2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நுண் நிதியியல்: நிலைபேறானதாகப் பேண வேண்டியதன் முக்கியத்துவம்

ச. சந்திரசேகர்   / 2019 ஜூலை 31 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, கிழக்கு பிராந்தியத்திலிருந்து சுமார் 1.25 பில்லியன் ரூபாய்க்கு அதிகமான நுண்நிதியியல் கடனாக பெற்றுக் கொண்ட பெண்கள், அதைத் தொகையை மீளச் செலுத்தாத இயலாத நிலையில், அரசாங்கம் அந்தத் தொகையை பொறுப்பேற்றுள்ளது.

வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களைச் சேர்ந்த சுமார் 45,135 பெண்களின் இந்தக் கடன் சுமையை அரசாங்கம் இவ்வாறு பொறுப்பேற்றுள்ளதாக, இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் நுண் நிதியியலுடன் தொடர்புடைய கடன் சுமை பாரிய சவாலாக அமைந்துள்ளது.  

கடந்த காலங்களில் நாட்டில் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களினாலும், இந்த பிரச்சினைக்கு இவ்வாறான தீர்வு வழங்கப்பட்டிருந்தது, குறிப்பாக தேர்தல் காலம் நெருங்கி வரும் போது, இவ்வாறானச் செயற்பாடுகளை மேற்கொள்வதை அவதானிக்க முடிந்தது. இதனூடாக, தமது பிரபல்யத்தை குறித்த சமூகத்தின் மத்தியில் அதிகரித்துக் கொள்வது அவர்களின் எதிர்பார்ப்பாக அமைந்திருந்ததுடன், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் நோக்கமாகும்.

ஆயினும் இவ்வாறு அரசாங்கத்தினால் மேற்கொள்ளும் செயற்பாடுகள் அனைத்தும் வரி செலுத்துவோரின் செலவில் அமைந்துள்ளதுடன், நிலைபேறான அபிவிருத்திக்கு உதவும் வகையில் பரிபூரண, தங்கியிருக்கக்கூடிய,  போட்டிகரத்தன்மை வாய்ந்த நுண் நிதியியல் கட்டமைப்பை கொண்டிருக்க வேண்டியதன் தேவையையும் உணர்த்துகின்றது.  

வறுமை ஒழிப்பில் முக்கிய பங்கை வகிக்கும் ஒரு நிதி மூலமாக நுண்நிதியியல் அமைந்துள்ளது. இதனை முறையாக பின்பற்றும் நிலையில், பயன்பெறுவோருக்கு முன்னேற்றத்தை எய்தக்கூடியதாக இருக்கும், இதற்கு உலகளாவிய ரீதியில் உதாரணங்களும் காணப்படுகின்றன. 

உதாரணமாக, பங்களாதேஷில், நுண் நிதியியல் தீர்வு பரந்தளவில் வழங்கப்படுவதுடன், இதனூடாக உறுதியான தொழில் முயற்சியாண்மை, திறன் விருத்தி, சந்தை அணுகல், நிதியியல் வளர்ச்சி போன்றன பதிவாகியுள்ளன.  

பெண்களை பொறுத்தமட்டில் நுண் நிதியியல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த பெருமளவான பெண்கள் நாட் சம்பளத்துக்கு பணியாற்றி வருகின்றனர். இவர்களால் வங்கிகளுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட முடியாத நிலை காணப்படும்.

இந்நிலையில் மொத்தமாக இடம்பெறும் நுண்நிதியியல் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் 80 சதவீதமானவை பெண்களால் இடம்பெறுகின்றன. திவி நெகும, சமுர்த்தி போன்ற திட்டங்களுடன் அண்மைக் காலங்களில் இலங்கையில் நுண் நிதியியல் என்பது உறுதியான அரச தலையீட்டைக் கொண்டிருந்தது.

அங்கிகரிக்கப்பட்டாத கடன் வழங்குநர்களிடமிருந்து பொது மக்களை பாதுகாக்கும் வகையில், வெளிப்படையான, பொறுப்புக்கூறும் கட்டமைப்பொன்றை சமுர்த்தி வங்கி கொண்டிருக்க வேண்டும் என்பது அண்மையில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.  

நுண் நிதியியல் என்பது, மக்கள் மத்தியில் அதிகளவு எதிர்ப்பை கொண்டுள்ளது, ஏனெனில் வடக்கு, கிழக்கில் யுத்தம் நிறைவடைந்த பின்னர், பெருமளவு அப்பகுதியில் பிரவேசித்த நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், வாடகை கொள்வனவு திட்டங்களுடன் நுண் நிதியியலையும் உட்புகுத்தி, அதீத வட்டிக்கு நிதிகளை வாரி வழங்கியிருந்தமை காரணமாக, இந்நிலை தோன்றியுள்ளது.

இந்தத் திட்டங்கள் தொடர்பில் பொது மக்கள் மத்தியிலும் போதியளவு அறிவு காணப்படாமை, நிறுவனங்களினால் பணிக்கமர்த்தப்பட்டவர்கள், அதிகளவு வருமானமீட்டுவதற்கு குறித்த நிறுவனங்களால் அழுத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை போன்றன கடன்களை போதியளவு பின்புல ஆய்வுகளை மேற்கொள்ளாமல் வழங்க ஏதுவாக அமைந்திருந்தது.

எவ்வாறாயினும், இது போன்ற செயற்பாடுகளினால் நுண் நிதியியல் சேவைகளை நேர்மையாக பெற்றுக் கொடுக்கும் நிறுவனங்களின் சேவை வரவேற்கப்பட வேண்டும். நுண் நிதியியல் துறையை வெளிப்படையானதாகவும், பொறுப்புக்கூறும் வகையில் அமைந்திருக்கச் செய்யவும், அறவிட முடியாக் கடன் ஒதுக்கங்களை இல்லாமல் செய்வது என்பது ஒரு அங்கமாக மாத்திரம் அமைந்துள்ளது.  

வங்கிகள் மற்றும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் தாம் வழங்கும் நிதிச் சேவைகள் தொடர்பாக வாடிக்கையாளர்களின் தரவுகளை கொடுகடன் தகவல் பணியகத்தில் பதிவுகளை பேணி வருவதை போன்று, நுண் நிதிச் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நிறுவனங்களும் இவ்வாறான பதிவுகளை பேண வேண்டும் என இலங்கை மத்திய வங்கி விதிமுறைகளை இயற்ற முன்வந்துள்ளது. இதனூடாக கடன் பெறுநர்களின் கடன்படுநிலை தொடர்பில் ஆராய உதவியாக அமைந்திருக்கும் என்பதுடன், தற்போது நாட்டின் சில பகுதிகளில் பெரும் பிரச்சினையாக தலைதூக்கியுள்ள நிதிப் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமைந்திருக்கும் என இலங்கை மத்திய வங்கி எதிர்பார்க்கின்றது.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பின்பற்றப்படுவதை போன்று, வைப்பாளர்களை பாதுகாக்கும் வகையில் வைப்பாளர் காப்புறுதி திட்டம் செயற்படுத்தப்பட்டு, எதிர்காலத்தில் நுண் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களை பாதுகாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சுமார் ஒரு தசாப்த காலப்பகுதிக்கு முன்னதாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான காப்புறுதித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், தற்போது 44 பில்லியன் ரூபாய் நிதியமாக காணப்படுவதுடன், ஒவ்வொரு ஆண்டும் 10 பில்லியன் ரூபாயால் அதிகரிக்கும் என மதிப்பிட்டுள்ளது.   

இதனூடாக நிதிச் சந்தையில் எழக்கூடிய எவ்விதமான தாக்கங்களையும் தாங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என மத்திய வங்கி கருதுகின்றது. இரண்டு வருட காலப்பகுதிக்கு மேலாக இந்த திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், விரைவில் இந்த திட்டத்தை அமுலாக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வைப்புகளை ஏற்றுக் கொள்ளாமல், கடன்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் எவ்விதமான அரச மட்ட விதிமுறைகளும் நாட்டில் அமுலில் இல்லை என்பதுடன், இதை நிவர்த்தி செய்வதுடன், இது தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வும், அறிவூட்டலும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.  

இறுதியில் பொது மக்களே இதற்கான பொறுப்பையும் ஏற்கவேண்டியுள்ளது. விவசாயம் போன்ற துறைகளைச் சேர்ந்த, கடன் பெற்று, அதனை மீளச் செலுத்த முடியாமல் தவிக்கும் மக்களுக்கு, தமது நிலையிலிருந்து மீள்வதற்கு தொழில்நுட்ப ரீதியான உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

காலநிலை மாற்றங்கள் எதிர்பாராத வகையில் இடம்பெறும் நிலையில், மனித கட்டுப்படுத்தல்களால் செயற்படுத்தக்கூடிய அம்சங்களினூடாக உணவு பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள முடியும்.

நுண் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு சந்தைகள் உருவாக்கிக் கொடுக்கப்படுவதுடன், அதனூடாக நிலைபேறான வளர்ச்சிக்கு வழியேற்படுத்த வேண்டும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X