2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

பணப் பரிவர்த்தனையின் அடுத்த கட்டம் என்ன?

அனுதினன் சுதந்திரநாதன்   / 2018 ஜூன் 25 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகளாவியரீதியில் எப்போது கொடுக்கல்வாங்கல் செயல்பாடு ஆரம்பித்ததோ, அப்போதே பரிமாற்று ஊடகமொன்றுக்கான தேவை ஆரம்பித்துவிட்டது. இது காலத்துக்குகாலம் ஒவ்வொரு வடிவத்தை அடைந்து தற்போது, பணமாக மாறியிருக்கிறது. இந்தப் பணமே முற்றாக இல்லாத கொடுக்கல்வாங்கல் நிலை சாத்தியமானதா ?  

உலக கொடுப்பனவு அறிக்கையின் (World Payments Report) பிரகாரம், உலகின் பணமல்லா கொடுக்கல்வாங்கல்களின் செயல்பாடானது கடந்த 2014-15ஆம் ஆண்டில் 11.2%மாக அதிகரித்து, 433.1 பில்லியன் பெறுமதியைத் தொட்டிருப்பதாக குறிப்பிடப்படுகிறது. 

இவ்வகை பணமில்லா கொடுக்கல் வாங்கலானது, வருடம்தோறும் வளர்ச்சியை கொண்டிருப்பதுடன், இது மக்களின் வாழ்வில் பணப்பாவனையைக் குறைக்கவும் செய்திருக்கிறது.  

வரவட்டை, கடனட்டைகளின் அட்டைகளின் பயன்பாடு, இணைய கொள்முதல் நடவடிக்கைகள், தொலைபேசி மூலமான கொடுப்பனவு வசதிகள், அணிந்து செல்லக்கூடிய தொழில்நுட்பம் வாயிலான கொடுப்பனவு வசதிகள், கைரேகை அடிப்படையிலான கொடுப்பனவு வசதிகள் (பிரான்ஸ் நாட்டில் பரீட்சார்த்திக்கப்படுகிறது) என்பவற்றின் வளர்ச்சியானது,  தொட்டுணர்ந்து பயன்படுத்தும் பணத்தாள், நாணயக்குற்றிகளின் பயன்பாட்டுக்கான மாற்றுத்தேவையை வளர்த்திருப்பதுடன், தொட்டுணரக்கூடிய பணத்தின் பாவனையைக் குறைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.  

உலகின் முதல் பணப்பரிமாற்ற முறையாகப் பண்டமாற்று முறைதான் இனம்காணப்பட்டது. அதுபோல, 1694ஆம் ஆண்டில் பிரித்தானிய நாட்டில்தான் உத்தியோகபூர்வ பணத்தாள் பாவனைக்கு அறிமுகம் செயப்பட்டது. ஆனாலும், 1600களின் இறுதியில் சீனாவில் பண்டமாற்றுக்கு மாற்றீடாக அப்போதே பணத்தாள் பாவனையிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

கொடுக்கல் வாங்கல் முறைமையின் அடுத்தகட்டமாக 1946ஆம் ஆண்டு புரூக்கிலின் வங்கியாளர் ஜோன் பிக்கின்ஸ் அறிமுகம் செய்து வைத்த முதல் கடனட்டையை குறிப்பிட்டு சொல்ல முடியும். இதன்போது, பணத்துக்கான மாற்றீடு உருவாக்கப்பட்டபோதிலும், அவற்றின் வளர்ச்சி உலகம் முழுவதும் உள்ள மக்களைச் சென்றடைய 40-50 வருடங்களாயிற்று.  

அதிலிருந்து, கிட்டத்தட்ட 2000ஆம் ஆண்டு வரை, கொடுக்கல் வாங்கலுக்கான அடுத்த பரிமாற்று ஊடகத்துக்கு காத்திருக்கவேண்டியதாக இருந்தது. குறிப்பாக, இணையப் பாவனை அதிகரித்ததன் விளைவாக, இணையத்தை அடிப்படையாகக்கொண்ட பரிமாற்று ஊடகங்கள் அறிமுகமானதன் விளைவாக, பணப் பரிமாற்றத்துக்கான தேவை குறைந்தது என்றே சொல்லலாம்.

தற்போதைய நிலையில், முழுமையாகப் பணத்தைப் புறம் தள்ளி, மெய்நிகர் நாணயத்தை (Crypto Currency) பயன்படுத்துகின்ற நிலைக்கு வந்திருக்கிறோம். இது, ஒட்டுமொத்தமாகவே பணத்தின் பாவனையை இல்லாமல் செய்யக்கூடிய பரிமாற்று ஊடக முறையாகவுள்ளது.  

பணப் பயன்பாட்டில் பன்மடங்கு பிரச்சினைகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலும், பல சமயங்களில் பணத்தாள்களையும் குற்றிகளையும் தொலைத்து விடுகின்ற நிலை ஏற்படுவதுடன், அவை திருடப்படுவதற்கான சந்தர்ப்பங்களும் அதிகமாகியுள்ளது. அதுபோல, பணமோசடிகளும் இடம்பெறாமல் இல்லை.  

இந்தநிலை தொடர்ந்தாலும்,  அவற்றை எல்லாம் புறக்கணித்துவிட்டுத் தொடர்ச்சியாக பணம் எனும் பரிமாற்று ஊடகத்தையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதற்குக் காரணம், பணத்துக்குச் சமமான, அதைப் பிரதியீடு செய்யக்கூடிய மற்றுமொரு பரிமாற்று ஊடகத்துக்கு  நம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ளாமையேயாகும்.  

உதாரணமாக, பணமானது அதன் உற்பத்தியில் மிக அதீத செலவைக் கொண்டிருக்கிறது. நாம் பயன்படுத்தும் 10 ரூபாய் நாணயக்குற்றியின் உற்பத்திச் செலவு, அந்நாணயக்குற்றியின் பெறுமதியிலும் அதிகமாகும். அதுபோல, பயன்பாட்டுக்கு உதவாத பணத்தைச் சேகரிப்பதும் மேலதிக செலவீன சுமையாக இருக்கிறது. 

நாம் பயன்படுத்தும் பணத்துக்கும், பொருட்கள் போலக் காலவதியாகும் திறன் உள்ளது. அதன்காரணமாகத்தான், ஒவ்வொரு நாடும் குறித்த வருட இடைவெளியில் மிகப்பெரிய செலவீனத்துடன், யாராலும் மீள உற்பத்தி செய்யமுடியாத தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாகப் புதிய பணத்தை அச்சிடுவதுடன், பயன்பாட்டுக்கு ஒவ்வாத பணம், மோசடியாளரின் கைகளில் கிடைக்காத வகையில் அழிப்பதற்கான செலவீனங்களையும் ஏற்றுக்கொள்ளுகிறது.  

அதுபோலவே, பணப் பயன்பாட்டில் நாம் எதிர்கொள்ளும் சிரமங்களும் அதிகமாகவே இருக்கின்றன. குறிப்பாக, இலங்கையில் கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுக்கும்போது, நீங்கள் வழங்கும் பணப்பெறுமதிக்கான மிகுதியை பெற்றுக்கொள்ளுவதில்  எதிர்கொள்ளும் சிக்கல்களை  எண்ணிப் பார்த்ததுண்டா? உதாரணத்துக்கு, பஸ்ஸில் செல்லும் அனைவருமே, ஏதோவொரு வகையில் இந்தச் சிரமத்தைக் கட்டாயமாக எதிர்கொண்டிருப்பார்கள்.   

இதற்கு மேலதிகமாக, நாம் பயன்படுத்தும் பணத்தாள்கள் சுகாதரமானவையா என்பது தொடர்பில் சிந்தித்து இருக்கிறோமா? நாம் பயன்படுத்தும் பணத்தாள்களும், நாணயக் குற்றிகளும் பல்லாயிரம் பேரின் கைகளில் புழங்கிய பின்பே, நமது கைகளுக்கு வருகின்றது. அதன்போது, அந்த பணத்தாள்கள் எவ்வகையான தொற்றுநோய்க் கிருமிகளைக் கூடவே கொண்டுவருகின்றது என நாம் அறிந்திருப்பதில்லை. 

அமெரிக்க கல்வியல் ஆய்வுகளின் பிரகாரம், பல்பொருள் அங்காடிகளில் நிகழ்த்தப்பட ஆய்வில், சுமார் 87%மான பணத்தாள்கள் தம்மிடையே ஏதோவொரு சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் கிருமிகளைக் காவிச் செல்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.  

2018ஆம் ஆண்டில் பெரும்பாலான வணிகங்கள், பணமில்லாத வணிகச் செயற்பாடுகளை நோக்கிச் செல்வதைத் தவிர்க்க முடியாததாக உள்ளன. பெரும்பாலான வணிகங்களின் செயற்பாடுகள் இணையத்துடன் இணைந்ததாக மாற்றமடைந்துள்ளதுடன், சிறு வணிகங்களும் வரவட்டை,  கடனட்டைகளை ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்ற நிலையும் காணப்படுகிறது. 

இவற்றுக்கு மேலாக, நாளாந்தம் பயன்படுத்தும் ஓட்டோ சேவைகளுக்குக் கூட, தற்போது இணையச் செயலிகளின் ஊடாகப் பயன்படுத்தக்கூடியதாக இருப்பதால், அவற்றுக்கான கொடுப்பனவுகளும் இணையம் சார்ந்ததாக மாற்றம் பெற்றுள்ளன. இவை அனைத்துமே,  சேவை வழங்குநர்களையும் பயன்பாட்டாளர்களையும் பணமில்லாக் கொடுக்கல் வாங்கலை நோக்கியே நகர்த்துகிறது.

அத்துடன், பணப்பரிமாற்றத்தை விட, மிக இலகுவாகவும் விரைவாகவும் இத்தகைய பணப் பரிமாற்ற வழிமுறைகள் இருப்பதன் காரணமாக, இதையே இரு தரப்பினரும் விரும்புகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.  

அதுமட்டுல்லாது, பணமில்லாக் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகள் வணிகத்தின் முகாமைத்துவ, கணக்கியல் செயற்பாடுகளையும் இலகுபடுத்தியுள்ளன. பணத்தை எண்ணுவதற்கான செலவு, பிழைகள், மோசடிகள் என்பன பணமற்ற கொடுக்கல் வாங்கலின் விளைவாகக் குறைவடைவதுடன், பணமில்லாக் கொடுக்கல் வாங்கல் இந்தச் செயற்பாடுகளுக்கான செலவீனத்தையும் குறைக்கின்றது.   

 உலகக் கொடுப்பனவு அறிக்கையில், மிகவேகமாகப் பணமில்லாக் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகள் வளர்ச்சியடையும் இடமாக ஆசியநாடுகளே இனம்காணப்பட்டுள்ளன. இதற்குப் பிரதான காரணமாக, இந்த வலயங்களில் வாழும் மக்கள், மிக விரைவாகத் தொழில்நுட்பத்துக்கு பழக்கப்பட்டு விடுபவர்களாக  இருப்பதுடன், தொலைபேசி வழியான பணப்பரிமாற்றம், இலத்திரனியல் பணப்பையின் பயன்பாடு, அட்டைகளின் பணப் பரிமாற்றம் ஆகியவற்றினை அதிகமாக பயன்படுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள்.   

ஆனால், ஆசியாவில் பெரும்பாலான நாடுகள், நடுத்தர வருமானத்துக்கும் குறைவான வருமான நிலையைக் கொண்ட மக்களையே கொண்டிருக்கிறது. குறிப்பாக, இலங்கையில் மிகப்பெரிய நகரங்களைத் தாண்டி, பெரும்பாலான இடங்களிலுள்ள மக்கள், நடுத்தர மற்றும் நடுத்தரத்துக்கும் குறைவான வருமானத்தைக் கொண்ட மக்களாலேயே நிரம்பியிருக்கிறது. 

இதன் காரணமாக, இன்னும் சிலகாலங்களுக்குப் பணப் பரிமாற்றமில்லாத கொடுப்பனவு முறைகள் முழுமை பெறுவதென்பது சாத்தியமற்றதாகவே இருக்கும். ஆனாலும், தற்போதைய நிலையில் இத்தகைய மக்களும் மிக இலகுவாகக் கையாளக்கூடிய தொழில்நுட்ப வசதிகள், அவர்கள் கைகளுக்கு கிடைக்கக்கூடிய வழிமுறைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக, மிக விரைவாகவே அவர்களும் பணமில்லாக் கொடுக்கல் வாங்கலை நோக்கிச் செல்லக்கூடிய நிலை ஏற்பட வாய்ப்புகளுண்டு.  

இதன்காரணமாக, இன்னும் சில வருடங்களில் பரிமாற்று ஊடகமாக பயன்படுத்தப்படும் பணத்தாள், நாணயக்குற்றிகளின் பயன்பாட்டில் வீழ்ச்சிநிலையை எதிர்பார்க்கலாம். ஆனால், முழுமையாகவே பணமின்றி பரிமாற்று ஊடகமொன்றை நோக்கி நகர்வததென்பது, கண்ணுக்கெட்டிய காலம்வரை சாத்தியமானதாகவில்லை. 

காரணம், தொழில்நுட்ப வளர்ச்சியானது எந்தவகையில் நமது கொடுப்பனவு முறைகளையும், நமது தொழிற்பாடுகளையும் இலகுபடுத்தி இருக்கிறதோ, அதேஅளவுக்கு அவற்றின் நம்பகத்தன்மையும் மோசமானதாகவே இருக்கிறது. இதன்காரணமாகப்  பெரும்பாலான மக்கள், தமது செல்வ மேலாண்மையைத் தனித்து, தொழில்நுட்பம் சார் பரிமாற்று ஊடகமொன்றில் முழுமையாக ஒப்படைக்க தயங்குகின்றார்கள்.  

கொடுக்கல் வாங்கல் செயற்பாட்டில் பணமின்றி மிகப்பெரும் அடியினை எடுத்துவைக்கும் வகையில் புதிய தொழில்நுட்ப வசதிகள் இருந்தாலும், பாதுகாப்பாகவும், விரைவாகவும் கொடுக்கல் வாங்கலை செய்யக் கூடியவகையில், சாமானிய மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய வகையில் தொழில்நுட்பங்களும், பரிமாற்று ஊடகங்களும் வளருகின்றபோதே பணத்தின் பரிணாமத்தில் மற்றுமொரு கட்டத்துக்கு அனைவரையும் நகர்த்தக்கூடியதாக இருக்கும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .