2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பொதுநிதியும் அதன் பாவனையும்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2019 ஜனவரி 21 , மு.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போன்ற நாடொன்றில்,  அரசாங்க வருமானம் நாட்டின் பொருளாதாரத்துக்கு எவ்வளவு முக்கியமானதோ, அதேயளவுக்கு  அரசாங்கப் பொதுநிதியும் முக்கியமானது என்பதை, நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அதுபோல, இலங்கை போன்ற வளர்ச்சியடைந்துவரும் நாடொன்றில், அதன் பொதுநிதி (Public Funds) தொடர்பான தகவல்கள், எவ்வளவு தூரம் மக்களுக்கு வெளிப்படையாகக் கொண்டு சேர்க்கப்படுகிறது என்பதும் முக்கியமானக் கேள்வியாகத் தொக்கி நிற்கிறது.

இலங்கை அரசாங்கத்துக்கு, பல்வேறு வழிமுறைகள் மூலமாக வந்துசேரும் நிதியானது, இலங்கை அரசாங்கத்தின் திறைசேரிக்குள் வருகின்றபோது, பொதுநிதியாக அடையாளப்படுத்தப்படுகிறது. அதன்பின், எதன் அடிப்படையில், ஒவ்வொரு துறைகளுக்கும் இந்த நிதி ஒதுக்கப்படுகிறது, எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, எவ்வாறு பயன்படுத்தப்படாத நிதி, வெவ்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்படுகிறது போன்ற தகவல்கள், நமக்கு மிகஇலகுவில் கிடைப்பதுமில்லை. அதுதொடர்பில் நாம் அக்கறையுடையவர்களாக இருப்பதுமில்லை.   

ஒரு நாட்டில், மக்களுக்கும் அரசாங்கத்துக்குமான பொறுப்புக்கூறும் தன்மை அதிகமானதாகவும் வெளிப்படைத்தன்மை மிக்கதாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான்,  மக்களுக்கு ஆட்சி மீதும் அதன் செயற்பாடுகள் மீதும் நம்பிக்கை ஏற்படும். அதுபோல, ஒவ்வொரு விடயத்திலும், ஆரோக்கியமான விமர்சனங்களையும் முன்வைக்க ஏதுவாக இருக்கும். இல்லையெனில், மக்களுக்குக் கடத்தப்படும் தகவல்களும் எழுந்தமானமாக இருப்பதுடன், மக்களால் முன்வைக்கப்படும் விமர்சனங்களும் அந்த வகை ஆனவையாகவே இருக்கும்.   

பொறுப்புடமை (Accountability) என்றால் என்ன? 

ஜனநாயக நாடொன்றில், அதன் சட்டங்களுக்கு அமைவாக, ஓர் அரசாங்கப் பிரதிநிதி, அரசாங்கக்கட்சி,  அரசாங்கத்தைச் சார்ந்த எந்தவொரு தனிநபரும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள். மிக முக்கியமாக அமைச்சர்கள், பிரதிநிதிகள், மாகாண பிரதிநிதிகள் என ஒவ்வொருவரும் பொதுநிதி தொடர்பில் பொறுப்பு​டைமையைக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் நிர்வாகம் சார்ந்த பொறுப்புைடமையையும் நிதிசார் பொறுப்புைடமையும், கொண்டிருக்கின்ற போதிலும், இதை எந்தளவு தூரம் பின்பற்றுகின்றார்கள் என்பதற்குப் பொருத்தமான அளவீடோ அல்லது வழிமுறைகளோ இலங்கையில் இல்லை.   

குறிப்பாக, அரசாங்கத்துக்கும் மக்களுக்குமான பொறுப்புடைமைக் கூறலை 3 வகைபடுத்தலாம். அவை, அரசியல் பொறுப்புடைமை (Political Accountability), நிர்வாக பொறுப்புடைமை (Administrative Accountability), பொதுநிதி பொறுப்புடைமை (Public Fund Accountability) என்பன ஆகும்.   

அரசியல் பொறுப்புடைமை என்பது, பரந்துபட்டதாக உள்ளது. தேர்தல் சார் நடைமுறைகள் , வாக்கெடுப்பு பிரகடனங்கள், அரசியல்கட்சிகள் இடையிலான உறவுமுறை, பொது விவாதத்தில் வெளியிடும் தகவல்கள் என அனைத்தையுமே, இந்தப் பொறுப்புடைமை உள்ளடக்கி அமைந்துள்ளது. 

நிர்வாக பொறுப்புடைமை என்பதற்குள், நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்குள் முறையாக தொழிற்படுதலைக் குறிக்கிறது.

நிதிசார் பொறுப்புடைமை என்பது, மக்களுக்கான பொதுநிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது/பயன்படுத்தப்படுகின்றது என்ப​தை வெளிப்படுத்துவதில் தங்கியுள்ளது.   

மேற்கூறிய பொறுப்புடைமையில் எந்தெந்த விடயங்களில் மக்களாகிய உங்களுக்கு தெளிவு இருக்கிறது எனச் சிந்தித்து பாருங்கள்.

தேர்தல் சார் நடைமுறைகளில், தேர்தலில் போட்டியிடுபவர்கள், எவ்வாறு தேர்தல் கால நிதியைப் பெறுகிறார்கள் என்பதில் வெளிப்படைத் தன்மை இருக்கிறதா, தேர்தல் காலத்தில் மாத்திரம் வெளியாகும் பரபரப்பான செய்திகளில் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுவதில் இருக்கிறதா, மக்கள் நலன் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதில் வெளிப்படைத்தன்மை உள்ளதா,  மீதமான அல்லது பற்றாக்குறையான நிதி ஆகியவை தொடர்பில் வெளிப்படுத்தப்படுகிறதா இவ்வாறு பல கேள்விகள் இன்னமும் விடைதெரியாத வண்ணமே இருக்கிறது.

