2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நிதியியல் அழுத்தங்களும் அதன் தாக்கங்களும்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2019 ஜூலை 22 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளாந்த வாழ்க்கையில் வேறுபட்ட மன அழுத்தங்களும் அதன் தொடர் விளைவுகளும் நம்மில் பலரைத் துரத்திக்கொண்டிருந்தாலும், இந்த நிதியியல் ரீதியான அழுத்தங்கள், பெரும்பாலானவர்களுக்குப் பொதுவானவையாகும். கடைக்கோடி விவசாயி முதல் பணக்காரர் வரை, அவரவர் நிதியியல் தேவைகள், விருப்பங்களின் அடிப்படையில், இதன் தாக்கங்கள் வேறுபட்டு இருக்கிறன. அதனால்தான், வர்க்க வேறுபாடுகளின்றி நிதியியல் ரீதியான அழுத்தங்கள் அனைவரையும் பாதிக்கச்செய்வதுடன், மரணங்கள் வரை செல்கின்றன.  

நிதியியல் ரீதியான அழுத்தங்கள் எவ்வாறு உருவாகின்றன, எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என நாம் சிந்தித்து பார்த்ததுண்டா?. இவ்வாறான, நிதியியல் ரீதியான அழுத்தங்கள் ஏற்படும்போது, அவற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள அல்லது தப்பித்துக்கொள்ள, என்ன மாதிரியான விடயங்களைக் கையாளவேண்டும் என்பதை நாம் எண்ணிப் பார்த்ததுண்டா?   

மேற்கூறிய கேள்விகளுக்கான விடையை, நாம் நம்மில் ஆராய்ந்து பார்த்தோமானால், பெரும்பாலும் இல்லையென்பதே விடையாக வரும். நாளாந்தத் தேவைகளுக்கு மத்தியில், மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நாம், இத்தகைய நிதியியல் பிரச்சினைகள் தொடர்பில் நிதானித்து செயற்படுவோமாயின், பல்வேறு பிரச்சினைகளிலிருந்து மீள முடியுமென்பதுடன், இதனால் ஏற்படும் பல தற்கொலைகளைக் கூட தடுத்துவிட முடியும்.   

நிதியியல் சார் கல்வியறிவில் குறைபாடு

நிதியியல் அழுத்தங்களுக்கும் நிதியியல் ரீதியான பிரச்சினைகளுக்கும் மிக அடிப்படையான பிரச்சினை, நமது நிதியியல் சார் கல்வியறிவு வீதமானது, மிக தாழ்மையான நிலையிலிருப்பதாகும். இலங்கையின் கல்வியறிவு வீதம் சுமார் 90 சதவீதத்துக்கும் மேலாகவுள்ள நிலையில், நிதியியல் ரீதியானக் கல்வியறிவு வீதமானது, சுமார் 30 சதவீதத்துக்கும் அண்மித்ததாகவே உள்ளது. இந்த வீத வேறுபாடே, நாம் நிதியியல் செயற்பாடுகள் தொடர்பில் புரிதலோடு வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருக்கின்றோம் என்பதைத் தெளிவாக்கி விடுகிறது.  

கணக்கீடு தொடர்பிலும் பொருளியல் தொடர்பிலும் நமக்கு கற்பிக்கும் பாடசாலை கல்விமுறையானது, அடிப்படையான நிதியியல் தேவைப்பாடுகள் தொடர்பில் நமக்குக் கற்பிப்பதில்லை. பணத்தை எப்படி சேமிப்பது, அதை எப்படி முதலீடு செய்து இரட்டிப்பாகிக் கொள்வது என்பதெல்லாம் பாடசாலை கல்வியில் எமக்கு சொல்லித்தரப்படுவதில்லை. இந்த நிதியியல் முகாமைத்துவத்தின் அடிப்படைகள், நமது பதின்ம வயதில், புகட்டப்படாமைக் கூட, தற்போதைய சூழ்நிலைக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.  

எந்தவகை நிதியியல் செயற்பாடுகளும் கணக்காளர் நிதியியலாளர் அல்லது பொதுவான வகையில் கணக்கீடுக் கற்கைகளை பின்பற்றிவர்களுக்கேத் தெரியும் எனும் பிரமை, நம்மிடத்தில் ஏற்படுத்தப்பட்டமையும் இன்னுமொரு காரணமாக உள்ளது.  

உண்மையில், ஒவ்வொரு வீட்டினதும் குடும்பத் தலைவர்கள் / குடும்பத் தலைவிகளுக்குத் தெரிந்த நிதியியல் அடிப்படையைக்கூட, நாம் எங்குமே பயன்படுத்தவில்லை என்பதே சோகமானதாகும். நமது வீட்டில் வருமானத்துக்கும் செலவுக்குமென நமது பெற்றோர்கள் போடுகின்ற அடிப்படைத் திட்டமிடல்கள், நமது சந்ததியிடம் பொருத்தமான முறையில் கடத்தப்பட்டிருந்தால் கூட, இன்றைய நிலையில் கடனட்டை, கடன்கள், ஏனைய நுண்ணிதியியல் நிறுவனங்களால் வருகின்ற சிக்கல்களைப் பெருமளவில் தவிர்த்திருக்க முடியும்.   

நிதியியல் முகாமைத்துவமானது, அனைவருக்குமே பொதுவானவொன்றாகும். குறித்த ஒருவர், எந்தவொரு தொழிலைப் புரிபவராகவும் இருக்கலாம். எந்தவகை தொழிலினதும் உரிமையாளராகவும் இருக்கலாம் அல்லது சாதாரணமான ஒருவராகவும் இருக்கலாம். இத்தகைய அனைவருமே, நிதியியல் முகாமைத்துவத்தின் அடிப்படையையாவது தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. இல்லையெனில், மேற்பந்திகளில் கூறியதுபோன்ற நிதியியல் அழுத்தங்களைத் தவிர்க்க முடியாது.  

சிறு துளி பெருவெள்ளமான செலவீனங்கள் 

நாம் உழைப்பதே செலவீனங்களை செய்வதற்குத்தானே எனும் எண்ணம் பலரிடத்தே உள்ளது. அது உண்மையில் தவறானதாகும். நமது வருமானத்தின் அடிப்படையே, சேமிப்பும் அதற்கு பின்னதானச் செலவீனங்களும் ஆகும். இதை, நம்மில் பலர் மறந்துவிடுகின்றனர். இதனால்தான், பெரும்பாலான நிதியியல் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன.  

சிறிது சிறிதாக நாம் செலவு செய்யத் தொடங்கும் ஆடம்பரச் செலவீனங்கள், ஒரு கட்டத்தில் நம் வருமானத்தை மீறியதாகச் செல்கின்றபோது, கடன், கடனட்டை சுமைக்குள் சிக்கிக் கொள்கின்றோம். அதுபோல, நமக்கு ஏற்படக்கூடிய திடீர் செலவீனங்களுக்காக, கடனைப் பெற்றுக்கொள்கின்ற பலரும், அதுசார்ந்த நிதியியல் முகாமைத்துவத்தைச் சரிவர பின்பற்றாதன் காரணமாக, நிதியியல் பிரச்சினைகளுக்கும் சிக்கிக் கொள்கின்றோம். இது, நிதியியல் அழுத்தங்களைத் தோற்றுவிப்பதுடன், அதுசார் பிரச்சினைகள், தாக்கங்களுக்கு காரணமாக அமைகிறது.  

எதற்கு முன்னுரிமை வழங்குவது?

நிதியியல் ரீதியான தேவைகள், பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது இவற்றுக்கு முன்னுரிமை வழங்குவதென்பது நம்மில் பலருக்கும் இன்னமும் புரியாத புதிராக இருக்கின்றது.  

உதாரணத்துக்கு, உங்களுக்கு கடனட்டை, வங்கி கடன் இருக்கின்றதென வைத்துக்கொள்ளுவோம். கடனட்டையில் 50,000 ரூபாய் கடனும் வங்கிக் கடனாக 500,000 ரூபாய் 12 மாத தவணையாகவும் செலுத்த வேண்டுமென இருக்கின்றதென வைத்துக்கொள்வோம். இந்த நிலையில், உங்களுக்குக் கணிசமான பணம் கிடைக்கும்போது, கடனட்டை கடனை முழுமையாகச் செலுத்த முடிவு செய்வீர்களா? அல்லது வங்கிகடனின் ஒருபகுதியை செலுத்தி, உங்கள் மாதாந்த தவணைக் கட்டணத்தின் அளவை குறைத்துக்கொள்ளுவீர்களா?  

மேற்கூறிய கேள்விக்கு, நீங்கள் வங்கிக் கடனுக்கு முன்னுரிமை வழங்குபவராக இருப்பீர்களானால், உங்களது நிதியியல்சார் விடயங்களை மீளாய்வு செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும். காரணம், வங்கிக்கடன் நிலையான தவணைக் கொடுப்பனவை கொண்டிருப்பதுடன், உங்களது அனைத்துவகை செலவீனங்களிலும் முன்னதாக திட்டமிட்ட செலவாகவே இருக்கும். ஆனால், கடனட்டை செலவீனங்கள் அவ்வாறானவை அல்ல. அதிலிருக்கும் நிலுவைக்கு வட்டிக்குமேல் வட்டியை வங்கிகள் அறவிட்டுக்கொண்டு இருக்கும். எனவே, கடனட்டை நிலுவைகளுக்கு முன்னுரிமை வழங்குவதே புத்திசாதுர்யமான செயலாகும்.  

நிதியியல் அழுத்தங்களை தவிர்ப்பது எப்படி?

நிதியியல் அழுத்தங்களைத் தவிர்ப்பதற்கு, நிதியியல் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதே சரியானதென ஒற்றை வரியில் கூறிவிட்டு கடந்துவிட முடியும். ஆனால், அதை பழக்கத்துக்குக் கொண்டுவருவது முதல், நிதியியல் அடிப்படைகளை அறிந்துகொள்வதுவரை இலகுவான, கடினமான முறைகளையும் நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ளுவதே சரியாகும்.   

நிதிசார் அடிப்படை விடயங்களை கூட கற்றுக்கொள்ள ஆரம்பியுங்கள். தற்போதைய நிலையில் சேமிப்புக்கான வட்டி விகிதம் என்ன, வங்கிக் கடனுக்கான வட்டி விகிதம் என்ன, எங்கு சேமிப்புக்களை முதலீடு செய்வது பாதுகாப்பானதும், இலகுவானதுமாக இருக்கும் போன்ற அடிப்படையான கேள்விகளுக்கு விடைகளை தேடிக் கண்டறியுங்கள். இது, நீங்கள் உங்கள் வருமானத்தை இரட்டிப்பாக்கிக் கொள்ளாமல் எவ்வாறு வீணாக்கிக் கொண்டுள்ளீர்கள் என்பதை தெள்ளத் தெளிவாக உங்களுக்குக் காட்டும். அதற்குப் பின்னர், உங்கள் ஒருமாத செலவுகள் அனைத்தையும் பட்டியலிட்டு, உங்களது தேவையற்றச் செலவுகள், குறித்தச் செலவைக் கட்டுப்படுத்துவதன் மூலமாக சேமித்திருக்கலாமென என்பவற்றைக் கண்டறியுங்கள். அதன்மூலமாக, உங்கள் வருமானத்துக்கேற்பச் செலவிடக்கூடிய பாதீடு (Budget) ஒன்றைத் திட்டமிட்டு அடுத்துவரும் மாதங்களில் அதை நடைமுறைப்படுத்தி பாருங்கள். அதன்மூலமாக, நீங்கள் சந்திக்கக்கூடிய நடைமுறை பிரச்சனைகளை கண்டறிந்து அதற்கேற்ற வகையில், அ​தை மாற்றியமைத்து கொள்ளுங்கள். பின்பு, இந்தப் பாதீட்டைக் கடைப்பிடிப்பதை  வழக்கமாக்கிக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இதன்மூலமாக, குறைந்தது ஆறு மாதங்களில் பெருமளவு பணத்தை நீங்கள் சேமித்திருப்பதனையும் நிதியியல் ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்குமளவுக்கு நீங்கள் முன்னேற்றமடைந்திருப்பதனையும் கண்டுகொள்ளக் கூடியதாக இருக்கும்.  

இவாறு, சிறுகச் சிறுக உங்களை மாற்றிக்கொள்ளுவதன் மூலமாக, நிதியியல் ரீதியான அழுத்தங்களிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ள முடிவதுடன், அதுசார் பிரச்சினைகளிலிருந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .