2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மறைமுக வரி அறவீடு வேண்டாமே

Gavitha   / 2016 மே 30 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ச.சேகர்

வரி அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் சாமர்த்தியமானது என பெருமளவான வரி நிபுணர்கள் வரவேற்றிருந்த போதிலும், அரசாங்கம் செல்வந்தர்களிடமிருந்து அறிவிடுவதற்கு மாறாக மறைமுக வரியான வற் வரி போன்றவற்றை அதிகரித்து ஏழைகளை மேலும் ஏழ்மைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக விசனம் தெரிவித்திருந்தனர்.

வற் வரி என்பது மறைமுகமான வரியாகும். இது அதிகரிக்கப்படும் குறைக்கப்படுவதும் வாடிக்கையாக அமைந்துள்ளது.

சாதாரணமாக வற் வரி அதிகரிக்கப்படும் போது, பொருட்களின் விலைகளும் அதிகரிக்கின்றன. அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் வற் வரி அதிகரிப்பின் மூலமாக மேலதிக வருமானத்தை பெற்றுக் கொள்வது இலக்காக அமைந்துள்ளது.

ஆனாலும் இந்த வற் வரி அதிகரிப்பின் காரணமாக செல்வந்தர்களை விட ஏழைகளே பெருமளவு பாதிக்கப்படுவார்கள்.

உழைக்கும் பணத்துக்கமைய வரி செலுத்தக்கூடிய நிலையில் மக்கள் உள்ளனரா என்பதை பற்றி அரசாங்கம் சற்று சிந்திக்க வேண்டும். அரச துறையில் சுமார் 120,000 பேர் வரை தொழில் புரிகின்றனர். நாட்டில் பணிபுரியும் நபர்களில் சுமார் 500,000 பேர் மட்டுமே வரி செலுத்துகின்றனர். இதன் மூலம் மிகவும் குறைந்தளவான மக்கள் மாத்திரமே வரி செலுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நேரடி வரி அறவீட்டு முறை ஒன்றைப்பற்றி அரசாங்கம் சிந்திக்க வேண்டும். குறிப்பாக வைத்தியர்கள், சட்டத்தரணிகள் மற்றும் வியாபாரிகள் போன்றோர் பல்வேறு சந்தர்ப்பங்களில் வரி செலுத்துவதிலிருந்து விலகி இருக்கின்றனர். நிலபுலங்கள் வியாபாரங்களில் ஈடுபடும் முகவர்களுக்கும் வரி அறவிடும் முறை அறிமுகம் செய்யப்பட வேண்டும். ஏனெனில் இவர்களுக்கு வரி அறிவிடும் திட்டம் இதுவரை இலங்கையில் நடைமுறையில் இல்லை. எனவே ஏழைகளை விட செல்வந்தர்களிடமிருந்து அதிகளவு வரி அறவிடும் முறை ஒன்றை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

அதேவேளை, நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களில் சுமார் 42,000 நிறுவனங்கள் மட்டுமே வரி செலுத்துகின்றன. ஏனைய சிறியளவிலான வரி செலுத்தக்கூடிய வியாபாரங்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.

ஒரு கால கட்டத்தில் இலங்கையின் வரி வருமானம் என்பது மொத்த தேசிய உற்பத்தியில் 18 முதல் 20 சதவீதமாக பதிவாகியிருந்தது. ஆயினும், தற்போது இந்தப் பெறுமதி 10 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. பொது மக்களை வரி செலுத்துபவர்கள் எனும் நிலைக்கு கொண்டு வரக்கூடிய செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இதன் காரணமாகவே அரசாங்கம் மறைமுகமாக வரி அறவிடுவதை தவிர்த்து நேரடியாக வரி அறவிடும் முறையை பின்பற்ற வேண்டும்.

வியாபார சமூகத்துக்கு அரசாங்கத்தின் வரிக் கொள்கை தொடர்பில் வெளிப்படையானதும் தெளிவானதும் ஒரு நிலைப்பாட்டை வழங்க வேண்டும். தற்போது அவ்வாறானதொரு சூழல் இல்லை. நிலையற்ற தன்மை என்பது வியாபாரச் செயற்பாடுகளையும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் பாதிக்கின்றன. கடந்த வாரங்களில் கொழும்பு பங்குச் சந்தையில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்களின் போதும் இந்த உறுதியற்ற தன்மை முதலீட்டாளர்கள் மத்தியில் காணப்படுவது வெளிப்பட்டிருந்தது.

இலங்கை தற்போது பாரிய வரவு செலவுத்திட்ட பிரச்சினை நிலவுகிறது. ஏனெனில் அரசாங்கத்தின் கடன் மீள் செலுத்துகைகள் என்பது அரச வருமானத்தை விட அதிகமானதாக அமைந்துள்ளது. இதன் காரணமாக மத்திய வங்கியிடமிருந்து பணத்தை பெற வேண்டிய நிலை அரசுக்கு காணப்படுவதுடன், பணவீக்கமும் ஏற்படுகிறது. இந்த நிலையிலிருந்து விடுபடுவதற்கு அரசாங்கத்துக்கு தனது வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டிய தேவை காணப்படுகிறது. வற் வரி அதிகரிப்பு என்பது இந்த வசூலிப்புக்கான ஒரு முறையாக அரசு தேர்ந்தெடுத்துள்ளது.

இந்த வற் வரி அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், ஜனாதிபதியின் தலையீட்டின் காரணமாக நீர், மின்சாரம் மற்றும் மருந்துப்பொருட்கள் மீது இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவில்லை என்பது ஓரளவுக்கு சகாயமான விடயமாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டில் அரசாங்க துறையைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட 10000 ரூபாய் சம்பள அதிகரிப்பு என்பதும் நாட்டுக்கு பெருமளவு பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது. இந்த சம்பள அதிகரிப்புக்காக ஒரு குடிமகனும் கட்டணம் செலுத்துகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிப்பு மற்றும் வற் வரி அதிகரிப்பு ஆகியவற்றை மேற்கொள்ளும் போது அரசாங்கம் இந்த விடயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இருந்த போதிலும் நாட்டின் எதிர்காலம் மற்றும் கடந்த காலங்களில் பெற்றுக் கொண்ட கடன்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வற் வரி அதிகரிப்பு என்பது காலத்தின் தேவையாக அமைந்துள்ள போதிலும், மறைமுகமாக அறவிடப்படாமல் நேரடியாக அறவிடப்படுவதாக இருந்தால் ஏழைகள் மட்டும் பெருமளவில் பாதிக்கப்படாமல் அனைவருக்கும் சமமான ஒரு முறையாக அமைந்திருக்கும்.    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X