இதற்கு பிரதான காரணம், பிரதிநிதிகளுக்கு பொறுப்புடைமை தொடர்பில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாமையும், அது தொடர்பில் மதிப்பீடு அல்லது கண்காணிப்பு செய்யக்கூடிய நியமங்களோ,  நிறுவனங்களோ இல்லாமையினால் பொறுப்பான அதிகாரிகளால் அவை தொடர்பில் இருட்டடிப்பு செய்யப்படுவதுமே ஆகும்.   

சர்வதேச ரீதியில் மேற்கூறிய பொறுப்புடமையைக் கணிப்பதற்கும் கண்காணிப்பதற்கும், “சர்வதேச கணக்கியல் நியமம்” (International Public Sector Accounting Standards - IPSAS) பயன்படுத்தப்படுகிறது. இதை, இலங்கைக்கு அமைவாக பயன்படுத்தவேண்டிய காலம் கனிந்துள்ளதனையே, கடந்தகால நீதிமன்ற வழக்குகளும் அதுசார் தீர்ப்புகளும் காட்டி நிற்கின்றன.

குறிப்பாக, இலங்கைக்கு அமைவாக இதை மாற்றி, “இலங்கை பொதுத்துறைக் கணக்கியல் நியமம்”  (Srilanka Public Sector Accounting Standards - SLPSAS) எனப் பயன்படுத்த முடியும்.   

IPSASஜ முழுமையாக கடைபிடிப்பதன் நன்மைகள் 

​​*அரச சொத்துகள், கடன்கள் தொடர்பில் வெளிப்படையான மதிப்பிடலை செய்ய இயலும்.   

*பொதுத்துறை சார் கணக்கியல், அறிக்கையிடல்சார் பலவீனங்கள் நீக்கப்படும்.   

*அனைத்து பொதுத்துறை சார் கணக்கியலிலும் நியமத்தன்மையை பேண முடியும்.  

*நிதியை மீள் ஒதுக்கீடு செய்யும் அரச செயன்முறையில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவருதல்.   

*பொறுப்புடைமை, மேற்பார்வை தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தல்.   

*அரச நிதிசார் தரவுகளை மேம்படுத்துவதுடன், அதுசார் தீர்மானங்களின் முடிவுகளை மேலும் துல்லியப்படுத்தல்.  

*அரச பிரதிநிதிகள், பொதுமக்கள் , ஊடகங்கள் போன்றவற்றின் போக்கிலும், தன்மையிலும் மாற்றத்தைக் கொண்டு வருதல்.  

இலங்கையில் SLPSAS நியமமானது, ஏற்கெனவே நடைமுறையிலுள்ள இலங்கையின் நியமங்களுடன் உள்ளடக்கப்பட்டு பின்பற்றப் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளபோதும், அதை பின்பற்றுவது கட்டாயமாக்கப்படவில்லை.

இதன் விளைவாக, எந்தவொரு பொதுத்துறை நிறுவனமும் இதை பின்பற்றுவதில்லை. இதன் விளைவாக, இந்த நியமத்தின் வீரியமும் அதுசார் வெளிப்படுத்தல்களும் முன்புபோலவே முடங்கிக் கிடக்கின்றன.  

SLPSASஜ கட்டாயமாக்குவதன் மூலமாக, அரச அறிக்கையிடலில் மிகப்பாரிய அளவிலான வெளிப்படைத்தன்மையை உருவாக்க முடிவதுடன், ஒப்பீட்டு இயலுமையும் உருவாக்க முடியும். இது அரசாங்கப் பிரதிநிதிகள் முதல், அரசதுறைசார் ஊழியர்கள் என ஒவ்வொருவரிடமும் பொறுப்புடமையை அதிகபடுத்துவதுடன், அவர்களது தீர்மானங்கள் மூலோபாயமாகவும் பொருளாதாரம் சார்ந்ததாகவும் இருப்பதை உறுதி செய்வதாக அமையும்.

இதன் காரணமாக, சாதாரண மக்களுக்கும் மிக இலகுவாக தங்களது பொதுத்துறைசார் வளங்கள் வீணடிக்கப்படுகிறதா, உச்சமாக பயன்படுத்தப்படுகிறதா, என்பதை உறுதிசெய்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.   

இலங்கையில் அண்மைய காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட தகவலை அறிந்துகொள்ளும் சட்டம், நேரடியாகவோ மறைமுகமாகவோ, இந்த அரசாங்க அறிக்கையிடலை அதிகரிக்கவும் மக்களுக்கு தேவையான தகவல்களை, மிக அதிகளவில் பொதுவெளியில் பெற்றுக்கொள்ள வழிசெய்திருக்கிறது. இதன்மூலமாக, மக்கள் தமக்கென அரசாங்கம் ஒதுக்கும் பொதுநிதி தொடர்பிலும் அரசாங்கத்துக்கு கிடைக்கப்பெறுகின்ற நிதி தொடர்பிலும், போதிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிவதுடன், அவை தொடர்பில், பொருத்தமானவர்களிடம் கேள்விகளை எழுப்பக்கூடியதாகவும் இருக்கும்.

எனவே, மக்களிடத்தே, பொறுப்புடைமை கூறல் தொடர்பான விழிப்புணர்வையும் அது தொடர்பான தகவலை பெற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறைகள் தொடர்பிலான விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதன் மூலமே, நாட்டின் அரச இயந்திரங்களையும், பொது சொத்துகளையும் வினைத்திறனற்ற வகையில் பயன்படுத்துவதை தடை செய்யக்கூடியதாக இருக்கும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .