2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தொகுதிக்கடன் அறிமுகம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 01 , பி.ப. 12:49 - 1     - {{hitsCtrl.values.hits}}

(கடந்த வாரத் தொடர்ச்சி)  

வட்டியற்ற தொகுதிக்கடன்கள் (Zero-Coupon Debentures)  

தொகுதிக்கடன் ஒன்றுக்கு, காலத்துக்கொருமுறை வட்டிப்பணம் செலுத்தப்படாத தொகுதிக்கடன், வட்டியற்ற தொகுதிக்கடன் எனப்படும். இவ்வாறு வட்டி செலுத்தப்படாத காரணத்தால் இத்தகைய தொகுதிக்கடனானது கம்பனியால் முகப்பெறுமதியைவிட, குறைவான விலைக்கே வழங்கப்படுகின்றது.  
 வட்டியுடனான தொகுதிக் கடனைப்போன்று, வட்டியற்ற தொகுதிக்கடனுக்கும் முகப்பெறுமதியானது முதிர்வுக் காலத்தின் இறுதியில் செலுத்துவதற்கு கம்பனி கடமைப்பட்டுள்ளது.   

வட்டியற்ற தொகுதிக்கடன் ஒன்றைக் கொள்வனவு செய்யும் நபரொருவரின் இலாபமானது முதிர்வுக் காலத்தின் இறுதியில் கிடைக்கும் பெயரளவுப் பெறுமதிக்கும் அவரது கொள்விலைக்கும் இடையில் காணப்படும் வித்தியாசமாகும்.  

உதாரணமாக ரூ. 1,000 மூன்று வருடங்கள் வட்டியற்ற தொகுதிக்கடன் ஒன்றைப் பார்ப்போம். கம்பனியால் பொது மக்களுக்கு தொகுதிக்கடன் ஒன்று ரூ. 609 வீதம் விற்பனை செய்யப்படுகின்றது என எண்ணிக் கொள்வோம்.  

எனவே, இத்தொகுதிக்கடனை கொள்வனவு செய்யும் நபர் ரூ. 609 ஐ செலுத்தி, மூன்று வருடங்களின் பின்னர் அவருக்கு கம்பனியால் ரூ. 1,000 வழங்கப்படும். பெயரளவுப் பெறுமதிக்கும் கொள்விலைக்குமிடையே உள்ள வித்தியாசமான ரூ. 391 அவரது வருமானமாகும். அதை வருடாந்த வருமானச் சதவீதமாகக் கணிப்பிடும்போது 18% ஆகக் காணப்படுகின்றது.   

 பெயரளவுப் பெறுமதிக்கும் கொள்விலைக்கும் இடையேயுள்ள வித்தியாசமானது கொடுபட வேண்டிய வட்டியாகக் (Accrued Interest) கருதப்படும். இத்தொகுதிக்கடன்களின் முகப்பெறுமதி ரூ. 100 ஆகும். இதற்கமைய முதலீட்டாளர் ஒருவரால் 18 வருடத் தொகுதிக்கடன் ஒன்றுக்கு ரூ. 14.68 சதமும், 15 வருட தொகுதிக்கடன் ஒன்றுக்கு ரூ. 20.90 சதமும் ஆரம்பத்தில் செலுத்தப்பட்டுள்ளது.  

பெயரளவுப் பெறுமதி மற்றும் இந்தக் கொள்விலைக்கும் இடையேயுள்ள வித்தியாசமானது வருடாந்தச் சதவீதமாகக் கணக்கிடும்போது 18 வருடத் தொகுதிக்கடனுக்கு வருமானம் 11.25% ஆகவும், 15 வருடத் தொகுதிக்கடனுக்கு வருமானம் 11% ஆகவும் காணப்படுகின்றது. இதைத்தவிர கம்பனியால் காலத்துப்கொருமுறை வட்டி செலுத்தப்படமாட்டாது.  

வட்டியுடனான தொகுதிக்கடன்களின் வட்டி வீதமானது நிலையானதாகவோ அல்லது மாற்றமடையக்கூடியதாகவோ காணப்படலாம். இதற்கமைய நிலையான வட்டித் தொகுதிக்கடன் மற்றும் மாற்றமடையும் வட்டித் தொகுதிக்கடன் என இரண்டு விதமான தொகுதிக்கடன்களை அறிந்து கொள்ளலாம்.

நிலையான வட்டித் தொகுதிக்கடன் 

நிலையான வட்டித் தொகுதிக்கடனின் வட்டி வீதமானது இத்தொகுதிக்கடனின் முழுமையான முதிர்வுக் காலத்திலும் மாற்றமடையாது காணப்படும். இதற்கு முன்னர் கலந்துரையாடப்பட்ட ரூ. 1,000 - 18% மூன்று வருடத் தொகுதிக் கடனுக்கு வருடத்துக்கான வட்டி ரூ. 180 ஆகவும் இத்தொகையானது மாற்றமடையாமல் எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு ஒவ்வொரு வருடமும் இதனைச் செலுத்துவதற்கு கம்பனியானது உறுதி செய்துள்ளது.  

மாற்றமடையும் அல்லது மிதக்கும் வட்டி வீதத் தொகுதிக்கடன்கள்  

மாற்றமடையும் அல்லது மிதக்கும் வட்டித் தொகுதிக்கடனுக்கு வட்டி வீதமானது முதிர்வுக் காலத்துக்குள் ஒரே மட்டத்தில் காணப்படாது. வழங்கப்பட்ட கம்பனியால் இத்தகைய தொகுதிக்கடனுக்கான வட்டி வீதமானது பொருளாதாரத்தின் மற்றுமோர் வட்டி வீதத்துடன் தொடர்புபடுத்தி நிச்சயிக்கப்படும்.   

இந்த மற்றுமோர் வட்டி வீதமானது பிரமாண வட்டி வீதம் (Benchmark Interest Rate) என அழைக்கப்படும். பிரமாண வட்டி வீதம் மேல் உயரும்போது தொகுதிக்கடனின் வட்டி வீதம் மேலெழுந்தும் பிரமான வட்டி வீதம் கீழிறங்கும்போது தொகுதிக்கடனின் வட்டிவீதம் வீழ்ச்சியடைந்தும் காணப்படும்.  

பிரமாண வட்டி வீதமாக இலங்கையில் பிரபல்யமாகப் பயன்படுத்தப்படுவது திறைசேரி உண்டியல்களின் வட்டி வீதமாகும். பொதுவாக, வழங்கப்படும் கம்பனியால் மாற்றமடையும் வட்டி வீதத்துக்கு ஆகக்குறைந்த எல்லை (Floor) மற்றும் ஆகக்கூடிய எல்லையும் (Cap) காணப்படும்.   

இத்தகைய தருணத்தில் தொகுதிக்கடனின் வட்டி வீதமானது, எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆகக்குறைந்த எல்லைக்குக் குறைவாக வீழ்ச்சியடையாது. முதலீட்டாளரது பார்வையில் இந்த ஆகக்குறைந்த எல்லையானது எதிர்காலத்தில் பிரமாண வட்டி வீதம் வீழ்ச்சியடைவதால் ஏற்படும் தொகுதிக்கடனின் வட்டி வீத வீழ்ச்சி நட்ட அச்சத்தை வரையறைக்குட்படுத்துவதால் முக்கியத்துவம் பெறுகின்றது.   

அதேபோன்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தொகுதிக்கடனின் வட்டி வீதமானது ஆகக்கூடிய எல்லைக்கும் மேலாகச் செல்லாது.இதன் மூலம் தொகுதிக்கடனை வழங்கும் கம்பனிக்கு எதிர்காலத்தில் பிரமாண வட்டி வீதம் உயர்வடைவதன் நிமித்தம் தொகுதிக்கடன் உரிமையாளர்களுக்கு உயர்ந்த வட்டி வீதத்தைச் செலுத்த வேண்டிய நட்ட அச்சத்தை வரையறைக்குட்படுத்துவதால் உதவியாயிருக்கும்.  

முதிர்வுக் காலம் (Maturity Period)  

தொகுதிக்கடன்களின் மூன்றாவது முக்கிய பண்பாகக் காணப்படுவது அவை நிச்சயமுள்ள முதிர்வுக் காலத்துடன் வழங்கப்படுவதாகும். முதிர்வுக்காலம் என்பது கம்பனியொன்றினால் பெற்றுக் கொள்ளப்பட்ட தொகுதிக்கடன்களின் பெயரளவுப் பெறுமதியை மீளச் செலுத்துவதற்குப் பொறுப்பேற்றுள்ள காலமாகும். தொகுதிக்கடன்கள் என்பது நீண்டகால கடன் பிணையங்கள் என்பதால் முதிர்வுக் காலமானது ஒரு வருடத்திற்கும் மேலானதாக இருக்க வேண்டும்.

முதிர்வுக் காலத்தின் இறுதியில் தொகுதிக்கடன்களின் பெயரளவுப் பெறுமதியானது மீளச் செலுத்தப்படுவதன் மூலம் கடன் தீர்க்கப்படுதல் கடன் மீட்டல் (Redemption) எனப்படும். இதன் காரணமாக தொகுதிக்கடன்களை பெயரிடும்போது அவை மீட்கத்தகு (Redeemable) தொகுதிக்கடன்கள் எனக் குறிப்பிடுவது வழக்கமாகும்.  

 முதிர்வுக் காலம் இல்லாத அல்லது மீட்க முடியாதவாறு தொகுதிக்கடன்கள் வழங்க முடியுமாயினும் இதுவரை இலங்கையின் நவீன பங்குச்சந்தை வரலாற்றில் அத்தகைய தொகுதிக்கடன் எதுவும் வழங்கப்படவில்லை. மிகவும் தொன்மையான வரலாற்றில் பிரித்தானியா மற்றும் அமெரிக்கச் சந்தைகளில் இதன் முடிவுறாத அல்லது ஓயாத தொகுதிக்கடன்களது (Perpetual Debentures) வழங்கல்கள் இடம்பெற்றுள்ளன.  

- இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு    


You May Also Like

  Comments - 1

  • N.Kapilraj Saturday, 16 February 2019 08:16 AM

    nice

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .