2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வணிகத்துக்குத் தேவையான அணியை அடையாளம் காணல்

Editorial   / 2018 பெப்ரவரி 19 , பி.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்தவொரு வணிகமும் சந்தையில் தொடர்ச்சியாக இயங்குவதை அடிப்படையாகக் கொண்டே நிறுவப்படுகிறது. அவ்வாறு தொடங்கப்படும் வணிகத்தில் உரிமையாளர்கள், ஊழியர்கள் உட்படப் பல்வேறு தரப்பினரும் மாற்றமடைந்து கொண்டேயிருப்பார்கள். 

ஆனால், அந்த வணிகம் தனது தொழிற்பாடுகளை நிறுத்திக்கொள்ளும் வரை, சந்தையில் நிரந்தரமானதாகவே இருக்கும். அவ்வாறு வணிகம் தொடர்ச்சியாகச் சந்தையில் தன்னை நிலைநிறுத்திகொள்ள, அதன் ஆரம்பகாலச் செயல்பாடுகள் அத்திவாரமாக அமைகின்றன. குறிப்பாக, தொடக்கநிலையில் உள்ள வணிகத்துக்கு, அமைகின்ற வணிக அணியைப் பொறுத்தே, அதன் வெற்றியும் தோல்வியும் தீர்மானிக்கப்படும்.  

எந்தவொரு சிறிய நிறுவனமோ, பெரிய நிறுவனமோ தனது வணிகச் செயல்பாடுகளை, வினைதிறன் வாய்ந்த வகையில் கொண்டு நடாத்துவதற்கு, மிகசிறந்த ஊழியர் அணி அல்லது வணிக அணியைக் கொண்டிருத்தல் அவசியமாகும்.   

வணிக உரிமையாளர்கள் எத்தகைய திறமையாளர்களாக இருந்தாலும் சரி, அவர்களினால் வணிகத்தின் எல்லா வேலைகளையும் கவனித்து கொள்ளவோ, செயற்படுத்தவோ முடியாது. 

எனவே, அவற்றை நிறைவேற்றுவதற்கும், வணிகத்தைக் கொண்டு நடாத்தவும் ஊழியர்கள் அவசியமாகின்றனர். பொதுவெளியில் ஊழிய நிரம்பலானது சந்தைக் கேள்விக்கு மேலதிகமாக உள்ளது. ஆனாலும், ஒவ்வொரு வணிக உரிமையாளரும், தனக்குப் பொருத்தமான ஊழியர்களைக் கண்டறிவதிலும், ஒரு வணிக அணியைக் கட்டியெழுப்புவதிலும் சிக்கல்களைச் சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பதை மறுக்கமுடியாது.   

அப்படியாயின், ஒரு வணிகம் தனது செயல்பாடுகளை, வெற்றிகரமாக நடாத்திச் செல்வதற்கு, ஊழியர் படையை எவ்வாறு தெரிவு செய்ய வேண்டும் என்பது முக்கியமானதாக இருக்கிறது. அவ்வாறு தெரிவு செய்யப்படும் ஊழியர்கள், எவ்வாறு வணிகத்துக்குப் பெறுமதி சேர்க்கும் என்பதில் அதன் மீதி வெற்றி தங்கியுள்ளது.  

முதல் ஊழியரை எப்போது தேர்வு செய்வது?   

உதாரணமாக, விமானசேவை ஒன்றில் விமான உதவியாளராக ஒருவர் பணிபுரிகிறார். அவரது விமானப்பயண ஒழுங்கில் பல்வேறு நாடுகளுக்குச் சென்றுவரக்கூடியதாக அமைவதால், செல்லுகின்ற நாடுகளைப் பொறுத்து, அங்கு பிரபலமான பொருட்களை வாங்கி, தன்னுடைய நாட்டில் தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்களுக்கு விற்பனை செய்து வருகிறார். 

இந்தச் செயல்பாடு கொஞ்சம் கொஞ்சமாக ஏனையவர்களிடத்தில் பிரபலமடைய, அவரது விற்பனையும் அதிகரிக்கத் தொடங்குகிறது. முதல் மூன்று மாதங்களில் 50,000 ரூபாய் இலாபம் கிடைக்கிறது. தொழிலை விரிவுபடுத்தவும், மேலதிக வாடிக்கையாளரை இணைக்கவும் இணையத்தளம் ஒன்றை ஆரம்பிக்கிறார். இணையதளம் ஆரம்பித்ததன் பின்பு, இலாபமும் மூன்று மடங்காக அதிகரிக்கிறது. அதனுடன் சேர்ந்து, விற்பனையும் வாடிக்கையாளர்களும் அதிகரிக்கின்றனர்.  

இந்தநிலையில், வெளிநாடுகளுக்கு பயணப்படும்போது வணிகத்தையும் வாடிக்கையாளர்களையும் கவனித்துக்கொள்ள ஒருவரை வேலைக்கு அமர்த்தலாமா? எனச் சிந்திக்கத் தொடங்குகிறார். இருந்தாலும், இலாபத்தில் ஒருதொகையை ஊதியமாகச் செலுத்தவேண்டும் என்பதால், அதைத் தவிர்த்துவிட்டுத் தானே தொடர்ந்தும் வணிகத்தை நடாத்திச் செல்கிறார்.

சிலகாலங்களில், இலாபம் அதிகரித்தாலும் மேலதிகமாக இந்த வணிகத்தைத் தனியே கொண்டு நடாத்த முடியாத நிலையும் குடும்பத்தைச் சரியாகக் கவனிக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது. இதுவேறு சில பிரச்சினைகளையும் உருவாக்குகிறது. எனவே, பன்மடங்கு இலாபத்தை விட, குடும்பமே முக்கியம் என வணிகத்தை மூடிவிடும் முடிவை எடுக்கிறார்.  

உண்மையில், பன்மடங்கு பல்கிப்பெருக வேண்டிய வணிகத்தைக் குறித்த நபர் எடுத்த ஒரு தவறான முடிவால் இழக்க நேரிடுகிறது. அதுபோலத்தான், பல தொடக்கநிலை வணிகங்களுக்கும் நடக்கிறது.

இலாபம் உழைக்கும் ஆரம்பகாலத்தில், அந்த இலாபத்தை முதலீடாகக் கொண்டு எவ்வாறு வணிகத்தைப் பல்கிப்பெருக்க வேண்டும் என்பது தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டியது அவசியமாகிறது. அதாவது, வேலைபளு அதிகரிக்கும்போது, ஓர் ஊழியரை வேலைக்கு அமர்த்தியிருப்பின் இலாப அளவு குறுகிய காலத்தில் குறைந்திருக்குமே தவிர, தொடர்ச்சியாக வணிகத்தை எவ்வித பிரச்சனைகளுமின்றிக் கொண்டு நடாத்தி இருக்கலாம். அது இலாபம் அதிகரிக்கவே வழிவகுக்கும். 

இதுபோலதான், வணிக முயற்சியாளர்களும் எந்தநிலையில் ஊழியர்களை வேலைக்கு அமர்த்த வேண்டுமோ, அந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிடக் கூடாது. இல்லையேனில், வணிக முயற்சிகள் தோல்வியடையக் கூடியநிலை கூட ஏற்படலாம்.  

ஊழியர்களை வேலைக்கமர்த்தல்  

தொடக்கநிலை வணிகங்களைப் பொறுத்தவரை, வணிகங்களின் ஆரம்பநிலை என்பது கத்திமேல் நடப்பது போன்றதாகும். உரிமையாளர்கள் வணிகத்தை ஆரம்பம் முதல் கட்டியெழுப்பவென அயராது உழைக்கவேண்டியிருக்கும். இதன்போது, உரிமையாளர்கள் தனியே சகலவேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யாமல், அதைப் பகிர்ந்தளிக்கவும் வேண்டும். அதற்கெனப் பொருத்தமான ஊழியர்களைப் பொருத்தமான வகையில் தெரிவு செய்து வேலைக்கமர்த்துதல் அவசியமாகும்.  

சிலவேலைகளுக்கு அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் அவசியம். சில வேலைகளுக்கு ஆரம்பத்தில் சிறிய வணிகமாக இருப்பதால், அனுபவம் குறைந்தவர்களை வேலைக்கமர்த்தினால் போதுமானதாக இருக்கும். எனவே, வேலைப்பளுவுக்கேற்ப, ஊழியர்களை வேலைக்கமர்த்துவது அவசியமாகிறது.   

ஊழியரைத் தேர்வு செய்யும் முறை  

ஊழியர் தெரிவில் தொடக்க வணிகங்களின் முதன்மைத் தெரிவாக உள்ளமுறை ‘பரிந்துரை’தான். நண்பர்கள், அனுபவஸ்தர்கள் மூலமாகப் பரிந்துரைக்கப்படும் நபர்களை நேர்காணல் மூலமாகத் தேர்ந்தெடுப்பதே பரவலாக நடைமுறையில் உள்ளது. இதற்கு மிக முக்கிய காரணங்களிலொன்று, புதிய வணிகங்கள் தொடர்பில், ஊழியப் படையினர் அறிந்திருக்க வாய்ப்புக் குறைவாக உள்ளமையும் அத்தகைய வணிகங்களில் உள்ள ஆபத்தின்(Risk) தன்மையும் ஆகும். 

ஆயினும், இதைத் தவிர்த்து, இன்றைய நிலையில், நேரடியாக விளம்பரங்கள் மூலமாகவோ அல்லது LinkedIn போன்ற சமூகவலைப்பின்னல்கள் மூலமாகவும் ஊழியர்களைக் கண்டறியக் கூடியதாக உள்ளது.   

எத்தகைய வழிமுறைகள் மூலமாகவும் ஊழியர்களைக் கண்டறிந்தாலும், இறுதியாக நேரடி நேர்காணலுக்கு உட்படுத்தபட்டே ஊழியர்கள் இறுதி செய்யப்படுகிறார்கள். பெரும்பாலும் தொடக்க நிலை வணிகங்களின் ஊழியர் நேர்காணலின்போது கேட்கப்படுகின்ற கேள்விகள் பொதுவானவையாகவும் சாதாரணமாகவும் உள்ளன. ஆனால், அதற்கு ஊழியர்கள் வழங்கும் பதில், அவர்கள் குறித்த தொழில் தொடர்பில், எந்தளவுக்கு அக்கறையாக (passionate) உள்ளனர் என்பதை எடுத்துக் காட்டும்.  

உதாரணமாக, நேர்காணலில் நீங்கள் எதுதொடர்பில் ஆர்வமாக அல்லது அக்கறையாக இருப்பீர்கள் எனக் கேள்வி கேட்கப்படும். இது ஒரு பொதுவான கேள்விதான். ஆனால், அதற்கான பதில் ஒருவரை ஊழியராகத் தெரிவு செய்ய வேண்டுமா, இல்லையா? என்பதைக் காட்டிக் கொடுத்துவிடும். 

காரணம், ஊழியர்கள் தாங்கள் ஆர்வமுடைய விடயத்தைக் கொண்டு, அதன்மூலமாக ஒரு மாற்றத்தை உருவாக்ககூடிய நம்பிக்கை கொண்டவர்களாக இருக்க வேண்டும். இல்லையெனில், அது ஒரு அணியாக இணைந்து செயற்படுவதில் சிக்கல்தன்மையை ஏற்படுத்தும்.  

எனவேதான், பெரும்பாலான வெற்றிபெற்ற வணிகங்களில், மிக ஆர்வமுடைய ஊழியர்கள் தெரிவு செய்யப்படுகின்றார்கள். 

இவர்கள்தான் தாம் செய்யும் தொழிலில் முழு ஆர்வமாக, மாற்றங்களைக் கொண்டுவரச் செயல்படுபவர்களாக இருப்பார்கள். இதுவே, பல வணிகங்களுக்குப் பலமாகவும் அமைகிறது.  
பொருத்தமானவர்களைத் தெரிவு செய்வதுபோல, பொருத்தமற்றவர்களை நீக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.  

குறித்த வேலைக்குத் தெரிவு செய்த ஊழியரினால், பொருத்தமான திறமையை வௌிப்படுத்த முடியாதவுடனே அவர்களை நீக்குவது என்பது இதன் அர்த்தமல்ல. குறித்த ஊழியரின் செயற்றிறன் மிக்க சேவையைப் பெற்றுக்கொள்ளும் வகையிலான பின்னூட்டங்களை வழங்கி, அதற்கான எதிர்வினைகளையும் முன்னேற்றங்களையும் அவதானித்து அதன் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும். காரணம், பொருத்தமான பெறுபேறுகளைத் தரமுடியாத ஊழியர் மீது, அதிக முதலீடுகளைச் செய்வதோ, நம்பிக்கையை அதிகமாக வைப்பதோ இறுதியில் வணிகத்துக்குத்தான் பாதகமாக முடியும்.  

இவற்றுக்கு எல்லாம் மேலதிகமாக, வணிகத்தின் வெற்றிகரமான வணிக அணியைக் கட்டியெழுப்புவதிலும், வணிகத்தை வெற்றிநிலைக்கு உயர்த்துவதிலும் உரிமையாளர்களுக்கு ‘நான்தான் முதலாளி’ என்கிற அகங்காரம் கூடவே கூடாது. 

தன்னைப் பார்க்கிலும் குறைந்தவர்களாக இருந்தாலும் சரி, அனுபவம் முதிர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் தருகின்ற ஆலோசனைளையும் கருத்துகளையும் வணிகத்தின் வெற்றிக்கு உறுதுணையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.     

அதுபோல, உரிமையாளர்கள் செய்யும் மற்றுமொரு மிகப்பெறும் தவறுகளில் ஒன்று, மிகசிறந்த ஆர்வம் கொண்ட திறமையான ஊழியர்களையும் சரி, புதியவர்களையும் சரி, மலிவான விலையில் வணிகத்துக்குள் கொண்டுவர எத்தனிப்பதாகும். 

எப்போதும், மிகசிறந்த வணிக அணியை வெற்றிகரமாகக் கட்டியெழுப்பவும் வணிகத்தை வெற்றிகரமாகக் கொண்டு நடாத்தவும் அதற்கான விலையைச் சரியாகக் கொடுக்கத் தயாராகவே இருக்கவேண்டும். 
இல்லையெனில், அது வணிகத்தை வேறுவகையில் பாதிப்படைய செய்யும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .