2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வணிகமொன்றை சொந்தமாக வைத்திருப்பதற்கு செய்ய வேண்டியவை யாவை?

அனுதினன் சுதந்திரநாதன்   / 2018 டிசெம்பர் 18 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை எழும்பும்போது, இன்று வேலைத்தளத்தில் என்ன வேலைகள் இருக்கின்றன, என்ன பிரச்சினைகள் வரப்போகின்றன, கடந்த வாரத்தின் தொடர்ச்சியாக என்னவென்ன வேலைகள் மீதம் உள்ளன,  எனும் மன அழுத்தத்துடனேயே பலரும் தங்களது நாளை ஆரம்பிக்கிறார்கள். 

இந்த மன அழுத்தத்தின் நடுவே, ஒவ்வொரு மாதமும் மாதச் சம்பளத்துக்கே  வேலை செய்துகொண்டிருக்கிறோம். நாமும், எப்போது நாலு பேருக்குச் சம்பளம் கொடுக்கக் கூடியவகையில், உயரப் போகிறோம் எனச் சிந்திக்கவும் தவறுவதில்லை. ஆனால், அந்தச் சிந்தனை, பலபேரின் எண்ணத்தில், பல்வேறு புறக்காரணிகளின் அச்சுறுத்தலால் எண்ணமாகவோ கனவாகவோ மட்டுமே இருக்கின்றது. விளைவு, ஒவ்வொரு நாளையும் நாம் தொழிலாளர்களாகக் கடந்து கொண்டிருக்கிறோம்.  

இவ்வாறு கடந்து செல்லும் நாம், தொடக்கநிலை வணிகம் (Startup Business) தொடர்பிலான எண்ணம் (Ideas) தொடர்பில், எப்போதாவது சிந்தித்தது உண்டா; அத்திட்டம் நடைமுறையில் இலாபகரமானதும் பயனாளர்களின் செயற்பாடுகளில் பெறுமதிசேர் எண்ணமாக அமையும் என சிந்தித்து இருக்கிறீர்களா?  

அப்படியாயின், உங்களது திட்டத்தை நடைமுறைப்படுத்தி, வாழ்க்கையிலும் சரி, தொழிலும் சரி வெற்றிகரமாகச் செயற்பட பின்வரும் விடயங்களை நீங்கள் அறிந்திருப்பீர்களாயின், நாளை நீங்களும் வணிகமொன்றுக்கு உரித்துடையவராக, மற்றுமொருவருக்கு வேலை வழங்கும் தொழில் தருநராக இருக்க முடியும்.  

தோல்வி எங்கே ஏற்படுகிறது ?

தொடக்கநிலை வணிகங்களை ஆரம்பிக்க எதிர்பார்க்கும் 10 பேரில், 8 பேர் தோல்வியுற காரணமே, தொடக்கநிலை வணிகம் தொடர்பில் தங்கள் சிந்தனையில் கொண்டுள்ள எண்ணத்தை (Ideas) நடைமுறைபடுத்தும் முறைமையில் தோல்வி அடைவதாகும். அதாவது, சொந்த தொழில் தொடர்பில், சிந்தையில் ஆயிரம் எண்ணங்களுடன் இருப்பவர்களுக்கு, அவற்றை ஒருங்கிணைத்து ஒரு வணிகமாக மாற்றிகொள்ள முடியாமையே இதற்க்கு காரணமாகும்.  

ஆக, தொடக்கநிலை வணிக எண்ணத்தை (Business Ideas) மட்டுமல்லாது, அதை சிறந்தமுறையில் நடைமுறைபடுத்த என்னவெல்லாம் செய்ய வேண்டும்?  

 1. சந்தை தேவையை ஆய்வு செய்தல்  

    வெற்றிகரமாக இயங்கிகொண்டிருக்கும் பெரும்பாலான தொடக்கநிலை வணிகங்களை எடுத்து கொள்ளுங்கள். அவை எவ்வாறு உருவாக்கம் பெற்றது என சிந்தித்து பார்த்தது உண்டா?.  

   அவை, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக உருவாக்கபட்டவையாக இருக்கும் அல்லது மக்களே எதிர்பார்க்காத வகையில் அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யுமொரு மாற்று ஊடகமாக இருக்கும். அதுதான், அத்தகைய வணிகங்களின் வெற்றிக்கு அடிப்படையான காரணம். 

வாடிக்கையாளர்களுக்கு, உங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்தக்கூடிய தூண்டல் அவர்களைச் சார்ந்ததாகவே இருக்கவேண்டும்.  

   இதற்கு, முயற்சியாளரின் சிந்தையில் உதிக்கும் எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு சந்தை ஆய்வை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக, “இதற்கு முன்னதாக, இந்த எண்ணத்துடன் யாரும் ஏன் சந்தைக்குள் நுழையவில்லை ?” , “சந்தையில் உள்ள வணிகங்களிலிருந்து என்னுடைய வணிக எண்ணம் எவ்வாறு வித்தியாசமானது?” , “சந்தையில் என்னுடைய எண்ணத்தை செயல்படுத்தும்போது எவ்வாறான சவால்களை எதிர்கொள்ள நேரிடும்?”. “என்னுடைய எண்ணங்களை செயல்படுத்துவதற்கான முதன்மை செலவீனம் என்ன?” எனும் அடிப்படையான கேள்விகளுக்கு விடைகளைக் கண்டறிதல் அவசியமாகிறது.  

    எப்போதுமே, கேள்விகளுக்கான விடைகளை ஆய்வு செய்யும்போது, குறித்தத் திட்டம் எவ்வளவு இலாபத்தையும் நமக்கு உழைத்துத்தரும் என்பதையும் கணிக்கவேண்டும். காரணம், நமது திட்டங்கள் தொடர்பில் வெற்றி பெறும் எனும் நம்பிக்கை மாத்திரம், நமது முதலீட்டாளர்களுக்குப் போதுமானது அல்ல. எங்களுடைய திட்டங்கள் வணிகமயப்படுத்தபட்டவகையாக இருக்கும்போது மட்டுமே, முதலீட்டாளர்கள் குறைந்தது எங்கள் திட்டங்களுக்கு செவிசாய்ப்பார்கள்.  

2. உங்கள் கனவான வணிகத் திட்டத்தை தயாரித்தல்  

   சந்தை ஆய்வின் அடிப்படையில், எண்ணங்களுக்கு செயல்வடிவம் அளிப்பது அவசியமாகும். காரணம், எண்ணங்கள் அனைத்தும் எவ்வளவுதான் சிறப்பாக எங்களுடைய சிந்தனையிலிருந்தாலும், அவற்றை எழுத்து மூலமான வடிவத்துக்குக் கொண்டு வரும்போதுதான், அதுதொடர்பிலான சீரான அணுகுமுறையும் படிப்படியாகத் திட்டத்தை விருத்தி செய்யக்கூடிய தன்மையும் இருக்கும்.  

   தற்காலத்தில் இணையம் முழுவதும், எங்கள் வணிகத்துக்கு ஏற்றால்போல தயாரிப்பதற்கான வணிகத் திட்ட மாதிரிகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்து நமக்கான வணிகத் திட்டத்தை தயாரித்துக் கொள்ளுதல் அவசியமாகும். வணிகத் திட்ட தயாரிப்பில் முக்கியமாக, வாடிக்கையாளர் பிரிவு (Customer Segements), வணிகத் திட்டத்தின் பெறுமதி (Value Propostitions), வாடிக்கையாளரை அடையக்கூடிய ஊடகங்கள் (Customer Channels), வாடிக்கையாளர் உறவுமுறை (Customer Relationship), வருமான மூலங்கள் (Revenue Streams), முக்கிய வளங்கள் (Key Resources), கிரய கட்டமைப்பு (Cost Structure), எதிர்கால நிதி கூற்றுக்கள் (Forecast Financial Statements) போன்றவற்றை உள்ளடக்கி தயாரித்தல் அவசியமாகும்.  

   வணிக எண்ணங்களை (Business ideas), வணிகத் திட்டங்களாக (Business Plan) எழுத்துரு வழங்கும்போது, அதனை எங்கள் முதலீட்டாளர்களும் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். எங்கள் எண்ணங்களை அவர்களுக்கு பலமணிநேரம் விளக்கி அவர்களின் முதலீட்டைப் பெறுவதை விட, இதுதான் எனது வணிகத் திட்டம் என எழுத்துருவில் வழங்குவது, இருதரப்பினதும் பெறுமதியான நேரத்தை மீதப்படுத்துவதுடன், இலகுவாக முதலீட்டாளர்களை சென்றடையவும் கூடும். இன்றைய நிலையில், பெரும்பாலான முதலீட்டு நிறுவனங்கள் வணிகத் திட்டம் ஒன்றைக் கொண்டிராத முயற்சியாளர்கள் திட்டங்களுக்கு செவி சாய்ப்பதேயில்லை எனலாம்.  

3. வணிக வெற்றிக்கு தேவையான அணியை கட்டியெழுப்பல் (Build a Team)  

    வணிகக் கனவுக்கும், வணிக நடைமுறைக்கும் இடையில் நிறையவே வித்தியாசங்கள் உண்டு. முயற்சியாண்மையின் கடினமான பகுதிகளிலொன்று, சிந்தையில் உதித்த சரியான எண்ணங்களை, எவ்வாறு நிஜத்தில் நிகழ்த்தி காட்டுவது என்பதேயாகும். ஒரு முயற்சியாளனுக்கு புதிய எண்ணங்களுடன் துணிகரமாக வணிக முயற்சியில் ஈடுபடுகின்றளவுக்கு துணிச்சல் உள்ளதோ, அதைவிடவும் அதிகமான பொறுமை தன்னுடைய வணிகத்தை கட்டியெழுப்புவது அவசியமாகிறது.  

    பெரும்பாலான தொடக்கநிலை வணிகமுயற்சிகள் ஆரம்பித்த இடத்திலேயே முடிந்துபோவதற்கு காரணம் முயற்சியாளர்களிடமும் சரி, முதலீட்டாளர்களிடமும் சரி போதிய பொறுமையின்மையே ஆகும். அமுலாக்கும் வணிகத் திட்டங்களுக்கு சந்தை பொருத்தமான சமிக்ஞை காட்டாதபோது, முயற்சியாளர்க்கு தன்னுடைய திட்டத்திலும், முதலீட்டாளருக்கு, முதலீடு தொடர்பிலும் ஏற்படுகின்ற ஒருவித பயம் தொடக்க நிலையிலேயே, முடிவுரை எழுதும் நிலைக்குயிட்டு செல்கிறது.  

    இந்த நிலையைத் தவிர்ப்பதற்கு, ஒரு முயற்சியாளனாக எத்தகைய திறமைகள், (skill) வணிக எண்ணத்தை (Business Idea) வெற்றிகரமான வணிகமாக (Startup/Business) மாற்றுமென அறிந்திருப்பது அவசியமாகும். குறித்த திறன்கள் முயற்சியாளரான என்னிடம் உள்ளதா, இல்லையெனில் என்னுடைய பங்குதாரர்களிடம் (Partners) உள்ளதா, அல்லது அதற்கேற்ற பொருத்தமான அணியை தேர்வு செய்ய வேண்டுமா? என்பதை கண்டறிய வேண்டும்.  

   அவ்வாறு தனக்கான அணியை உருவாக்க விரும்பும் முயற்சியாளர்கள் பொருத்தமான திறன் உடையவர்களைக் கண்டறிவது அவசியமாகும். அதுபோல, தனது அணியை அல்லது ஊழியர்களைத் தக்கவைத்து கொள்வதும் அவசியமாகும். எப்படி முயற்சியாளர்களின் முயற்சிகள் பெறுமதியானவையோ, அதுபோல ஊழியர்களின் திறனும் (Labour Skill) பெறுமதியானவை. தமது எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பவர்களின் திறனுக்கு சமரசம் செய்துகொள்ளகூடிய மலிவான ஊதியத்தில் (Cheap Incentives) ஊழியர்களை எதிர்பார்ப்பது எதிர்காலத்தில் வணிகத்தையே பாதிக்கும். 

அதுபோல, பூச்சியநிலையிலிருந்து ஆரம்பிக்கின்ற முயற்சியாளர்கள் ஊழியர்களை வேலைக்கமர்த்தும்போது, வருமானம் உழைக்கும் வரை அவர்களைத்தக்க வைத்து கொள்ளதத்தக்க வகையில் (Labour Retention) எவ்வாறு முதலீட்டை கையாளவேண்டும் என்கிற அடிப்படை அறிவையும் கொண்டிருத்தல் அவசியமாகும்.  

   எந்தவொரு திறமைப் படைத்த நபரும் இலவசமாக வேலை செய்யத் தயாராகவில்லை. ஆனால், அத்தகைய திறமையாளர்களை தொடக்கநிலை வணிகங்களில் உள்வாங்கும்போது, வணிகத்தோடு சேர்ந்து நாமும் வளர்கிறோம் எனும் உணர்வை முயற்சியாளர்கள் தங்கள் அணிக்கு/ஊழியர்களுக்கு சரியான விதத்தில் கடத்துவார்களாயின், வெற்றிகரமான வணிகத்தின் ஆணிவேராக அவர்கள் நிச்சயம் இருப்பார்கள்.  

4. தேவைக்கு முன்னதாக முதலீட்டை திரட்டுதல்  

    சந்தைக்குத் தேவையான தீர்வு, பொருத்தமான வணிகத்திட்டம், அைத செயற்படுத்தக்கூடிய பொருத்தமான ஆளணி என்பவற்றுக்கு, மேலதிகமாக எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து வணிகத்தை செயற்படுத்துவதற்கான ஆரம்ப முதலீட்டை திரட்டிக் கொள்ளுவது அவசியமாகும்.  

    எந்தவொரு வணிகமும், சந்தையில் செயற்படத்தொடங்கி, வெற்றிகரமாக முன்னேறும்வரை, முதலீட்டாளர்கள் அந்த வணிகத்தில் முதலீடு செய்யத் தயாராக இருக்கமாட்டார்கள். எனவே, ஆரம்பத்தில் வணிகத்தைக் கொண்டு நடத்துவதற்கான முதலீட்டு அளவையும் அதற்கான மூலங்களையும் கண்டறிவது அவசியமாகும். வணிகத் திட்ட (Business Plan) தயாரிப்பின் போதே, தேவையான முதலீட்டின் அளவை கண்டறிந்துகொள்ள முடியும்.  

    இலங்கை போன்ற நாடுகளில் தொடக்கநிலை வணிகங்களுக்கு ஆரம்பத்தில், புறநிதி வளங்கள் (External Funding) கிடைப்பது என்பது குதிரைக் கொம்புதான். கடந்த வருடத்தில், இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட தொடக்கநிலை வணிகங்களில் 58%மானவை சொந்த சேமிப்பிலும், 15%மானவை துணிகர முதலீட்டாளர்கள் உதவியுடனும், 12%மானவை உறவினர்கள்/நண்பர்கள் துணையுடனும், 5%மானவை வங்கிகடன்களுடனும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

எனவே, இதில் எது பொருத்தமான வழிமுறை என்பதனை கண்டறிந்து அதன்மூலமாக வணிகத்தை ஆரம்பிக்கலாம்.   

5. தொடக்கநிலை வணிகத்தை செயற்படுத்தல் (Execute the Startup)  

   வணிகத்தை ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகளை எவ்வாறு முயற்சியாளன் மேற்கொள்ளுகிறானோ அதற்கு மேலதிகமான ஏற்பாடுகளுடன் சந்தையில் நுழைய வேண்டியது அவசியமாகும்.  

   தொடக்கநிலை வணிகர்களுக்கு சந்தையில் உள்நுழையும்போது அல்லது வணிகத்தை ஆரம்பிக்கும் போது கூறப்படும் பிரபலாமான அறிவுரை “வேகமாகத் தோல்வி” அடைய தயாராகவிருக்க வேண்டும் என்பதே ஆகும். அதற்கான அர்த்தம், சந்தையில் எங்களுடைய பொருட்கள்/சேவைகளுக்கு எதிர்விளைவுகள் (Market Reaction) சாதகமாகவும் இருக்கலாம், பாதகமாகவும் இருக்கலாம். பாதகமாக உள்ளபோது, சந்தையின் பதிலுக்கு (Market Respose) ஏற்றவாறு தன்னையும், தனது அணியையும் மாற்றியமைத்துக்கொண்டு வெற்றிகரமாக முன்னோக்கி செல்வது அவசியமாகும்.  

   இன்றைய நிலையில், தொடக்கநிலை வணிகங்கள்தான் எதிர்கால பொருளாதாரத்தின் முக்கிய தூண்களாக பார்க்கப்படுகிறது. அவைதான், அரசாங்க இயந்திரத்தைவிடவும் பல்தேசிய தனியார் நிறுவனங்களை விடவும், எதிர்காலத்தில் அதிக தொழில்வாய்ப்பை உருவாக்கும் வணிகங்களாக இருக்கபோகின்றன. எனவே, அத்தகைய தொடக்கநிலை வணிகங்களை வெற்றிகரமாக கட்டியெழுப்புவது அவசியமானது ஆகும்.

வெற்றிக்கு என தனியான ஒரு பாதையோ, வழிகாட்டலோ எப்போதுமே இருந்ததில்லை. ஆனாலும், அவை மேலே கூறிய அடிப்படை கொள்கைகளை உள்வாங்கிகொண்டு பயணிப்பதன் மூலம் சரியான பாதையில் பயணிக்க முடியும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .