2024 மார்ச் 28, வியாழக்கிழமை

முதலீட்டு ஆலோசகர்கள் நம்பிக்கைக்குரியவர்களா?

அனுதினன் சுதந்திரநாதன்   / 2018 ஜூன் 04 , மு.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நம் அன்றாட வாழ்வில், நமது தேவைகளுக்குக் கொள்வனவு செய்கின்ற எந்தவொரு பொருளையுமே, நாம் சாதாரணமாக வாங்கிவிடுவதில்லை. ஒன்றுக்கு இரண்டு கடைகளுக்குச் சென்று, பொருட்களின் அல்லது சேவைகளின் தரம், விலை உட்படப் பல்வேறு காரணிகளைக் கவனத்தில்கொண்டே, கொள்வனவு முடிவை எடுக்கத் துணிகின்றோம். அப்படியான நிலையில், எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு, சிறுகச்சிறுகச் சேமித்த பணத்தை முதலீடு செய்கின்ற முடிவை எடுக்கின்றபோது, எத்தகைய விடயங்களை எல்லாம் நாம் கவனத்தில்கொள்ள வேண்டியதாக இருக்கும்.  

அதிலும், முதலீடு தொடர்பான எவ்விதமான முன்னறிவும் அற்றநிலையில், அதுதொடர்பில் அறிந்துகொள்ளவும், அவற்றில் சிறந்த முதலீடுகளைத் தேர்ந்தெடுத்து, அதில் முதலீடுகளைச் செய்யவும் வழிகாட்டும் முதலீட்டு ஆலோசகர்கள் தொடர்பில், நாம் எவ்வளவு தூரம் கவனமாக இருக்கவேண்டும்? அவ்வாறு, நமது நம்பிக்கையையும் பணத்தையும் ஏமாற்றாமல் வருமானம் ஈட்டித்தரக்கூடிய முதலீட்டு ஆலோசகர்களை எப்படி இனம்கண்டு கொள்வது? 

இது போன்ற பல்வேறு கேள்விகள் நமக்கு இல்லாமல் இல்லை. இந்தக் கேள்விகளுக்கு விடையை அறிந்துகொள்ள முடியாமை காரணமாகக்கூட, நம்மில் பலர் முதலீட்டு வழிமுறைகளை நாடாமல், வங்கிகளில் தமது பணத்தைச் சேமிப்பில் தொடர்ந்தும் வைத்திருக்கிறார்கள்.  

உண்மையில், இலங்கையில் முதலீட்டு ஆலோசகர்கள் தொடர்பிலும், அவர்களிடமிருந்து நமது முதலீடுகளைப் பாதுகாப்பது தொடர்பிலும் பல்வேறு வழிமுறைகளும் சட்டதிட்டங்களும் சிறப்பாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை தொடர்பில் நாம் எத்தகைய விளக்கங்களைக் கொண்டிருக்கின்றோம் என்பதே கேள்வியாகவுள்ளது.  

முதலில், நமக்கான முதலீட்டு ஆலோசகரைத் தேடுவதற்கு முன் அல்லது ஒரு முதலீட்டு ஆலோசகரைத் தேர்ந்தெடுக்க முன், நமது சூழ்நிலை என்ன, நமது முதலீட்டுத் தேவை என்ன, எத்தகைய முதலீட்டு ஆலோசனைகள் மற்றும் தெரிவுகள் நமக்கு தேவை? என்பதுபோன்ற அடிப்படையான விடயங்களில் தெளிவுநிலையைக் கொண்டிருங்கள். 

இல்லாவிடின், முதலீட்டு ஆலோசகர்கள் வழங்கும் ஆலோசனைகள், பலசமயங்களில் உங்கள் பேராசைக்கு வித்திட்டு, முதலீட்டுப் பணத்தையே இல்லாமல் ஆக்கிவிடக்கூடும். எனவே, உங்களுடைய தேவையை முழுமையாக வரையறுத்துக் கொள்ளுவது அவசியமாகிறது.  

