2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மூலதனச் சந்தையும் முதலீடுகளும்: சந்தை இடையீட்டாளர்கள் (Market Intermediaries)

Editorial   / 2018 ஜனவரி 10 , மு.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூலதனச்சந்தையின் பலனை முதலீட்டாளர்களும் நிறுவனங்களும் அடைந்து கொள்ள வசதியளிக்கும் மூலதனச்சந்தையோடு தொடர்புபட்ட நிறுவனங்களை சந்தை இடையீட்டாளர்கள் எனக்கூறலாம். சந்தை இடையீட்டாளர்கள் மூலதனச்சந்தை வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்குகின்றனர்.   

பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் முறைமைப்படுத்தப்படும் கொழும்புப் பங்குப் பரிமாற்றகம், தரகுக் கம்பனிகள் மற்றும் நம்பிக்கை அலகுப் பொறுப்பாட்சி முகாமைக் கம்பனிகள் ஆகியவற்றுக்கும் மேலாக 2003 ஆம் ஆண்டு 18ஆம் இலக்க பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு (திருத்தியமைக்கப்பட்டது) சட்டத்தின் மூலம் சந்தை இடையீட்டாளர்கள் ஐவர் ஆணைக்குழுவின் முறைமைப்படுத்தலுக்கு உள்ளாகின்றனர்.

இவ்வாறு முறைமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படும் சந்தை இடையீட்டாளர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளனர்.   
சந்தை இடையீட்டாளர்கள் பின்வரும் ஐந்து பிரிவாக காணப்படுகின்றனர்.   

1. கடன் தரப்படுத்தல் முகவர்கள் (Credit Rating Agencies)   

2. முதலீட்டு முகாமையாளர்கள் (Investment Managers)   

3. எல்லைக் கடன் வழங்குநர்கள் (Margin Providers)  

4. ஒப்புறவாளர்கள்  (Underw  riters)   

5. தீர்வக இல்லங்கள் (Clearing Houses)   

மேற்குறிப்பிட்ட சந்தை இடையீட்டாளர்கள் பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.   

கடன் தரப்படுத்தல் முகவர்கள் 

அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது இலங்கை போன்ற நாடுகள் பொருளாதார மந்தநிலை காரணமாக கடன்தரப்படுத்தலில் பின்னடைந்துள்ளன அல்லது சிறந்த பொருளாதார அடைவுகளினால் கடன்தரப்படுத்தலில் முன்னேற்றம் அடைந்துள்ளன போன்ற செய்திகளை அடிக்கடி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கடன் தரப்படுத்தல் என்றால், ஒரு நாட்டின் அல்லது நிறுவனமொன்றின் கடனை திருப்பிச்செலுத்தும் ஆற்றலை புள்ளிவிவரத்தில் வெளிப்படுத்தலை குறிக்கும். இக்கடன் தரப்படுத்தலை கடன் தரப்படுத்தல் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.   

கடன் தரப்படுத்தல் முகவர்களினால் கம்பனியொன்றின் கடன் பிணையங்களது கடன் தகைமை தொடர்பாகத் தரப்படுத்தலொன்று வழங்கப்படுகின்றது. பட்டியலிடப்பட்ட பிணையங்களது அல்லது பட்டியலிடுவதற்குள்ள பிணையங்களது கடன் தகைமையைத் தரப்படுத்தும் பொறுப்புடைய கடன் தரப்படுத்தல் முகவர்கள், ஆணைக்குழுவின் முறைமைப்படுத்தலுக்கு உள்ளாகின்றனர். கடன் தரப்படுத்தல் முகவர்களினால் பிணையங்களை வழங்கும் கம்பனிகளுக்கு அந்தப் பிணையங்கள் தொடர்பாகச் செலுத்துவதற்கு ஒப்புக் கொண்ட வட்டி மற்றும் முதலீட்டைச் செலுத்துவதற்குரிய சக்தி மற்றும் விருப்பம் ஆகியன தரப்படுத்தப்படும்.   

தற்போது ஆணைக்குழுவினால் பதிவு செய்யப்பட்டு கடன் தரப்படுத்தும் அத்தகைய நிறுவனங்கள் இரண்டு இலங்கையில் உள்ளன. அவை:  Fitch Ratings (Lanka) Ltd. மற்றும் ICRA நிறுவனம் என்பவாகும்.   

உதாரணத்திற்காக பிச் ரேட்டிங் (லங்கா) Fitch Ratings (Lanka) Ltd நிறுவனத்தின் கடன் தரப்படுத்தல் குறியீடுகளை கீழே பார்க்கலாம்.   

AAA அதியுயர் கடன் பாதுகாப்பு   

AA மிக உயர்ந்த பாதுகாப்பு   

A உயர்ந்த பாதுகாப்பு   

BBB சிறந்த கடன் பாதுகாப்பு   

BB ஊகக் கடன் பாதுகாப்பு   

B உயர்ந்த ஊகக் கடன் பாதுகாப்பு   

CCC குறிப்பிடத்தக்களவு கடன் ஆபத்து   

CC மிக உயர்ந்த கடன் ஆபத்து   

C அதியுயர் கடன் ஆபத்து   

D முழுமையான கடன் ஆபத்து   

மேலே குறிப்பிட்ட குறியீடுகளுடன் சேர்த்து இன்னும் துல்லியமாக வெளிக்காட்ட (+ & -) குறியீடுகளும் சேர்க்கப்படலாம்.   

முதலீட்டு முகாமையாளர்கள் 

முதலீட்டுக் கொள்கைகளை உருவாக்குதல், முதலீட்டு ஆய்வியல் மற்றும் தேர்ந்தெடுத்தல், முதலீட்டுத் தேக்கமொன்றை உருவாக்குதல்,  முதலீடுகளை முகாமைப்படுத்தல், முதலீடு தொடர்பான ஆலோசனைகளை வழங்குதல் ஆகியன முதலீட்டு முகாமையாளரினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாகும்.

இவர்கள் இவ்விடயம் தொடர்பாகப் பயிற்சி மற்றும் அனுபவம் வாய்ந்த நபர்களாவர். இவர்களது சேவை தொடர்பாக கட்டணமொன்று அறவிடப்படும். பட்டியலிடப்பட்ட பிணையங்களை உள்ளடக்கிய முதலீட்டுத் தேக்கமொன்றை முகாமைப்படுத்துபவர் அல்லது பட்டியலிடப்பட்ட பிணையங்களின் முதலீட்டில் கொள்வனவு அல்லது விற்பனைத் தேர்வு பற்றி அறிவுரை வழங்கும் முதலீட்டு முகாமையாளர்கள் ஆணைக்குழுவிடம் பதிவு செய்திருத்தல் அவசியம். 25 முதலீட்டு முகாமைத்துவ நிறுவனங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.   

எல்லைக் கடன் வழங்குநர்கள் 

எல்லைக் கடன் (Margin Loan) வழங்குநர்கள் எனக் குறிப்பிடுவது பிணையங்களைக் கொள்வனவு செய்வதற்காக முதலீட்டாளர்களுக்கு கடன் வழங்கும் நிறுவனங்களாகும். 

பட்டியலிடப்பட்ட பிணையங்களை கொள்வனவு செய்வதற்காக கடன் வழங்கும் நிறுவனங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்திருத்தல் வேண்டும். தற்போது எல்லைக் கடன் வழங்குநர்களாக 28 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.   

எல்லைக் கடன் எனும் திட்டம் எல்லை வர்த்தகத்துக்குப் (Margin Trading) பொருத்தமானதாகும். எல்லை வர்த்தகம் எனப்படுவது முதலீட்டாளர்கள் தம்மிடமுள்ள நிதிக்கும் மேலாக கடன் நிதியைப் பெற்று பிணையங்களைக் கொள்வனவு செய்வதாகும். இங்கு எல்லை எனக் குறிப்பிடுவது (Margin) முதலீட்டாளரினால் வழங்கப்படும் நிதியாகும். இவ்வாறு ஆரம்பிக்கப்படும் கணக்குகள் எல்லைக் கணக்குகள் (Margin Account) எனப்படும்.   

உதாரணமாக, ஒரு முதலீட்டாளர் ரூ. 10,000 பங்குகளை கொள்வனவு செய்ய எண்ணியுள்ளார் என நினைப்போம். அவர் தன்னிடமுள்ள ரூ. 4,000 உடன் எல்லைக் கடன் வழங்குநர்களிடமிருந்து ரூ. 6,000யும் பெற்று ரூ. 10,000 பங்குகளை கொள்வனவு செய்யப்போகிறார் என நினைப்போம். இச்சமயம் எல்லை எனக் கருதப்படுவது முதலீட்டாளர் தான் முதலிட்ட ரூ. 4,000, ரூ. 6,000 எல்லைக் கடனாகும். எல்லை வர்த்தகத்துக்கான விதிகள் ஆணைக்குழுவினால் பிறப்பிக்கப்படுகின்றன.   

 ஒப்புறவாளர்கள்    

கம்பனியொன்றால் பொதுமக்களுக்குப் பிணையங்களை வழங்கும்போது, அப்பிணையங்களில் பொதுமக்களால் கொள்வனவு செய்யப்படாமல் இருக்கும் எண்ணிக்கையை கொள்வனவு செய்வதற்கு உடன்படும் நிறுவனத்தை ஒப்புறவாளர் என்று கூறுவோம். 

பட்டியலிடப்பட்ட பொதுக் கம்பனியொன்று அல்லது பட்டியலிடுவதற்கு விண்ணப்பித்துள்ள பொதுக் கம்பனியொன்றின் பொதுமக்களுக்கான வழங்கலை ஒப்புறவு செய்யும் நிறுவனம் மற்றும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் அப்பிணையங்களை கம்பனியிடமிருந்து கொள்வனவு செய்யும் நிறுவனம் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டிருத்தல் அவசியம். ஒப்புறவாளர்களினால் தமது சேவைக்காக கம்பனிகளிடமிருந்து கட்டணமொன்று அறவிடப்படும். தற்போது ஒப்புறவாளர்களாக 09 நிறுவனங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்துள்ளன.   

 தீர்வக இல்லங்கள்    

தீர்வக இல்லம் எனக் குறிப்பிடுவது பிணையங்களின் வைப்பகமாகும். பிணையங்கள் கொடுக்கல் வாங்கல்களைத் தீர்த்து வைக்கும் இடமாகவும் செயற்படும் நிறுவனமாகும். இலங்கையில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பிணையங்கள் தொடர்பாக தீர்வக இல்லமாக செயற்படுவது மத்திய வைப்புத் திட்ட (தனியார்) கம்பனியாகும். அத்துடன் ஆணைக்குழுவில் பதிவு செய்துள்ள ஒரே ஒரு தீர்வக இல்லம் இதுவாகும்.   

- இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .