகையில் சேமிப்புச் செலவானது முன்னுரிமைத் தெரிவாக முக்கியம் பெறுகின்றது.   

மேலும், உங்களது சேமிப்புக் காப்பகங்கள், வங்கிகள், காப்புறுதி உடன்படிக்கைகளுடன் தொடர்புடைய நிறுவனங்களின் கடன் தீர்க்கும் ஆற்றல் திடமான நிலையில் நிறுவனங்களால் பேணப்படுகின்றனவா என்பதைக் காலத்துக்குக் காலம் உறுதிப்படுத்தத் தவறாதீர்கள். இவைகள் நீண்டகால நிதித் திட்டமிடல்களின் அடிப்படைகளாக அமைகின்றன.   

(மிகுதி அடுத்த புதன்கிழமை தொடரும்)   
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X