முதலீட்டு ஆலோசகர்களை எவ்வாறு கண்டறிவது?  

இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகர்கள் பல்வேறு எண்ணிக்கையில் இருக்கிறார்கள். ஆனால், அவர்களிடமிருந்து உங்களுடைய தேவைகளைச் சரிவர கவனித்துக்கொள்ளக்கூடியவர்கள் மற்றும் உங்களது முதலீட்டு அளவுக்கு சிரத்தை எடுத்து ஆலோசனைகளையும் முதலீட்டுச் செயல்பாடுகளையும் முன்னெடுக்கக்கூடியவர் யார் என்பதைத் தெரிந்துகொள்வதில்தான், உங்களது முதலீட்டின் பாதி வெற்றி தங்கியுள்ளது.  

உங்களது தேவைகளுக்குச் சரிவர பொருந்திச் செல்லும் முதலீட்டு ஆலோசகர்களைக் கண்டறிந்துகொள்ள இணையத்தளங்கள் உதவினாலும், அவை பூரணமாக உதவாது.

எனவே, பல்வேறு நிறுவனங்களின் முதலீட்டு ஆலோசகர்களுடன் ஓர் அறிமுகக் கூட்டத்தைத் தனித்தனியாக ஏற்பாடுசெய்து, கலந்துரையாட வேண்டும். அப்போதுதான், உங்களுக்கான சிறந்த முதலீட்டாளர் தொடர்பிலும், பல்வேறு முதலீடுகள் தொடர்பிலும் ஒரு முடிவை எடுக்கக்கூடியதாக இருக்கும். 

அதுபோல, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், வேலைத்தள சகஊழியர்கள் ஆகியவர்களிடமும் முதலீட்டு ஆலோசகர்களுக்கான சிபாரிசினைப் பெற்றுக் கொள்ளலாம். 

ஆனால், அவர்கள் சிபாரிசு செய்தபின்பு, குறித்த முதலீட்டு ஆலோசகர்கள் உங்கள் தேவைகளுக்குப் பொருத்தமானவரா என்பதைக் கலந்துரையாடல்கள் மூலமாகவே உறுதி செய்துகொள்ள வேண்டும். பெரும்பாலான கலந்துரையாடல்களில் பின்வரும் முக்கியமான கேள்விகளின் மூலமாக, பொருத்தமான முதலீட்டு ஆலோசகர்களை அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். 

1. உங்களுடைய அனுபவம் மற்றும் முதலீட்டுச் சந்தையில் உங்களுடைய சாதனைகள், செயல்பாடுகள் என்ன?  

2. ஒரு முதலீட்டு ஆலோசகர், முதலீட்டுச் சந்தையிலும், முதலீட்டுத் தொழில்முறையில் நீண்டகாலம் இருப்பதாலும், அனுபவம் அதிகம் என்பதாலும் அவரை முதலீட்டு ஆலோசகராக தேர்ந்தெடுக்க முடியாது. மாறாக, குறித்த அனுபவகாலத்தில் அவர்கள் மேற்கொண்ட முதலீட்டு வெற்றிகள், சந்தை தொடர்பான அவரது அறிவு ஆகியவற்றின் அடிப்படையிலேயே அவரின் தேர்ச்சியைத் தீர்மானித்துக் குறித்த நபரை தேர்ந்தெடுப்பதா, இல்லையா? என்கிற முடிவுக்கு வரமுடியும்.  

உங்களுடைய முதலீட்டுத் தேவைப்பாடு என்ன?  

முதலீட்டு ஆலோசகர் எவ்வளவு நிபுணத்துவம் பெற்றவராக இருந்தாலும், குறித்த நபர் உங்களுடைய தேவைகளுக்கு ஏற்றால்போல, நடந்துகொள்ளக்கூடியவராக அல்லது உங்களது முதலீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளக்கூடியவராக உள்ள பட்சத்தில் மட்டுமே, இணைந்து செயல்படக்கூடியதாக இருக்கும்.  

முதலீட்டு ஆலோசகருடனான தொடர்பாடல் முறை  

முதலீட்டு ஆலோசகர் உங்களது தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில், உங்களுடன் எப்போதுமே தொடர்பில் இருக்கக் கூடியவராக அல்லது இலகுவாகக் தொடர்புகொள்ளக்கூடியவராக இருக்கவேண்டியது அவசியமாகிறது.  

இவற்றின் அடிப்படையில், உங்களுக்கு உகந்தவொரு முதலீட்டு ஆலோசகரைத் தெரிந்துகொள்ளக்கூடியதாக அமைவதுடன், அவர்களுடன் உங்கள் சார்ந்த முதலீட்டு உறவையும் பலப்படுத்திக்கொள்ள முடியும்.  

ஒரு முதலீட்டு ஆலோசகர் நிச்சயமாக, தனது வாடிக்கையாளர்களுக்குப் புரிதல் இருக்கக்கூடிய வகையில் மிகச்சிக்கலான முதலீடுகளையும் விளக்கக்கூடியவராக இருக்கவேண்டும்.   

முதலீட்டுச் சந்தையில் ஏற்படும் ஏற்ற, தாழ்வுகளுக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக்கொண்டு, தனது வாடிக்கையாளர்களின் முதலீட்டு இடநேர்வை முகாமை செய்யக்கூடியவராக இருக்கவேண்டும்.  

முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ற ஆலோசகராக இருக்கவேண்டுமே தவிர, தனித்துத் தனது முடிவுகளைத் திணிப்பவராக இருக்கக்கூடாது.  

வாடிக்கையாளர் நலன்கருதி, அவர்களது முதலீடுகள் தொடர்பில் ஆய்வுகளையும் பகுப்பாய்வுகளையும் மேற்கொண்டு, கருத்துகளை, முடிவுகளை வழங்கக்கூடியவராக இருக்க வேண்டும்.  

முதலீட்டு ஆலோசகர், வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு உரித்தானவராகவும், பொருத்தமான ஆலோசனைகளை வழங்கி முதலீட்டு இடநேர்வுகளைக் காப்பவராகவும், நேர்மையானவராகவும் இருக்க வேண்டும்.  

முதலீட்டு ஆலோசகர் வெறுமனே வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்குபவராக மட்டுமல்லாது, அவர்களுக்குப் புதுமையான வழிகளையும் முதலீடுகளையும் அறிமுகப்படுத்துபவராக இருக்கவேண்டும்.  

இப்படியான தகமைகளைக் கொண்டிருக்கக்கூடிய முதலீட்டு ஆலோசகர்களைத் தமது முதலீட்டு ஆலோசகர்களாகக் கொண்டிருக்கவே ஒவ்வொரு முதலீட்டாளர்களும் விரும்புவார்கள். 

இப்படியான முதலீட்டாளர்களை மேற்கூறிய குறித்தவொரு அறிமுக கலந்துரையாடல் மூலமாக மட்டும் கண்டறிந்துகொள்ள முடியாது. காலப்போக்கில், உங்களுடன் அவர்கள் கொண்டிருக்கும் முதலீட்டு உறவுகள் மூலமாகவே அறிந்துகொள்ள முடியும். 

எனவே, முதலீட்டாளர்களைத் தெரிவு செய்தபின்பு, அவர்களது செயல்பாடுகள் உங்களுக்குத் திருப்தியளிக்காத பட்சத்தில், அவர்களை மாற்றவோ, அவர்கள் சார்ந்த முறைப்பாடுகளை மேற்கொள்ளவோ பின்நிற்கக்கூடாது.  

முதலீட்டு ஆலோசகர்களால் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு 

முதலீட்டு ஆலோசகர், உங்கள் முதலீடுகளின் ஒரு பங்காளர் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். உங்கள் முதலீட்டின் வளர்ச்சி மூலம், உங்கள் பங்காளரான முதலீட்டு ஆலோசகர்களுக்கு தரகு உட்பட இதர வருமானங்களும் கிடைக்கப்பெறும். 

எனவே, உங்கள் முதலீட்டில் ஒரு பங்காளராக இருக்கக்கூடிய முதலீட்டு ஆலோசகருடன், எப்போதுமே உங்கள் முதலீட்டு உறவு சீரானதாக இருக்கும் என்பதற்கில்லை. எனவே, அதற்கும், அதுசார் பிரச்சினைகளுக்கும் நீங்கள் தயாராகவே இருக்க வேண்டும்.  

உங்கள் முதலீட்டு ஆலோசகர்களால் நீங்கள் முறையற்ற வகையில் நடாத்தப்பட்டதாக உணர்ந்தால் அல்லது சில முறைகேடுகளைச் சந்தித்துள்ளதாக அல்லது ஏமாற்றப்பட்டுள்ளதாக உணர்ந்துகொண்டால் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்ற முடியும்.   

குறித்த பிரச்சினை நிகழ்ந்த, மூன்று மாதகாலத்துக்குள் உங்கள் முதலீட்டு ஆலோசகர் தொடர்பில் இணக்க அலுவலகரிடம் (Compliance Officer) முறைப்பாட்டைச் செய்ய முடியும்.  

குறித்த இணக்க அலுவலகர் மூலம், உங்களுக்கு கிடைக்கப்பெற்ற தீர்வில் போதிய திருப்தி அடையாத பட்சத்தில், அது தொடர்பான முறைப்பாட்டை எழுத்து வடிவில் கொழும்பு பங்குச்சந்தைக்கு அறிவிக்க முடியும்.  

குறித்த முறைப்பாட்டுக்கு கொழும்பு பங்குசந்தையின் தீர்வுகளும் திருப்தியானதாக அமையாத பட்சத்தில், பிரச்சினைகளைத் தீர்க்கும் குழுவுக்கு (Dispute Resolution Committee) கொண்டு செல்ல முடியும். 

பிரச்சினைகளைத் தீர்க்கும் குழு (Dispute Resolution Committee) குறித்த பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொண்டு, அதுசார்ந்த முடிவுகளைக் கொழும்பு பங்குச்சந்தையின் இயக்குநர் சபைக்கு அறிவிக்கும். அவர்கள் முடிவை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் முதலீட்டுத் தரப்பினருக்கு அறிவிப்பார்கள்.  

ஆகவே, முதலீட்டு ஆலோசகர்களை நம்பிக்கைக்குரியவர்களாகத் தெரிவு செய்யவேண்டிய பொறுப்பும், நமது முதலீட்டைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் ஒரு முதலீட்டாளராக உங்களுக்கு உண்டு. 

ஆனால், நமது முடிவுகள் எல்லா சந்தர்ப்பத்திலும் நாம் எதிர்பார்த்தது போலவே அமையாது. அத்தகைய சந்தர்ப்பங்களில் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதும், எவ்வாறு பாதிக்கப்பட்ட முதலீட்டளார் ஒருவரை மீட்டெடுக்க முடியும் என்பதையுமே மேலேயுள்ள அறிவுறுத்தல்கள் குறிப்பிட்டு உள்ளன. 

ஒட்டுமொத்தத்தில், முதலீட்டாளராகிய நீங்களும் முதலீட்டு ஆலோசகர்களும் பங்காளர்கள் போன்று உங்கள் நிதிக் குறிக்கோளை அடைந்துகொள்ள இணைந்து இயங்குகிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 

உங்கள் இருவருக்குமே, உங்கள் குறிக்கோளை அடைந்துகொள்வதற்குத் தனித்தனியான பொறுப்புகள் உண்டு என்பதுடன், இருவருமே முதலீட்டு வெற்றி என்கிற புள்ளியில் ஒன்றினைந்து, ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கைக்குரியவர்களாக செயல்படும்போது மட்டுமே வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X